நீண்ட கல் திண்ணை குளிர்ந்து கிடந்தது. கல் திண்டில் தலை வைத்துக் கொண்டால் தூக்கமும் மயக்கமும் கலந்தது போல நினைவுகள் குழம்பி உடல் ஓய்ந்து கிடந்தது. மெல்லிய கதம்ப மணமும் பருப்பு வேகும் மணமும் கலந்த வாசனையாக அம்மா நாசி வழியே தன் வரவை உணர்த்தினாள். புடவை சரசரக்கும் ஓசையில் அவள் தன்னை நெருங்கி வருவது தெரிந்தது. “தூங்கிட்டயோ கண்ணா?”மெல்ல காதைத் தீண்டும் குரலில் கேட்டபடியே இடதுதோளைத் தொட்டாள். 70 வருடங்களாக அடுப்படி வேலைகளிலிருந்து வீட்டு வேலைகள் அத்தனையும் செய்தாலும் இன்னும் தண்ணென்று மெத்து மெத்தாக இருக்கும் விரல்களின் தொடுகை. கதகதப்பான குளிர் பரவும் தொடுகை. வாசனுக்கு கண்களைத் திறக்க வேண்டாமெனத் தோன்றியது. ஆனாலும் அவனறியாமலேயே திறந்தான். அம்மா மேற்திண்ணையின் தூணில் சாய்ந்தாற்போல அவன் தலைமாட்டில் உட்கார்ந்திருந்தாள். 75-ஐத் தொட்டாலும் இன்னும் முழுவதும் வெளுக்காத கருப்பு வெள்ளை தலைமுடி. இரு பக்க மூக்கிலும் சிறு நட்சத்திரங்கள். காதுகளில் நீலக் கல் பதித்த பவளமல்லி அளவே இருக்கும் சூரியகாந்தி பூக்களின் சிறுமலர்கள். துருத்தாத மஞ்சள் முகத்தில் அவள் நடுவிரல் நுனியளவைக் காட்டும் குங்குமம்.
வாசனுக்கு வைதேகி இப்படி ஏன் இல்லை என்று தோன்றியது. அவளும் அழகுதான். ஆனால், இப்படி இல்லை. கேட்டால் ‘உங்கம்மா வயசுல
அப்படி ஆவேனோ என்னவோ’ என்பாள்.
“அப்பா சாப்டுட்டாரா?” என்றான்.
“ஆச்சுடா. அவருக்கென்ன நாலு கவளம் சாதம். சாத்தமுது கரைச்சாப்ல ரெண்டு கவளம். மோருல கரைச்சாப்ல ரெண்டு கவளம். சித்த தல சாச்சிண்டா 4 மணிக்கெல்லாம் பிரபந்தம் பாடம் கேக்க வந்துடுவாளே“- அம்மா எதையோ சொல்ல வந்து தயங்கி தனக்கும் தெரிந்ததையே சொல்லுவது வாசனுக்குப் புரிந்தது. அவனே ஆரம்பித்தான்-
“வைதேகி வரப்போறதில்லைம்மா. நீ மென்னு முழுங்கி எப்ப வருவான்னு கேக்காதே”
“ஏண்டா ? ஆபிஸ்ல லீவு தரலையா?”
“தந்தா மட்டும் வந்துடுவா பாரு உன் நாட்டுப்பொண். தெரியாத மாதிரி கேக்காதம்மா. பெரிய திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் பாரு அவ இங்க வராத இருக்கறது “– வாசன் குரல் உயர்த்தாமலேயே எகிறினான்.
அம்மாவின் கண்கள் தணிந்தன. அவன் கல்லூரி படிக்கும் நாட்களில் ஹாஸ்டலிலிருந்து வரும்போது இதே பார்வையில்தான் அவனைப் பார்ப்பாள் அம்மா. “கோந்தே, அவ சிரமம் நேக்கு புரியறதுடா. இங்க வந்தா நான் கேக்க மாட்டேன். ஊர்ல ஒவ்வொருத்தரும் கேப்பா. கிராமமோன்னோ… பிறத்தியார், தன்னவான்னு பார்க்காதைக்கு ஒடைச்சி பேசிடுவா. நான் இங்கே தினோமும் நம்மாத்து சந்தான கிருஷ்ணனுக்கு திருமஞ்சனம் பண்ணிக்கிண்டு வர்றேன். சீக்கிரமே பகவான் கண் தொறந்துடுவான் “
“நீ திருமஞ்சனம் பண்ணியே சந்தான கிருஷ்ணன் ஆலிலை கண்ணனா ஆயிடப் போறான்.”வாசனிடமிருந்து கசப்பான புன்னகையோடு வார்த்தைகள் வந்தன.
அம்மா கண்களை ஒருமுறை அழுந்த மூடிக் கொண்டாள். 10 நொடிகளுக்குப் பின் திறந்தபோது அவள் வேறு பாவனையாக இருந்தாள். “கண்ணா, நீ முத்துத் தாத்தாவை இன்னும் பார்க்கலையா ? போன தடவை நீ வந்து போனதைக் கேட்டுட்டு அவனை நான் பாக்கணுமேன்னு அப்பாவண்டை கேட்டாராம். 93 தாண்டிட்டார். இன்னும் பெருமாள் கோவில்ல முதல் ஆளா நின்னு பிரபந்தம் சாதிக்கறார். அவரப் பார்த்து சேவிச்சுட்டு வாயேண்டா. 80 வருஷமா பிரபந்தமும், வேதமும் சாதிக்கற வாயால அவர் ஆசீர்வாதம் பண்ணா க்ஷேமமா இருக்கும்” அம்மா கெஞ்சுவது போன்ற பாவனையில் கண்டிப்பாக சொன்னாள்.
வாசன் நீளமாக மூச்சு விட்டான்-“அம்மா, அவரும் சந்தானப் பிராப்தி ரஸ்துன்னு சொல்லுவார். 41 வயசாச்சுமா எனக்கு. இதுக்கப்புறமும் நம்பிண்டு இருக்க எனக்கே லஜ்ஜையா இருக்குமா.”
