இணைய இதழ்இணைய இதழ் 62சிறுகதைகள்

விக்டோரியா – வசந்தி முனீஸ்

சிறுகதை | வாசகசாலை

ருக்கு வடக்கே கரை நிரம்ப கற்கண்டாய் இனிக்கும் மணிமுத்தாறு ஆற்றுத்தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும் கால்வாயின் தென்புறம், பனை ஓலையால் கூரை வேய்ந்த முப்பந்தல் இசக்கியம்மன் கோவில். வடபுறம் பனைமூட்டின் கீழ் வாழும் கோட்டிக்காரியே விக்டோரியா . இசக்கியம்மனின் செம்மண் பூடத்தைப்போல விக்டோரியாவும் நல்ல செக்கச்சிவப்பு. அழுக்காய் ஆடை உடுத்திருந்தாலும் வெளுப்பாய் எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பாள்.

அவ்வப்போது ஆவாரம் பூச்சூடி கால்வாயின் கரைகளில் அங்குமிங்கும் அழகியாய் நடப்பாள். சிறுவர்களை ஒருநாளும் பயமுறுத்தியதே கிடையாது. ஊர்க்காரர்களுடன் ஒருசொல் கூட அவள் பகிர்ந்தது கிடையாது. ஆனால், ஊரிலுள்ள பெண்கள் தங்கள் குழந்தைகளை விக்டோரியாவின் பெயரைச்சொல்லி பயமூட்டி சோறூட்டுவார்கள்; அடம்பிடிப்பவர்களை அடக்கிவைப்பார்கள்; அழுகின்றவர்களை நிறுத்த வைப்பார்கள்; பள்ளிக்கூடத்திற்கு டிமிக்கி கொடுக்க நினைப்பவர்களை, “விட்டோரியாக்கூட ஒன்ன பனமூட்ல கட்டிவைக்கிறேன் பாரு” என்று பயமுறுத்தி புறங்காலிரண்டும் பிடதியிலடிக்க பள்ளிக்கூடம் நோக்கி பாய்ந்தோட வைப்பார்கள்.

ஊரெல்லாம் விக்டோரியாவை கோட்டிக்காரியென்று கூப்பிட்டாலும், ராமசுந்தரம் நாடார் மட்டும் மராட்டிக்காரியென்றுதான் கூப்பிடுவார். அவர் இளம்வயதில் டிரைவராக பல வருடங்கள் மும்பையில் வேலை பார்த்ததால் அவருக்கு ஹிந்தியும் மராட்டியும் அத்துப்படி. ஊர்க்காரர்களிடம் மட்டுமல்ல.. அவரிடமும் ஒரு வார்த்தைகூட அவள் பேசியதே கிடையாது. அவள் தனிமையிலமர்ந்து தன் தாய்மொழியில் பேசுவதைக்கேட்டு அவராகவே அவளைப்பற்றி எல்லாம் அறிந்துகொண்டார். கோடைக்காலங்களில் கால்வாயில் நீரில்லாதபோது, அவள் வசிப்பிடமான பனைமூட்டினை ஒட்டிய கேரளாக்காரன் தோட்டத்திலுள்ள கிணற்றில்தான் தண்ணீர் குடிக்கச்செல்வாள். அங்குதான் ஒத்த ஆளாய் அத்தனைப்பெரிய தோட்டத்தினை காவல் காக்கும் வேலையைச் செய்துவந்தார் ராமசுந்தரம் நாடார். ஊர்வெளிக்கு எங்காவது போவதாகயிருந்தால் தோட்டத்து இரும்புக்கேட்டினை பூட்டிவிட்டு ஒரு சிறிய மண்கலயத்தில் தண்ணீர் கோரி விக்டோரியாவின் பனைமூட்டின் அருகே வைத்துவிட்டுத்தான் போவார். அதேபோல் அவர் சாப்பிட அமர்ந்திருக்கும்போதோ அல்லது சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதோ விக்டோரியா தண்ணீர் குடிக்க வந்தால், அவளையும் கெஸ்ட்ஹவுஸின் வராண்டாவில் உட்காரவைத்து வாழையிலை போட்டு தூக்குவாளியிலிருந்து சோறள்ளி வைப்பார். அவள் போதுமென்று சொன்னதும் கிடையாது; வேண்டுமென்று கேட்டதும் கிடையாது. அவளைப்பார்த்து அரிநெல்லிக்காய் மரத்தில் கட்டியிருக்கும் அவரின் மரநிற நாய் மணி சங்கிலியை அறுக்கும்படியும், கழுத்தினை சங்கிலி நெருக்கும்படியும் கடுவாப்போல கத்திக்கொண்டு கடிக்கத் துடிக்கும். ஆனால், அவள் கைநிறைய சோற்றை அள்ளிக்கொண்டுப்போய் தள்ளிநின்று தட்டில் வைப்பாள். “ஏ விட்டோரியா! பக்கத்துல போவாத. கடிச்சிரக் கிடிச்சிரப்போவது. நீ போயி சாப்புடு. நா அதுக்கு சோறு வச்சிருக்கேன்” என்பார் நாடார். அவள் எதையும் காதில் வாங்காமல் கொஞ்சநேரம் குலைக்கும் மணியைப் பார்த்து ரசிப்பாள். பின்பு தன் இடக்கையால் சாப்பிட்டுவிட்டு இருகையால் இலையை தூக்கிப் போட்டுவிட்டு பனைமூட்டினை நோக்கி நடையைக்கட்டிவிடுவாள்.

