இணைய இதழ்இணைய இதழ் 54சிறுகதைகள்

விரக நீட்சி – தீபா ஸ்ரீதரன்

சிறுகதை | வாசகசாலை

“உன்னைப் பார்க்க முடிவெடுத்த இந்நாள் முப்பது வருடங்களுக்கு முன்னால்” என்று நாட்குறிப்பேட்டில் எழுதிவிட்டு, அதன் கடைசிப் பக்கத்திலிருந்த ஒரு புகைப்படத்தை எடுத்தது சுருக்கம் விழுந்த அவ்விரல்கள். இருக்கைக்கு மேலே வெள்ளி நூல் பந்து ஒன்றை முடிந்து வைத்தது போலிருந்த அந்தக் கொண்டை, கீழ் நோக்கிச் சரிந்தது. மேஜையில் ஒரு சிறிய கருப்பு நிறப் பெட்டி. அதன் பக்கத்திலிருந்த புகைப்படத்தில் சிலை வடித்தாற்போன்ற ஓர் உருவம் இதழ் விரித்து உறைந்திருந்தது. அப்புகைப்படத்திலிருந்த தெற்றுப்பல்லை அவள் விரல்களை வருடிக் கொண்டிருந்தது. அதை ஊடுருவிக்கொண்டிருந்த அந்த வெள்ளை இமைகள் மூடிய அக்கணத்தில், இரு சொட்டுக் கண்ணீர்த்துளிகள், மேடு பள்ளம் படர்ந்த அவள் கன்னத்தில் உருண்டோடியது.

“Je te promets le sel au baiser de ma bouche” (பிரெஞ்சுப் பாடல்) என்று அந்தக் கார் நிலா வெளிச்சத்தைக் கீற்று போட்டு தார் ரோட்டில் பரப்பிக் கொண்டே நகர்ந்து கொண்டிருந்தது. டேஷ் போர்டில் அமர்ந்து சைக்கீயை முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் க்யூப்பிடின் இறக்கை, அந்த நிலா வெளிச்சத்தின் கொஞ்சத்தைக் குவித்து ஓட்டுநரின் பக்கவாட்டு மூஞ்சியில் வீசியது. அவள் தூக்கிக் கட்டியிருந்த கொண்டையிலிருந்து ஒரு கொத்து சாம்பல் நிற முடிகள் சுருண்டு தொங்கி, அவள் நீண்ட வெண் கழுத்தைப் பட்டும் படாமல் உரசிக் கொண்டிருந்தது. அவளின் சரிந்த கன்னத்தின் நுனியில் கூர்மையாய் செதுக்கிய மூக்கு. அதன் மேல் அவளின் ஒற்றைக் கண், பின்புற கண்ணாடிக்கும் முன் சாலைக்கும் இடையே நீந்திக் கொண்டிருந்தது. அவள் அந்த பாடலின் தாள லயத்திற்கேற்றாற்போல் தன் தலையைப் பரவசமாக ஆட்டிக்கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் கார் மெதுவாகத் திரும்பி ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பின் முன்வாசலுக்குள் நுழைந்தது. கும்மிருட்டும் நிசப்தமும் ஒன்றையொன்றை மிஞ்சாமல் கட்டித் தழுவிக்கொண்டிருந்தன. அவள் காரிலிருந்து இறங்கி நடந்தாள். அவளின் ஹீல்ஸ் சத்தம் நிசப்தத்தை இருட்டிலிருந்து பிரித்தது. அவள் நின்றாள். சட்டென்று பரவிய வெளிச்சம் அவளை உள்ளிழுத்துக்கொண்டு மறைந்தது. லிஃப்ட்டிற்குள் பதினான்கை அழுத்திவிட்டு, அவள் முகத்தைக் கண்ணாடியில் பார்த்தாள். படுத்துக்கொண்டிருக்கும் இரண்டு பழுப்பு நிற நெருப்பு சுவாலைகள் போல அவள் கண்கள் பளிச்சிட்டது. அடர்த்தியான புருவம், சொப்பு வாய், அரிசி மாவைக் குழைத்துப் பூசிய வெண் முகம். அவள் புருவத்திலிருந்து விலகித் துருத்திக்கொண்டிருந்த ஒரு முடியை வளைவோடு சேர்த்து விட்டுக்கொண்டாள். ‘டிங்’ என்று லிஃப்ட் நின்றது. சிறிது நேரத்தில் அவள் குளியலறையிலிருந்தாள்.

