சபையில் பாடல் ஆராதனை முடிந்ததும், போதகர் சிறுபிள்ளைகளை மறை வகுப்பிற்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். பிள்ளைகள் அம்மாக்களின் மடியிலிருந்து பிரிய மனமின்றி நெளிந்துகொண்டிருந்தனர். அவர்களைச் சமாதனப்படுத்தி அனுப்பி வைத்தனர். சில பிள்ளைகள் கையில் மினி பைபிளை ஏந்தியபடி பக்கவாட்டிலிருந்த வாசல் வழியாக மாடியில் நடைபெறும் வகுப்பிற்குப் புறப்பட்டனர்.
வெள்ளைச் சட்டையும் பேண்ட்டும் அணிந்த சிறுவன் மூக்கொழுகுவதை உறிஞ்சியவாறு வேகமாக வாசலை நோக்கி ஓடினான். ஏ.சியின் குளிர் கைகளைக் கட்டிக்கொள்ளச் செய்தது. அம்மா அமர்ந்திருக்கும் திசை நோக்கிப் பார்த்தேன். முதல் இரண்டாம் வரிசையில் போதகரின் மனைவிக்குப் பக்கத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அன்று சிறப்பு நற்செய்தி பெருவிழாவுக்கென கலிஃபோர்னியாவிலிருந்து வந்திருந்த போதகர் இவான் சிவப்பு நிற கோட் அணிந்து மக்களைப் பார்த்துச் சிரித்தபடி காஃபி அருந்திக் கொண்டிருந்தார். தொடர்ச்சியாக வரும் அலுவலகக் கால்களைத் தவிர்த்துவிட்டு மீண்டும் செல்ஃபோன் சைலண்ட்டில்தான் இருக்கிறதா எனச் சரிபார்த்து உள்ளே திணித்தேன். மூத்த போதகர் ‘ஹா..ஹா..ஹல்லேலுயா’ எனப் பாடத் துவங்க, மனம் வெள்ளை உடையணிந்து மூக்கொழுக மறை வகுப்பிற்கு ஓடிய சிறுவனின் பின்னால் ஓடியது.
நான் மறைவகுப்பில் அமர்ந்திருந்த காலத்தில் ரெஜினா அக்காதான் வேதாகமக் கதைகள் சொல்லுவார். சிம்சோனின் பெலன் மொத்தமும் அவனது முடியில்தான் இருந்தது. முடியை இழந்தால் பெலன் போய்விடும். அவன் முடியிழந்து, கண்ணிழந்து அவமானப்பட்டு நிற்கதியாய் நின்றபின் கடவுள் அவனுக்கு எப்படிச் சக்தியை மீட்டுக் கொடுத்தார் என்ற கதை என்னை ஆட்கொண்டுவிட்டது.
‘இந்த சண்டே என்ன கதை வேணும்?’ என ரெஜினா கேட்கும் போதெல்லாம் சிம்சோன் கதை என வாரம் தவறாமல் சொல்லுவேன். சிலமுறை எனக்காக அக்கதையை மீண்டும் சொன்னதும் உண்டு. அவன் சிங்கத்தின் தாடையை இரு கையால் கிழித்துப் போட்ட வீரனெனச் சொல்லும்போது என் கை மயிரெல்லாம் நட்டுக் கொள்ளும். என்ன கதை கேட்டாலும் சுவாரஸ்யமாகச் சொல்லும் ரெஜினா அக்கா, ஆதியாகமப் படைப்புக் கதையைச் சொல்லும்போது மட்டும் மிகத் தட்டையாகச் சொல்லுவார். என்னுள் அடுக்கடுக்காகக் கேள்விகள் துருத்திக் கொண்டு துரத்தும்.
‘கடவுள் வானம், பூமி, புல்பூண்டு, மிருகம், பறவைனு எல்லாத்தையும் படைச்சதுக்கு அப்புறம் கடைசியாத்தான் நம்ம படைச்சார்’
‘நம்மையா அக்கா?’
