![](https://vasagasalai.com/wp-content/uploads/2019/04/kalaiyarasi-780x405.jpg)
நாலைஞ்சு நாளா அம்மாவோட மொகம், கை, காலெல்லாம் ஊதிப் பெருத்துப் போய்க் கெடக்கு. தொடர்ச்சியாப் பேச முடியாம, அடிக்கடி மூச்சு வாங்குது. சாப்பாட்டைப் பார்த்தாலே, ஓ.. ஓ..ன்னு ஓக்காளிக்குது. ஏதோ ஒரு பயங்கரமான வியாதி, அம்மாவுக்கு வந்துருக்குன்னு மட்டும் தெரியுது.. அது என்னன்னு தான், எனக்கு வெளங்கல.
அது ஒழுங்கா வேலைக்குப் போய், ரெண்டு மாசத்துக்கு மேல ஆவுது. எப்பப் பார்த்தாலும், ’ஆ, ஐயோ அம்மா!’ன்னு பினாத்திக்கிட்டுப் போர்வையை இழுத்துப் போர்த்திக்கிட்டுப் பாயிலசுருண்டுகெடக்குது.
அதை எழுப்பிப் பசிக்குதுன்னு, வயித்தைத் தொட்டுக் காட்டினா, முக்கிக்கிட்டும், முனகிக்கிட்டும் ஏந்திரிச்சிப் போய்க் கேப்பங்கூழ் காய்ச்சி, மோருல கலந்து கொடுக்குது. சின்ன வெங்காயத்தைக் கடிச்சிக்கிட்டு, அத எத்தினி வேள தான், குடிக்கிறது? அதப் பார்த்தாலே, எனக்கு அடி வயித்துலேர்ந்து குமட்டிக்கிட்டு வருது. பசி வயித்தைக் கிள்ளும் போது, வேற வழியில்லாம, மூக்கைப் பிடிச்சிட்டுக் குடிச்சி வைக்கிறேன்.
அது சமையல் வேலைக்குப் போன காலத்துல, அங்கேர்ந்து சாம்பார், காரக்குழம்பு, கோழிக்கறி குருமான்னு வகை வகையாச் சாப்பாடு எடுத்துட்டு வரும். தான் தின்னாம, எனக்காக மீத்து வைச்சிருந்து கொண்டு வர்ரதை, சப்புக் கொட்டிக்கிட்டுத் தின்பேன். மாசச் சம்பளம் வாங்கினதும், எனக்குப் புடிச்ச சமோசாவும், சாக்லேட் முட்டாயும் வாங்கியாரும்.
அம்மாவுக்கு ஒடம்பு எப்ப குணமாவும், பழையபடி தீனி எனக்கு கிடைக்கும்னு, ஏக்கமாயிருக்கு.
எதிர்வீட்டு சீனு மாமா, ரெண்டு நாளைக்கு முன்னாடி, அம்மாவை பெரியாஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனாரு. அங்க என்ன சொன்னாங்களோ தெரியல, வீட்டுக்கு வந்ததிலேர்ந்து ரெண்டு பேரும் ரொம்ப மெதுவா, மூச்சு விடாம தொண தொணன்னு பேசிக்கிட்டே இருக்காங்க. அம்மா ஏதோ சொல்லிட்டு, அழுதழுது மூக்கை உறிஞ்சித் தொடைக்குது. தொடர்ச்சியாப் பேசமுடியாம, இருமல் வேற கொட்டிக் கொலைக்குது. அடுத்த வூட்டுல இருக்கிற பெரியப்பாவுக்குக் காதில் விழக்கூடாதுன்னு தான், ரெண்டு பேரும் அவ்ளோ மெதுவாப் பேசறாங்கன்னு தோணுது.
இடையிடையில என்னை வேறச் சுட்டிக் காட்டி, மாமா ஏதோ சொல்றாரு. அதுக்கு அம்மா தலையை ஆட்டி, ஆட்டி ஏதோ மறுப்பு சொல்லுது.
”நான் ஆஸ்பத்திரிக்குப் போயிட்டேன்னா, இவன யார் பார்த்துக்குவாங்க? அதனால எனக்கு வைத்தியம் ஏதும் வேணாம்”னு, அம்மா சொல்லுமாயிருக்கும்.