அந்தக் கண்ணாடிக் கதவில் அவள் பெண் வளைவுகள் நீரை வழிய விட்டுக்கொண்டிருந்தன. அவளின் உயர்ந்த மெலிந்த தேகத்தில் முன்னும் பின்னுமாகக் கேள்விக்குறிகள். அவள் துண்டைக் கட்டிக் கொண்டு வெளியே வந்து லேப்டாப்பைத் திறந்து பார்த்தாள். ‘வில் மீட் யூ டுமாரோ’ என்ற குறுஞ்செய்தி சிரிக்கும் பொம்மைப்படத்துடன். அவளும் கூடவே சிரித்தாள். நெருக்கமாகக் கோர்த்த முல்லைச் சரம் பளிச்சிட்டது. அவள் துண்டை அவிழ்த்துவிட்டுத் துணி அலமாரியைத் திறந்தாள். அவளின் முதுகு அச்சிடாமல் விட்டு வைத்த புத்தகம் போலத் திறந்து கிடந்தது. அவள் கைப்பேசி அழைத்தது. ‘maman’ (அம்மா) என்று ஒளிர்ந்தது. அவள் அதை எடுத்து “ஜூ த் அப் பில் ஹே தூமா” (jet’appe ller ai demain).என்று சொல்லிவிட்டு கைப்பேசியைக் கீழே வைத்தாள். ஒரு வெண்ணிற கவுனுக்குள் நுழைந்து கொண்டு, முன்னறைக்கு வந்து புத்தக அலமாரியிலிருந்து ‘L’amant’ என்ற புத்தகத்தை எடுத்துக் கொண்டு மின்விளக்கை அணைத்தாள். ‘பட்’ என்று கதவைச் சாத்தும் சத்தம்.

அடுத்த நாள் சாயங்காலம், அவள் ராயப்பேட்டாவிலிருந்த ‘அமித்திஸ்ட்’ என்ற கஃபேயில் காத்துக் கொண்டிருந்தாள். சுற்றிலும் மரங்களும் செடிகளும், ஏதோ பூங்காவிற்குள் நுழைந்தது போலிருந்தது. சூரியன் தன் வெளிச்சத்தைப் பிட்டு பிட்டு நிலாவிற்கு ஊட்டிக்கொண்டிருந்தது. மெல்லிய புல்லாங்குழலிசை. அங்கிருந்த காற்றையெல்லாம் அதுதான் களவாடிக்கொண்டு விட்டது போலும். அவள் முகத்தில் பூத்த வியர்வையைத் துடைத்துக் கொண்டேயிருந்தாள்.

“ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ மேம்” என்று ஒருவன் கருப்பு நிற கோட் அணிந்து கொண்டு அவள் அருகில் வந்து நின்றான்.

“ஒன் ஹேசல்நட் லாட்டே ஃபார் நௌ” என்றாள். 

அவன் குறித்துக்கொண்டு விலகிய போது கரும்பச்சை பருத்திப் புடவையில் அவள் வந்து கொண்டிருந்தாள் உண்மையில் மிதந்து கொண்டிருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும். ‘வொயிட் மஸ்க்’ வாசம் அந்த இடத்தைச் சூழ்ந்துகொண்டது.

“போன்ஜூஆ மேடம் மொய்சேல்” (bonjour madem oiselle ) என்று அவள் கை நீட்டினாள்.

“வண்க்கம் தாரிகா” என்று எழுந்தாள் செஃபோரா.

இருவரும் கை குலுக்கிக் கொண்டார்கள். தாரிகாவின் தெற்றுப்பல் துருத்திக்கொண்டு சிரித்தது. அவளின் பஞ்சு மெத்தை உள்ளங்கையில் தன் டியூலிப் விரல்களைத் தவழவிட்டாள் செஃபோரா. “நீ தமிழ் பேசுவியா?” என்று தன் அகலக் கண்களை இன்னும் விரிய விட்டாள் தாரிகா. அவளின் இடது கண் போதை சொருகியது போல கொஞ்சம் இடுங்கி இருந்தது. அந்த போதைக்குள் தன் கண்களைத் தள்ளாட விட்டுக்கொண்டிருந்தாள் செஃபோரா. 

“ஆமா, இங்க ஆறு வருஷ்மா தமிழ் படிக்றேன்” என்று தாரிகாவின் கழுத்திலிருந்த மச்சத்தைப் பார்த்தாள் செஃபோரா.

“கிரேட்” என்று மெனு அட்டையைப் பார்த்தாள் தாரிகா.

“வுட் யூ லைக் டூ ஆர்டர் சம்திங் நௌ” என்று வெயிட்டர் குறுக்கிட்டான்.

“லசான்யா” என்று இருவரின் குரலும் ஒன்றியது. கூடவே புன்னகையும். இருவரும் இன்னும் இரண்டு மூன்று உணவுப்பண்டங்களை ஆர்டர் செய்துவிட்டு, வெயிட்டரை அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.

“உன்னோட பொன்னு எப்டி இர்க்கா?” என்றாள் செஃபோரா.

“யா, நல்லா இருக்கா. இலெவன்த் கிளாஸ் படிக்கறா” என்றாள் தாரிகா.

“ஐ சீ”

“ஒனக்கு எப்படி தமிழ்ல இன்ட்ரஸ்ட் வந்துது?”

“என்னோட எக்ஸ் கேல் ஃபிரண்ட் டமில். நாங்கோ ஃபிரான்ஸ்ல ஒரு கான்ஃபெரன்ஸ்ல மீட் பண்ணோம். அப்றோம் நான் அவளோட இங்க சென்னிக்கு வந்துட்டேன். இங்க டமில் படிக்றேன்”

“ஓ” என்று தன் முன்னந் தலைமுடி ஃபிரின்ஜைக் கோதிவிட்டாள் தாரிகா. அவளின் ஐந்து விரல்களையும் மோதிரங்கள் வளைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்து, அவள் விரல்களைப் பற்றிக்கொண்டு “வாவ் நைஸ் ரிங்ஸ்” என்றாள் செஃபோரா.

