இணைய இதழ்இணைய இதழ் 70சிறுகதைகள்

வந்து போகும் வழிநெடுக – மன்னர்மன்னன் குமரன்

சிறுகதை | வாசகசாலை

வள் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது. எல்லாவற்றையும் என்னிடம் சொல்லியிருக்கிறாள். அவளது நாய்க்குட்டி காலில் அடிபட்டபோது உணவிழுங்கா உறக்கமில்லா நிலை, குட்டியின் ‘வீச்’சென்ற விம்மல், நண்பர்களின் சிரிப்புகளையெல்லாம். நானும் அப்படித்தான். காதல் மயானத்தில் என்னை தனியாய் விட்டுச் சென்றவளைப் பற்றி கூட. ‘யெறங்கி வராம இருந்திருக்கலாம்ல. ஏ மயான வாசல் வரைக்கும் வந்து கைய ஆட்டிட்டுப் போனா?’ என்று கேட்ட போது, ‘அவ என்ன பண்ணுவா! அவளுக்கு இருக்க உரிம உள் தாழ்ப்பாளுக்கு மட்டுந்தான்.’ என்று சொல்லியவளிடம், ‘எனக்கு மட்டும் என்ன!? இங்க வா; இங்க நின்னு பாரு, இதுவும் உள் தாழ்ப்பாள் தான?’ என்று  மயானக் காட்டின் தாழ்ப்பாளை உடைத்தெறிய சம்மட்டி தூக்கியவனின் கையைத் தடுத்து தோளைப் பிடித்து ‘ஓங் கைல சம்மட்டி இருக்கு! அவ கைல என்ன இருக்கு? யோசிச்சியா?’ என்று சொன்னவளா? இப்படிச் சொல்லிவிட்டாள். எண்ணங்களுக்கு இசைந்துதான் தலையசைக்கிறாள் என்று நினைத்தேன். இறகை விட லேசானதாக என் வார்த்தைகளை எடை போட்டிருக்கிறாள். அதன் வருடலைக் கூட அவள் உணரவில்லை. என்னை அவள் உணரவே இல்லை. ‘நேத்து ராத்திரில காது சூடாவுற மாரி இருந்துது; தாங்க முடியல. அவ எனக்கு ஒரு கவித படிச்ச பெறவுதான் தணிஞ்சுது.’ என்று சொன்ன போது ‘கனவு எதுவும் கண்டியா? இப்டி ஒளறிக்கிட்டு கெடக்க.’ என்றுவிட்டாள். இவள்தான்… இவள் ஒருத்திதான்; சொல்லவில்லையென்று உருகிக்கொண்டிருந்த என்னைச் சங்கிலியாக வார்த்து பைத்தியக் காரனின் காலில் கட்டிவிட்டாள். என் பயத்தைப் பற்றி அவளிடம்… ச்ச…, பயன்படுத்திக் கொண்டாளோ? நினைக்கத் தோன்றுகிறதுதான். அலுவலகத்தில் அவளைப் பார்த்த முதல் நாளே என் தலைமுடிகளை கோதிவிட்டு ‘கொஞ்சம் கொறச்சிக்கலாம்ல’ என்றாள். இன்றுவரை அவள் குழுவில் தான். எதிர் மேசையில் அவள் முகத்தைப் பார்க்க எனக்கு எப்போதும் அனுமதியிருந்தது. மென்மையாக, செருப்பைக் கழட்டிவிட்டு மனதில் கால் வைப்பவள்; வலி ஏற்பட்டதாக உணர்ந்து அடிக்கொருமுறை ‘ஒனக்கொன்னுமில்லலாடா.’, ‘அப்டி தானடா.’ என்று கேட்டுக் கொள்வாள். அப்படி அவள் கேட்கும்போதெலாம் வலித்தால் கூட பொறுத்துக்கொள் என்று மனம் குழையும். சொக்கியிருந்த வேளையில் சம்மட்டியை கைமாற்றி நெஞ்சில் ஓங்கிவிட்டாள்.

