மாலுமியின் இணையள்
முகில் காயத் தனித்திருக்கிறேன்
இருளடறக் காத்திருக்கும் விரல்களோடு
வியர்வை இறைக்கும் கோடையின் வெம்மையென
மார்கழிப் பனியிலும் தேகஞ்சுடுகிறது
அசைவாடிக் கொண்டிருக்கும்
உன் கப்பலின் நிலவறையில்
நடுக்கடல் தாலாட்டென
நினைத்துத் துயில்கிறாய்
உனையேங்கிப் பெருமூச்செறியும்
தனங்களேயென நீயறியாய்
பசித்தலையும் ஊரின் பார்வைக்கு சிக்காது
கரையை வெறிக்கிற கண்களோடு
மணற்சிலையென
பசித்திருக்கும் காற்றில்
கரைந்தபடியே காத்திருக்கிறேன்
கரை காண்.
எனைச் சேர்!
•
இலக்கினுமினிது பயணம்
குளிக்கும் தூரிகைச் சிரம் விடுத்து
நீருக்குள் விரவிடும் வண்ணம் போல
அகத்தே பரவி பரவசமாக்குகிறாய்
கண்களில் ஒளிர்கின்ற ஜூவாலை ஏந்தி
கடக்காத கடலையும்
காணாத மலையையும் கடப்பேன்
அதைத் தாண்டி என் உயிரில்லை
உடன் வருவதால்
இலக்கை விட அழகாகிறது
பயணம்
•
ஆடியிடைப் பயணம்
பச்சை விரிப்பென படர்ந்திருந்த
நெல்வயல்களின் இடையில்
தெளிந்த நீரில் நீந்தும்
மீன் முகில்கள்
சடுதியில்
வெண்புகை நடுவில்
பறக்கத்துவங்கிய பயிர்கள்.
நில நீருக்கும்
ஆகாச நிலத்திற்கும்
இடையில் ஒரு
அரூப உயிராய்!
•
நான்
தெளிவற்று கலைந்து நெளிகிற
பிம்பத்தை
உன்னைப் போலவே
பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்
தெரியாதது ஒன்றே
கல்லெறிகிறவர் யார்?