அவர்கள் மேஜையின் மேல் நீண்ட படகைப் போலிருந்த இரண்டு தட்டுகளை வைத்தான் சர்வர். கூடவே ஒரு சாலட் பிளேட்டும், பொரித்த கோழியும். இருவரும் ஒரே நேரத்தில் தங்கள் கைபேசியை எடுத்து, உணவைக் கிளிக் செய்து இன்ஸ்டாவில் கதை வடித்துவிட்டனர். பிறகு ஒரே அட்டாக் தான். கொஞ்ச நேரத்துக்கு பேச்சே இல்லை. லசான்யா லாவகமாய் அவர்கள் தொண்டைக்குள் நகர்ந்துகொண்டிருந்தது.

“நீ எவ்ளோ நாளா பம்பில்ல இருக்க?” என்றாள் தாரிகா.

“மூன் மாசம் முன்னாடி என்னோட கேல் ஃபிரண்டோட பிரேக்கப் ஆச்சு. அப்ப லாகின் பண்ணேன்” என்று டிஷ்யூவால் தன் உதட்டின் கீழ் துடைத்துக்கொண்டாள் செஃபோரா. 

தாரிகா அவளைத் தன் ஒற்றைப் புருவத்தை உயர்த்திப் பார்த்தாள்.

“ஐ யம் எ லெஸ்பியன்” என்று மெலிதாகச் சிரித்தாள் செஃபோரா.

“ஐ யம் ஸ்ட்ரெய்ட்” என்று அழுத்திச் சொன்னாள் தாரிகா. 

நான்கு விழிகளும் ஊஞ்சலாடிச் சிரித்துக்கொண்டன. மீண்டும் அமைதி. “எனி டெசர்ட்?” என்ற குரல் அமைதியைக் கலைத்தது.

“க்ரெம் ப்ரூலே”, மெக்சிக்கன் ஹாட் சாக்லேட்”

‘ஹாட் சாக்லேட்’ குரலில் கல்யாணி ராகம் கசிந்தது. “நான் லைக் மைண்டட் பீப்பில மீட் பண்ணத்தான் பம்பில் வந்தேன்” என்றாள் தாரிகா. “காட்சா” என்று சிரித்தாள் செஃபோரா. மீண்டும் காற்று மட்டும் கிசுகிசுத்தது. கூடவே ஹாட் சாக்லேட்டும் மணத்தது. இருவரும் அவரவர் பானத்தில் மூழ்கிப்போயினர். “நான் உன்ன வீட்ல ட்ராப் பண்ட்டுமா?” என்று அமைதியை உடைத்தாள் செஃபோரா. “இல்ல, நான் பாத்துக்கறேன்” என்றாள் தாரிகா. அவர்கள் கடைசி சொட்டு பானத்தை உறிஞ்சியபோது மழைத்துளிகள் சடசடவென விழ ஆரம்பித்தன. இருவரும் வெளியே வந்தனர். தாரிகா அவள் குடையை விரித்தாள். செஃபோரா அவள் மஸ்க்கை நுகர்ந்தபடியே அவளை ஒட்டிக்கொண்டு நடந்தாள். செஃபோரா அவள் கார் கதவை திறந்துவிட்டாள். தாரிகாவும் செஃபோராவும் அந்த நீண்ட சாலையில் காரில் நகர ஆரம்பித்தனர். காருக்குள்ளும் மழை பொழிவதைப் போலவே இருந்தது, செஃபோராவின் பேச்சு. வீடு வந்ததும் தாரிகா காரிலிருந்து இறங்கி மதில் கதவைத் திறந்தாள். கார் உள்ளே நுழைந்தது. வீட்டிற்குள் வெளிச்சம் பரவியது.

அந்த வீட்டுச் சுவர் நெடுக மதுபானி ஓவியங்கள். செஃபோரா அவற்றை ஒவ்வொன்றாகக் கண்களால் வருடிக்கொண்டே வந்தாள். சென்னையில் இப்படி ஒரு வீடா! அந்த வீடு காரைக்குடி செட்டிநாட்டு வீடு போல வடிவமைக்கப்பட்டிருந்தது. முன்னறையை ஒட்டி, வானத்தின் ஒரு துண்டை வீட்டிற்குள் அழைத்துக்கொள்ளும் சிறிய முற்றம். அந்த முற்றத்தின் சிவப்பு டைல்ஸ் மழைத் தண்ணீரில் குளித்துக்கொண்டிருந்தது. நடு வீட்டில் ஒரு பெரிய மர உஞ்சல். துள்ளி குதித்துத் தாவி அதன்மேல் அமர்ந்துகொண்டு செஃபோரா ஊஞ்சலாடத் துவங்கினாள் . தாரிகா அவளுக்கு ஒரு செம்பு டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து விட்டு, அந்த முற்றத்தின் அருகிலிருந்த கல் தூணில் சாய்ந்து கொண்டு மழைத்தூறலில் ஒரு கையை நீட்டிக்கொண்டு நின்றாள், தொங்கவிடப்பபடாத மதுபானி ஓவியமாக.