பாரதியின் கவிதைகளை யாரோ படிக்கச் சொன்னதாக நினைவு. தெம்பு பிறக்குமாம் தெம்பு; பெரிய தெம்பு. எதிரிலிருப்பவர்கள் அறிவாளிகளில்லையென மனதைத் திடப்படுத்த அதற்கு ஒரு சத்து தேவைப்படுகிறதெனவும் அதன் பெயர் தன்னம்பிக்கை எனவும் பேசிக் கொள்கிறார்கள்.  எனக்கென்னவோ அது வேசம் போலத் தெரிகிறது. வார்த்தை ஓங்கா மக்கள் குலசைத் திருவிழாவுக்கு வாள் ஓங்கி காளி வேசம் போடுவதுபோல. எல்லாவற்றுக்கும் கவிதைகளையும் கதைகளையும் தூக்கிக் கொண்டு வருபவர்களைப் பார்த்தாலே எரிச்சல் தட்டுகிறது. என் பிரச்சனை அவர்களுக்குப் புரியாது. என் மனதைப் புரிந்து அதைப் பேண யாருமில்லை. அது எழுப்பும் ஐயங்கள் என்னை அவர்களுக்கு மத்தியில் ஒரு பிதற்றல்காரனாக சித்தரித்துவிடுகிறது. உடலுக்கும் வெளிக்கும் இடைவெளியே இல்லாமல் தோலோடு போர்வையை சுற்றிக் கொண்டு சிறிதும் ஒளியை வாங்காமல் அறையிலேயேதான் கடந்த ஒரு வாரமாக படுத்திருக்கிறேன். போர்வையை விலக்கினாலும் வெளிச்சம் என்மீது பட வாய்ப்பில்லை. எல்லோருமாக சேர்ந்து சுவர் எழுப்பி என்னைச் சுற்றி ஒரு அறையை கட்டிவிட்டார்கள். அதற்கு கதவுகள் வைக்க நிலைக்காலை தூக்கினார்கள். தடுத்து சுவரெழுப்ப சொல்லிவிட்டேன். அப்படியே கதவு வைத்திருந்தாலும் அதைத் திறக்கும் மனநிலையும் இப்போது எனக்கு இல்லை.

சாப்பாடு கொடுப்பதற்காக அம்மா மட்டும் எட்டிப் பார்த்து லேசாக குரல் கொடுப்பாள்,

“இப்டியே இருந்தா என்னத்துக்கு ஆவுறது. வெளிய போயி ஓரெட்டு சுத்திட்டு வந்தன்னா கொஞ்சம் சூட்டிப்பு கெடைக்கும். அடஞ்சே கெடந்தா ஒடம்பு மட்டுமில்ல மனசும் கெதியெழந்திரும்.” என்று.

மனதின் கெதியைப் பற்றி நன்றாகத்தான் பேசுகிறாள் அம்மா. ஆனால் போன ஞாயிறுக்கு முந்தின ஞாயிறு முற்றத்தில் அமர்ந்திருக்கும் போது, அவள் ‘வெட்டப் போறோம்’ என்று சொல்லி வைத்திருந்த கருவேப்பிலை மரத்தில் குருவிகள் புதிதாக கூடு கட்டியிருப்பதைக் காட்டி உனக்கு என்ன தோன்றுகிறது என்று கேட்டேன்.

“குருவி கூடு கெட்டிருக்கு; அதுக்கு என்ன!” என்றாள்.

பதிலுக்கு நானோ, “குடிவந்துட்டாவ; வாடகதான் கேக்க முடியாது.” என்றேன்.

“ஒனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு, வெளிய எங்கையும் போயி இப்டி பேசிக்கிட்டு திரியாத. கூறு இல்லாம பிள்ளைய வளத்திருக்கா பாருன்னு என்னையதான் சொல்லுவாங்க. இருவத்தியஞ்சு வயசு மனுசனுக்குள்ள தெளிவு ஓங்கிட்ட இல்லய; இன்னும் எவ்ளோ காரியத்த பாக்க வேண்டியிருக்கு.” என்று எழுந்து சென்றுவிட்டாள். குருவிகள் தட்டு முழிப்போடு என்னைப் பார்த்தவாறே கூட்டிற்குள் போவதும் வருவதுமாய் இருந்தன. நான் வாடகை கேட்டிடுவேனோ என்ற அச்சம் கண்களில் தெரிந்தது. ‘நாலு நாள் பேசிப்பாருங்க; அப்ப தெறிஞ்சிரும் நா வாடக கேப்பனான்னு.’ என்று குருவிகளைப் பார்த்து கத்தினேன். பதிலுக்கு அவையும் கீச்சிட்டன. அம்மா சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்தாள். அவள் கண்களிலும் அச்சம்.