மழை செழிப்பாக பெய்ததால் முதல் பூ அறுவடை முடிந்து இரண்டாம் பூவும் விளைந்து அறுவடைக்குத் தயாரான மகிழ்ச்சியில் முப்பந்தல் இசக்கிக்கு ஊர்மக்கள் கொடை கொடுத்தனர். வெள்ளிக்கிழமை இரவு ஒரு நேரத்து கொடை முடிந்து, சனிக்கிழமை காலை வரிக்காரர்களுக்கு தேங்காய், பழம், கிடாக்கறி, படப்புச் சோறு வழங்கிவிட்டு தர்மகர்த்தா, பூசாரி, ஊர் பெரியவர்கள் சிலரும் கோவில் வேப்பமரத்தடியிலமர்ந்து வரவு செலவுக் கணக்கு பார்க்கத்தொடங்கினார்கள்.

“எப்போ! எப்போ…!” என்று தர்மகர்த்தாவின் மகன் கோவிலைப் பார்த்து தலைத்தெறிக்க ஓடிவந்தான்.

“ஏல, தம்பி என்னல?”

“எப்போ! நம்ம வைக்கப்படப்புல தீ புடிச்சிடுச்சு” என்று அவன் சொன்னதும், எல்லாப் பெருசுகளும் அவன் பின்னால் மூச்சிரைக்க ஊருக்குள் ஓடினர். ஊர்க்காரர்கள் வீட்டிலிருந்த தண்ணீரைக்கொண்டும், ஊர்க்கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்தும் வைக்கோல் படைப்பை அணைத்துக்கொண்டிருந்தனர்.

தீயிடமிருந்து பாதி வைக்கோல் படைப்பை காப்பாற்றுவதற்குள் கருக்கலாகிப்போனது. தீயை அணைத்து அயர்ந்துப்போய் முற்றத்திலும் திண்ணையிலும் அமர்ந்திருந்த ஊர்க்காரர்களுக்கு தர்மகர்த்தா நன்றி கூறிவிட்டு, “சரி, எல்லாரும் போய் படுங்கப்பா. இந்த நேரத்துல கோயில் பக்கம் போவக்கூடாது! காலையில போயிட்டு வரவு செலவையும், உண்டியல் பணத்தையும் கணக்குப் பார்த்து சொல்றேன்” என்று கூறிவிட்டு, வீட்டுக்குள் நுழைந்து கட்டிலில் கவிழ்ந்தபடி அமர்ந்தார். 