கண்டிப்பா என்னை ஒரு நாள் கூட வைச்சுப் பெரியம்மா சோறு போடாது.. அதோட சின்ன பொண்ணு, கண்மணிக்குத் தான் நான்னா உயிரு. பெரியம்மாவுக்குத் தெரியாம, அப்பப்ப வீட்டுக்கு வ்ந்து, எனக்கு பிஸ்கட்டும், முட்டாயும் கொடுக்கும்.
எப்பவும் எச்சில் ஒழுகிற என் வாயை, அருவருப்பு படாம, துண்டை எடுத்துத் தொடைச்சி விடும். அதப் பார்த்தவுடனே, ‘பே பே,’ ன்னு கத்துவேன். ’தங்கச்சியைக் கண்டுட்டாப் போதும்; இவனுக்கு வர்ற உற்சாகத்தைப் பாரேன்,’னு, அம்மா கூட அடிக்கடிச் சிரிச்சிக்கிட்டே, என் கன்னத்தைக் கிள்ளிவுடும்.
ஒரு தடவை, கண்மணி, எனக்கு முட்டாய் கொடுக்க வந்தப்ப, பெரியம்மா பார்த்துடுச்சி. ”ஏய்! அவன் கிட்ட போகக்கூடாதுன்னு, எத்தினி தடவை சொல்லியிருக்கேன்? அவன் பைத்தியம்டி. ஒன்னை ஏதாவது செஞ்சிடப்போறான்”னு சொல்லிட்டு, கண்மணியை அடிச்சி, இழுத்துக்கிட்டுப் போயிடுச்சு.
”அவன் ஒன்னும் பைத்தியம் இல்ல. அவனுக்கு வாயைத் தொறந்து பேசத்தான் தெரியல. எங்கிட்ட ஜாடையிலேயே, எப்டிப் பேசறான் தெரியுமா? ஒங்களுக்குத் தான், அவன் பேசறது புரிய மாட்டேங்குது. பாவம்மா அவன்,” னு, கண்மணி அழுதுக்கிட்டே சொல்லிட்டு, பாவாடையை எடுத்து, மூஞ்சியைத் துடைச்சிட்டுப் போனப்ப, எனக்கும் அழுகை அழுகையா வந்துச்சி.
அதிலேர்ந்து, பெரியம்மா தூங்குகிற நேரமாப் பார்த்துத் தான், கண்மணி வரும். அவளோட அண்ணன் பார்த்துட்டானாலும், அவ அம்மாக்கிட்ட போட்டுக் கொடுத்துடுவான். என்னைப் பார்த்தாலே, ”சீ போ பைத்தியம், வெவ்வெவ்வே!”ன்னு பழுப்பு காட்டுவான்.
வாசல்ல பசங்கக் கூட, அவன் ஜாலியா கிரிக்கெட் விளையாடுறதையும், வேகமா சைக்கிள் ஓட்டுறதையும் ஏக்கத்தோட பார்த்துக்கிட்டிருப்பேன். அந்தப் பசங்களைக் காட்டி, நானும் விளையாடப் போகணும்னு, அம்மாக்கிட்ட ஒட்டாரம் பண்ணுவேன்.
”ஒன்னை அவங்க சேர்த்துக்க மாட்டாங்கடா ராசா. பேருக்கேத்த மாதிரி, ராசாவாட்டம் ஒரு கொறையும் இல்லாமத் தான்டா, ஒன்னையும் பெத்தெடுத்தேன். ஒனக்கு மூணு வயசிருக்கும்போது, பாழாப் போன மூளைக் காய்ச்சல் வந்துடுச்சு. நீ பொழைச்சதே அதிசயம்னு டாக்டர் சொன்னாரு. ஆனா அந்தக் காய்ச்சல் மூளையைப் பாதிச்சிடுச்சாம். வயசுக்கேத்த மூளை வளர்ச்சி இருக்காதுன்னு சொன்னாங்க. அதுக்கப்புறம் ஒன்னையத் தூக்கிட்டு, ஆஸ்பத்திரி, ஆஸ்பத்திரியா அலைஞ்சேன். சித்த மருந்து, ஆயுர்வேதம், நாட்டு மருந்துன்னு, ஒன்னையும் விட்டு வைக்கலே. யாரு என்ன சொன்னாலும், தட்டாம செஞ்சேன். ஒன்னும் புண்ணியமில்லே. போகாத கோயில் இல்ல; வேண்டாத தெய்வமில்ல. போன பிறவியில, யாருக்கு என்ன பாவம் செஞ்சேனோ, இந்தப் பிறவியில, இப்பிடியொரு கஷ்டத்தை, ஆண்டவன் எனக்குக் கொடுத்திட்டான்,” னு அம்மா ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சிடும். அம்மாக்கிட்ட, ஏன்டா கேட்டோம்னு ஆயிடும்.