அறையிலிருந்து வெளியே வரலாம். தார்சாவில் நடந்து கொண்டே விருப்பமான கருப்பு தேநீரை பருகலாம். அப்படியே கீழிறங்கி வந்து ‘தோரணையா இருக்குல’ என்று பார்த்துப் பார்த்து வாங்கிய இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு குற்றாலம் வரை சென்று வரலாம். போகிற வழியில்தான் அலுவலகம்; அவளையும் கூட்டிக் கொண்டு செல்லலாம். எத்தனை முறை சென்றிருப்போம்; கணக்கில்லை. போகும் வழியெல்லாம் கைபேசியில் காட்சிகளை பதிவு செய்து கொண்டே வருவாள். சில நேரம் முகத்திற்கு முன்னால் கைபேசியை நீட்டி சில்மிசங்கள் செய்வாள். கீழே சென்றால் அம்மா அவளைப் பற்றிக் கேட்பாள். பின்ன! கேட்பாள் தானே. தொலைபேசியில் அவளிடம் பேசியிருக்கிறாள். ‘ஒரு தடவையாது வீட்டுக்கு கூட்டியாந்து பிள்ளைய கண்ணுல காட்டலாம்ல.’ என்று ஓயாது கேட்டுக் கொண்டிருப்பாள். வண்டி வண்டியாக சொல்லி வைத்திருக்கிறேன் அவளைப்பற்றி.

மனமில்லாதிருந்த என் கையில் ஒரு மொட்டை உளி கிடைத்தது போன்ற உணர்வு. சுவரின் ஒரு ஓரம் துளையிட்டு நோட்டமிடுவது போல கதவை லேசாக திறந்து தலையை வெளியே நீட்டினேன். அம்மாவின் நடமாட்டமில்லை. நிச்சயம் அவள் பக்கத்தில் இருக்கும் நாராயண சாமி கோவிலுக்குத்தான் சென்றிருப்பாள். சாப்பாட்டுடன்  அவள் வைக்கும் தண்ணீர் சொம்பில் நாமக்கட்டி வாடையும் துளசியின் வாடையும் வந்ததை வைத்துத்தான் இவ்வளவு திடமாகச் சொல்கிறேன். அம்மாவைப் பொறுத்தவரையில் வேலைக்குச் சென்று வரும் வழியில் அரசு மருத்துவமனைக்கு அருகில் புதைக்கப்பட்ட ஏதோ ஒரு கன்னி என்னை அடித்துவிட்டது.

என்ன உடையணிந்திருக்கிறேன் என்பதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. வெளிக் கதவைத் திறந்தேன். தம்பி சோகமாக படுத்திருந்தான். வழக்கமாக இது அவன் நண்பர்களைப் பார்க்கச் செல்லும் நேரம். ராக்கி என்று பெயர் பொறிக்கப்பட்ட பட்டையிலிருந்து சங்கிலியை அவிழ்த்து விட்டால் பொடி நடையாக சென்று வருவான். ஆனால் அவனுக்கு முதல் நண்பன் நான்தான். இப்போது மட்டும் நான் அவன் அருகில் சென்றால் ஏழு நாள் ஏக்கத்தை நக்கியே தீர்த்துக் கொள்வான். அவனோடு விளையாட வேண்டியிருக்கும். அதற்குள் அம்மா வந்துவிட்டால்?! இருசக்கர வாகனத்தை மெல்ல உருட்டி இரண்டு வீடு தாண்டியதும் இயக்கிவிட்டு பின்னால் திரும்பிப் பார்த்தேன். மடித்துக் கட்டிய சாரத்தில் அருவாளைத் தொங்கவிட்டிருந்த ஒருவர், ‘வள்ளி யம்மா..’ என்று கூப்பிட்டவாறு வீட்டுக் கதவை தட்டிக் கொண்டிருந்தார். ராக்கி குறைத்தான். நான் அங்கிருந்து வண்டியை நகர்த்தினேன்.

அரசு மருத்துவமனையைத் தாண்டியதும் தெற்கே தலையை திருப்பினேன். என் நண்பன் ஏசுதாசின் கல்லறை. ‘எவ்ளோ போட்டாலும் கொழையாம தெம்பா நிக்கிய; எப்டில?’ என்று வியந்திருக்கிறேன். நான்  போய்க் கொண்டிருக்கிற இதே சாலையில்தான்; தென்காசி நெடுஞ்சாலைக்கு மாறும் போது பழுவுந்து தட்டிவிட்டது. நான் பார்த்தபோது எப்போதும் தோட்டத்தில் தலைக்கு கீழ் கல்  வைத்துத் தூங்குவது போல படுத்துக் கிடந்தான். கழுத்தில் அணிந்திருந்த மாலையிலிருந்த சிலுவை பிடிப்பற்று தரையில் வடிந்திருந்த இரத்தத்தின் மீது கிடந்தது. 