அடுக்களையில் அவரின் மனைவி, “எந்தப்பயலோ வேணும்ன்னுத்தான் படப்புக்கு தீ வச்சிருக்கான். அவன் கட்டையில போவ! கொள்ளையில போவ! அவன் வூட்ல இடி உழ” என்று சாபமிட்டுக்கொண்டே தர்மகர்த்தாவிற்கு தட்டில் சோறுகொண்டு வைத்தாள். அவர் கறிச்சோற்றில் கைவைக்காமல் தொழுவில் கட்டியிருந்த தீக்குப்பயந்த மாடுகளை தடவிக்கொடுத்தார். மாடுகள் மெல்ல மெல்ல அசைபோடத் தொடங்கின. காற்றில் கரும்புகை கலைந்து நட்சத்திரங்கள் தெரிந்த வானத்தைப்பார்த்தவாறே தொழுவின் கல்தூணில் சாய்ந்தபடியே கண்ணசந்து போனார்.

மறுநாள் காலையில், “யோ மாமா! நாங்க கோயிலுக்கு போய்ட்டுருக்கோம். நீரு சீக்கிரம் நோட்டத் தூக்கிட்டு கணக்குப்பாக்க வந்துசேரும்” என்று சொல்லிவிட்டு, கோவிலுக்கு சென்ற ஊர்பெரியவர்கள் கிட்ணன், வேங்கன், குழந்தை வேல், முத்துப்பாண்டி மற்றும் பூசாரி பூவேல் ஆகிய ஐந்துபேரும் கோவில் உண்டியல் உடைந்துக்கிடைப்பதை பார்த்து சாமக்கொடைக்கு சங்கறுத்த கிடாவைப்போல் துடித்துடித்தனர்…! வெயில் வெளுத்து வங்காமலேயே அனைவருக்கும் உடல் வியர்த்துக் கொட்டியது; நாலாபுறமுமிருந்தும் நல்ல காற்று வீசியும் மூச்சடைத்தது; கால்கள் தரையில் நிலைகொள்ளவில்லை; கோவிலைச்சுற்றி சுற்றி பார்த்தார்கள். ஆனால், எந்த தடயமும் அவர்களுக்குத் தென்படவில்லை.

வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு வேலியாடுகள்போல நெருஞ்சிமுள் கிழித்தும், ஒட்டுப்புல் குத்தியும், நாயுருவி ஒட்டியும் தாவிக்குதித்து ஊருக்குள் ஓடிவந்தனர்.

தன் வீட்டின் முற்றம் தாண்டி தெருவில் நடந்து வந்துகொண்டிருந்த தர்மகர்த்தா ஓடிவந்தவர்களை இடைமறித்து, “எதுக்குப்பா இப்படி ஓடி வர்றீய? என்னடே ப்ரச்சன?”

“போச்சி!எல்லாம் போச்சி!” என்று பொத்தென்று அவர் கால்மாட்டில் விழுந்தழுந்தார் பூசாரி பூவேல்.

“வெளங்குறமாரி சொல்லுங்கடே. என்னப்போ ஆச்சி?”

“மாமா,கோயிலு உண்டியல ஒடச்சின்னுட்டானுவ!” – மற்றவர்கள் சொன்னார்கள்.

“என்னது… உண்டியல ஒடச்சின்னுட்டானுவளா…!”- என்று நெஞ்சைப்பிடித்துக்கொண்டு நடுவீதியில் உட்காந்துவிட்டார் தர்மகர்த்தா.