அம்மா ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு வந்த பொறவு, ஒருநாள் சீனு மாமா, என்னையும் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போறாரு. ”ஏன் எதுக்கு?”ன்னு கேட்டு, அவர் கையிலப் பிறாண்டி எடுத்திட்டேன். ”சும்மா தான்; கம்முனு இரு,”ன்னு சொல்லி, என் கையைப் புடிச்சி வேகமாத் தள்ளி விட்டுட்டாரு.
எனக்கு ஊசி போட்டு, ரத்தம் எடுக்கிறாங்க. வலி தாங்க முடியாம கூச்சல் போடறேன். அங்க இருந்தவங்க எல்லாரும், ”பாவம் பைத்தியம்,”னு என்னைப் பரிதாபமாப் பார்க்கிறாங்க. ’எனக்குப் பேசத்தான் தெரியலே, நான் ஒன்னும் பைத்தியம் இல்லே!’ன்னு அவங்கக்கிட்ட அடிச்சிச் சொல்லணும்னு வாயைத் தொறக்கிறேன். ஆனா நான் என்ன சொல்ல நினைச்சாலும், ’பே பே’ன்னு தான், சத்தம் வெளியில வருது. அவங்க பரிதாபமா பார்க்கிறது, எனக்கு அவமானமா இருக்கு.
அம்மாவுக்குத் தான், ஒடம்பு சரியில்லே. எனக்கு எதுக்கு இரத்தத்தை எடுத்துச் சோதனை பண்ணனும்னு, சந்தேகம் வருது. எக்ஸ்ரே, ஸ்கேன்னு ஒரு நாள் முழுக்க, எனக்குச் சோதனை செய்றாங்க. என்ன நடக்குதுன்னு, எனக்கொன்னும் புரியலே. மாமா எதுவும் சொல்லாம, ”கம்முனு இரு”, ன்னு கோபமா அதட்டிக்கிட்டே இருக்காரு.
எப்பவும் எனக்குப் புரியுதா, இல்லையாங்கிறதைப் பத்திக் கவலைப்படாம, தன் மனசில இருக்கிற எல்லாத்தையும், அம்மா எங்கிட்ட சொல்லி, அழுது தீர்த்துடும்.
அப்பா இறந்ததைப் பத்திக் கூட, அடிக்கடி அம்மா சொல்லியிருக்குது. மரம் வெட்டுறதுல, அப்பா கை தேர்ந்தவராம்..
ஒரு நாள் சாராயம் குடிச்சிட்டு வந்து, அவரு படுத்திருந்தப்ப தன் வூட்டுக் கொல்லையில இருந்த வேப்ப மரத்தை வெட்டச் சொல்லிப் பெரியப்பா கூப்பிட்டாராம். அப்பாவும் மறுபேச்சு பேசாம, எழுந்து மரம் வெட்டப் போனாராம். ஆனா குடிபோதையில சரியாக் கவனிக்காம, மரம் விழுற பக்கமா அப்பா நின்னுட்டாராம். மரம் அவர் மேல சாய்ஞ்சு, நசுங்கிச் செத்துப் போயிட்டாருன்னு, அம்மா அடிக்கடிச் சொல்லி அழும்.
நான் வேலைக்கு வெளியில போயிட்டேன். இருந்திருந்தேன்னா, குடிச்சிருக்கப்ப, மரம் வெட்டப் போகக் கூடாதுன்னு தடுத்திருப்பேன்னு சொல்லி, அம்மா புலம்பிக்கிட்டேயிருக்கும்.
அப்பா செத்த பிறகு, அம்மாவுக்கு ரொம்பக் கஷ்டமாயிடுச்சாம். வீட்டைக் காலி பண்ணிட்டு, ஒங்கம்மா வீட்டோடப் போன்னு சொல்லி, பெரியப்பாவும், பெரியம்மாவும் அம்மாக்கிட்ட் அடிக்கடி சண்டை போட்டாங்களாம். ஆனா ”இது என் புருசனுக்குச் சொந்தமான இடம். நான் இதைக் காலி பண்ண மாட்டேன், விக்கவும் மாட்டேன்; கடேசி வரைக்கும் இங்க தான் இருப்பேன்,”னு அம்மா பிடிவாதமாச் சொல்லிடுச்சாம்.
