உயிரட்டை
கடன் வசூலிப்பவர் இந்த முறை
வரும் போழ்து வீடு பூட்டியிருந்தது
கடன் வசூலிப்பவர் இந்த முறை
வரும் போழ்து வாங்கியவர் வீட்டில் இல்லை
கடன் வசூலிப்பவர் இந்த முறை
வரும் போழ்து வாங்கியவரின் மனைவி இருந்தார்
கடன் வசூலிப்பவர் இந்த முறை
வரும் போழ்தும் வாங்கியவரின் மனைவி இருந்தார்
அவரை திட திரவ ஆயுள் முழுமையும் ஏசினார்
…………………………………………………………………………………….
…………………………………………………………………………………………..
………………………………………………………………………………………………..
கடன் வசூலிப்பவர் இந்த முறை
வரும் போழ்தும் வாங்கியவரின் மனைவி இருந்தார்
அவரை எதுவும் வையவில்லை முணுமுணுத்தார்
கடன் வசூலிப்பவர் சென்றவுடன்
கதவைச் சாத்தினார் சத்தமில்லாமல்
வழமை தவறி
நெடிய நேரத்திற்கு பின்
பெரும் சத்தத்துடன் கதவை உடைத்துச் சென்று
தொங்குபவர்களை இறக்கினோம்.
****
எதிர்நோக்குதல்
சில நிமிடங்களே எனினும்
அவ்வளவு அழகாக அக்கனவு
சில நொடிகளே ஆயினும்
மறக்கவே முடியாத கொடூரக் கனவு
நிமிடங்களுக்கு காத்திருக்கிறேன்
நொடிகளில் நகர்கிறது
அகாலம்.
****
ஜமாய்
ஏழெட்டு பெத்து வாழ நெனைச்ச வடிவு அத்தை
பன்னெண்டு வருஷம் தவமாய் தவமிருந்து
பெத்தெடுத்த ஒத்தப் புள்ளய
திருச்செந்தூர் ஆணலைக்கு கண்முன்னே
பறிகொடுத்தா
சீரும் செனத்தியுமா கட்டிக்கொடுத்த ரஞ்சி மதினி
வயித்துல புழு பூச்சி வளர லாயக்கில்லன்னு
அடிச்சுத் தொரத்தி வுட்டான் குடிகார மாமன்
புருஷன்காரன் சீட்டாடி
தோட்டம் தொரவு நகை நட்டு தாலியும் பறிகொடுத்து
அமாவாசை ரவைக்கு ஒத்தப் பனை மரத்த
பார்த்தபடியே கிறுக்குப் புடிச்சு நின்னா மலரு சித்தி
ஆம்பளப் புள்ளைங்கள ஒத்த ஆளா நின்னு
படிக்க வெச்சு வெளிநாட்டுக்கு அனுப்பி வெச்சு
அம்மாம் பெரிய வூட்டுல செத்து நாலு நாளா
நாறிக் கெடந்தா மாரியம்மா பெரியம்மா
குலசாமிக்கு பெரிய செவராத்திரிக்கு பொங்க வைக்கத் தவறுனதில்ல
இந்த தடவ யென் மொற…
ஜமாய்ச்சிடணும்.
****
மாயை
காலத்தின்
மெளன சாட்சியாக மலைகள்
நகரும் சாட்சியாக நதிகள்
அசையும் சாட்சியாக கடல்
எல்லாவற்றையும் காலமாக மாற்றும் மாயை
இதில் பெயரென்ன
எல்லையன்ன தேசமென்ன
நிலை எது நிலைத்தது எது?
****
செம்பருத்தி
வீட்டின்
கொல்லைப்புறத்தில் கிணறு இருந்தது
எடுப்பு கக்கூஸ் சுத்தம் செய்ய
ஒடுங்கிய மஞ்சள் நிற பாமாயில் டின்னில்
சேந்திய நீரை தள்ளி நின்று
வாங்கிக்கொள்வார் செம்பி என்ற செண்பகம்
சுற்றி தென்னை மரங்கள்
காய்த்த பருவத்தில் வரும்
மரமேறி கண்ணன்
பறித்து போட்ட பின்
தானாகவே கிணற்றில் தண்ணீர் சேந்தி கொள்வார்
முன்புறத்தில் பூத்து குலுங்கும் செம்பருத்தி
இருவரையுமே பறிக்க விட்டதில்லை
தாத்தா.
*******
உயிரட்டை!