ஊருக்குள் உண்டியல் செய்தி தீயாய் பரவி ஊர்மக்கள் தர்மகர்த்தாவைச்சுற்றி புகைமண்டலமாக சூழ்ந்திருந்தனர். குமரிகள் வாசலில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். விடலைகள் ‘வெட்டனும்,குத்தனும்’ என்று வரிந்துக்கட்டிக்கொண்டு நின்றனர்.பெண்கள், “கொட பாக்க வர்ற மாரி கள்ளப்பய உண்டியல தூக்க ஒளவுபாக்க வந்துருப்பானோ!” என்று ஒருவருக்கொருவர் குசுகுசுத்தனர். “நேத்துன்னா படப்பு தீப்புடிச்சிப்போச்சி! இன்னைக்குன்னா உண்டியல தூக்கிட்டு போய்ட்டானுவ! ஒனக்கு செழிப்பா கொடகுடுத்தும், இப்படி ஏன் எங்கள பதங்கொலைக்கிற” என்று கோவிலிருக்கும் திசைபார்த்து கிழவிகள் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தனர். செய்திக்கேட்ட மறுநொடி இசக்கியம்மன் சாமிக்கொண்டாடி வள்ளியம்மை அருள்வந்து ஆடி அப்படியே மயங்கிப்போனாள். அவள் மருமகளான ஊரம்மன் கோவில் முத்தாரம்மன் சாமிக்கொண்டாடி ஈஸ்வரி பக்கத்துவீட்டு பெண்ணிடம், “யக்கா, ஆடி குறி சொல்லுவானு பாத்தா, ஊர்க்காரங்கிட்ட மாட்டிக்கக்கூடாதுன்னு எப்படி மயக்கம் போட்டு நடிக்கிறா பாத்தீயா!நானாயிருந்தா இந்நேரம் எடுத்தவன ரெத்தம் கக்க வச்சிருக்கமாட்டேன்” என அருள் வந்ததுபோல் இருமியபடி மூச்சியிழுத்தாள்.

தர்மகர்த்தாவிற்கு தண்ணீர் கொடுத்து திண்ணையில் உட்காரவைத்தனர். “ஏய்,சம்முவேலு, போய்ட்டு பிளசர எடுத்துட்டு வா! போலீசு டேசன்ல போயி கம்பளைன்டு குடுக்கலாம்” என்றார் தர்மகர்த்தா.

“டேசனுக்குப்போறதுக்கு முந்தி ஒன்னு செய்யலாம். மலையன்குளத்துல கொறத்தி ஒருத்தி குறி சொல்லுறா!அவகிட்டப் போனீங்கன்னா எங்கருந்து வந்தானுவ, எத்தனப்பேரு வந்தானுவன்னு எல்லாத்தையும் புட்டுப்புட்டு வச்சிருவா! களவுபோன யம்மவளோட ரெண்டு பவுனு முறுக்குச்செயினு அவக்கிட்ட போன பெறவுதான் கெடச்சது” என்றாள் கூட்டத்தில் ஒருத்தி.

“நாருகோயிலுல பகவதி சுப்ரமணியம்ன்னு ஒரு வைத்தியன் இருக்கான். அவன்ட்டப்போனா சோவிய உருட்டியே எடுத்தவன் சோலிய முடிச்சிருவான்” என்றான் பூசாரி பூவேல். 

காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும், ஊரார் சொன்ன இடத்திற்கெல்லாம் சென்றும் உண்டியல் திருட்டைப்பற்றி ஒரு துப்பும் கிடைக்கவில்லை.