“போறுண்டா, என்னவோ ரிடையர்ட் ஆன ரயில்வே கிளார்காட்டமா பேசிண்டு. கல்யாணம் ஆகி 8 வருஷம்தான ஆறது. பத்மாக்கு அப்பறம் நீ பொறக்கறச்சே அப்பாக்கு 40 வயசு. சும்மா அலுத்துக்காதே” -அம்மா முகத்தில் நொடி நேரம் மஞ்சளை மீறி சிவப்பு பூத்து படர்ந்து மறைந்தது. பூத்து அடங்கிய சிவப்பின் தணல் மிச்சமிருக்கும் முகத்தோடு அம்மா சொன்னாள் –“வாசா, முத்து தாத்தா நாசூக்கு தெரிஞ்சவர். பெரியவர். அம்மாக்காக போய் பாத்துட்டு சேவிச்சுட்டு வந்துடு. பத்து நிமிஷம் கூட ஆகாது”
முத்து தாத்தா வீட்டைப் போய் சேரும்வரை யார் கண்ணிலும் பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இருட்டும்வரை காத்திருந்து 7 மணி ஆனதும் கிளம்பினான் வாசன். அவன் வீட்டைப் போலவே சற்று சிறிய திண்ணையுடன் இருந்தது முத்துதாத்தா வீடு. மெல்ல படியேறினான். கூடத்தில் வாசலுக்கு நேராக இருந்த ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டே முத்து தாத்தா ஏதோ வாசித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. இவன் கதவில் கை வைத்து தள்ளிய சிறு முனகலுக்கு நிமிர்ந்தார். “யார் சுவாமி? இங்கேர்ந்து சரியா தெரியலை. சித்த உள்ள வாங்கோ “– பல்லாண்டுகளாக பல்லாண்டு பாடிய குரல் உடலின் வயதை இன்னும் எட்டாமலிருந்தது. “சேவிக்கறேன் தாத்தா… அடியேன் ஆர்.எம்.எஸ்.ராமானுஜம் அய்யங்கார் பேரன். சீனுவாசன் “
கிழவர் எழுந்து நின்றார். 75 வயது மதிக்கலாம் போன்ற தோற்றம். கடுக்கண் ஏறியிருந்த காதுகள் மட்டும் சற்று தளர்ந்து தொங்கலாடின. ஆச்சரியமாய் கன்னங்கள் சுருக்கமின்றி மோவாயும், தாடையும் மட்டும் சுருக்கங்களோடு இருந்தன. ஐந்து மடிப்பு வேட்டியுடன் மேலே மூடியிருந்த அங்கவஸ்த்ரத்தோடு கிழவர் நிற்கும்போது வாசனை விட உயரமாகத் தெரிந்தார். முகம் முழுவதும் பூத்த புன்னகையோடு கிழவர் அவன் இரு தோள்களையும் தொட்டார். “ராமாஞ்சு பேரனா? கல்யாணத்துக்கு பார்த்தது. அதுக்கு முன்னயே அமெரிக்கா, இங்கிலாந்து, பெங்களூருன்னு றெக்க கட்டிண்டுன்னா பறந்தே. உங்க சித்தப்பனுக்கு சஞ்சலம். நீ யாரையேனும் லவ் மேரேஜ் பண்ணிடுன்டுவியோன்னு. ஒனக்கும் உங்கப்பா உலகமெலாம் தேடி கடைசில நம்ம தெருலயே கிடைச்சா பாரு உன்னோட ஆத்துக்காரி. பகவான் சங்கல்பம். சரி, ஆம்படையா எங்கே? சின்னமனூர் ஸ்ரீதேவி ஆச்சேடா? தாயார் சேர்த்தி பாத்துடலாம்னா நீ மட்டுமா வந்துருக்கே?” – அவர் வைதேகியை இவ்வளவு நினைவில் வைத்திருப்பது வாசனுக்கு வியப்பாகத்தான் இருந்தது. வைதேகி அப்பா இங்கு சர்க்கரை ஆலை வேலைக்கு என வந்து விட்டாலும் வைதேகி சின்னமனூரில் தாத்தா வீட்டிலேயேதான் வளர்ந்தாள். கல்லூரி சென்னையில் முடித்து நேரே வேலைக்குச் சேர்ந்தாள் என்றாலும் இங்கு அவள் வந்தது வெகு அபூர்வமாகத்தான்.
“உட்காருடா ஸ்ரீநிவாஸா ..” அவன் பெயரை அவ்வளவு திருத்தமாய் அவனே சொன்னதில்லை என்பது போல சொன்னார். எதிரே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தான். கிழவர் ஊஞ்சலில் உட்கார்ந்தார் –
“வொர்க்லாம் எப்படிப் போறது? ஹவ் இஸ் லைஃப் ?”
எதிர்பாரா நொடியில் வாசன் வசமிழந்தான்.”தாத்தா, உங்களுக்குத் தெரியாதா? ஏண்டா கல்யாணம் பண்ணிண்டேன்னு இருக்கு. வைதேகியும் நானும் பேசிக்கறதே ஒண்ணு ரெண்டு வார்த்தையா கொறஞ்சிடுத்து. எல்லா டெஸ்டும் பண்ணியாச்சு. 17 டாக்டர்ஸை பார்த்தாச்சு. ஒரு கொறையுமில்லைங்கறான் எல்லாரும்.”- சட்டென குரல் உடைந்து அழுவது போல ஆனதும் நிறுத்திக் கொண்டான். கிழவர் அவனை பார்வையால் தடவிக் கொண்டிருந்தார். அவன் மேலே பேச யத்தனித்ததும் கையமர்த்தினார்.
“உங்கம்மா உன் ஜாதகம் எடுத்துண்டு வந்து கொடுத்தா. எங்கயோ ஒரு பிராயசித்தம் நீ பண்ண வேண்டியதிருக்கே. “
“தாத்தா, நான் மனசறிஞ்சு தப்பு யாருக்கும் பண்ண…” வாசன் குரல் அப்படியே நிற்க தொண்டை அடைத்தது. கிழவர் வேகமாய் தன் பார்வையை அவனிடமிருந்து எடுத்து தண்ணீர் குடிப்பதுபோல அவனுக்கு நேரம் கொடுத்தார். வாசனுக்கு பெருமாள் கோவில் கிணற்றடியில் கொலுசு ஒலிக்கும் பாதங்களுடன் நீர் சேந்தும் ஜானகி மின்னி மறைந்தாள். சொல்ல வந்த வரியை முடிக்க முடியாமல் ஆனது.