வண்டி சாலையில் ஓடிக் கொண்டிருந்தது. மண்டையில் வேறேதோ. திரவிய நகர் தாண்டி துளசித்தோப்பு வாயிலைக் கடந்ததும் நினைவு தட்டியது. இரு புறமும் கல் நடப்பட்ட வீட்டு மனைகள். ஏற்கனவே நெடுஞ்சாலை ஓரம்; இப்போது எங்கள் அலுவலகமும் சேர்த்து மனையின் விலை எங்கோ போய்விட்டது. தகவல் தொழில்நுட்ப தென்காசியின் எதிர்கால அடுக்ககங்கள் இருபுறமும் வளர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலையை மறைத்துவிட்டு சட்டென்று மறைந்தது போல தோன்றியது. உடல் குலுங்கியது. வண்டி விக்கியது; அப்போதுதான் பார்த்தேன், எரிபொருளின் அளவு கீழிறங்கியிருந்தது. வண்டி நின்றுவிட்டது. நடக்கக் கூடிய தூரத்தில் தான் அலுவலகம். கைபேசியை எடுத்து தொடர்புகள் பட்டியலில் ‘சுவாதி’ என்று தட்டினேன். அவள் புகைப்படத்தைப் பார்த்ததும் கைபேசியை பையில் வைத்துவிட்டு வண்டியை உருட்டத் தொடங்கினேன். அலுவலகத்தினுள் வண்டியை விட்டுவிட்டு ‘பிரித்வி’ அண்ணனை அழைத்தேன். பக்கத்தில் எங்காவது போக வேண்டுமென்றால் நாங்கள் அவரைத்தான் அழைப்போம். ‘நா வெளிய ஒரு எடத்துக்கு வந்தேன். வேற வண்டிய வரச் சொல்லுதேன்.’ என்று அவர் சொல்லி பத்து நிமிடத்தில் ஒரு புது மூன்று சக்கர வாகனம் அலுவலகத்தின் முன் வந்து நின்றது. பூசை போடும்போது பூசிய சந்தனம் கூட கரையவில்லை. மாலையும் உதிராமல் இருந்தது. கண்ணாடியில் ‘செல்லதுரை’ என்று பெயர் ஒட்டியிருந்தது. ஓட்டுனர் வண்டியிலிருந்து இறங்கினார்.

“தம்பி! சுதன்…”

“தென்காசி வர போவனும்; எவ்வளவு?”

“யெரநூறு.”

“வெக்காளி பட்டில இருந்தே நூத்தியெழுவது ரூவா தானண்ணே!”

ஏருக்கு மாறாக பேசுவார் என்று நினைத்தேன்.

“நூத்தி ஐம்பதுக்கு கீழ கட்டுப்படியாவாது.”

நானும் பேசவில்லை. வண்டியில் ஏறி அமர்ந்தேன்.

கொஞ்ச நேரத்தில் அவர் பேச ஆரம்பித்தார்.

“அந்த கம்பியூட்டர் கம்பேனிலதா வேல பாக்கியலோ?”

நான் தலையை ஆட்டியதை கண்ணாடியில் பார்த்துக் கொண்டார். 

“என்ன படிச்சிருக்கிய?”

“மெக்கானிக்கல் இன்ஜினியரிங்.”

எத்தனையோ முகத்தில் பார்த்த அதே சுழிப்பு. நானும் கண்ணாடியில் பார்த்தேன்.

நூறு மீட்டர் அமைதிக்குப் பிறகு, “இப்பதான் தம்பி வாங்குனேன். ரெண்ர ரூவா வந்துது.”

நான் ஏதும் சப்தம் கொடுக்கவில்லை. ஆனால் அவர் பேச்சை விடுவதாய் தெரியவில்லை. முகத்தில் கொட்டிவிடவேண்டுமென்ற ஆவல்.

“CNG.”

“பெட்ரோல விட பத்து ரூவா கம்மி. ஓட்டம், ம்… ரெண்டு கிலோ மீட்ரு அதிகம். ஒங்களுக்குத்தான் தெரியுமே படிச்சிருப்பியலே!”