அதிலேர்ந்து, பெரியப்பா வீட்டுக்கும், எங்க வீட்டுக்கும் பேச்சு வார்த்தை அத்துப் போயிடுச்சாம். ஒன் பெரியப்பா, நம்மள வைக்கிறதில்லேன்னு இருக்காருன்னு, அம்மா சொல்லும்.
”பைத்தியக்காரப் புள்ளையைப் பெத்து வைச்சிருக்கும் போதே, இவ இவ்ளோ திமிரா இருக்குறாளே! இன்னும் ஊரப் போல, நாட்டைப் போல, நல்ல பையனாப் பெத்திருந்தா, இவளக் கையால புடிக்க முடியாது,”ன்னு பெரியம்மா ஜாடையில அம்மாவைக் குத்திக் காட்டித் திட்டுறத, நானே பலமுறைக் கேட்டிருக்கேன்.
சீனு மாமா, அப்பாவோட கூட்டாளி. அவரு தான், அம்மாவுக்கு அப்பப்ப ஏதாவது உதவி பண்ணுவாரு. அந்த மாமியும் ரொம்ப நல்லவங்க. தீபாவளி, பொங்கலுக்கு மாமா எனக்குப் புது சட்டையெல்லாம் வாங்கிக் கொடுத்திருக்காரு.
”அவரு என்னோட கூடப் பொறக்காத அண்ணன்; அவரு மட்டும் இல்லேன்னா, ஒனக்கு ஒரு துளி விஷத்தைக் கொடுத்துட்டு, நானும் தூக்கு மாட்டிட்டி, எப்பவோ செத்திருப்பேன்டா,”ன்னு கூட அம்மா ஒருதடவை சொல்லியிருக்குது.
இன்னொரு நாள் என்னை வற்புறுத்தி, மறுபடியும் மாமா அதே ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போறாரு. ஏற்கெனவே ஊசி போட்டது, ஞாபகத்துக்கு வந்து, நான் வரவே மாட்டேன்னு, அடம் புடிக்கிறேன். ’இனிமே ஊசியெல்லாம் கிடையாது,’ன்னு சொல்லி, மாமா வலுக்கட்டாயமா, என்னை ஆட்டோவில ஏத்திட்டுப் போறாரு.
அம்மா மெளனமா என்னைப் பார்த்துட்டே பக்கத்துல ஒட்கார்ந்திருக்கு. ஒன்னுஞ் சொல்ல மாட்டேங்குது. கொஞ்ச நாளாவே, எங்கிட்ட சரியாப் பேச மாட்டேங்குது. அதோட நடவடிக்கை ரொம்ப வித்தியாசமாவும், சந்தேகப்படும்படியாவும் இருக்கு. அது எங்கிட்டேர்ந்து ரொம்ப தூரம் விலகிப் போயிட்ட மாதிரி, ஒரு நினைப்பு வர்றதைத் தவிர்க்க முடியல.. ரெண்டு பேரும் சேர்ந்து, என்னை என்னமோ செய்யப் போறாங்கன்னு, என் மனசு சொல்லுது. எல்லாரும் எனக்கெதிரா ஏதோ வேலை செய்றாங்களோன்னு, ரொம்பப் பயமாயிருக்கு.
என்னை ஊசிப் போட்டுச் சாகடிக்கப் போறீங்களான்னு, அம்மாவைப் பார்த்துக் கோபமா ஜாடையிலக் கேட்கறேன். நான் கேட்கிறது, அம்மாவுக்குப் புரியாம இருக்காது. ஆனா அம்மா அதுக்குப் பதில் சொல்லாம, குற்றஞ் செய்றாப்புல, தலையைக் குனிஞ்சிக்குது.
மறுபடியும் அதே ஆஸ்பத்திரிக்குத் தான், என்னை அழைச்சிட்டு வந்திருக்காங்க. என்னை ஒரு தள்ளுவண்டியில படுக்க வைக்கிறாங்க. நான் படுக்க மாட்டேன்னு திமிர்றேன். நாலு பேர் என்னை அமுக்கி படுக்க வைச்சி, உள்ளாற தள்ளிட்டுப் போறாங்க. நான் திரும்பி அம்மாவைத் தேடறேன். அங்க அம்மாவைக் காணோம்.
