இணைய இதழ்இணைய இதழ் 100சிறுகதைகள்

வேட்டை – உமாதேவி வீராசாமி

சிறுகதை | வாசகசாலை

சில நாள்களாகப் பக்கத்து வீட்டுச் சிவகாமி அக்கா வீட்டுக்குப் போகவே பயமாக இருக்கிறது. அந்தப் பெரிய அண்ணன் என்னைப் பார்க்கிற பார்வையும், யாருமில்லாதபோது என்னிடம் பேசும் பேச்சும் அச்சமூட்டுகிறது. அவரது வெறித்தனமான செயல்கள் பயமுறுத்துகின்றன. அம்மாவிடம் சொல்லிவிட மனம் துடிக்கிறது. பலமுறை முயன்று தோற்றுப்போனேன்.

பள்ளியைவிட்டு வந்தவுடன் சிவகாமி அக்கா வீடுதான் எனக்கு அடைக்கலம். வேலை முடிந்தும் அம்மா வந்து என்னைக் கூட்டிச்செல்வது வழக்கம். அப்பா இருக்கும்வரை எந்தச் சிக்கலும் இல்லாமல் இராஜா வீட்டுக் கன்றுக்குட்டியாய் வாழ்ந்த நினைவு மனத்தை நெருடச் செய்கிறது. அப்பாவின் நிழல் மறைந்த அந்த நொடி, நிற்கதியாய் நானும் அம்மாவும் நின்றபோது, ஊரே உச்சுக் கொட்டி வருத்தம் தெரிவித்தது. நாங்கள் இருக்கிறோமென ஆறுதல் சொல்லி ஆசுவாசப்படுத்தியது. ஏதோ ஒரு வகையில் அதுவும் ஆறுதலாகத்தான் இருந்தது.

நாளாக நாளாக அவரவர் வேலையை அவரவர் பார்க்கத் தொடங்கிவிட்டபோது கேட்பாரின்றி வாடித்தான் போனோம். இருந்தாலும், அம்மா தன் விதியை நொந்துகொண்டாரே தவிர, வேறு யாரையும் இதுவரை குறை சொன்னதில்லை. இனிமேல்தான் தைரியமாக இருக்க வேண்டுமென்றார் அம்மா. அப்பா இல்லாத வாழ்க்கையை எதிர்கொள்ள நானும் என்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தேன்.

“தீபா, இந்தப் பொம்பள பிள்ளைய வச்சுக்கிட்டுத் தனியாளா நீ என்ன பண்ணப் போறீயோ பாவம்!” என்று எதிர்வீட்டுச் செல்லாயி பாட்டி நீட்டி இழுத்தபோது அம்மாவின் கண்ணீர் இமை என்னும் தடை தாண்டி இலேசாய் எட்டிப் பார்த்தது.

மனம் தாங்கவில்லை. என் விரல்களால் அம்மாவின் கண்ணீரைத் துடைத்துவிட்டேன். அம்மா உடைந்துபோய்க் கதறி அழ ஆரம்பித்தார். நீண்ட அழுகைக்குப் பின் என்னைக் கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டது இன்னும் நினைவிருக்கிறது. வேலை முடிந்து வரும்போது ஐஸ்கிரீம், சாக்லட், பிஸ்கட் என ஏதாவதொன்றை வாங்கிவந்து கொடுத்து மகிழ்ச்சிப்படுத்தும் அப்பா, திடீரென ஏமாற்றிவிட்டுச் சென்றுவிட்டதை நினைத்தபோது அவர்மேல் எல்லையில்லாக் கோபம் எனக்கு.

“அப்பா! நீங்க ரொம்ப மோசம்பா! என்மேல கொஞ்சங்கூட பாசமில்ல!” அப்பாவின் உடலைப் பார்த்து மனத்திற்குள்ளே அழுத அந்தத் தருணம் மனத்தில் பசையாய் ஒட்டிக்கொண்டது. அதே விரக்தியோடு அம்மாவைப் பார்த்தேன்.

“அப்பா நம்மள விட்டுட்டுப் போயிட்டாரு மஞ்சுகுட்டி. உன்ன கண்ணுக்குள்ள வச்சிப் பார்த்தாரே! இனிமேல யாருடா உன்ன இப்படியெல்லாம் பார்த்துக்கப் போறா? நீதான அவரோட உலகம். இப்படி அநாதையாக்கிட்டுப் போயிட்டாரே, கடவுளே!” அம்மாவின் அலறல் இன்னும் என் காதுகளில் கேட்டுக்கொண்டிருக்கிறது.