“ஓன்னோட வீடு ரொம்ப் அழ்கா இர்க்கு” என்றாள் செஃபோரா. இருவரும் கொஞ்ச நேரம் ஊஞ்சலில் அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். முற்றத்தில் மழைத்தண்ணீர் வழிந்து ஓடிக்கொண்டிருந்தது. செஃபோரா, தாரிகாவின் கண்களுக்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்தாள்.

“தாரிகா, நீ வீணா வாசிப்பல்ல?” என்று குதூகலத்துடன் தாரிகாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு கேட்டாள் செஃபோரா.

தாரிகா அவள் வீணையை எடுத்து வந்து, அந்த முற்றத்தின் அருகில் அமர்ந்து கொண்டாள். புடவையைச் சரிசெய்து கொண்டு, “என்னை என்ன செய்தாய் வேங்குழலே, எனக்கும் உனக்கும் ஒரு பகையில்லையே” என்று பாடிக்கொண்டே வீணை வாசித்தாள். மழையைப் போலவே சிம்மேந்திரமத்யமம் ராகமும் அவள் குரலும், செஃபோராவின் மனதை முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொண்டன. வேகமாக ஊஞ்சலாடிக் கொண்டிருந்த செஃபோரா கொஞ்சம் கொஞ்சமாய் வேகத்தைக் குறைத்து, இறுதியில் பாதங்களை ஊன்றி ஊஞ்சலை அசையாமல் பிடித்துக்கொண்டிருந்தாள். அவள் கண்கள் தாரிகாவை விழுங்கின. பாட்டு முடிந்தது. எனினும் அதன் ராகம் அந்த வீட்டில் கசிந்துகொண்டேயிருந்தது. செஃபோரா அவள் அருகில் ஓடி வந்து அமர்ந்து கொண்டாள். மண்வாசமும், மஸ்க்கின் வாசமும் புணர்ந்த ஒரு புது வாசம்.

“ஜூயூலி(Jolie)”

தாரிகா “ம்” என்று புருவத்தை உயர்த்தினாள். “லவ்லி வாய்ஸ்” என்று வீணையின் கம்பியில் ஸ்வரங்களை மீட்டுவது போல தாரிகாவின் விரல்களைத் தீண்டினாள். தாரிகா அவளைப் பார்த்து “உனக்கு கத்துக்கணுமா?” என்றாள். தாரிகாவின் கண்கள் அவளை கரங்கள் நீட்டி அழைப்பது போல இருந்தது செஃபோராவிற்கு. “ப்ச்சச்ச்” என்று இதழ் குவித்து கண் சிமிட்டி தலையை இடது பக்கமும் வலது பக்கமும் ஆட்டினாள் செஃபோரா.

“ஓகே, டைம் ஆச்சு நான் போறேன். மற்படியும் நாம மீட் பண்லாமா?” என்றாள் செஃபோரா. சந்தேகத்துடன் “சரி” என்று தலையசைத்து வைத்தாள் தாரிகா. வீட்டு வாசலில் நின்று கொண்டு “உன்க்கு பொட்டு அழ்கா இருக்கு” என்றாள் செஃபோரா. இருட்டை கிழித்துக்கொண்டு அவள் வீட்டிலிருந்து கார் நகர்ந்து மறைந்தது. செஃபோரா அமர்ந்திருந்த இடத்தில் உட்கார்ந்து ஊஞ்சலில் மெதுவாக தாரிகா ஆடினாள். உடலை சிலிர்த்துக்கொண்டு முற்றத்தை வெறித்தாள். அந்த முற்றத்தில் தூறல் இன்னும் தீராமல் தெறித்துக்கொண்டேயிருந்தது.

அடுத்த ஒரு வாரம் தினமும் அவர்கள் இருவரும் மணிக்கணக்கில் கைப்பேசியில் கதையடித்துக் கொண்டார்கள். அன்று வெள்ளிக்கிழமை. தமிழ் வகுப்பின் கடைசி சில நிமிடங்களில் தன்னை வலிந்து அமர்த்திக்கொண்டிருந்தாள் செஃபோரா.

“அலங்குகுலைக்காந்தள்
நறுந்தா தூதுங்
குறுஞ்சிறைத் தும்பி
பாம்புமிழ் மணியிற்
றோன்றும்”

என்ற குறுந்தொகைப் பாடல் காதில் வலிய நுழைந்து கொண்டிருந்தது. கைப்பேசியை எடுத்து “ஷேல் வீ மீட் டுநைட் அட் மை ப்ளேஸ்?” என்று வாட்சாப்பில் செய்தி அனுப்பினாள். தாரிகாவின் முகத்தை அவள் ப்ரொபைல் படத்தில் பார்த்தாள். சரிந்த அவள் கண்களில் சிவந்த செங்காந்தள் மலர்கள். வில்லாய் வளைந்த புருவங்களுக்கிடையே செஃபோராவை மொத்தமாய் குவித்து வைத்துவிடும் சிவப்பு வண்ண வட்டப் பொட்டு. மூக்கொத்தியைக் கொத்திக்கொண்டிருக்கும் கூரிய மூக்கு. சற்று உப்பிய கன்னம். செஃபோராவின் கண்கள் படபடத்தன.

“ஓகே” என்று பதில் வந்தது. செஃபோரா புன்னகைத்தாள்.