அந்த அறைக்குள்ளே பச்சை உடை போட்டுக்கிட்டு, யார் யாரோ இருக்காங்க. ரொம்பப் பயமாயிருக்கு. யாரோ ஒருத்தர் என் மூக்கைப் புடிச்சி அழுத்திட்டு, என்னமோ கேட்கறாரு. அவருக்குப் பதில் சொல்ல முடியாம, கண்ணைத் தூக்கம் அழுத்துது. கஷ்டப்பட்டுக் கண்ணைத் தொறக்கப் பார்க்….கி…றேன். முடியல……….
எவ்ளோ நேரம் மயக்கமாயிருந்தேன்னு தெரியல. கண் முழிக்கும் போது, யாரும் பக்கத்துல இல்லை. புரண்டு படுக்க முடியாம விலாப்பக்கம் பெரிய கட்டு போட்டிருக்காங்கன்னு தெரியுது. தலையைத் திருப்பி, சுத்தியும், முத்தியும் பார்க்கறேன்.
நோயாளிக்கு முழிப்பு வந்துடுச்சின்னு, அங்கிருந்த ஒரு சிஸ்டர் சொல்லிட்டு, என்னை அந்த அறையை விட்டு வெளியில கொண்டு வந்து, வேற ஒரு படுக்கையில படுக்க வைக்குது. நான் என்ன நோயாளியா? இன்னிக்குக் காலைல, இங்க வர்ற வரைக்கும், நல்லாத்தானே இருந்தேன்?
கட்டுப் போட்டிருக்கிற வயித்துப் பக்கம், ரொம்ப வலிக்குது. எனக்கு எதோ ஆப்ரேஷன் பண்ணியிருக்காங்கன்னு யூகிக்க முடியுது. அது எதுக்குன்னு தான் புரியலை.
தண்ணி குடிச்சாத் தேவலாம்னு இருக்கு. நாக்கு ரொம்ப வரளுது. உதடு ரெண்டும் காய்ஞ்சு, காய்ஞ்சு போவுது. அடி வயித்துலேர்ந்து கமறிக்கிட்டு இருமல் வருது. இருமினா உயிர் போறாப்ல, வயத்தை வலிக்குது. இருமல் வரும்போது, வயித்தை ஒரு கையாலக் கெட்டியாத் தாங்கிப் புடிச்சிட்டு, இன்னொரு கை கட்டை விரலை நீட்டித் தண்ணி கேட்கிறேன்.
அந்த சிஸ்டர், நான் கேட்கிறதை, சட்டையே பண்ண மாட்டேங்குது. கையில ஊசி போட்டு, ஒரு குளுக்கோஸ் பாட்டிலை ஏத்திவிட்டுட்டு, அது பாட்டுக்குப் போவுது.. லேசா மயக்கமா இருக்கு. அதோட பார்வையும் மங்கலாயிருக்கு.
பக்கத்து படுக்கையில யாரு இருக்கான்னு, உத்துப் பாக்கறேன். அது யாரு?…அம்மாவா அது! ஆமாம். அம்மாவே தான்!
அம்மாவும் மயக்கமா படுத்திருக்கு. அதுக்கும் ஒரு கையில என்ன மாதிரியே, குளுக்கோஸ் ஏறுது. அதுக்கு என்ன ஆச்சுன்னு தெரியாம, பதட்டமாயிருக்கு. யாருக்கிட்ட கேட்கிறதுன்னும் புரியல. நான் பேசறது, அவங்களுக்குப் புரியாதேன்னு கவலையா இருக்கு.
இதே மாதிரி, எத்தினி நாள் இருந்திருப்போம்னு தெரியலை. கொறைஞ்சது பத்து நாளாவது ஆயிருக்கும். இப்ப வலியெல்லாம், ரொம்பக் குறைஞ்சிடுச்சி.
ஆப்ரேஷன் பண்ணி, என்னோட ஒரு சிறுநீரகத்தை எடுத்து, அம்மாவுக்கு வைச்சிருக்காங்கன்னு, ஆஸ்பத்திரியில என்னைச் அடிக்கடி சோதனை செய்ய வர்ற, டாக்டருக்குப் படிக்கற தம்பிங்க, அவங்களுக்குள்ளாற பேசுனதிலேர்ந்து தெரிஞ்சிக்கிட்டேன்.