மூளை கல்லூரி பாடத்திட்டத்தின் அலகுகளை புரட்டிக் கொண்டிருந்தது. பழைய குற்றால சாலை முக்கில் நுங்கு வியாபாரிகள் ஓலைப் பட்டையை இரண்டு கையிலும் ஏந்தி, வருகிற வண்டிகளுக்கு முன்னால் நீட்டி மறித்துக் கொண்டிருந்தார்கள். ஓட்டுனர் வண்டியை வளைத்து விலகி முறுக்கினார்.

“என்ன, எல்லா பங்க்லயும் CNG கெடைக்காது. தூரத்து எடத்துவளுக்கு கொஞ்சம் பாத்துதான் போவனும்; செரமம்.”

“வண்டியும் செரமப்பட்டுதான் வாங்கியிருக்கேன்.”

“எனக்கு அண்ணேங்காரன்னு ஒருத்தே இருந்தான். இப்டி நீசப் பாவியா மாறுவான்னு நெனைக்கல. மொதல்ல நாங்க ரெண்டு பேரும் சேந்துதான் ஒரு ஆட்டோவ ஓட்டிக்கிட்டு இருந்தோம். ஒரு வாரம் நைட்டு அவன். மறு வாரம் நா. மாத்தி மாத்தி அடிப்போம். ரூவாவ சரி பங்கா பிரிச்சிக்கிடுவோம்.”

“நைட்டு நா நாலு ஆஃபர் போனேம்னா அவன் ரெண்டு தா போவான். அதுவும் கிட்டத்து எடத்துவளுக்கு. ரூவாவ மட்டும் சரியா பிரிச்சிக்கிடனும்னா எப்டி!?”

“அதான் கேட்டுட்டேன். ‘செறிக்கியுள்ள! ஒனக்கு என்னல அவ்வளவு ஏத்தம். இவ்ளோ நாளும் நல்லாதான இருந்த. நீயா பேசுத; உள்ள இருக்கவால்லா பேசுதா. இனிமே சரியா வராது, தனியா ஒட்டிக்கல.’ ன்னு வண்டிய புடிங்கிக்கிட்டான்.”

“ஏ வீட்டம்மா செயின அடவு வச்சுத்தான் வண்டியே எடுத்துருக்கேன்.”

கையை நீட்டி அவர் தோளுக்கு மேலே இருந்த கம்பியை பிடித்துக் கொண்டேன்; வண்டி குழியில் இறங்கி ஏறியதும் அலப்பி முன்னே தள்ளியது. ஆசாத் நகர் வந்துவிட்டது. உய்காட்டு சுடலையின் கோவில் இடது புறத்தில்; நான் வலப்புறம் திருப்பிப் பார்த்தேன். சிற்றாறு. ஆற்றங்கரை எரிமேடை. கரண்டை அளவு தண்ணீர். பாட்டியை எரியேற்றிய இடம். அப்பா சொல்லி தெரிந்து கொண்டேன். வண்டியில் வீட்டிற்கு கொண்டுவர பணமில்லாமல் கரையிலேயே எரித்து விட்டு வந்துவிட்டார்களாம். பாட்டியை அப்பா கூட பார்க்கவில்லையாம். அப்போது அப்பா சின்ன பிள்ளை.

வாய்க்கால் பாலத்தை தாண்டியும் அவர் பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது. ஆனால் அது ஏதும் இனி என் காதுகளுக்குள் நுழையாது. ‘தென்காசி’ – சிறு வயதில் எனக்கு அது வேறு நாடு. வார வாரம் சனிக்கிழமை குடும்பத்துடன் வெளிநாட்டுக்குப் புறப்பாடு. அப்பா வாங்கித்தரும் ஏணிப்படி மிட்டாய், தேங்காய் பால் முறுக்கு, சீவல், பருத்திப்பால் எல்லாம் மிக விருப்பம். வடக்கு ரத வீதியில் பள்ளிக்கூடப் பை வாங்கியதும் பாரதி புத்தகக் கடையில் கோனார் தமிழுரை வாங்கியதும் நினைப்பில் பதிந்து கிடக்கிறது. நான் முதல் முறை சென்றிருந்த போது ‘வாகித்’ உதிரிப்பாகக் கடைக்கார அண்ணாச்சி, ‘என்ன ஆண்டி அண்ணே, ஒங்க மொவனா?’ என்று கேட்டு தேநீர் வாங்கித் தந்தார். அந்தக் கடைகளையெல்லாம் திரும்பப் பார்க்கும்போது எல்லாமும் மறந்து விடுகிறது அங்கிருந்து கிளம்பும் வரை.

“தம்பி எங்க ஏறங்கணும்?”

வண்டி தபால் நிலைய நிறுத்தம் வந்துவிட்டிருந்தது.