“பொய்யிமா! எல்லாம் பொய். பாசமா இருக்கிறவங்க நம்மள விட்டுட்டுப் போவாங்களா?” மூளைக்குள் கூராணியாய் இறங்கிய கேள்வியை அம்மாவிடம் கேட்கத் தோன்றியது. ஆனால், அதற்குத்தான் வழியில்லாமல் செய்துவிட்டானே அந்த இறைவன். வலி தாங்க முடியவில்லை. நெஞ்சு கனமாவதை உணர்ந்தேன். வெளியே சொல்ல முடியவில்லை. நெஞ்சை அழுத்திப் பிடித்துக்கொண்டேன். வலி குறைந்த பாடில்லை.

பாவம் அம்மா. துக்கம் தாங்காமல் அப்பாவின் உடலின் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு ஏதேதோ சொல்லிப் பிதற்றிக்கொண்டிருந்தார். அழுது அழுது அம்மாவின் முகம் வீங்கிப்போயிருந்தது. அம்மாவின் அழுகை அங்கு கூடியிருந்தவர்களின் மனத்தையும் உலுக்கியிருக்க வேண்டும். சிலர் துயரம் தாங்காமல் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தனர். சிலர் வராத அழுகையை வர வைக்க முயன்று கொண்டிருந்தனர். அம்மாவிற்கு ஆறுதல் சொல்லும் நிலையில் நான் இல்லை என்பதை நினைத்தபோது இதயம் சின்னப்பின்னமானது.

ஒன்றும் சொல்லாமல் அம்மாவின் அணைப்பிற்குள் தஞ்சம் புகுந்துகொண்டேன். அதன் பிறகு அலையென அழுகை எழுவதும் குறைவதுமாக அன்றைய நாள் ஓடிப்போனது. அடுத்த சில நாள்களில் மகிழ்ச்சியும் அம்மாவிடமிருந்து விடைபெற்றுக் கொண்டது. தெற்றுப் பல் தெரிய சிரிக்கும் சிரிப்பு காணாமல் போனது. கண்களில் ஒளி மங்கிப்போனது. நானும் அப்படித்தான், சிரிக்கவே மறந்துபோனேன். எங்கள் இருவருக்கும் மௌனம் அதிகம் பிடித்துப்போயிருந்தது. அதைவிட மௌனத்திற்கும் எங்களை அதிகம் பிடித்துப்போயிருந்தது.

எட்டு, பதினாறு, முப்பது என நாள்களை எண்ணிப் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும் நிறைவாக முடிந்துவிட, அடுத்த பிரச்சனை தலை தூக்கியது. அப்பாவின் காப்பீட்டுப் பணம் கிடைப்பதற்குக் காலமெடுக்குமென அம்மா ஒருநாள் சிவகாமி அக்காவிடம் சொன்னது ஏதேச்சையாகக் காதில் விழ, குடும்பச் சூழல் புரிந்துபோனது. குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். அதற்கு அம்மா வேலைக்குச் செல்ல வேண்டும். படிவம் மூன்றை மட்டும் எட்டிப் பிடித்திருந்த அம்மாவிற்குச் சீனன் சாப்பாட்டுக்கடை கைகொடுத்தது. அப்பா விட்டுச்சென்ற மோட்டார், அம்மாவிற்கு ஒரு வகையில் உதவியாய் இருந்தது. வாகன உரிமம் இல்லை. அதைப்பற்றி அம்மா கவலைப்படுவதாகத் தெரியவில்லை. வீட்டிலிருந்து பத்து நிமிட ஓட்டம். அம்மாவிற்கு வசதியாய்ப்போனது.