‘நம்மனா நேரடியா நம்மள இல்ல சுரேந்தர், நம்ம எல்லோருக்கும் அப்பா – அம்மாவான ஆதாமையும் ஏவாளையும்.’
‘ஆதாமும் ஏவாளும் எங்க சைன்ஸ் புக் அட்டையில இருக்கக் குரங்கு மனுஷன் மாதிரிதான் அப்ப இருந்திருப்பாங்களா?’ என ஜெரி அப்போது கேட்டான். அவன்தான் தற்போது சபையில் கீபோர்ட் வாசிப்பதும் பாடற்குழுவை நிர்வகிப்பதும்.
‘ச்சேசே.. உனக்கு ஏன் ஜெரி இப்படிக் கேள்விகள்லாம் வருது! கடவுளே நேரடியா ஒருத்தரைத் தன் கையால செய்யும்போது எவ்வளவு அழகாப் படைச்சிருப்பார். ஆதாம்தான் இருக்கதுலே அழகான ஆணா இருக்க முடியும்.’ என்றவள், சிறிது யோசிப்பதபின், ‘ம்ம்ம்.. இல்ல இல்ல யோசேப்புதான். இல்ல அவரும் இல்ல. நம்ம இயேசப்பாதான் அழகு’ என்றாள் கையிலிருந்த ஊக்கினால் நகத்துணுக்கில் துருத்திக் கொண்டிருந்த நகப்பாலிஷை சுரண்டியபடி.
‘ஏன் இந்த சுரேந்தர் பய மட்டும் அழகாவே இல்ல அக்கா. எப்பப் பார்த்தாலும் மஞ்சக் கறையிருக்க அழுக்குச் சட்டையாப் போட்டுட்டு வர்றான்’ என்றதும் எனக்கு அவமானமாய்ப் போனது. ரெஜினா அக்கா அவனை முறைத்துவிட்டு என்னை அருகில் அழைத்து மடியில் அமர வைத்தாள்.
‘சட்டையில இல்ல ஜெரி அழகு. நீ அவன இன்சல்ட் பண்ணியும் உன்னைத் திட்டாமச் சண்டை போடாம அமைதியா இருக்கான்ல.. இதுக்குப் பேர்தான் சுத்தம். இந்த சுத்தம் இல்லாதவங்க எல்லாருமே அழுக்கானவங்கதான். நீ இப்ப சுத்தமா? அழுக்கா? நீயே யோசிச்சுப் பாரு’ என்றாள்.
அவனைப் பார்த்து மற்ற பிள்ளைகள், ‘ஜெரி அழுக்கு, ஜெரி அழுக்கு’ என்றதும் அவன் அழத் தொடங்கிவிட்டான். அப்போது வந்த ரூபன் அண்ணன் எங்களைச் சமாதானப்படுத்துவதற்காக, ‘துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்’ என்ற பெர்க்மான்ஸ் பாட்டிற்கு நடனமாடச் சொல்லிக் கொடுத்தார்.