மொத மொதல்ல சேதி கேள்விப்பட்டப்ப, ரொம்ப அதிர்ச்சியாயிருந்துச்சி; ஆடிப் போயிட்டேன். ஆனா அத எடுத்த பெறகும், எனக்கொன்னும் ஆகாம, உயிரோடு இருக்கிறேன்னு நினைச்சப்ப, ஆச்சரியமாயிருந்துச்சி.. இந்த விஷயத்தை அம்மா, எங்கிட்ட மறைக்காம, முன்னாடியே சொல்லியிருக்கலாமேன்னு தோணுச்சி.. ஆனா உயிரோடு இருக்க, ஒருத்தருக்கு ஒரு சிறுநீரகமே போதுங்கிற விஷயம், இப்பத் தானே எனக்குத் தெரியுது!
அப்பச் சொல்லியிருந்தா, நான் செத்துப் போயிடுவேன்னு நெனைச்சுப் பயந்து அழுதிருப்பேன். ஒத்துக்க மாட்டேன்னு அழும்பு பண்ணியிருப்பேன். இப்ப அம்மாவுக்கும், ஒடம்பு குணமாயி, நல்லபடியா எழுந்து நடமாடுறதைப் பார்க்க, ரொம்ப மகிழ்ச்சியாயிருக்கு. தேவையில்லாம, என்ன என்னெத்தையோ யோசிச்சிப் பயந்ததை நினைச்சாச் சிரிப்பு தான் வருது.
அதுக்கப்புறம் நானும், அம்மாவும் ஒரே நாள்ல வூட்டுக்கு வாரோம். வூட்டுக்கு வந்ததுக்கப்புறம்
”என்னை மன்னிச்சிடு ராசா!. ஒன்னை ஒரு வார்த்தை கேட்காம, ஒங்கிட்டேர்ந்து ஒரு சிறுநீரகத்தை எடுத்து, எனக்கு வச்சிட்டாங்க. ஒங்கிட்ட அதை எப்பிடிச் சொல்றது? சொன்னா ஒனக்குப் புரியுமான்னு, ரொம்பத் தயக்கமாயிருந்துச்சி. சீனு மாமா தான், என்னை ரொம்ப வற்புறுத்தி, இந்த ஆப்ரேஷனுக்கு ஒத்துக்க வைச்சாரு. ஒனக்கு ஒன்னும் ஆவாதுன்னு, டாக்டர் உட்பட எல்லாரும் சொன்ன பொறவு தான், இதுக்கு ஒத்துக்கிட்டேன்; நான் இருக்கிறதே, ஒனக்காவத் தான். ஒனக்கு ஏதாவது ஆவும்னா, நான் இதுக்கு ஒத்துக்கிட்டிருக்கவே மாட்டேன்,” னு அம்மா சொல்லிட்டுக் கலங்குன கண்ணை முந்தானையாலத் தொடைச்சிக்குது..
இப்படிப்பட்ட அம்மாவைத் தப்பா நெனைச்சது, எவ்ளோ பெரிய மடத்தனம்னு நெனைச்சி, குற்றவுணர்வில நான் கூனிக்குறுகிப் போறேன்.அதுக்காக வருத்தப்படாத; நீ குணமானதே போதும்னு சைகையிலகாட்டிட்டு, அது கையை எடுத்து, என் கன்னத்துல ஆசையா வைச்சிக்கிறேன்.
அம்மா மறுபடி வேலைக்குப் போக ஆரம்பிச்சி, கொஞ்ச நாள் தான் ஆயிருக்கும். சீனு மாமா ஒரு நாள், பதட்டத்தோட வந்து அம்மாக்கிட்ட ஏதோ சொல்றாரு.மூளை சரியில்லாம இருக்கிற, எங்கிட்டேர்ந்து சிறுநீரகத்தை எடுத்தது, சட்டப்படி குத்தம்னு அம்மா மேல, பெரியப்பா கேஸ் போட்டிருக்காராம்.
”ரெண்டு சிறுநீரகமும், மொத்தமா வீணாப்போயி, ஒன்னுக்குப் போகாம, வயிறு வீங்கி வெடிச்சிக் கெடந்தேன். இப்பவோ, அப்பவோன்னு இருந்துச்சி, என் நிலைமை. நான் சீக்கிரம் செத்துப்போயிடுவேன்; நான் போன பொறவு, ஒன்னை எதாவது ஒரு அனாதை ஆசிரமத்துலச் சேர்த்துட்டு, இந்த வூட்டை அபகரிச்சிக்கலாம்னு, ஒங்கப் பெரியப்பா திட்டம் போட்டிருந்திருப்பாரு.இப்ப நான் உயிர் பொழைச்சி வந்துட்டதால, அவரோடத் திட்டம்பாழாயிடுச்சி. நான் நிம்மதியா இருக்கக் கூடாது; என்னை எப்பிடியாவது பழி வாங்கணுங்கிற எண்ணத்துல தான், என் மேல கேசு போட்டிருக்காரு.