“மஞ்சுகுட்டி! அம்மா ஒரு சீனன் கடைக்கு வேலைக்குப் போகப்போறேன். காலையில போனா ஆறு மணிக்குத்தான் வருவேன். நீ அதுவரைக்கும் பக்கத்து வீட்டுச் சிவகாமி அக்கா வீட்டில இருக்கியா?” தாடையைப் பிடித்துக் கொஞ்சலாய்க் கேட்ட அம்மாவை ஏறிட்டுப் பார்த்தேன். அம்மாவின் முகம் கொஞ்சம் தெளிந்திருந்தது. “வேணாம்மா! நானும் உங்ககூட வரேன். ப்ளீஸ்மா! நல்ல பிள்ளையா நடந்துக்குவேன்! உங்கள டிஸ்தர்ப் பண்ண மாட்டேன்,” – அம்மாவின் கைலியை இறுக்கமாய்ப் பிடித்துக் கொண்டேன். பார்வையால் கெஞ்சினேன்.

“மஞ்சு, அம்மா சொன்னா புரிஞ்சிக்கோ. அங்க வந்து நீ என்ன பண்ணப்போற? ஸ்கூல் முடிஞ்சி அக்கா வீட்டில இருந்தா, நீ குளிச்சிட்டுச் சாப்பிடலாம். கொஞ்ச நேரம் படுத்துத் தூங்கலாம். அங்க வந்தா என்ன செய்ய முடியும்? நீ பெரிய பிள்ளைதான! அம்மா சொல்றத கேட்பதான? அப்பா இருந்தா இப்படியெல்லாம் நம்மள கஷ்டப்படவிட மாட்டாரு!” கண்களைக் கசக்க ஆரம்பித்த அம்மாவைப் பார்க்க மனம் தாங்கவில்லை. பேசாமல் படுக்கையில் போய் படுத்துக்கொண்டேன்.

இன்றோடு சிவகாமி அக்கா வீட்டில் தங்க ஆரம்பித்து ஒரு மாதமாகப் போகிறது. அப்பாவை இழந்தது பெரும் துன்பம் என்றால் அம்மாவையும் பல மணி நேரங்கள் பிரிந்திருப்பது ஆரம்பத்தில் துன்பமாகத்தான் இருந்தது. சிவகாமி அக்காவின் அன்பான கவனிப்பில் அது கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது. ஏழு நாள்களுக்கு முன்புவரை எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அந்தப் பெரிய அண்ணன் சிவகாமி அக்கா வீட்டிற்கு வரும்வரை. பெயர் குணாளன். குணமே இல்லாதவருக்குக் குணாளன் என்று பெயர்! நினைத்தாலே உடம்பெல்லாம் ஏதோ செய்கிறது.

          சிங்கப்பூரில் வேலை செய்கிறாராம். ஒரு மாத விடுமுறையில் வந்திருப்பதாகச் சிவகாமி அக்கா சொன்னபோது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால், ஓரிரு நாள்களில் என் சந்தோசமெல்லாம் சுக்குநூறாகிப் போகுமெனக் கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை. நிம்மதி இருந்த இடந்தெரியாமல் காணாமல் போகுமெனக் கற்பனை செய்ததில்லை. அந்தப் பெரிய அண்ணன், முதல்நாள் குச்சி மிட்டாய் ஒன்றைக் கொடுத்தார். ஆசையாய் வாங்கிக்கொண்டேன். மடியில் அமர்ந்துகொள்ளச் சொன்னார். வெட்கமாய் இருந்தது. தயங்கி நின்றேன். என் தலையைத் தடவிக்கொடுத்தார். பாசமென அமைதியாக இருந்து விட்டேன். இரண்டாம் நாள், தோளில் கைகளைப் போட்டார். அண்ணன்தானே தவறில்லையென விட்டு விட்டேன்.

அடுத்து வந்த நாள்களில் அவர் கைவிரல்கள் தொடக்கூடாத இடங்களைத் தொட்டபோது மனத்தைப் பயம் கௌவிக்கொண்டது. அந்தப் பெரிய அண்ணனின் பேச்சுச் சரியாக இல்லை. குறுகுறு பார்வை எனக்குப் பிடிக்கவில்லை. முடிந்தவரை அவர் பார்வையிலிருந்து விலகியிருக்கத்தான் பார்த்தேன். ஆனால், கழுகுப் பார்வையுடன் என்னைச் சுற்றிச் சுற்றி வரும் அவரை என்னால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது.