நான் கடைசி வரிசையில் நின்று அசையாது என் வெள்ளைச் சட்டையையே பார்த்தேன். என்னிடம் இருப்பதிலே நல்ல சட்டையைத்தான் இதுவரை அம்மா எனக்குச் சபைக்கு வரும்போதெல்லாம் உடுத்தி அழைத்துக்கொண்டு வந்திருக்கிறாள். இன்றும் அப்படித்தான். ஆனால், அது அழுக்காகவும் அசிங்கமாகவும் இருக்கிறதெனக் கேள்விப்பட்டது, என்னைத் தேம்ப வைத்தது. அறையின் மூலையில் நின்று வருகைப் பதிவேட்டைத் திருப்பிக் கொண்டிருந்த ரெஜினா அக்காவைப் பார்த்தேன். அவள் சேலை ரொம்பவே அழகாக இருந்தது. அதுபோல் அம்மா என்றுமே உடுத்தியதில்லை. அவள் கல்யாணப் படத்திலிருந்த சேலைக் கூடச் சாதாரணமாகத்தான் இப்போது பட்டது. நான் வேகவேகமாக ரூபன் கூப்பிடுவதைப் பொருட்படுத்தாமல், கீழிறங்கி முதல் சேர் வரிசைக்குக் கீழ் ஜமுக்காளத்தில் அமர்ந்திருந்த அம்மாவின் அருகே சென்று அமர்ந்து கொண்டேன். போதகர், யோபுவின் கந்தல் உடையைப் பற்றியும் சீழ் பிடித்தொழுகும் அவன் சிரங்கு பிடித்த தோலைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். அம்மா ஒட்டுப் போட்ட கிழிந்த சேலையின் முந்தியால் என் மூக்கைத் துடைத்துவிட்டுத் துணிப்பையிலிருந்து வறிக்கியை எடுத்துத் தந்தாள். அவளுக்கு அருகில் அமர்ந்திருந்த எல்லாப் பெண்களுமே அவள் போன்ற உடையில்தான் இருந்தனர். சேர்களில் உட்கார்ந்திருந்த பெண்களின் உடையிலிருந்த எந்த மினுக்கும் அவர்களிடம் இல்லை. யோபுவின் நாய் நெருங்கி அவனது ஆறாப் புண்களை நக்கிக் கொடுப்பதைப் போல் நானும் வறிக்கியைச் சுவைப்பதாகப் பட்டது. அம்மாவை போதனையைக் கவனிக்கவிடாமல் மடியில் படுத்துத் தேம்பினேன். முதல் வரிசை நாற்காலியிலிருந்த பாட்டி என்னைப் பார்த்து, ‘ச்ச்’ என வாயை மூடுமாறு செய்கைச் செய்தார். பிறகு ஜமுக்காளத்திலே உறங்கிப் போனேன்.
இப்போது அம்மா சிஃபான் சில்க் புடவையணிந்து, கொட்டை எழுத்துகளால் பதிக்கப்பட்ட உயர்ரக வேலைப்பாடுகளால் இழையப்பட்ட வேதாகமத்தைக் கையிலேந்தி போதகர் சொல்லும் வசனங்களை வேகமாகப் புரட்டி எடுத்து வாசிப்பதைப் பார்க்கையில், நம்பிக்கை இல்லையென்றாலும் தொடர்ந்து சபைக்கு வரலாம் போலிருந்தது.
மூத்தவர் கலீஃபோர்னிய போதகர் இவானை அறிமுகம் செய்து வைத்தபின், மேடை அவர் வசமானது. ‘பிரைஸ் தி லார்ட்’ எனக் கட்டடம் அதிருமளவு அவர் கத்தினார். வெள்ளைக்காரன் குரலுக்குச் சற்றும் குறைவில்லாதது தமிழனின் குரல் என என்னருகிலிருந்த மூப்பர் தெருவையே உலுக்கும்படி கத்தினார். முந்நூறு பேர் வதியும் சபையில் அவர் சத்தம் மட்டும் தனித்துக் கேட்டது. நான் கண்களை மூடிச் சிரிப்பைக் கட்டுப்படுத்தி அமர்ந்துகொண்டேன்.
இவான், ‘God will make a way’ என்ற பிரபலமான டான் மொயின் பாடலைப் பாடத் தொடங்கினார். ஜெரியும் அவருடன் மேடையைப் பகிர்ந்து இரண்டாம் குரலாக இணைந்துகொண்டான். மெலடி பாடல் என்றால் தன்னால் கண்களை மூடிக்கொண்டு இருகைகளையும் வானத்தை நோக்கி அசைக்கவேண்டும் என்றும், ஃபாஸ்ட் பீட் குத்துரகத் துதிப் பாடல் என்றால் நவீன அகோரியின் சிவராத்திரி நடனத்தைப் போல் குதிக்க வேண்டும் என்றும் விசுவாசிகள் எந்தக் காலத்திலிருந்து கடைப்பிடித்து வருகின்றனர் என்ற புதிர்க் கேள்வி என்னுள் உதித்தது.
