![](https://vasagasalai.com/wp-content/uploads/2020/05/Sowmya-red.jpg)
இதுவரை…
‘தீவுகளைத் தாண்டிப் போகணும்‘னு தாத்தா சொல்லியபோது, அவர்கள் 3 பேரும் “எங்களால முடியும்” என்று சொன்னார்கள். அது எப்படி? வாங்க பாக்கலாம்.
இனி…
மகேஷ்: எங்களுக்கு ஒரு மீன் ஃப்ரெண்ட் இருக்கா தாத்தா. அவகிட்ட கேட்டா, மறுக்காம உதவி பண்ணுவா. அவ பேரு லூனா.
தாத்தா: அப்படியா! உடனே அவகிட்ட விஷயத்தைச் சொல்லி அடுத்த வேலைகளப் பாருங்க.
3 பேரும் இந்த கலர் விஷயத்தை லூனாவிடம் சொல்லி உதவி கேட்டார்கள். லூனாவும் சந்தோஷமாக ஓகே சொல்லியது.
லூனா: “ஹைய்யா! அப்போ நம்ம தீவுக் கடலும் வண்ணமா மாறிடுமா? கண்டிப்பா நான் உதவி பண்றேன்.”
லூனா கடலுக்குள் சென்று அவளுடைய நண்பர்களை எல்லாம் கூட்டிக் கொண்டு வந்தாள். அதில் விதவிதமான மீன்கள் இருந்தன. ஆழ்கடலுக்குள் வெளிச்சம் தரும் மீன், மின்சாரம் கொடுக்கற மீன், தரைப்பகுதியில் இருக்கக்கூடிய மீன் எனப் பல திறமைகளைக் கொண்ட மீன்களை எல்லாம் லூனா அழைத்து வந்தாள்.
லூனா: ஹாய் ஃப்ரெண்ட்ஸ், நான் என்னோட 3 நண்பர்கள உதவிக்காக கூட்டிட்டு வந்திருக்கேன். இவன் பேரு ‘லைட்‘. இவன் தர்ற வெளிச்சம் இரவு நேரத்துல சரியான திசையில படகு செலுத்த உதவியா இருக்கும்.
லைட்: நாங்க எப்பவும் ஆழ்கடல்லதான் இருப்போம். அங்கதான் எங்க வீடு இருக்கு. உங்களுக்கு கிடைக்கிற மாதிரி எங்களுக்கு சூரிய வெளிச்சம் கிடைக்காது. அதனால நாங்களே லைட் அடிச்சுப்போம். அந்த லைட்ட வச்சு நாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிப்போம். ரொம்ப ஜாலியான டீம் நாங்க.
பாலா: வாவ்… சூப்பர் லைட்.
லூனா: ம்ம்ம்… அடுத்தவன் கரன்ட். இவனால மின்சாரம் தர முடியும்.
ராம்: என்னது இவனால மின்சாரம் தர முடியுமா? மின்சாரத்த பெஞ்சமின் ப்ராங்ளின் தாத்தாதானே கண்டுபிடிச்சாரு! இவனுக்கு எப்படி அந்த பவர் கிடைச்சது?
லூனா: ங்ஙே… அது பவரு இல்ல, இவங்கள படைச்சப்போ நடந்த தவறு.
கரன்ட்: ஏய்… என்ன லொள்ளா?
லூனா: சாரிப்பா, சும்மா விளாட்டுக்கு சொன்னேன். ஹா ஹா…
கரன்ட்: அவரு மின்னல்ல இருந்து கரன்ட் கண்டுபிடிச்சாரு. அதுக்கப்புறம் அறிவைப் பயன்படுத்தி இன்னும் எப்படில்லாம் மின்சாரத்த உருவாக்கலாம்னு மனிதர்கள் தானே கண்டுபிடிச்சாங்க?
லூனா: சரி, சரி, அது இருக்கட்டும். உன்னப் பத்தி முதல்ல சொல்லு.