தாரிகா கருப்புப் பருத்திச் சேலை ஒன்றை எடுத்து அதனுள் மடிந்து கொண்டாள். கண்களில் மைக் கரையைக் தீட்டிக்கொண்டாள். “அம்மா, கடைக்கா?” என்று கேட்டுக்கொண்டே திறந்திருந்த அந்த அறைக்குள் நுழைந்தாள் அவளது மகள் அத்விகா.

“இல்லடா, என்னோட பம்பில் ப்ஃரெண்ட் செஃபோராவ பாக்கப் போறேன்”.

“செஃபோரா?” என்று முகத்தை இடது பக்கமாக இழுத்துக்கொண்டு புருவங்களைச் சுருக்கிக்கொண்டு கேட்டாள் அத்விகா.

“ஆமா, ஃப்ரெஞ்ச் உமன்”.

“ம்ம்ம், டின்னர்? 

“ஆமா. உனக்கு சப்பாத்தியும் தாலும் பண்ணி வெச்சுருக்கேன். சாப்டுக்கோ”

“ஓகே, பை. ஹேவ் எ நைஸ் டைம்” என்று தாரிகாவின் கன்னத்தைக் கிள்ளிவிட்டு அத்விகா வெளியே போனாள். தாரிகா அவளருகிலிருந்த சொம்பை எடுத்து மடமடவென தண்ணீர் குடித்தாள். கைப்பேசியை எடுத்து “ஐயம் நாட் கம்மிங்” என்று டைப் செய்து, பின்னர் டிலீட் செய்தாள். கண்ணாடியில் முகத்தைப் பார்த்தாள். பொட்டை சரிசெய்து கொண்டு கிளம்பினாள். செஃபோரா அவளது அடுக்குமாடி குடியிருப்பின் முன்வாயிலருகிலேயே தாரிகாவிற்காகக் காத்துக்கொண்டிருந்தாள். சட்டென்று மஸ்க் மணம் காற்றில் பரவியது. செஃபோரா தாரிகாவைக் கட்டி அணைத்து “வெல்கம்” என்றாள். தாரிகா புன்னகைத்தாள். இருவரும் வீட்டிற்குள் நுழைந்தார்கள். தாரிகாவின் கண்கள் அங்கிருந்த சிவப்பு வண்ண சோஃபாவில் தவழ்ந்தது. “வெரி ஸ்லீக்” என்றாள். அவள் எதைச் சொல்கிறாள் என்ற குழப்பமே இல்லை செஃபோராவுக்கு, அவள் மொத்தமும் தாரிகாவின் கண்களில் சிக்கியிருந்ததால். “நன்றி” என்றாள்.

அந்த கண்ணாடிப் புத்தக அலமாரியில், செஃபோராவின் உருவம் புத்தகங்கள் நடுவே சொருகிய மயிலிறகைப்போல வருடிக்கொண்டிருந்தது. அத்தனையும் ஃப்ரெஞ்ச் நாவல்கள். அதைப் பார்த்துக்கொண்டே மறுபுறம் திரும்பினாள் தாரிகா. அழகான காட்சித் திரள். அங்கிருந்த சன்னலருகே சென்றாள். பெரிய, நீண்ட கண்ணாடி சன்னல். அந்தப் பெருநகரத்தின் ஓட்டங்களைப் பிரதிபலித்து ஸ்தம்பித்திருந்தது. 

“உன்னோட வீட்ல எங்க திரும்பினாலும் கண்ணாடியா இருக்கு. வெரி ட்ரான்ஸ்பரன்ட்” என்று சொல்லிக்கொண்டே, தாரிகா தன் கைப்பேசியை எடுத்து புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டாள். ஹாட் சாக்லேட்டின் மணம் இழுக்க பட்டெனத் திரும்பினாள். “வாவ், இட் ஸ்மெல்ஸ் ஹெவன்லி” என்று கூறிக்கொண்டே சிவப்பு இதயம் வரையப்பட்டிருந்த அந்த வெண்ணிறக்கோப்பையை வாங்கிக்கொண்டாள். “நீ ஏன் ரெண்டாவ்து கல்யாணம் பண்ணிக்லே?” என்றாள் செஃபோரா. ஹாட் சாக்லேட்டை உறிஞ்சிக்கொண்டே, “என்னோட எக்ஸ்பெக்டேஷன் ஃபார் மென் இஸ் வெரி ஹைன்னு அத்விகா அடிக்கடி சொல்லுவா. அதானோன்னு நெனைக்கிறேன்” என்றாள் தாரிகா. செஃபோராவும் தாரிகாவும் சோஃபாவில் அமர்ந்தார்கள்.

“ரிலேஷன்ஷிப்பே இல்லாம, ஈவன் ஹூக்கப் கூட இல்லாம எப்டி பதினன்ஞ்சு வர்ஷம் இருந்த?” என்று புருவத்தை உயர்த்தினாள் செஃபோரா.

“கஷ்டந்தான்” என்று பெருமூச்சு விட்டாள் தாரிகா.

“செக்ஸ்?”

