
1. உள்ளங்கை அரிசி
“ஏன் அரசியெல்லாம் கொட்டிக்கிடக்கு..?”
“அது…” என்று ஆரம்பிப்பதற்குள் முதலாளி கோபப்பட்டார்.
“இதென்ன உங்கப்பன் வீட்டு அரிசியா..? நீ பாட்டுக்கு இப்படி இரைச்சி வச்சிருக்க…”
“இல்ல முதலாளி. குருவிங்க வரும். அதான் கொஞ்சம் போட்டேன்…”
“ஓ… ஐயா மனசுல பெரிய வள்ளல்னு நினைச்சிகிட்டு இருக்கிங்க போல. வேலக்கார நாய் நீ. எங்கவூட்டு அரிசியை குருவிக்கி தானம் பண்றியா?”
“ஒரு பிடிதான் முதலாளி போடுவேன். ரொம்பல்லாம் போட மாட்டேன். அதுங்கபாட்டுக்கு வந்து சாப்ட்டு போய்டும்”
“ஒரு புடின்னாலும் காசு உங்கப்பனா கொடுப்பான்? உனக்கு நான் கொடுத்த வேலை இந்த அரிசி மூட்டைகளப் பத்திரமா பார்த்துக்கறதுதான். அதை மட்டும் செய். தானம் தர்மம் எல்லாம் அவனவன் சொந்தக் காசுல செய்ங்கடா”
“ஒரு பிடிதான்…” முடிப்பதற்குள், முதலாளி கொடுத்த அறையில் ஆங்காங்கு அமர்ந்திருந்த சிட்டுக்குருவிகள் எல்லாம் ஒரு சேரப் பறந்தன.
“என்னையே எதுத்துப் பேசுறியா நீ? கிளம்பு. இனி உனக்கு இங்க வேல இல்ல. கிளம்புடா”
அறைந்தவர் உள்ளேயும், அறை வாங்கியவர் வெளியேயும் சென்றனர்.
மறுநாள்…
முதலாளியில் இருந்து மற்ற தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் அதிர்ச்சி. மலைமலையாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகள் எல்லாமே கிழிந்து, கிடங்கு முழுக்க அரிசிகள் கொட்டியிருந்தன.
ஏதோ ஓர் இராட்ச மிருகம்; இரவோடு இரவாக முழு கிடங்கையுமே அரிசியால் சிதறடித்திருப்பது போல அலங்கோலமாக இருந்தது. முதலாளிக்கு ஒன்றுமே புரியவில்லை.
திடீரென கிடங்கு முழுக்க சிட்டுக்குருவிகளின் சத்தம். கண்ணுக்குத் தெரியாத அவற்றின் சத்தம் காதுகளைக் கிழிக்கத் தொடங்கியது. ஆளுக்கொரு திசையில் எல்லோரும் ஓடுகிறார்கள். அவை கேட்பது ஓர் உள்ளங்கை அரிசையைத்தான்.
****
2.சொல்லாமலேயே
“நீ ஏன் முன்னமே சொல்லவில்லை?” என்கிறார்கள்.
“நீ ஏன் முன்னமே கேட்கவில்லை?” என்கிறேன்.
“நீ சொல்லியிருக்கலாம்” என்கிறார்கள்.
“நீ கேட்டிருக்கலாம்” என்கிறேன்.
“அப்போது நான் கேட்கத் தயாராய் இல்லை” என்கிறார்கள்.
“அப்போது நான் சொல்லத் தயாராய் இல்லை” என்கிறேன்.
“ஆக மொத்தத்தில் நீ சொன்னாயா இல்லையா?” எனத்தானே கேட்கிறீர்கள்?
நீங்கள் கூட அவர்கள் ஏன் கேட்கவில்லை எனக் கேட்கவில்லை பாருங்களேன்.
******