கரன்ட்: இந்த மின்புலத்த அதாவது, ELECTRIC FIELD அ உருவாக்க, எங்களுக்கு தனி உறுப்பே இருக்கு. கண்ணு பாக்கறதுக்கு இருக்கிற மாதிரி, இந்த மின்சார உறுப்ப வச்சு நாங்க மின்புலத்த உருவாக்குவோம். இந்த உறுப்பு எங்க வால் பக்கத்துல இருக்கு.
இத வச்சு ஆபத்துல இருந்து எங்கள காப்பாத்திப்போம். அது மட்டுமில்லாம தகவலை பரிமாறிக்க, பயணம் செய்ய, நாங்க இந்த மின்புலத்த பயன்படுத்துறோம். ஊருக்குள்ள டெரரா சுத்துறார்ல சுறா அண்ணாத்த, அவரால கூட எங்கள மாதிரி கரன்ட் உருவாக்க முடியாது. இப்போ தெரியுதா நாங்க எவ்ளோ பெரிய ஆளுன்னு!
லூனா: இவன் இப்படித்தான், ஓவரா பில்டப் பண்ணுவான். நான் அடுத்த ஆள இண்ட்ரோ கொடுக்கிறேன். இன்னொருத்தன் பேரு மட்ஸ்கிப்பர். இவனால நிலப்பகுதில கூட உலாவ முடியும். சுருக்கமா இவன ‘கிப்பர்‘னு கூப்பிடுவோம்.
கிப்பர்: ஹாய் ஃப்ரெண்ட்ஸ். என்னால நிலப்பகுதியில 2 நாள் வரைக்கும் இருக்க முடியும். அது மட்டுமில்லாம, கடல் ஆழத்துல நான் நல்லா கூடு கட்டுவேன்.
லூனா: சூப்பர்டா கிப்பர். அப்றம் இந்த டால்பின் பயலயும் சேத்துக்கனும். அப்பதான் போற பக்கமெல்லாம் ஃப்ரெண்டு புடிச்சு நம்ம வேலையை சுலபமா முடிச்சு தருவான். ஆனா, நம்ம நண்பர்களுக்கெல்லாம் கொஞ்சம் தூரம் தான் வழி தெரியும். ரொம்ப தூரம் போகனும்னா ஏற்கெனவே போன யாரயாச்சும் கண்டுபிடிக்கனுமே?
எல்லோரும் யோசித்துக் கொண்டிருந்த போது, லைட் மீன் ஒரு ஐடியா சொன்னது.
லைட்: நாம எல்லாரும் பெஸ்ட்டா இருந்தாலும் வழி சொல்றதுல கில்லாடியா இருக்கிற வலசை போற மீன்கள் நமக்கு தேவை.
ராம்: என்னது வலசை போற மீன்களா? பறவைகள்தானே வலசை போகும்னு கேள்விப்பட்டிருக்கேன். இது என்ன புதுசா இருக்கு?
லைட்: மீன்களும் வலசை போகும். அவங்களால நமக்கு வழி சொல்ல முடியும்.
ராம்: அப்டியா! இப்போதான் எங்களால முடியும்னு இன்னும் நம்பிக்கை வருது. அவங்களும் நம்ம கூட வர சம்மதிப்பாங்கதான?
லைட்: கண்டிப்பா வருவாங்க. ஆனா அதுல ஒரு பிரச்னை இருக்கு.
ராம்: இன்னும் என்ன பிரச்சனை?
லைட்: அவங்க இப்போ ஊர்ல இல்ல. டூர் போயிருக்காங்க. எப்ப வருவாங்கனு தெரியாதே!
எல்லோரும் ஒருசேர அதிர்ச்சி அடைந்து நின்றனர்.
பாலா: என்னடா இது. ஒரு வழி கிடைச்சா இன்னொரு வழி அடைக்குது.
மகேஷ்: எந்த வழிடா அடைச்சது? சேர்ந்து குழப்புறீங்களே…
ராம்: குழம்பாம அடுத்து என்ன பண்றதுனு யோசிங்க.
தொடரும்….
வாவு. சூப்பர்!