சிவகாமி அக்கா வீட்டில் இருக்கும்வரை பாதுகாப்பிற்குப் பஞ்சமில்லை. அவர் உருவம் மறைந்த அடுத்த கணம், பெரிய அண்ணனின் ஆட்டம் ஆரம்பித்துவிடும். நேற்றுக்கூட படுக்கையறையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது என்னைக் கட்டிப் பிடித்து முரட்டுத்தனமாய் முத்தம் கொடுத்தார். பதறிப்போனேன். பலங்கொண்டு அவரைத் தள்ளிவிட முயன்றேன். முடியவில்லை. எத்தனையோ முறை அப்பா என்னை வாரி அணைத்து முத்தமிட்டிருக்கிறார். அந்த முத்தத்தில் பாசம் இருந்தது. பெரிய அண்ணனின் முத்தத்தில் வெறித்தனம் மட்டுமே தெரிந்தது.

“அண்ணே, வலிக்குதுண்ணே. விடுங்கண்ணே, ப்ளீஸ்!” அவர் காதுகளில் என் அலறல் கட்டாயம் விழுந்திருக்கும். ஆனால், புரிந்திருக்குமா எனத் தெரியவில்லை. புரிந்திருக்க வாய்ப்பில்லை. புரிந்துகொள்ளும் நிலையிலும் அவர் இல்லை. கண்கள் சிவப்பேறியிருந்த அண்ணனைப் பார்க்கப் பார்க்கப் பயமாய் இருந்தது. ஓடிச்சென்று குளியலறைக்குள் புகுந்துகொண்டேன். தாழ்ப்பாளைப் போட்டுக்கொண்டேன்.

நல்ல வேளையாக அக்கா வந்துவிட, அன்றைய வேட்டை அதோடு நின்றது. அவர் பூனை போல் அறைக்குள் நுழைந்துகொண்டதும் அக்காவை ஓடிச்சென்று கட்டிப் பிடித்துக்கொண்டேன். என் தலையைக் கோதி விட்டு முத்தம் கொடுத்த அக்காவிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடத் துடித்தேன். அறைக்கதவைத் திறந்துகொண்டு மீண்டும் வரவேற்பறைக்கு வந்த அண்ணனைப் பார்த்ததும் பெட்டிப் பாம்பாய் அடங்கிப்போனேன்.

இன்று பெரிய அண்ணனுக்குச் சாதகமான நாள். காலையிலேயே அம்மா என்னை, சிவகாமி அக்கா வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குப் போய்விட்டார். காய்கறிகள் வாங்க வேண்டுமெனச் சொல்லிவிட்டுச் சிவகாமி அக்கா கிளம்பிவிட்டார். பெரிய அண்ணன் பல்லைக் காட்டிக்கொண்டே என்னை நெருங்கினார். அவர் அறைக்கு என்னை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றார். மெத்தைமேல் படுக்கச் சொல்லி அதட்டினார். என் கன்னங்களைக் கிள்ளினார். என் சின்ன மார்பகங்களைக் கைகளால் வருடினார். நான் முரண்டு பிடித்தேன். பிறப்புறுப்பைத் தொட்டு வதம் செய்தார். வலி தாங்க முடியவில்லை. அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது. உரக்கக் கத்தினேன்.

“ஏய்! கத்தாதே! பேசாம இரு!” அதட்டினார். கோபத்தில் அவர் முகம் சிவந்துபோனது. நான் விடுவதாக இல்லை. மீண்டும் கத்தினேன்.

“ஏய்! குட்டிப் பிசாசு. வாய மூடப் போறீயா இல்லையா? இன்னொரு முற கத்தன, உடம்பில உயிரு இருக்காது! கவனம்!” இராட்சசனாய் அவதாரமெடுத்த அவரை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் எனக்கில்லை. கண்களை இறுக மூடிக்கொண்டேன். மீண்டும் கதற ஆரம்பித்தேன். அவருக்குக் கோபம் தலைக்கேறியிருக்க வேண்டும். என் கைகளைப் பின்பக்கமாய்க் கட்டி, வாயில் துணியைத் திணித்தார். நான் திமிறினேன்.