எட்டாம் கொடை முடிந்த மறுநாள் மதியவேளையில் கால்வாய்க்கு குளிக்கச்சென்ற ஊர் பெண்ணொருத்தி, பையப் பைய படிக்கட்டுகளிலிறங்கி ஜில்லென்று ஓடும் தண்ணீரின் குளிர் தாங்காமல், நீர்காக்கா போல் படக்கென்று தலைமுங்கி வெடுக்கென்று எழுகையில், அவள்மீது கப்பலொன்று மோதியது. இன்னும் பல கப்பல்கள் மோத வருவதைக்கண்டு அதிர்ந்துப்போய், உள்பாவாடையோடு ஊருக்குள் ஓடிவந்த அவள் கை கால்கள் நடுங்க ஊராரிடம் சொன்னதும், ஊர்க்காரர்கள் செங்காங்கட்டி, மட்டக்கம்பென்று கையில் கிடைத்ததையெல்லாம் எடுத்துக்கொண்டு கால்வாய் நோக்கி படையெடுத்தனர்.

விக்டோரியா கால்வாயின் கரையை ஒட்டியிருக்கும் ஆவாரம் மூட்டின்கீழே அழகாய் குழந்தையைப்போல அமர்ந்து ரூபாய் நோட்டுகளில் கப்பல் செய்து கால்வாய் நீரில் விட்டுக்கொண்டிருந்தாள்.

சத்தம்கேட்டு தப்பித்து ஓடிடக்கூடாதென பூனையைப்போல் பதுங்கி வந்து அவளை ஊர்க்காரர்கள் சூழ்ந்து கொண்டனர். ரூபாய் நோட்டு கப்பல்களை கையிலெடுத்து மோந்து பார்த்த கிட்ணன், “மாமோய்…எல்லா நோட்டுலயும் திருநூறு வாசமடிக்கி. இந்த முண்டதான் உண்டியல் காச திருடிருக்கா!” என்று தர்மகர்த்தாவிடம் சொன்ன மறுநொடி, மிளாவைப்போலிருந்தவன் அவளின் செம்பட்டை பாய்ந்த தலைமயிரை கொத்தாய் பிடித்திழுத்து விலாவிலே ஓங்கி ஒரு மிதி மிதித்தான். மாடுபோல இருந்தவன் அவளின் மார்புமீதே எட்டி உதைத்தான். காட்டுமிராண்டி ஒருத்தன் அவளின் காலிலே ‘சாவுடி தேவ்டியா’ என்று கூச்சலிட்டவாறு கல்லைத் தூக்கிப்போட்டான். ஒருவன் ஓடிப்போய் அவளின் அழுக்குமூட்டையை கிழித்து கீழே கொட்டி ஆராய்ந்தான். அதில் கொஞ்சம் ரூபாய் நோட்டுகளும்,கொஞ்சம் சில்லறைத்துட்டுகளும், சிறுகுழந்தைகளுக்கு அணிவிக்கும் திருஷ்டி வளையல்களும், கண் மையும், உடைந்த ஒரு பால்டப்பாவுமிருந்தன.

அத்தனை மிதியையும், அடியையும் வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்தவள், வளையல்கள், கண் மை, பால்டப்பாவை கீழே கொட்டியதும் பதறித்துடித்து, “நை நை…ஜோடு நை பையா” என்று கத்திக் கூப்பாடு போட்டாள்.

மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்குப்போய் வந்த ராமசுந்தரம் நாடார் கால்வாயில் கூடியிருக்கும் கூட்டத்தினைப் பார்த்து, என்னவோ ஏதோவென்று பாலத்தில் சைக்கிளை சாய்த்துப்போட்டுவிட்டு ஓடிப்போய் பார்த்தார்.

அங்கே செம்மண் கரையில் செங்குருதி சிந்த கூட்டுக்குள் சுருங்கிக்கொள்ளும் நத்தைப்போல் உடலை குறுக்கிக்கொண்டு படுத்திருந்தாள் விக்டோரியா.

“எதுக்குல இவளப்போட்டு இப்படி அடிச்சிருக்கீய?”

“உண்டியல் காச எடுத்தா, அடிக்காம ஆரத்தியா எடுப்பாங்க!”

“என்னது! உண்டியல் காச இவ எடுத்தாளா? இவனுவளுக்குத்தான் அறிவில்லன்னா, ஊருக்குப் பெரிய மனுசன் ஒமக்குமா அறிவில்ல?”