“இங்கதான்.”

இறங்கி இருநூறு ரூபாய் தாளை நீட்டினேன். அவர் தந்த மீதி ஐம்பதை பையில் சொருகிக் கொண்டே கோவில் சாலைக்கு மாறி நடக்கத் தொடங்கினேன். தெற்கு ரத வீதியைக் கடந்து கோபுர வாசல் முன் வந்து நின்றேன். எவ்வளவு ஆண்டுகள் ஆகிறது பெரிய கோவிலுக்குள் சென்று?! ஒவ்வொரு சனிக் கிழமையும் விளக்கு ஏற்ற வேண்டுமென்று மைலப்புரத்து சோசியர் சொன்னதின் பேரில் நாங்கள் வார வாரம் வந்து விளக்கேற்றிக் கொண்டிருந்தோம். எனக்கு அதுவெல்லாம் அப்போது தெரியாது; கவலையுமில்லை. அங்கே வழங்கப்படும் புளியோதரையும் சர்க்கரைப் பொங்கலுமே எனக்கு விருப்பம். காசி விசுவநாதரின் கருவறைக்கு முன்னுள்ள கொடிக்கம்பத்தின் இடப் புறத்திலிருக்கும் பலா மரத்திற்கு முன்னுள்ள மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்து விட்டுத்தான் வெளியே வருவோம். பலாப் பழ வாடையும் திருநீறு வாடையும் கிறக்கும். நந்தியின் காதில் சொல்லச் சொல்லுவார் அப்பா. நமக்கு சிபாரிசும் சிவனுக்கு தூதும் காவலும் அவர் தானாம். அவரிடம் சொல்லிவிட்டால் சிவனைப் பார்த்து நேரடியாகச் சொல்லிவிட்டது போலவாம்.

படியேறி விடலாமா என்ற யோசனை; அடியை தூக்கி படியில் வைத்து விட்டேன். அண்ணாந்து பார்த்துக் கொண்டே மேலேறினேன். புறாக்கள் வட்டமடித்து கோபுரத்தின் மேல் அமர்ந்தன. நூல் பிடித்தாற்போல் கச்சிதமான கோபுர வேலைப்பாடு. மிதிபடும் பராக்கிரம பாண்டியனும் பேர் வாங்கிக் கொண்ட சிவந்தி ஆதித்தனாரும் நினைவுக்கு வந்தார்கள். குனிந்து வாசலை நோக்கினேன். திரு ஓட்டோடு நாலு பேர், ‘அம்மா தர்மம் பண்ணுங்கம்மா. அய்யா தர்மம் பண்ணுங்கையா.’ என்று இரந்து கொண்டிருந்தனர். வாசலை நோக்கியவாறு அப்படியே நின்றுவிட்டேன். இடித்துக் கொண்டு முன் சென்றவர்கள் திரு ஓட்டில் சில்லறைகளை போட்டுவிட்டு காசி விசுவநாதரை வணங்கியவாரே வாசலுக்குள் நுழைந்தனர். பைக்குள் கையை விட்டு துழாவினேன்; சில்லறைகள் ஏதுமில்லை. சில தாள்கள்; எடுத்து எண்ணினேன். ஒரு ஐம்பது ரூபாய் தாளும் ஒரு நூறு ரூபாய் தாளும். ‘அரக் கிலோ அல்வா நூத்தி இருவத்தியஞ்சு, இங்கருந்து சத்திரத்துக்கு பத்து, அங்கருந்து வெக்காளி பட்டிக்கு கவுர்மண்ட்டா இருந்தா பத்து பிரைவேட்டா இருந்தா பதினஞ்சு’ மனது கணக்குப் போட்டது. அண்ணாந்து கோபுரத்தைப் பார்த்துவிட்டு திரும்பி வெளி மண்டபத்தை நோக்கி நடந்தேன். மண்டபத்தைக் கடந்ததும் ‘பெரிய லாலா’ கடையில் அரைக் கிலோ அல்வா வாங்கிக் கொண்டு பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். பேருந்தில் எறியதும் பொட்டலத்தைப் பிரித்து கொஞ்சம் பிய்த்து வாயில் போட்டுக் கொண்டேன். வாய்க்கால் பாலம் வந்ததும் இன்னும் கொஞ்சம். திகட்டிக் கொண்டு வந்தது. பேருந்து ஆசாத் நகர் சுடலை கோவிலைக் கடந்தது.

“அக்கா அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது.”

********

kumaranmannarmannan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button