பல முதியவர்கள் உள்ள சபையில் வேற்று மொழியில் பாடல்கள் பாடும்போதும் தன்னை மீறி அவர்களது கண்களிலிருந்து வழியும் கண்ணீர்த் துளிகள் மேலும் மேலும் பக்தியின் மாயத்தன்மையை என்னுள் பெருக்கிக்கொண்டே போனது. மூன்று பகுப்பாகப் போடப்பட்டிருந்த நாற்காலி அடுக்கில் மத்தியிலிருந்த பகுதியை மட்டும் சொல்லி வைத்தாற் போல் புதிதாய்த் திருமணமான ஜோடிகள் ஆக்கிரமித்திருந்தனர். அம்மாவின் ஒட்டுமொத்தக் கவலையும் தற்போது எனக்குத் திருமணம் முடித்து மத்திய வரிசையில் அமர வைப்பதில்தான் இருந்தது. இவான் மேலுமொரு மெலடி பாடலைப் பாட அவரைத் தொடர்ந்து சின்ன போதகர் தமிழில் கனிவுமிக்க பாடலொன்றைப் பாட, சபை கண்ணிர்ப் பெருக்கில் நனைந்துகொண்டிருந்தது. ஏ.சியின் ஈரக்காற்றை அணைக்கும் தெய்வீக உஷ்ணப்பதம் காற்றில் பரவியது.
‘என் மகளே/ என் மகனே, கர்த்தர் உன்னை வாஞ்சையாய்ப் பார்க்கிறார். அவரது கூக்குரலைக் கேட்பாயா? கர்த்தருடைய பரிசுத்த ஆவியானவர் உன்னருகில் உலாவுவதை உணர்கிறாயா? தேவனை எப்போதும் வானத்தில் துதித்துக்கொண்டிருக்கும் அவருடைய சேனையைவிட உன் ஒரு சொட்டுக் கண்ணீரால் கடவுள் உளம் நெகிழ்கிறார் என்று அறியாயா?’ என்ற போதகர் தன் உடைந்த குரலில் ‘அப்பா’ என்று வானத்தை நோக்கி ஏறெடுக்கையில் பக்கத்தில் அமர்ந்திருந்த சபை மூப்பர் ‘சுவாமியே என அரற்றத் தொடங்கினார்.
அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவளருகில் நான் ஜமுக்காளத்தில் அமர்ந்திருந்த நாட்களில் அவள் மார்பில் அடித்துக் கதறி, ‘என் அழுகுரலைக் கேளுமப்பா சேசப்பா’ என்ற தேம்பும் கணங்கள் நினைவுக்கு வந்தன.
எத்தனை எளிமை நாம் காணாத ஒருவனை அண்டி அழுவதும் எதிர்பார்த்திருப்பதும். ஆறுதலுக்கு ஏங்குகையில் யாரைப் பற்றிக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் புலம்புவதிலே பாதித் துன்பம் குறைந்துவிடுகிறது. அம்மா உனக்கும் அப்படித்தான் விடுதலை கிடைத்தது என்றால் ஏற்றுக்கொள்ள மாட்டாய். தேவனே என் பரிகாரி என்பாய். எதனாலும் தவிர்க்கமுடியாத அவளது வேர்பெற்ற நம்பிக்கையை என்னால் வியக்க மட்டும்தான் முடிந்தது.