“கோந்தே, ஸ்ரீநிவாஸா… நாம செய்யற காரியங்களை சரி, தப்புன்னு நிர்ணயிக்க நம்ம கணக்கு மட்டும் போறாது. வைதேகிக்கு ரெண்டு வயசு மூத்தவதானே ஜானகி. உன் மாமனார் போனதும் அந்த ஆத்துல ஜானகிக்கு வெள்ளிதோறும் விளக்கேத்தறதும், நெல் குதிராண்ட மரப்பெட்டிக்கு ஆவணி பெளர்ணமி தோறும் அக்கார அடிசில் திருவமுது பண்ணி வைக்கறதும் நின்னு போயிடுத்து. நீ ஐ.டி-ல இருக்கப்பட்டவன். இந்த விஷயத்துல நான் சொல்றதைக் கேக்கறயா?“
“சொல்லுங்கோ தாத்தா”
கிழவர் மெல்ல ஊஞ்சலை அசைத்துக் கொண்டார். சப்தமின்றி முன்பின்னாய் போய் வந்தது அது. “உனக்கு உன் மாமனார் ஆத்துல பாலாம்பிகை பூஜை ஒண்ணு வருஷந்தோறும் நடந்துண்டு வந்தது தெரியுமோ?”
“வைதேகி முன்னாடி சொல்லிருக்கா” மெல்ல தலையைக் குனிந்து கொண்டு அவரை நிமிர்ந்து பார்க்காமல் முனகலாகச் சொன்னான் –“ஜானகி போனதுக்கப்புறம் சரியா பண்ணலைன்னும் சொல்லுவா”
கிழவர் பார்வையில் எந்த மாற்றமும் இல்லை. “அந்த பாலாம்பிகை கதையை வைதேகியோட பிதாமகர் முத்துஸ்வாமி அய்யங்கார் என்னாண்ட சொல்லிருக்கார். அவளை நமஸ்காரம் பண்ணின பேருக்கு அவ பெளர்ணமில பிரத்யட்சம். அவருக்கு அவரோட தாத்தா சொன்ன கதை. இதை நீ அவசியம் கேட்கணும். கேப்பியோன்னோ? டூ யூ ஹேவ் டைம் டு ஸ்பேர் ஃபார் ஏ ஸ்டோரி?”
தலையை மட்டும்தான் அசைக்க முடிந்தது வாசனுக்கு. அவர் குரல் அவனைக் கட்டியிருந்தது. ஊஞ்சல் முன்னும் பின்னுமாக போனாலும் தாத்தாவின் குரல் அலையாமல் இருந்தது.
2
முத்துராகவ ஐயங்கார் உடையவர் ராமானுஜர் வழி வந்த ஸ்ரீ வைஷ்ணவ பரம்பரையைச் சேர்ந்தவர். சின்னமனூரில் வயலும் வரப்புமாக வாழ்வு. அருகிலேயே பெருமாள் கோவிலில் கைங்கர்யம். இன்று போல நாளை என இனிய நாட்கள். பிள்ளைகளுக்கும் கல்யாணம் கழிந்து பேரப் பிள்ளைகளுக்கு உபநயனம் ஆகி யஜுர் வேத சுக்ல சாகை பாடம் கேட்க பாடசாலைக்குப் போய்விட்டார்கள். காலையில் எழுந்து காலைக் கடன் கழித்து, பொடிநடையாக போய் ஆற்றில் ஒரு முழுக்கு போட்டு அலசிய வேஷ்டியையும், துண்டையும் ஏழுமுறை உதறி மடியாக உடுத்திக்கொண்டு வந்து, வீட்டில் பெருமாளுக்கு திருவாராதனம் முடித்து திண்ணையில் அமர்ந்தால், வேதம் நா அறியுமோ மனமறியுமோ என அதன் போக்கில் ஒழுகி தெருவெல்லாம் பெருகும். ஒரு நாள் இப்படி ஆராதனைகள் எல்லாம் முடிந்து, அறுவடைக்கு நின்றிருந்த வயல் வரைக்கும் சென்று வரலாம் என ஐயங்கார் சென்று திரும்பும் வழியில்தான் வெங்கிட்டம்மாள் வந்தாள். அவள் வந்த பிறகு ஐயங்காருக்கு அவள்தான் எல்லாம் என்று ஆனது. அவர் கடைசி மூச்சை விடும்போதும், ‘வெங்கிட்டம்மா’ என்ற சொல் மட்டுமே எஞ்சியிருந்தது அவர் நினைவில்.
ஐயங்கார் நிறை வயல் எல்லாம் ஒரு சுற்று பார்த்து விட்டு, பொம்மைய நாயக்கர் வயல் வரப்போரமாக நடந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அங்கங்கே பறவை விரட்ட நின்ற வைக்கோல் பொம்மைகளைத் தவிர வழியெங்கும் ஆளே இல்லை அன்று. ஆனால், பெரியவர் நடக்க, நடக்க அவர் ஊன்றிய ஒவ்வொரு காலடிக்கும் கொலுசும் சலங்கையும் ஒலித்தன. அவர் நின்றால் அவையும் நின்றன. அவரும் நடப்பதும் நிற்பதுமாக சற்று நேரம் அதோடு கூட ஆடிப்பார்த்தார். ஒன்றும் விளங்கவில்லை. இதற்கு எல்லாம் அஞ்சும் ஆளும் அல்ல அவர். ‘உக்ரம் வீரம்’ என நரசிம்ஹ ஸ்தோத்திரத்தை முணுமுணுத்தபடி தொடர்ந்து நடந்தார்.