“என் மனசுக்கு நெருக்கமில்லாத ஒரு ஆண்கிட்ட ஐ டோன்ட் ஃபீல் செக்குயர்ட்”

செஃபோரா அவள் மூக்கைப் பிடித்து செல்லமாகக் கிள்ளினாள். தாரிகா தன் பார்வையை அவளிடமிருந்து நீக்கிக்கொண்டாள். அத்விகா, மதுபானி ஓவியம், வீணை, தாரிகாவின் மேடைக் கச்சேரிகள், ‘மேடமே பொவாரே’ (நாவல்), பாரீஸ், என்று பேச்சு எதையெதையோ தொட்டு பியானோவைத் தடவியது. “நீ பியானோ வாசிச்சு நான் கேக்கனும்” என்றாள் தாரிகா. அவளை படுக்கையறைக்கு அழைத்துச்சென்றாள் செஃபோரா. மங்கிய வெளிச்சத்தில் அந்தப் படுக்கை, வெண் அலைகள் உறைந்த கடல் போல நிசப்தமாய் தூங்கிக் கொண்டிருந்தது. செஃபோரா அங்கிருந்த பியானோவில் தன் டியூலிப் விரல்களை வருட விட்டாள். தாரிகா அதுவரை கேட்டிராத இசை. ஏதோ ஒரு ஃபிரெஞ்சுப் பாடல். தாரிகா பியானோ அருகே வந்தாள். செஃபோராவின் கண்கள் தாரிகாவின் கண்களிலிருந்து சற்றும் அகலாமல் பதிந்திருந்தது. அவள் விழிகளில் தீஞ்சுவாலையின் திரளல். தாரிகா தன் கண்களை மூடிக்கொண்டு பியானோவில் தன் உடலைச் சரித்தாள். இசை அடங்கிய அந்நொடியில் செஃபோராவின் சொப்பு அதரங்கள் தாமரையாய் விரிந்திருந்த தாரிகாவின் இதழ்களை வருடிக்கொண்டிருந்தது.

தாரிகாவின் மூடிய கண்கள் மூடிய வண்ணம் இருக்க, செஃபோராவின் விரல்கள் இன்னும் பியானோவிலிருந்து விடுபடாததைப் போல தாரிகாவின் நரம்பு புடைத்த கழுத்தில் நீந்திக்கொண்டிருந்தன. தாரிகா அவள் போதைக் கண்களை மெதுவாகத் திறக்கையில், அவள் முந்தானையைப் பிடித்துக் கொண்டிருந்த பின்னை “பட்” என்று விடுவித்தாள் செஃபோரா. சரிந்த கண்களும், சரிந்த புடவையும் நிலத்தில் படர, தாரிகாவின் இரு மார்பகங்களும் செஃபோராவின் உள்ளங்கைகளில் படர்ந்தது. அவள் கைகளை விலக்காமல் செஃபோராவை முத்தமிட்டுக்கொண்டேயிருந்தாள். பொம்மையைச் சுழட்டுவது போல தாரிகாவைச் சுழட்டிச் சுழட்டி, அந்த வெண் பஞ்சுக் கடலில் படர்த்தினாள் செஃபோரா. கடலின் அலைகளில் தீப்பிழம்புகள். தெறித்த நீர்த் துளியில் வானவில் நிறங்கள், அந்தப் படுக்கையறையின் கண்ணாடி சன்னலில். பியானோ இசையில் லயித்து மடிந்த அந்த அறை இப்பொழுது மூச்சின் இசையில் உயிர்த்துக் கொண்டிருந்தது.

சற்று நேரத்தில் சிரிப்பும் முனகலும் அடங்கியது. செஃபோரா எழுந்து அறைக்கு வெளியே போனாள். தாரிகா கண்களில் தாரை தாரையாக் கண்ணீர் வழிந்தது. அதை அவசரமாகத் துடைத்துக்கொண்டே, புடவையைக் கட்டிக்கொண்டிருந்தாள்.

“தண்ணீ” என்று செஃபோரா நீட்டினாள்.

“தேங்க்ஸ்” என்று வாங்கி ‘மடக் மடக்’கென்று குடித்தாள் தாரிகா. “உன்க்கு புடிச்சுதா?” என்று தாரிகாவின் மலர்ந்த முகத்தில் விழுந்த முடியை விலக்கிவிட்டுக்கொண்டே கேட்டாள் செஃபோரா. 

“ம்ம்ம்” என்று மெலிதாகச் சிரித்தாள் தாரிகா.

செஃபோரா அவளைக் கட்டி அணைத்துக்கொண்டாள். தாரிகா கண்களை மூடி முகத்தைச் சரித்தாள். நிறைவின் பொலிவு அவள் முகத்தில் நிறைந்திருந்தது. சற்று நேரத்தில் “நான் கெளம்பறேன்” என்று வீட்டை விட்டு வெளியேறினாள் தாரிகா.

மூன்று மாதங்கள், தொடர்ச்சியாக எல்லா வெள்ளிக்கிழமைகளும் சனிக்கிழமைகளும், குளியலறை, சமையலறை, சோஃபா என்று வெவ்வேறு கடலில் தவறாமல் வளைந்து மறைந்து கொண்டிருந்தது வானவில். ஒவ்வொரு முறையும் வானவில் மறைந்த கணம் தாரிகாவின் விழிகளில் மழையும் பெய்து அடங்கிக்கொண்டிருந்தது.