இவான் வாலிபர்களை பலிபீடத்திற்கு முன்பாக வரச் சொன்னார் (பலியிடும் வழக்கம் அப்போஸ்தலர்கள் காலத்திலே ஓய்ந்துவிட்டாலும், போதகர் நின்று பிரசங்கம் செய்யும் மேடையின் முன்புள்ள இடத்தை பலிபீடம் என்றுதான் அழைக்கின்றனர். ஒருவேளை ரத்த பலிக்குப் பதிலாக ஸ்தோத்திர பலி செய்யப்படுவதாலும் இருக்கலாம். இல்லை என் செவிகளை பலி எடுப்பதாலும் இருக்கலாம்) சின்ன போதகர் பரிசுத்த ஆவியின் மொழியான அந்நிய பாஷைப் பேசும் வரத்தைப் பெற்றுக் கொள்ளாத வாலிபர்கள் யாவரும் முன்னால் வாருங்கள் என்றார்.
‘லபா லபா லபலப முட்டலாப்பா’ என அவர்கள் பக்திப் பெருக்கில் பேசும் பாஷை யாருக்கு அந்நியம்! யாருக்குச் சொந்தம்! என்றுதான் தெரியவில்லை. இயேசுவின் சீடர்கள் பேசினார்கள். அவர்கள் மூலமாய் பரிசுத்த ஆவி அந்நிய பாஷை பேசியது என்கின்றனர். அந்தக் காலத்தில் யூதனான பேதுரு, தன் நினைவிலி மனதிலிருந்து எப்படியோ கிரேக்கத்தையும், லத்தீனையும் பேசித் தொலைந்துவிட்டான். அது அவனுக்கு அந்நிய பாஷைகள் என்பதால் அப்படி அழைத்தது ஓர் காலத்தில் ஏற்புடையதும் கூட. இப்போதோ இவர்கள் பேசும் முட்டலாப்பா பக்கத்தில் இருக்கிறவனுக்கல்ல; பேசுபவனுக்கே புரிவதில்லையே என நினைத்தவாறு அமைதியாய் இருக்கையில் அமர்ந்துகொண்டேன்.
பக்கவாட்டில் அமர்ந்திருந்த ரெஜி – ரூபன் இணை என்னை முன்னால் போகச் சொன்னது. காணாதது போல் திரும்பிக்கொண்டேன். மேடையிலிருந்து போதகரும் அழைக்கவே முன்னால் சென்று நின்றேன். வாத்தியங்கள் அமைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்த எல்லா யுவ-யுவதிகளும் எனக்கு முன்னால் வரிசையாக நின்றனர். அம்மா நான் முன்னால் நிற்பதைப் பார்த்து போதகருக்கு முன்பாகவே கைநீட்டி ஜெபிக்கத் தொடங்கிவிட்டாள். மேஜைக்குக் கீழிருந்த வொய்னையே பார்த்துக்கொண்டிருந்தேன். நிச்சயம் ஹோம் மேட் வொய்ன்தான். யாரது எனக் கண்டுபிடிக்க வேண்டுமெனத் தீர்மானித்துக்கொண்டேன்.
இவான் ஒவ்வொருவரின் தலைமீதும் கை வைத்து, ‘I am releasing the divine holy spirit’ என்று உறுமினார். அவர் உதட்டிற்கும் மைக்கிற்குமான துல்லிய இடைவெளியைச் சமன் செய்தபடி சின்ன போதகர் பின் தொடர்ந்தார். இவான் கை வைக்க வைக்க ஒவ்வொருவராக, ‘பொத்’ , ‘பொத்’ எனப் பின்னால் சாய்ந்தனர். அவர்களைத் தாங்கிப் பிடிக்கவென வாலண்டியர்ஸ் படையும் நின்றுகொண்டிருந்தது. எனக்குப் பின்னாலும் ஒருவர் தாங்கிப் பிடித்துக் கொள்ள வேண்டுமென நின்று கொண்டிருந்தார்.