“ஆகுரா ஒரேய் முத்துராகவா” என்று ஒரு பெண் குரல். பெரியவரை பெயர் சொல்லி அழைக்கும் வயதில் சின்னமனூரிலேயே யாருமில்லை. அதோடு கேட்பதோ சிறு பெண் குழந்தையின் குரல்.. யாராக இருக்கும் என்று திரும்பிய போது எங்கிருந்து என்றே தெரியாத ஒரு காற்று வந்து மஞ்சளையும் மல்லிகையையும் மணந்து காட்டி கடந்து போனது. அதை தவிர அங்கு வேறு ஆளும் இல்லை ஆள் நடந்த சுவடும் இல்லை. அவர் நடந்த தடம் மட்டும்தான் இருந்தது. சரி என மீண்டும் நடக்கத் துவங்கினால், அதே கொலுசு ஓலியும் தொடர்ந்தது அவரடியை முன்பு போலவே.
“ஆகு தாத்தையா நேனு கூட ஒஸ்தானு காதா” என்றது அக்குரல். அவருக்கு மிக பரிச்சயமான அவர் வீட்டு பெண்குரலைப் போல ஒலித்தது இம்முறை. அவர் வீட்டில் பெண்கள் யாருக்குமே தெலுங்கு மொழி பரிச்சயம் இல்லை. தமிழ் மட்டும்தான் வீட்டில் பேச்சு மொழி. “வா வா” என்று தமிழில் சொல்லி விட்டு பெரியவர் முன் நடந்தார். காலமில்லா காலத்தில், மட மட வென தூறல் போட்டு, உடையும் உடலும் முழுதும் நனைந்ததோடு, அதுவும் நின்று விட்டது. மழை பெய்த போதும் தொடர்ந்து நடந்தபடி இருந்தார் ஐயங்கார். அவர் நடக்க நடக்க, பட்டென்று கொலுசொலி மட்டும் அவரைத் தொடராமல் அறுந்து போனது ஓரிடத்தில். சற்று யோசித்தவராக மேலும் நான்கைந்து எட்டுக்களை தயங்கியபடி வைத்து முன்னேறினார். ‘கல கல’ என அதே பெண்குரல் வெடித்து சிரித்து விட்டு, “ஒஸ்தானுரா” என கொலுசொலிக்க ஓடி வந்து, அவர் காலடி தாளத்தோடு இணைந்து கொண்டது. பெரியவரும் சிரித்தபடி தொடர்ந்து நடந்தார்.
“யார் நீ” என்று மனதுக்குள்ளேயே கேட்டார் ஐயங்கார்.
“நேனு ரா, வெங்கிட்டம்மா” என்று முன்பே பரிச்சயம் ஆனவள் போல சொன்னாள்.
“எங்க இருந்து வர” என்றார் ஐயங்கார்.
“…”
கொலுசு ஒலி நின்று, விசும்பல் ஒலி மட்டும் எழுந்தது. கை வளையல்கள் மட்டும் குலுங்கின.
“ஏன் அழற, கண்ண கசக்கிறியா, கண்ணுக்கு எழுதின மையெல்லாம் ஈஷிக்கப் போறது”
“நான் கண்ணுக்கு மை எழுதியிருக்கேனு உனக்கு எப்படித் தெரியும்?”
“எழுதிண்ட்ருக்கியோன்னோ? தெரியும்.”
“எங்க தாத்தா என்ன இந்த காட்டுல விட்டு போய்ட்டாரு” என்றாள் அழுதபடி
“யாரு உங்க தாத்தா?”
“வேங்கடப்ப நாயக்கரு, மேக்கால மலையேறி போய்ட்டாரு” பேசியபடியே இருவரும் நடந்தார்கள். ஒலியாக மட்டுமே வெங்கிட்டம்மாளை அறிந்தார் ஐயங்கார்.
“உங்க அம்மா அப்பாவ எங்க?” என்றார்
“நான்தான் அவங்கள பாத்ததே இல்லையே, ஏதோ சண்டையில இறந்துட்டாராம் நாயனா, அம்மாவும் அவர் கூடவே நெருப்பில இறங்கிட்டாளாம் எனக்கு ஒரு வயசு இருக்கும் போது. ஆஷாட மாச பௌர்ணமிக்கு சுமங்கலி பூஜ பண்ணுவாக எங்க தாத்தாவும் அவ்வாவும், ஊரையே கூட்டி”
“இங்க எப்படி வந்த?”
“வடக்க இருந்து ஒரு பெரும்படை வந்து எங்க தாத்தையாவோடு நிலத்தை எல்லாம் பிடிங்கிக்கிச்சு.”
“ம்”
“அதனால நாங்க எல்லாம் அரவ நாட்டுக்கு வந்தோம். அவ்வா எனக்கு தாழம்பூ ஜடை தச்சு, பட்டு பாவாடை உடுத்தி, வைரத்தில, லோலாக்கு, வளர்த்த காதில தங்க ஓலை, எல்லாம் போட்டுவிட்டா. தலைக்கு பில்லை, கழுத்துக்கு காரை, இடுப்புக்கு ஒட்டியாணம். தாத்தையா, சொல்ல மறந்துட்டேனே, பச்சை கல் வச்ச மூக்குத்தியும் புல்லாக்கும் என் கல்யாணத்துக்குனு ஆசாரிட்ட செஞ்சு வாங்கினது. என்னைய முத்தாலபுரம் பெரிய நாயக்கர் மகனுக்கு கல்யாணம் பேசி வச்சிருந்தாகல்ல அதுக்காக” என்னமோ முன்பே ஐயங்காருக்கு தெரியும் என்பது போல சொல்லிக்கொண்டே போனாள். ‘எல்லாத்தையும் போட்டுவிடறியே எனக்கு இன்னைக்கு கல்யாணமா?’ன்னு கேட்டேன். ‘ஆமாடி’னு சொன்னா அவ்வா. முத்தாலபுர அரமனைல ஆம்பளைக யாருமே சண்டையில பிழைக்கல. பெண்டுக எல்லாம் தீப்பாஞ்சிட்டாகனு தகவல் வந்துச்சு. அன்னைக்குதான் அவ்வா எனக்கு அலங்காரம் பண்ணிவிட்டா“
பெரியவர் நடை தளர ஆரம்பித்தது. குழந்தை அதை அறியாதவள் போல சொல்லிக்கொண்டே வந்தாள்.