அதிகமாப் பணம் செலவழிச்சிப் பேரு பெத்த வக்கீலை அமத்தியிருக்காராம்; பணம் செலவழிச்சி, எதிர் வக்கீலை வச்சி, வாதாடுற நெலைமையில, நாம இல்ல. நடக்கிறது நடக்கட்டும். எது வந்தாலும் பார்த்துக்கலாம்,”னு, அம்மா எங்கிட்ட வருத்தமாச் சொன்னப்ப, அம்மாவை எப்பிடியாவது, இந்த இக்கட்டுலேர்ந்து காப்பாத்தணுமேன்னு, கவலை என்னை அரிக்க ஆரம்பிடுச்சி.
ஆனா என்னால என்ன செய்ய முடியும்? நான் நெனைக்கிறத சொல்லவும் முடியாது; ஒரு எழுத்து கூட படிக்காததினால எழுதிக் காட்டவும் முடியாதுங்கிறதை நெனைச்சி, என் மேலேயே எனக்கு வெறுப்பா இருக்கு..
நீதிமன்றத்துக்கு அப்பப்ப அம்மாவும், மாமாவும் போயிட்டு வர்றாங்க. ஒங்கப் பெரியப்பா பக்கம் தான், தீர்ப்பாவும் போலருக்குன்னு, அம்மா அடிக்கடி வருத்தமாச் சொல்லுது.
ரொம்ப நாள் கழிச்சி, என்னையும் ஒரு நாள் நீதிமன்றத்துக்கு மாமா அழைச்சிட்டுப் போறாரு. என்னைக் கூண்டுல ஏத்திவி ட்டுட்டு, எதிர் வக்கீல் என்னென்னமோ கேள்வி கேட்கிறாரு. எனக்கு முக்கால்வாசி புரியல. கறுப்பு கோட் கீட்டெல்லாம் போட்டுக்கிட்டு, டை கட்டியிருக்கிற, அவரைப் பாத்ததுமே, எனக்குக் கைகாலெல்லாம் நடுங்குது. தொண்டை வறண்டு, நாக்கு ஒட்டிக்கிட்டுப் பே பேன்னு கத்தக்கூட முடியாம, மிரண்டு போய் நிக்கிறேன்.
என்னமோ இங்கிலிபீசுல ரொம்ப நேரம் பேசிட்டு, ”இவன் திரு திருன்னு முழிக்கிறதைப் பார்த்தீங்களா? தனக்கு என்ன ஆப்ரேஷன் நடந்துச்சின்னு கூட பாவம், இந்தப் பையனுக்குத் தெரியாது. புத்தி சுவாதீனம் இல்லாத இப்படிப்பட்ட பையனை ஏமாத்தி, அவனோட் சிறுநீரகத்தைத் திருடியிருக்காங்க; இது சட்டப்படிக் குற்றம்; கடுமையான தண்டனை தரணும்,”னு, கடைசியாச் சொல்லி முடிக்கிறாரு.
அம்மாவை ஜெயிலுக்கு அனுப்பிடுவாங்களோன்னு, எனக்கு ரொம்ப பயமாயிருக்கு. .
”நீ என்னப்பா சொல்ற? ஒன் சம்மதம் இல்லாமத் தான், ஒங்கிட்டேர்ந்து, சிறுநீரகத்தை எடுத்தாங்கன்னு ஒத்துக்கிறியா?”ன்னு நீதிபதி, என்னைப் பார்த்துக் கேட்கிறாரு.
தீர்ப்பு எழுதறதுக்கு முன்னாடி, என்னையும் ஒரு வார்த்தை ஒப்புக்குக் கேட்கணுமேன்னு, கேட்கிறாரு.
எனக்குத் தெரிஞ்சு தான், என்னோட சிறுநீரகத்தை எடுத்தாங்கன்னு, நீதிபதிக்கிட்டச் சொல்லணும். அம்மாவை எப்பிடியாவது, ஜெயிலுக்குப் போகாம காப்பாத்தணும்னு, என் மனசு கெடந்து தவியாய்த் தவிக்குது. அத அவருக்கு, எப்டிப் புரிய வைப்பேன்?