செஃபோரா ஒரு நாளைக்கு அனுப்பும் நூறு வாட்சாப் குறுஞ்செய்திகளுக்கும் இரண்டு அல்லது மூன்றே குறுஞ்செய்திகளில் (உண்மையாகவே குறுஞ்செய்திதான் அது) பதில் அனுப்பிவிடுவாள் தாரிகா. அதுவும் இரவு உறங்குவதற்கு முன்பு மட்டும். செஃபோரா தாரிகாவிற்கு ஒவ்வொரு வாரமும் ஒரு பரிசுப் பொருளைத் தந்தாள். தாரிகாவோ வெறுங்கையை மட்டுமே செஃபோராவிற்குத் தந்தாள். செஃபோரா வீட்டில் தொங்கிடும் தாரிகாவின் புகைப்பட எண்ணிக்கையைப் போலவே தாரிகாவின் குற்ற உணர்வுகளும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருந்தது.

அந்த வெள்ளிக்கிழமை, தாரிகா செஃபோராவின் கட்டிலில் அமர்ந்திருந்தாள். செஃபோரா அவளிடம் ஒரு பரிசை நீட்டினாள். தாரிகா அதை வாங்கிப் பிரித்தாள். ‘கான்ட் பெயின்ட்டின்ங்’ (Gond Painting). இரு ஆண் ஃபிளெமிங்கோ பறவைகள், அவற்றின் கழுத்துகள் ஒன்றையொன்று பின்னிக்கொண்டிருந்தன. அதில் ஒரு பறவை தன் வாயை அகலமாகத் திறந்து கொண்டிருந்தது. அதன் வாய்க்குள் பிரபஞ்சத்தின் நட்சத்திரக் கூட்டம். அது விரிந்து அழகிய இயற்கைக்காட்சி. மலையும், மலர்களும், நதியும். ஆனால், அவையனைத்தும் தீயில் மிதந்து கொண்டிருந்தன. அத்தீயின் சுவாலையில் ஒரு பெண் ஃபிளெமிங்கோ. தாரிகா அப்படத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த வாய் பிளந்த ஃபிளெமிங்கோவின் முகம் அகோரமாய் மாறிக்கொண்டிருந்தது அவள் விழித்திரைகளில். அதன் முகம் மாறி மாறி அதில் அவளின் தெற்றுப்பல் தெரிந்தது. தாரிகாவின் தோள்களைக் குலுக்கி ‘தாரிகா, இது புடிச்ருக்கா’ என்றாள் செஃபோரா. “டீட்டெயிலின்ங் இஸ் எக்ஸட்ராடினரி, ஆனா, ஏதோ இயற்கைக்கு மாறா இருக்குல்ல” என்றாள் சுதாரித்துக் கொண்டு. செஃபோரா அவளைப் பார்த்துச் சிரித்தாள். “இங்க இருக்றது எதுவும் இயற்கைக்கு மாற்னது கெட்யாது. அதோட வெளிப்பாட் நம்ம கண்க்கு புது காட்சி அவ்ளோதான்” என்றாள். இருவரும் ஒருவரையொருவர் ஆழமாகப் பார்த்துக்கொண்டனர்.

அன்று நள்ளிரவு. அத்விகா தன் அறையிலிருந்து வெளியே வந்து ஃபிரிட்ஜைத் திறந்தாள். ‘டாப்லரோன் சாக்லெட்’ மஞ்சள் நிறப் பேக்கில் சிவப்பு நிற எழுத்துக்கள், அவள் டையட்டிங் பற்றி எச்சரிப்பதைப் போல. அவள் முகத்தைச் சுருக்கி பூனைக்குட்டி போல வைத்துக்கொண்டு விட்டுச் சிரித்தாள். ஒரு கணம் தாரிகாவின் தெற்றுப்பல்லைப் பார்ப்பது போலவே இருந்தது. சாக்லெட்டை எடுத்துக்கொண்டு ஃபிரிட்ஜை மூடினாள். இருள் படர்ந்தது. கூடவே விசும்பல் சத்தமும். அத்விகா, தாரிகாவின் அறைக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள். இருட்டு. ஏதோவோர் உருவமாகத் தெரிந்தது கைகளால் மூடிய அந்த முகம். அதற்குப் பின்னாலிருந்த சன்னல் திரையின் மெல்லிய இடைவெளியில், சாலையின் தெருவிளக்கு ஒளிக்கோடு போட்டுக்கொண்டிருந்தது.

“அம்மா, என்ன ஆச்சு?” என்று தாரிகாவின் தாடையைப் பிடித்துத் தூக்கினாள் அத்விகா. 

விசும்பல் வெடித்து ஓலமிட்டது. அத்விகா, தாரிகாவின் அருகில் அமர்ந்து அவளைத் தோளோடு அணைத்துக்கொண்டாள். “என்னம்மா” என்றாள் மறுபடியும்.

“செஃபோரா” என்று விசும்பி விட்டு மீண்டும் உடைந்தது அவள் அழுகை.

“மே பி யூ ஆர் எ பைசெக்ஷூவல்” என்றாள் அத்விகா.

“நோ வே, நோ, எனக்கு அவ மேல எந்த எமோஷனல் ஃபீலிங்க்ஸும் இல்ல”

“செக்க்ஷூவல்?”

மீண்டும் அழுகை.