“எங்க தாத்தா எனக்கு எள்ளுருண்டையும், சீம்பாலும் ஊட்டி விட்டு, கையில வெத்தில பாக்கும் இளநியும் கொடுத்து எங்க விட்டு நெல்லு பத்தாயதுக்குள்ள இறங்கச் சொன்னாரு. கங்கம்மாவுக்கு பூசை கொடுக்கைலயும், வீட்ல சுமங்கலி பூஜை நடக்கயிலையும் என்னையதான் நெல் எடுக்க சொல்லுவாக. நானும் அப்படித்தான் போனேன் தாத்தையா”
“ம்” என்ற போது பெரியவருக்கு கண்கள் பெருகிவிட்டிருந்தன, அடுத்து குழந்தை சொல்லப்போவதை அறிந்து. குழந்தையோ சலனமே இல்லாமல் சொன்னாள்.
“மூச்சு திணறிருச்சு தாத்தா. என் தலை மேல நிறைய நெல்லை கொட்டினாகளா.. அதான். முதல நல்லா இருந்துச்சா, குதிச்சு குதிச்சு விளையாண்டேன். ஆனா, கொட்டிக்கிட்டே இருந்தாகளா, மூச்சே விட முடியல தாத்தா. தாத்தாவையும் அவ்வாவையும் கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்தேன். வரவே இல்லை. திரும்ப திரும்ப கொட்டிக்கிட்டே இருந்தாங்க தாத்தா நெல்ல” என்ற போது கொலுசொலி நின்று விட்டது. ஐயங்கார் தானும் நின்று திரும்பிய போது அவளைக் கண்டார். பொன்னென மின்னும் பச்சை பட்டும், கைநிறைய பவள மோதிரங்களும், வளர்ந்த காதில் லோலாக்கும், பொன்னோலையும் பூட்டி, பின்னிய தலையில் தாழம்பூ மடல்கள் தைத்து, காலுக்கு கொலுசும் தண்டைகளும் கட்டி, மை தீட்டிய கண்களும், மஞ்சள் காப்பும், கை நிறைய வளையலுமாக, பத்து வயது மாறாத சிறு குழந்தையாக நின்றாள் வெங்கிட்டம்மாள். “அம்பிகே, மகளே என் அம்மையே” என்றபடி நிலம் தோய விழுந்து எழுந்து அவளை கரங்கூப்பி வணங்கினார் முத்து ராகவ ஐயங்கார்.
“தாத்தையா, என்ன உன் வீட்டுக்கு கூட்டிட்டுப் போறியா?”
“தாயே, நீ நாயக்கர் வீட்டு பிள்ளை உன்னை நான் என்ன கொடுத்து வளர்ப்பேன்?”
“கவிச்சி எல்லாம் கேட்க மாட்டேன் தாத்தையா, உன் வீட்டுல பசு கன்னு ஈண்டா, அந்த சீம்பாலையும், ரண்டே ரண்டு எள்ளுருண்டையையும் குடு போதும். உன் கூடவே எப்பவும் இருக்கேன். உன் வம்சத்துக்கு துணையா” என்றாள் அம்மையின் தணுப்பு ஏறிய குரலில்.
கண்களிலிருந்து நீர் பூ போல உதிர, “சரி” என்றார்.
“தாத்தா, இன்னும் நடக்கணுமே. நான் எங்கதைய இன்னும் சொல்லவா?”
“சொல்லுமா தாயே, கேக்கறேன்”
“நான்தான் எங்க ஊர்லையே அழகியாம், அதனால வடக்க இருந்த வந்த படைக்காரன், என்னையும் மண்ணையும் கொடுக்கச் சொல்லி கேட்டானாம். அதுக்கு எதுத்துதான் சண்டைக்குப் போனாக எங்க தாத்தாவும், முத்தாலபுர அரமணக்காரவுகளும்.”
“அது சரி தாயாரே, இங்க எப்படி வந்த? பரதேவதையாட்டம் இருக்கியேம்மா, உன்னை எப்படி அம்மா நான் சுமப்பேன்”
“எங்க அவ்வா என்ன மூடின நெல்லு பத்தாயத்துக்கு வெளிய இருந்து “வெங்கிட்டம்மா, வெங்கிட்டம்மா, வெங்கிட்டம்மா”னு மூணு முறை எம் பேரைச் சொல்லி மூணு பிடி நெல்லை அள்ளி கூடையில போட்டு தலைச்சுமையா கொண்டுவந்தா. கூட எங்க தாத்தையாவும் சின்னையா மக்களும் வந்தாக. என்னை நினைச்சு, அந்த மூணு பிடி நெல்லை விதைச்சுதான் இங்க சம்சாரத்த துவக்கினாக. நான் அவுகளுக்கு ஒண்ணுக்கு மூணு பங்கா பெருக்கி கொடுத்தேன். மூணு பிடி நெல்லு விதைச்ச இடம், இன்னைக்கு மூவாயிரம் குழி ஆயாச்சு. அவுக வம்சம்தான் ஏழு தலைமுறையா என்னைய வச்சு கும்பிடறாக வடக்க அவுக காட்டுல”
“என்ன ஏன் தேடி வந்த?”
“தாத்தையாவ தேடிச்சில அதான் உன்னைய கூப்பிட்டேன், உன்னை கூப்பிட்டா என்னனே கேட்காம போற”
“உங்க தாத்தையா எங்க போயிட்டார் அம்மா, உன்ன விட்டு”
“காலம் முடிஞ்சு போச்சே. நான்தான் எங்க தாத்தாவ மலையேத்தி விட்டேன். இனி அவரு திரும்ப வரவே மாட்டாரு”-பெரியவருக்கு முதுகு குளிர்ந்து கால் கட்டைவிரல் தொடக்கி உச்சி வரை ஒரு விதிர்ப்பு எழுந்து அடங்கியது. உள்ளிருந்து அவரறியாமல் கேள்வி எழுந்தது- “உன்னை நெல்லால மூடி கொன்னுட்டாளேனு உனக்கு கோபமே வரலையா?”