அம்மா அடிக்கடி ரெண்டு கையையும், சேர்த்து வைச்சி, ’எனக்கு நல்ல புத்தி கொடு சாமி,’ன்னு வேண்டி, கும்பிடச் சொல்லும். அப்பல்லாம், ரெண்டையும் ஒன்னா சேர்த்துக் கொண்டு வர்றதுக்கு, ரொம்பவே கஷ்டப்படுவேன். ஆனா இன்னிக்கு சீக்கிரமா, என் ரெண்டு கையையும் ஒன்னாச் சேர்த்துக் குவிச்சி வைச்சி, சாமின்னு அம்மாவைக் காட்டிக் கும்பிடறேன்.
அம்மா இல்லாட்டி, நான் செத்துப் போயிடுவேன்னு, கண்ணை மூடி, கழுத்தை ஒரு பக்கமாச் சாய்ச்சு, நாய் மாதிரி நாக்கை வெளியிலத் தொங்கவிட்டுக் காட்டறேன்.
என்ன ஆச்சரியம்! நான் செய்யணும்னு நெனைக்கிறதை, ஒடனே என்னால செய்ய முடியுது! கண், கழுத்து, வாய் எல்லாம் என் கட்டுப்பாட்டுல இயங்குது! தொங்குற நாக்குலேர்ந்தும், ரெண்டு கண்ணுலேர்ந்தும், அருவி மாதிரி தண்ணி கொட்டுது.
நீதிபதி உட்பட அங்கிருந்த எல்லாருக்கும், நான் சொல்ல வந்த விஷய்ம், ஒடனே புரிஞ்சிடுச்சி போலருக்கு.
’இவன் எப்பிடி சைகையாலேயே, தன் மனசில இருக்கிறதை வெளிப்படுத்திட்டான்,’னு, அதுவரைக்கும் பரிதாபமாப் பார்த்த அத்தினி பேரும், ஆச்சரியமா என்னைப் பாக்கிறாங்க! .
கடைசியா நீதிபதி அவரோட நீளமான தீர்ப்பை, வாசிக்கிறாரு.
அவரு வாசிச்சதுல, எனக்குப் புரிஞ்சது, இது மட்டும் தான்:-
”இந்த மாதிரி மனவளர்ச்சி குன்றுன பையன்கிட்டேர்ந்து, சிறுநீரகத்தை எடுத்தது, சட்டப்படி கடுமையான தண்டனைக்குரிய குத்தம் தான். ஆனா இந்தக் கேசுக்கு, அந்தச் சட்டம் பொருந்தாது. இந்தம்மா இல்லேன்னா, இப்பிடிப்பட்ட மனவளர்ச்சியில்லாத பையனை வைச்சு, யார் காப்பத்துவாங்க?. இந்தப் புள்ளையோட நல்லது, கெட்டதுக்காக, அம்மாவோட உயிரை நீட்டிக்க வேண்டியது, ரொம்ப அவசியம். அதுக்காக இந்த மகன்கிட்டேர்ந்து, அம்மா சிறுநீரகம் வாங்குனதுல, தப்பு ஒன்னுமில்லே. மக்களுக்காகத் தான் சட்டமேயொழிய, சட்டத்துக்காக மக்கள் இல்ல. எனவே இந்த வழக்கை, நான் தள்ளுபடி பண்றேன்”.
தீர்ப்பைவாசிச்சிட்டு, நீதிபதிபோனபிறகு, ‘வாப்பா போலாம்,’னு என் கையைப் பிடிச்சி அழைச்சிக்கிட்டு, நீதிமனறத்தை விட்டு வெளியில வர்ற அம்மா முகத்துல, என்னிக்குமில்லாத மலர்ச்சி தெரியுது!
பேச்சுமொழியில் மிக அருமையான கதை. நீரோட்டம் போல மிகத் தெளிவான எழுத்து. பேச இயலாத, தான் பேச விரும்புவதை வெளிப்படுத்தவியலாத ஒரு ஊமைப்பிள்ளையின் வாயிலாகவே அவன் எண்ணங்களைக் கதையாய் படைத்தது சிறப்பு. மகனுக்காக வாழ நினைக்கும் தாயை அந்த மகனே வாழ்விக்கிறான். முடிவு மிக நன்று.