சரி இந்த ஒருமுறை தன்னை ஒப்படைத்துத்தான் பார்ப்போமே எனக் கண்களை மூடி, இப்படி விழுறானுங்களே.. தாங்கமுடியாதபடி ஒரு சக்தி வந்து பாயுமோ..சுடுமோ… வெப்ப ஆவியோ நம்ம ஆவியானவர் என்று யோசித்தபடி கரங்கூப்பி நின்றிருந்தேன். இவான் அருகே வந்துவிட்டார் என்பதை அவரது அந்நிய மணம் சுட்டிக் காட்டியது. என் முன்னெற்றி மேல் கையைப் பதித்து, ‘Receive the holy spirit’ என்று புஷ் (push) கொடுத்தார். அதுவரை எல்லாரும் விழுந்துவிட்டதால் நான் விழாதது அவருக்கு சஞ்சலத்தை ஏற்படுத்தியிருக்கவேண்டும். எனக்குமே அப்படித்தான் இருந்தது. ஆனால், நானாக விழுந்தால் ஆவியானவர்க்கு என்ன மரியாதை! எல்லோருக்கும் எதையோ இறக்கி மயக்கடித்த இவான் எனக்கு ஒன்றும் தராமல் படுக்க வைக்கப் பார்க்கிறாரே என முரண்டுபிடித்தபடி நானும் ஆமென் என அவரது கையை ஏந்திக்கொள்வதுபோல் முன் தள்ள.. இப்படிச் சில நிமிடங்கள் பரஸ்பரம் தள்ளிக்கொள்வதில் கழிந்தன. கண்களை விழித்துப் பார்க்கையில் நான் விழுவேன் என்று ஆர்வமாய் பின்னால் காத்துக் கொண்டிருந்தவனைக் காணவில்லை. இவான் என்னைக் கள்ளமாய்ப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு கடந்துபோனார். சத்தமாய்ச் சிரிக்கவேண்டும் போலிருந்த ஆவலை மறைத்துக்கொண்டு மெல்ல இடம் சென்று அமர்ந்தேன். அருகிலிருந்த மூப்பர் தேவாங்கைப் பார்ப்பது போல் பார்த்தார்.
ரெஜி அக்கா என்னை நோக்கிச் சைகைச் செய்து, ‘போடா அந்திக் கிறிஸ்து’ என்று வாயசைத்தது தெளிவாய்ப் புரிந்தது. சிரித்துக்கொண்டேன். இவான் இப்போது உடல் பெலன் பெறவிரும்பும் விசுவாசிகளுக்கு விடுதலை தரப் போவதாய் முன்னே அழைத்தார். மூட்டு வலி பெருசுகள் பலிபீடத்தை படைபீடமாக்கினர். மாடிக்குச் சென்றிருந்த வெள்ளையுடுத்திய சிறுவன் ஓடியபடி கீழே வந்தான். அம்மா அமர்ந்திருந்த வரிசைக்குக் கீழ் ஜமுக்காளத்தில் முழங்காலிட்டிருந்த அவனது அம்மாவின் வயிற்றோடு தன் முகத்தைப் பொத்திக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டான். அவள் அவனிடம் எதுவும் விசாரிக்காமல் பக்கத்தில் அமர்த்திக்கொண்டாள். என் அம்மா தன் பையிலிருந்த பிஸ்கட் பாக்கெட்டை அவனுக்குத் தந்து தலைக்கோதிவிட்டாள். இவான் அதிதீவிரமாக, சுகர் வியாதியை உண்டுபண்ணும் கணையமே நிறுத்து உன் சேட்டையைக் என்று கடவுளின் பெயரால் ஆணையிட்டுக் கொண்டிருந்தார்.
‘அசைவாடும் ஆவியே’ என்ற பாடலைப் பின்னணிப் பாடகர் குழு பாடவாரம்பித்தது. இங்கு எதேனும் அசைவாடினால் அது அந்த முழந்தாளிட்ட தாய்க்காகவாகத்தான் இருக்கும் என்று பட்டது. அவள் மெல்லத் திரும்பி அம்மாவைப் பரிவுமிக்க கண்களோடு பார்த்தாள். வானத்தின் சேனைகள் திரளாய் அவளருகில் வந்து தலைமீது கைவைத்துக் கொண்டன. அவள் தேவ தூதனின் சாயலில் மின்னத் துவங்கினாள்.
*********