“கோபம்தான்”
“அப்புறம் ஏன் அவரை மலையேத்தி அவா பரம்பரைய காப்பாத்தற” – ஐயங்கார் கேட்கக்கூடாது என நினைக்கும்போதே அவரை மீறி கேள்வி வந்து விழுந்து விட்டது. ஐயங்கார் சொல்லிடறலை உணர்ந்தார். அடிவயிறு கூசி நெஞ்சு குளிர்நடுக்கம் கொண்டு தலை உஷ்ணமாகி மூச்சு தாளம் தப்பியது. கண்களில் மறுபடி நீர் கட்டியது. கை கூப்பி திரும்பாமலேயே தெண்டனிட்டார்.
பீங்கான் சாடிக்குள் கழச்சிக்காயை போட்டு ஒரு உருட்டு உருட்டியது போல ‘களுக் களுக்’ என சிரிப்பாணி – “ஏ தேவுடா, நான் எப்டி ஆகாரம் பண்ணி வைப்பேன், நான் எப்டி வளப்பேன், என்னி நேனு… முத்துராகவா, கொண்டகு மிஞ்ச்சி போயிந்திரா நுவ்வு பெட்டுண்டே நேனு… அதான் அந்த நான்” – சிரிப்பு மேக்காற்றாய் சுழன்று புழுதி எழுப்பி அடங்கியது. மணியின் ரீங்கார முரல் ஓசையாய் காதுகள் பெரியவருக்கு அடைத்திருக்க கண் கருவிழிகள் அவரறியாமல் மேலே செருகிக் கொள்ள பெரியவர் வரப்பின் மீதே சடாரென சரிந்தார். கதிர்முற்றி வரப்பில் சாய்ந்து நின்ற நெற்கதிர்கள் அவர் தலையை மெத்தென தாங்க வரப்பு நீரில் கால்கள் பாதம் வரை அமிழ்ந்திருக்க பகல் வெயிலை வாங்கிய சூட்டோடு வரப்பு உடம்பைத் தாங்கியிருக்க மெல்ல கண் திறந்த பெரியவர் கண்களில் மேகங்களற்ற நீல வானம். எல்லையற்றதை உள்ளடக்க முடியாமல் கண்கள் திணற கண்ணீர் பெருகி காதுகள் வழியே வரப்பில் உதிர்ந்தன. மிக பிரயாசைப்பட்டு மெல்ல வாய் திறந்து, “அம்மா” என்றார். தடுமாறி எழுந்து சுற்றும் பார்த்தார். தினம் பார்த்துப் பழகிய வெறுமை மட்டுமே பூத்துக் கிடந்தது. பெரியவர் பதறி தெற்கு நோக்கி கை கூப்பினார். “அபச்சாரம் பண்ணிட்டேன். தாயே, பரதேவதே, க்ஷமிக்கணும் அடியேன் க்ஷமிக்கணும், அடியேன் க்ஷமிக்கணும், அடியேன்,” சிகை அவிழ்ந்து காற்றில் பறக்க , உத்தரீயம் அரை வட்டமாய் தரையில் கிடக்க ஐந்து கட்டு வேட்டியின் கட்டுகள் அவிழ்ந்து ஒற்றைச் சுற்றாய் இடுப்பில் நிற்க எழுந்து வீழ்ந்து எழுந்து வீழ்ந்து ஆவேசம் வந்தவராய் வணங்கினார் பெரியவர். 27 ஆவது முறைக்கு மேல் உடல் தளர அப்படியே விழுந்தார். வாய் மட்டும் ‘க்ஷமிக்கணும் அடியேன்’ என நிற்காமல் சொல்லிக் கொண்டிருந்தது. மிக நீண்டு போன ஒரு நொடி மெளனத்துக்குப் பின் மல்லிகை, சந்தனம் கலந்த மணம் அவர் நாசியைத் தீண்டியது. கூடவே வெல்லம் மணக்கும் எள்ளுருண்டையின் வாசனையும். துள்ளி எழுந்தார்- “அம்மா, நான் சுமக்கறேன்னு நெனச்சிட்டேனே ஒரு நொடி… உங் கொழந்தயா நெனச்சு மன்னிசுடறி தேவி, நானா செய்யறேன்? நீயில்லையா… மனுஷ புத்தி, அகங்காரம் மறைச்சுடுத்து. அது உன் அகம். நீ இருக்கற இடம் போக மீதி எடத்துல குடியிருக்கேன் தாயே,..” அவர் புலம்பலை சிறு சிரிப்பு நிறுத்தியது.
“முத்து ராகவா, நான் ஒரு ஓரமா உன் மனையில குடி இருந்துப்பேன், நீ கவலைப்படாத. உன் வீட்டு பட்டியையும் பத்தாயத்தையும் பெருக வைக்கிறேன். உன் வீட்டில பெண் குழந்தையா பிறந்து விளையாடுறேன் தலமுறை தலமுறையா” என்றாள் தெலுகில்.
“ஒரு நேரம் குழந்தையாட்டம் பேசறே, ஒரு நேரம் அம்மையாட்டம் பேசற, என்ன தேடி வந்தவ, எதுக்கு வந்தேனு எனக்குத் தெரியலையே தாயே”- பெரியவர் குரல் கலங்கலாய் வந்தது.
“எல்லாமே எதுக்குடா விளங்கணும் ராகவா, உன்னையும் கரை ஏத்தி விடுறேன் போடா” என்று விட்டு அசிரத்தையாக கையை உதறினாள். வளையல்களின் சப்தத்தால் பெரியவர் உணர்ந்து கொண்டார். நிதானமாய் நடக்க ஆரம்பித்தார். மிதப்பது போல இருந்தது நடை. சட்டென அவர் கைகளை குளிர்ந்த மெத்தென்ற விரல்கள் பற்றுவதை உணர்ந்தார். மெல்லென்ற சிறுமணியொலி கொலுசின் ஒரு முத்திலிருந்து தனியே கேட்டது. மூடிய கண்களில் நீர் வழிந்து நெஞ்சில் இறங்க கூப்பிய கரங்களுடன் பழகிய வாய் அவரறியாமலேயே திறந்தது.
“ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன்,
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்,
பேணுங்கால் பேணும் உரு ஆகும் அல்லனும் ஆம்,
கோணை பெரிது உடைத்து எம் பெம்மானைக் கூறுதலே.
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவி பெருந்தனை புண்ணியம் யாம் உடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா, உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
இறைவா! நீ தாராய் பறை ஏல் ஓர் எம்பாவாய்“
கடைசி மூன்று வரிகளை தழுதழுத்து உதடுகள் நடுங்க மூன்றுமுறை சொன்னார். கண்களைத் திறக்காமலேயே கூப்பிய கைகளை இறக்காமல் நெஞ்சு நனைய நனைய நின்றுகொண்டேயிருந்தார். மெல்லிய காற்று அவரைத் தொட்டுச் சென்றது. வலக்கைக்கு அருகே அவள் வந்து நிற்பது உணர்வாகத் தெரிந்தது. நாடி ஓடும் மணிக்கட்டில் குளிர் நிறைந்த அழுத்தம் வந்தது. உடம்பெலாம் குளிர் பரவ மெல்ல கண்திறந்தார்.
“என்னைத் தோள்ல ஏத்திக்கறியா தாத்தா?”
“அம்மா, தாயாரே” – வரப்பிலேயே நீள்கிடையாக கிடந்து வணங்கினார். எழுந்தபோது அவர் தோள்கள் இரண்டிலும் படிந்து கிடக்கும் கால்களுடன் அவர் தலை மேல் தன் கைகளை வைத்த வண்ணம் அவள் இருந்தாள்.
“நான் மலை மேல நிக்கேன், இங்க இருந்து பாத்தா, எல்லாம் விளையாட்டா இருக்கு.. ஹா ஹா ஹா” என்று சத்தமாகச் சிரித்தாள். ‘கூய் கூய்’ என குயில்களும், ‘கிக்கிரி, கிக்கிரி’ என மைனாக்களும், ‘டுர்ரீய்க் டுர்ரீய்க்’ என உக்கில்களும் சேர்ந்து அந்தச் சிரிப்பை எதிரொலித்தன. “நான் நிக்கிற மலையில உன்னையும் ஏத்தி விடறேன் வா. இங்க கோபமா இருக்கிறதும் சந்தோசமா இருக்கிறதும் எல்லாம் விளையாட்டுதான்” என்றாள்.
நடையேறிய போது வீட்டில் யாருமே இல்லை, மனையில் கன்னி மூலையில் மாடத்தில் இட்டிருந்த விளக்கு மட்டும் மின்னிக் கொண்டிருந்தது. வெங்கிட்டம்மாள் தோளில் இருந்து இறங்கி கொலுசொலிக்க மனையேறிச் சென்று மாடத்தருகில் அருகில் இருந்த மரப்பெட்டியில் அமர்ந்து கொண்டாள். விளக்கின் சுடர் அலைந்து ஸ்ருட்டென பொறி தெறித்தது. கொல்லையில் பசுக்கள் முதுகிலிருந்து முன் நெற்றி வரை முடி சிலிர்த்து தலைகளைத் தழைத்து தாயை அழைக்கும் கன்றைப் போல குரல் கொடுத்தன. பெரியவர் மனைவி பசுக்கள் அழைக்கும் பெருங்குரலைக் கேட்டு பின்னால் ஓடிச் சென்று பார்த்தபோது மாடுகள் தாமாகவே சொறிந்த பால் கோமியம் ஓடும் வழியில் நிறைந்து ஓடிக்கொண்டிருந்தது.
3
ஊஞ்சலின் ஆட்டம் தன்னியல்பாய் நின்றிருந்தது. “பாலா ரூபமாய் வந்த வெங்கிட்டம்மாதான் வைதேகி ஆத்துக்கு அகத்து தெய்வம். என்ன பிரபந்தம் சேவிச்சாலும் வெங்கிடம்மாக்கு நமஸ்காரம் பண்ணி அவள் ஆவாகனம் ஆன மரப்பெட்டிக்கு புஷ்பம் சாத்தாம இருந்ததில்லை அவாத்துல. நான் கொழந்தையா இருக்கறச்சே ருதுவாகாத பொண் கொழந்தைகளுக்கு உடம்பு வந்தா அவாத்துக்கு அழைச்சிகிண்டு போய் மரப்பெட்டி முன்னாடி சேவிச்சு எள்ளும் வெல்லமும் இடிச்சி உருண்டை பிடிக்காம தட்டுல வைச்சு அவளுக்கு நைவேத்தியம் பண்ணி குழந்தைகளுக்கு கொடுத்தா உடம்பு ஸ்வஸ்தமாயிடும். எங்க காலத்துல அவளுக்கு வெங்கடாம்பான்னு பேராயிடுத்து.
வைதேகி ஆத்துல மொத குழந்தை எப்பவும் பொண்ணுதான்.. ஜாதக பேரா எந்தப் பேர் விட்டாலும் வெங்கலக்ஷ்மிண்ணுதான் பேர் போடுவா. நோக்கு தெரியுமே, வைதேகி பாட்டி பேர் வெங்கலக்ஷ்மிதான. வைதேகிக்கு அக்கா ஜானகின்னாலும் அவ பேரும் வெங்கலக்ஷ்மிதான். அவ அப்படியே பிரத்யட்சமா இருப்பள். என்னவோ, அவளுக்கு நிறைஞ்சுடுத்து போல. போயிட்டா.“
வாசனுக்கு மூச்சுத் திணறுவது போல இருந்தது. கிணற்றடியில் நிற்கிறான். எதிரே தலைகுனிந்தபடி அவள் – “ஒருவேள நானும் ஒன்னளவு படிச்சிருந்தா என்ன கல்யாணம் பண்ணிக்கறதுக்கு சம்மதிசிருப்பியோன்னு நெனச்சிக்கறேன்“ – குனிந்திருந்தாலும் அழுவது தெரிந்தது. கண்களிலிருந்து இரு சொட்டுகள் இடுப்பிலிருக்கும் குடத்து நீரில் தெறித்து விழுகின்றன. மூச்சு மீண்டது வாசனுக்கு.
