மிஸ் யூ
பொதுவெளியில் தவிர்க்கப்படுகிறது
காலவெளியில் காணாமல் போகிறது
காதலர்களால் கைவிடப்படுகிறது.
ஒரு உறவின் ஆதியில்
அது உதிப்பதே இல்லை
உறவென்று சொல்ல எதிர்பிம்பம்
இல்லாமலாகும்போது
மிக மிக அவசரமாக
அது தேடப்படுகிறது
துர்க்கனவுகளின் முடிவில்
ஒரு நிழல் போல அதை வெளிக்கொணர முயன்று
தோற்கிறோம்
விழித்துக்கொண்டு கூறுகையில்
அது காற்றில் கரைந்து போவதை
கண்கூட காண்கிறோம்
ஒரு மிஸ் யூ உங்கள் கண்முன்னே
கரைவதைக் கண்டு உங்களால்
என்ன செய்யமுடியும்?
என்னால் ஆழமாக உடலின்
அனைத்து சக்திகளையும் சேர்த்து
மீண்டும் ஒருமுறை கத்தத்தான்
முடிகிறது மிஸ் யூ என்று
சோகம் என்னவென்றால்
மலைமுகடின் அடியாழத்தில்
எதிரொளிப்பது போல்
அது மீண்டும் மீண்டும் என்னிடமே வருகிறது
மிஸ் யூ மிஸ் யூ மிஸ் யூ
என்று.
****
இன்றைய தினம் உனக்கு
தாமதமாக விடிந்திருக்கலாம்
குளிக்க ஆயத்தமாகி ஹீட்டரை
இயக்கப்போகும் முன்
மின்சாரம் தடைபட்டிருக்கலாம்
உணவு முடிந்து கை கழுவிய
பின்தான் லஞ்ச் பாக்ஸை
நேற்று எங்கு வைத்தோமென
தேடத் தொடங்கியிருக்கலாம்
கதவைத் திறந்து வாசலுக்கு
வந்தபோதுதான் விடுப்பு
கேட்டு டிரைவர் கால் செய்திருக்கலாம்
நடந்தே வீதியைக் கடக்கும்போது
குடை எடுக்காமல் வந்துவிட்டதை
மழை உணர்த்தியிருக்கலாம்
பேருந்தில் ஜன்னல் சீட்
கிடைத்துவிட்டதை நினைத்து
சந்தோஷப்படும்போதே
பயணச்சீட்டை கம்பி வழி பறக்கவிட்டு
மீண்டும் பர்ஸைத் திறந்து தேடுகையில்
சில்லறை இல்லாமல்
வருத்தப்பட்டிருக்கலாம்
அலுவலகத்தில் வேலைச்சுமை
அதிகமென்று அலுத்துக்கொண்டு
அழக்கூட செய்திருக்கலாம்
இப்படி ஒரு நாளை எண்ணி
மீண்டும் மீண்டும் வருத்தப்பட
ஆயிரம் காரணங்கள் உனக்கிருக்கும்போது
என்னோடு மட்டும் எப்படி
சிரித்த முகத்துடன் உரையாடுகிறாய்
மகிழ்வோடிருப்பது மாதிரி
குறுஞ்செய்தி அனுப்புகிறாய்
எவ்வித எதிர்பார்ப்புமின்றி
அன்பைப் பொழிகிறாய்
உன்னிடம் காண்பிக்க என்னிடம்
இருப்பதெல்லாம்
இயலாமையின் இழிமுகமும்
புறந்தள்ளலின் வெறுமுகமுமே
அன்பிற்கு அருகதையற்றவனை
அன்பினாலேயே பக்குவப்படுத்த
உன்னால் மட்டுந்தான் முடியும்
உன் அன்பைத் தாங்கமுடியவில்லை
கண்ணே!!
****
“தொலைதல் காதலின் படிநிலை”
சுற்றிச் சுழலும் நீல விழிக்குள்
எதனைத் தேடுகிறாய்?
நெற்றிக்கல் பொட்டிற்குக் கீழே
அவ்வளவு சிறிய பகுதிக்குள்
எதை ஒளித்திருக்கிறாய் நீ?
குட்டிக் குட்டி சண்டைகளுக்குப் பின்
சமாதானமாகும் சம்பிரதாயங்களில்
என்ன கிடைக்கிறது உனக்கு?
பெண்ணே!!
நானோர் கொசுவத்திச்சுருள்
நீயோ காட்டுத் தீ
நினைவுப் பொறிகள்
நெருங்க நெருங்க
புகைகிறது எனது உயிர்
பாலை வழித்தடத்தில்
பானை சுமக்கும்
சிறுமி குணம் உனக்கிருந்தால்
இப்படித் தாகத்தில்
தவித்திருக்காது என் காதல் நிலம்
அடைமழைக்கு விடப்பயந்து
அடைத்துவைக்கும் மாணாக்களாய்
என் மனம் பள்ளிக்கூடப்
படிகளென
வழுக்குமோ வாறுமோ?
பொதிசுமக்கும் கழுதையிடம்
வழி கேட்கும் உடையவனாய்
என்னை என்னிடம் கேட்கிறேன்
திருப்பித் தா…
மாறாக
சிலை செதுக்கும் சிற்பியிடம்
உளி கேட்கும் ஓய்தலென
உன்னை உன்னிடம் கேட்கிறேன்
திரும்பி வா…
******