அம்மாவை நினைத்துக்கொண்டேன். எனக்கு நடக்கும் கொடுமை தெரிந்தால், அம்மா உடைந்துபோய் விடுவார். அப்பா இருந்திருந்தால் அந்தப் பெரிய அண்ணனைக் கண்டதுண்டமாக வெட்டிப்போட்டிருப்பார். பத்து வயதில் எனக்கு நடப்பதுபோல் யாருக்கும் நடக்கக்கூடாது. பிள்ளையாரை வேண்டிக்கொள்கிறேன். வீட்டு மணி ஒலிக்கிறது. சிவகாமி அக்காதான். தற்காலிகமாக அந்த இராட்சசனிடமிருந்து விடுதலை கிடைக்கிறது. மூச்சை ஆழமாய் இழுத்து விடுகிறேன்.

நான் நிம்மதியாக இருப்பது அந்தக் கடவுளுக்கே பொறுக்கவில்லை போலும். சில நிமிடங்களிலே சிவகாமி அக்காவின் கைப்பேசி அலறத் தொடங்கியது. அஃது எனக்கு வந்த அபாய மணி என்று பின்னர்தான் தெரிந்தது.

“வணக்கம் மலர். சொல்லு!… வீட்டிலதான் இருக்கேன்… ஓ அப்படியா!… சரி, இதோ அஞ்சி நிமிஷத்தில வந்திடுறேன்!”

அக்காவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உள்ளுக்குள் உதறலை ஏற்படுத்தியது. முகத்தில் வியர்வைத்துளிகள். சட்டையை இழுத்துத் துடைத்துக் கொண்டேன். கைப்பையை மாட்டிக்கொண்டு கிளம்பிய அக்காவின் வழியை மறித்து நின்றுகொண்டேன்.

“அக்கா! என்னைத் தனியா விட்டுட்டுப் போகாதக்கா! ப்ளீஸ்…!” வாய்க்குள் முணுமுணுக்கிறேன். வேட்டைக்குக் காத்திருக்கும் சிங்கமாய்ச் சோபாவில் அந்த அண்ணன் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறேன். அவரும் ஓரக்கண்ணால் என்னைப் பார்க்கிறார். உடலெல்லாம் நடுங்குகிறது.

“அண்ணே! மஞ்சு, வீட்ல ஒண்டியா இருக்கு. அத தனியா விட்டுட்டு எங்கேயும் போயிடாத. பாவம் அது! நான் மலர் வீட்டுக்குப் போயிட்டு வந்திடுறேன். சொல்றது புரியுதா இல்லையா?” கைப்பேசியில் வேலையாக இருப்பது போல் பாசாங்கு செய்துகொண்டிருக்கும் அண்ணனை அதட்டுகிறார் சிவகாமி அக்கா. வேட்டையாடப் போகும் சிங்கத்திடம் அடைக்கலம் கொடுத்துவிட்டு, கதவைத் திறந்து வெளியேறப் போன அக்காவை ஏக்கத்தோடு பார்க்கிறேன்.

“என்னடா…! கொஞ்ச நேரம் அண்ணன்கூட இரு. மலர் அக்கா வீட்டுக்குப் போயிட்டு வந்திடுறேன், ஏதாச்சும் வேணும்னா அண்ணன்கிட்ட கேளு, சரியா! பாய் பாய்…” கையசைத்து விடைபெறுகிறார் சிவகாமி அக்கா. நெஞ்சம் அதிகமாய்ப் படபடக்கத் தொடங்குகிறது. ஓடிச்சென்று சிவகாமி அக்காவின் சட்டையைப் பிடித்து இழுக்கிறேன். கண்ணீர் முட்டிக்கொண்டு வருகிறது.

“மஞ்சு! உனக்கு என்ன ஆச்சி? ஏன் இன்னைக்கு என்னமோ மாதிரி இருக்கே?”

“அக்கா, இதுக்கு மேல எனக்கு முடியாதுகா! என் உடம்பெல்லாம் வலிக்குதுக்கா. என்னை எப்படியாவது காப்பாத்துக்கா. ப்ளீஸ் கா…!” மீண்டும் என் கண்கள் கெஞ்சத் தொடங்குகின்றன. வழக்கம்போல் இன்றும் அக்காவிற்கு ஒன்றும் புரியவில்லை. இன்னும் சில நொடிகளில் பெரிய அண்ணனின் வேட்டை தொடரப் போகிறது.

ஊமையாய்ப் பிறந்ததற்கு இப்பொழுதுதான் வருத்தப்படுகிறேன். – umaragu143@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button