“யோவ் ராமசுந்தரம்..மரியாதையா பேசும்” – மீசையை முறுக்கினார் தர்மகர்த்தா.

“ஆமா, இவதான் எடுத்தான்னு எத வச்சி சொல்லுறீய?”

“இந்த கன்டாரோலி மவ கப்பல் செஞ்சி வெளையாண்ட நோட்டுலலாம் கோயில் திருநூறு வாசமடிக்கிது. அதுமட்டுமில்லாம அவ மூட்டையில வேற காச ஒளிச்சி வச்சிருக்கா. அதுலயும் அதே வாசனை தான். இதவிட வேறன்னய்யா ஆதாரம் வேணும்?”

“தர்மகர்த்தா! விக்டோரியா நம்ம ஊருக்கு வந்து எத்தன வருசமிருக்கும்?”

“அது…அஞ்சாறு வருசமிருக்கும்.”

“இத்தன வருசத்துல ஒரு நாளாவது பசிக்குதுன்னு ஊருக்குள்ள வந்துருக்காளா?”

“பச்சத்தண்ணி கேட்டுக்கூட ஒருநாளும் ஊருக்குள்ள வந்தது கெடையாது.”

“பசிக்கு சோத்த திருடாதாவளாய்யா பணத்துக்கு ஆசப்பட்டு கோயில் உண்டியல திருடப்போறா?”

பதில் கூற முடியாமல் தர்மகர்த்தாவும் ஊர்மக்களும் தலைகுனிந்து நின்றனர்.

“களவாணிப்பயலுவ தப்பிக்கிறதுக்கு கொஞ்சோண்டு ரூவா நோட்டையும் சில்லறையையும் இவ மூட்டையில வச்சி ஊர நல்லா ஏமாத்திருக்கானுவ. இதுபுரியாம ஒரு அப்பிராணியப்போட்டு இப்படி ஈவு எரக்கமில்லாம அடிச்சிருக்கீயளே! உண்டியல் பணத்த எடுத்தவ ஊரவிட்டு ஓடாம இப்படியா உக்காந்து கப்பல் செஞ்சி வெளையாடுவா! என்னய்யா மனுசங்க நீங்க? போங்க! போயிட்டு மொதல்ல திருடுனவனுள புடிக்குற வழியப் பாருங்க” என்றார் ராமசுந்தரம் நாடார்.

ஊர்மக்கள் ஊரைப்பார்த்து நடக்கத்தொடங்கினார்கள்.மயக்கமுற்ற விக்டோரியா மெல்ல கண்விழித்து எழ முடியாமல் எழுந்து, நடக்க முடியாமல் நடந்து, சிதறிக்கிடந்த அவளுக்குரிய பொருட்களை அழுக்கு மூட்டையில் அள்ளிக்கொண்டு கால்வாய் கரையினில் நடக்கத்தொடங்கினாள்.

“ஏ விக்டோரியா! எங்க போற? உண்டியல் பணத்த நீ எடுக்கலனு ஊர்ல உள்ள எல்லாத்துக்கும் புரிஞ்சி போச்சி. இனிம யாரும் ஒன்ன ஒண்ணும் பண்ணமாட்டாங்க. நான் சொல்றத கேளு, போவாத!” – என்று ராமசுந்தரம் நாடார் கெஞ்சியும் உடைக்கப்பட்ட காலினை ஊன்ற முடியாமல் நொண்டியபடி ஆலமரக்கிளையிலமர்ந்து அழும் அக்காக்குருவிப்போல அழுதுகொண்டே போனாள். கடிபட்ட முயல் காட்டுப்புதருக்குள் பம்மி மறைந்துகொள்வதுபோல கரைமேல் நடந்துப்போனவள் காட்டுக்குள்ளிறங்கி மறைந்து போனாள் விக்டோரியா!

 *******

munees4185@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button