![](https://vasagasalai.com/wp-content/uploads/2024/10/vel-kannan-586x470.jpg)
வியர்த்த காற்றுக்கு
ஒரு மிடறு வார்த்தாள் ஜன்னலோர சிறுமி
பின்னிருக்கைகள் வசை பொழிந்தது
‘சனியனே’ யென வெடுக்கினாள்
தண்ணீர் பாட்டிலை அம்மா
மிச்சமான மழை உலர்ந்து
•
நின்றிருக்கும் இடத்திற்கு வந்தடைந்த பாதை
புதிரானது
வெலவெலத்து போய் நிற்கும் கேள்விகளால்
எதுவொன்றையும் தொடங்கவில்லை
மெய்யுணர்த்தும் இடைவெளிக்குள் இட்டு நிரப்பிக் கொள்ள
திக்கற்ற தேடலால் இயலவில்லை
அவிழ்க்க முடியாத முடிச்சுகள் நீக்கமற நிறைந்திருக்கிறது
அலைந்து திரிந்த காலணிகளுக்கு காசநோய் முத்திற்று
உறைந்த கடிகார முள்ளிலிருந்து
நாளொன்றுக்கு இரண்டு முறை பெருமூச்சு வருகிறது
மெல்லிய காற்று குறையொளி பூவாளி தூறல்
திறந்திருந்த ஜன்னல் கம்பி மீதமர்ந்து
நொடியில் நோட்டமிட்டு உள்நோக்கி பறக்கத் தொடங்கியது
பட்டாம்பூச்சி
•
குறைந்த பட்சம்
உன் சாயல் உள்ள ஒருவரேனும்
அவ்வப்போது பார்த்து விடுகிறேன்
பெயர் அறிந்து கொள்ளும் ஆர்வம்
தொடர்வண்டி பயணத்தில்
உரையாடிக் கொண்டு வருபவருக்கு
அச்சு அசலாக உன் குரல்
உன் குரல் உள்ளவர்களுக்கு ஏதேதோ பெயர்
•
தெருவுக்கு ஒரு குழியாவது உண்டு
ஊரின் தெரு எண்ணிக்கையை விடவும் குழிகள் அதிகம்
ஒரு தெருக்குழியில் குப்பை
கொட்டப்பட்டு
கொட்டப்பட்டு
தெருவின் பெயர் ‘குப்பைக் குழி தெரு’ என்றானது
பள்ளமும் குழியும்
கழிவுகளுக்கானது, கழிவுகளாலானது
என்றண்ணுவது தீராத மனநோய்
குழிகள் குழிகள் குழிகள்
ஒரு நல்ல நாள் அதுவுமாக எல்லோருக்கும் செல்லமான நாய் இறந்து கிடந்தது
அப்புறம் ஒரு பூனை
ஒரு மழை நாளில் கைலாஷின் தாத்தா இடறி விழுந்து இறந்தார்
தவறி விழுந்த குழந்தை காப்பாற்றப்பட்ட பின் நீண்ட நாள் மூடப்படாமல் இருந்தது
பசு விழுந்த நாளில் அரசாங்கம் அவசரம் அவசரமாக எல்லா குழிகளையும் நிரப்பியது
சில வாரங்களில் மீண்டு தோன்றின
மனிதர்கள் காரணமின்றி தோண்டுவதில்லை
குழிகளையும்
•
வரும் வரையில்
ஏதேனும் புத்தகம் படி முடிந்தால் கவிதைகள்
ஏதேனும் பிடித்த பாடல் பாடு
அல்லது முணுமுணுத்தபடி இரு
ஏதேனும் இசை கேள்
ஏதேனும் ஓவியம் பார்
அதன் கோடுகளும் தீற்றல்களும் தரும் நுண் விளிம்புகளை உற்று நோக்கு
கடல் பார்
வானம் பார்
பின்
உன்னை கண்ணாடியில் பார்
நான் வந்திருப்பேன்