“தாத்தா … நான் .. நேக்கு… நெஜமாவே வேணும்னு சொல்லலை.“ – வாசன் நீருக்குள்ளிருந்து எழுவது போல துள்ளினான். கிழவர் வயதை மீறிய வேகத்தில் எழுந்து அவன் உச்சந்தலையில் அழுத்தினார் –
“சழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன் சங்கு சக்கரம் ஏந்துகையானே!
பிழைப்பர் ஆகிலும் தம்அடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடன்அன்றே
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்றல்லால் வேறுஒருவரோடு என் மனம் பற்றாது உழைக்குஓர் புள்ளி மிகைஅன்று கண்டாய் ஊழியேழுலகு உண்டுமிழ்ந்தானே!”
“உற்ற உறுபிணி நோய்காள்!
உமக்கு ஒன்று சொல்லுகேன் கேண்மின்
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார்
பேணும் திருக்கோயில் கண்டீர்
அற்றம் உரைக்கின்றேன் இன்னம்
ஆழ்வினைகாள்! உமக்கு இங்கோர்
பற்றில்லை கண்டீர் நடமின்
பண்டன்று பட்டினம் காப்பே!”
ஒவ்வொரு எழுத்தும் துலங்கி வர ஓசை நயம் மாறாமல் கிழவர் சொல்ல வாசன் துடிப்படங்கி தளர்ந்தான். “கோந்தே, இந்தா தீர்த்தம் கொஞ்சம் சாப்பிடு” சொம்பைக் கொடுத்தார். வாசன் முழுதும் குடித்து முடித்தான். சொம்பை வைக்கத் திரும்பியபோது கிழவர் முதலில் கண்ட அதே கோலத்தில் ஊஞ்சலில் இருந்தார். வாசன் கண்களில் வடிந்த நீரைத் துடைக்காமல் அப்படியே எழுந்து அவர் காலில் விழுந்தான்.
அவன் வாசலருகில் போகும்போது ஊஞ்சலிலிருந்து அவர் குரல் தொடர்ந்து வந்தது –”ஸ்ரீநிவாசா, திரும்ப சொல்றேன். மனசுல பட்டது. நல்லதும், கெட்டதும் முடிவு பண்ண நாம யாரு? நீ வெங்கடம்பாகிட்டயே கேளு, அவ ஒனக்குத் தக்கது செய்வா”
அம்மாவோடு வைதேகியின் வீட்டுக்கு வாசன் போகும்போது அம்மாவுக்கு ஆச்சரியம் தாளவில்லை. “அவ அப்பா போனதும் ஹரி துபாய்க்குப் போய்ட்டான். மாமி, ஆத்தைப் பார்த்துகோங்கோ, இங்கதான் எனக்கு சேரிடம். என்னைக்குன்னாலும் வந்துடுவேன்னான். செவ்வாய், வெள்ளி ஆத்தை அலம்பி தீபம் ஏத்தி ஆத்து பெருமாளுக்கு திருவாராதானம் பண்ணி வைக்கறார் அப்பா. என்னவோய், சம்பந்தி ஆத்தை சொந்தம் கொண்டாடறீரான்னு வெளயாட்டா கேக்கறாப்ல கேப்பா. அதொண்ணுக்கும் அப்பா பதில் சொல்லறதில்லை. இப்ப நீ வந்தா மருமானில்லையா, யாரு கேக்க முடியும்? நானும் போயி உள்ளுல இருக்கற மரப்பெட்டிக்கு தீபம் ஏத்தி புஷ்பம் கிள்ளி வச்சிட்டு வருவேன்.“ – அம்மாவுக்கு வாசன் தன்னுடன் வருவது சந்தோஷமாக இருந்திருக்க வேண்டும். பேசிக் கொண்டே வந்தாள்.
மரப்பெட்டி அந்த வீட்டு கூடத்தின் பக்கவாட்டு அறையில் இருந்தது. இரண்டடிக்கு இரண்டடி இருக்கும். அம்மா விளக்கேற்றி மகாலக்ஷ்மி அஷ்டகம் சொல்லிக் கொண்டிருந்தாள். முடித்ததும் பின்வாசல் கதவைத் தாளிட்டுக் கொண்டு வந்தாள். “போலாமா கண்ணா?”
“அம்மா, நீ முன்ன போ. நான் சித்த இங்க உக்காந்துட்டு வர்றேன்”
அம்மா ஏதோ சொல்ல வந்தது போல வந்து பின் தன்னைத்தானே பின்னிழுத்துக் கொண்டு, “சீக்கிரமா வந்துடு” என்றபடி வாசல் கதவை மூடிக்கொண்டு படி இறங்கினாள். அதுவரை இருந்த வீடாக இல்லை அது. நீண்ட வீடு என்பதால் ஓசைகள் அதிகம் இல்லை. மரப்பெட்டியை பார்த்தது போல உட்கார்ந்தான். இங்குதான் ஜானகியும் கிடத்தப்பட்டிருந்தாள். அவனறியாமல் கண்கள் பொங்கின.
“மன்னிச்சுடுடி. நெஜமாவே தோணலையே எனக்கு“ – வாய் விட்டு வார்த்தைகள் அழுகைக்கு ஊடே வந்து விழுந்தன. நேரக்கணக்கின்றி அழுது அழுது எந்த ஓசையுமின்றி காதுகள் மரத்திருக்க, உடல் உறைந்திருக்க, கண்கள் வழிந்தபடியே இருக்க அவனறியாமலேயே அச்சொல் வந்து விழுந்தது – “க்ஷமிக்கணும் அடியேன்”.
மஞ்சளும், முல்லையும் கலந்த மணம் எழுந்து வந்தது. பாகு காய்ச்சி அதில் எள்ளை சேர்க்கும் வாசமும் சேர்ந்து வந்தது. மரப்பெட்டி முன்னிருந்த சுடர் அலைந்தது. ஸ்ருட்டென பொறி தெறித்தது. கூடத்தின் வெற்றுத்தரையில் அழுது முடித்து வெறுமே படுத்திருந்த வாசன் காதில் கொலுசொலி ஒற்றைச் சொல்லென மெல்லெனக் கேட்டது.