“இட்ஸ் ஆல் ரைட் மாம். ஒன்னும் தப்பில்ல”

“நோ, ஐயம் ஷூஅர் ஐ யம் நாட் பைசெக்க்ஷூவல்”

“அம்மா, தேர் இஸ் சம்திங் கால்ட் எரோட்டிக் ப்லாஸ்டிசிட்டி” (Erotic Plasticity)

“எல்லாம் நம்ள நாமே ஏமாத்திக்கறதுக்கான ஃபேன்சி டெர்மினாலஜி”

“அம்மா, இத சைன்டிஃபிக்கா ப்ரூவ் பண்ணியாச்சு. அப்படியே இல்லனாலும், இந்த மாதிரி அன்போட வெளிப்பாட்டையும் நாம அக்செப்ட் பண்ணிதாம்மா ஆகனும். ம்யூச்சுவலா இருக்கறப்போ, இதுல தப்பு என்ன இருக்கு? உன்னால ஏன் இத ஒத்துக்க முடியல? ஜ திங் இது ஒங்க ஜெனரேஷனுக்கே இருக்கிற மெண்ட்டல் ப்ளாக்மா”

“இல்ல, ஒங்க ஜெனரேஷனுக்கு இருக்குற இன்ஃப்லூயன்ஸ் வல்னெரபிலிட்டியா? நேச்சர்ல இல்லாத, இருக்க முடியாத பையாலஜி” என்று கண்களைத் துடைத்துக்கொண்டாள் தாரிகா.

“எக்சாக்ட்லி..வல்னெரபிலிட்டி, அதான் செக்ஷூஅல் ப்ஃலூயிடிட்டி (Sexual Fluidity)”

“இரு” – என்று வேகமாக ஓடினாள் அத்விகா.

சற்று நேரத்தில் ‘செக்ஷூவல் ப்ஃலூயிடிட்டி’ (Sexual Fluidity, Lisa M.Diamond) என்று ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்து “இதப் படி” என்று தாரிகாவிடம் நீட்டினாள். அத்விகா முகத்தில், அந்த சன்னல் திரையிலிருந்து கீறிய மெல்லிய வெளிச்சக்கீற்றுப் பரவி ஜொலித்தது. “ஒருவேளை அவங்களுக்கு உன் மேல ஜென்யூனாவே அன்பிருந்தா? இது ரொம்ப சென்சிட்டிவ் மா. ஒனக்கு செஃபோராட்ட இன்ட்ரஸ்ட் இல்லன்னா அதபத்தி நீ அவங்ககிட்ட தெளிவா ஓப்பனா பேசிடும்மா. அதான் உங்க ரெண்டு பேருக்கும் நல்லது” – தாய்மை இடம் மாறிய அக்கணம் அவள் முகத்தில் ஒளிர்ந்த இளஞ்சூரியனின் வெளிச்சம் அறை முழுக்க மெலிதாகப் பரவியது. விடியலின் முதல் முயற்சி.

“நத்திங் டு வொரி” என்று சிரித்தாள் அத்விகா. தொடர்ந்து தாரிகாவும். இரு தெற்றுப்பற்களும் ஒன்றையொன்று ரசித்துக்கொண்டன. 

“நாளைக்கு கேம்ப் போக எல்லாம் எடுத்து வெச்சிட்டியா? ரெண்டு வாரம். ஜாக்ரதையா போய்ட்டு வா. ஐ வில் மிஸ் யூ”

“ஐ வில் டேக் கேர் மா”

அடுத்த நாள் இரவு கழிந்தது. தாரிகாவிடமிருந்து செஃபோராவிற்கு ஒரு குறுஞ்செய்தியும் வரவில்லை. செஃபோரா அவளை கைப்பேசியில் அழைத்தாள். தனக்குக் காய்ச்சல் அதிகமாக இருப்பதாகச் சொன்னாள் தாரிகா. அடுத்த ஒரு மணி நேரத்தில் செஃபோரா தாரிகாவின் வீட்டில் இருந்தாள். தன் நண்பன் டாக்டர் சஞ்சய் கோஷலை போன் செய்து தாரிகாவின் வீட்டிற்கு வரச் சொன்னாள்.

டாக்டர் சஞ்சய் உயரமாகவும், விரிந்த தோள்களுடனும் உள்ளே நுழைந்தான். அவன் தோற்றத்திலிருந்து அவனுக்கு நாற்பத்து ஐந்து வயது இருக்கும் என்று ஊகித்துக்கொள்ள முடிந்தது. அவன் சுருள் முடியை வாரிக் கட்டி குதிரைவால் கொண்டை போட்டிருந்தான். செஃபோராவைப் பார்த்ததும் அவன் கண்கள் மூக்குக் கண்ணாடிக்குள் சிரித்தது.

அவன் “லாங்க் டைம் “என்று அவளைக் கட்டிக்கொண்டான். நின்ற இடத்திலிருந்தே, கண்களைச் சுழல விட்டு வீட்டை ஒரு முறை சுற்றிப் பார்த்தான். கருநீல பட்டுப்புடவையில், சிரித்துக்கொண்டே வீணை வாசித்துக்கொண்டிருக்கும் தாரிகாவின் புகைப்படத்தில் அவன் கண்கள் நின்றது. “பியூட்டிஃபுல் ஹௌஸ்” என்றான்.

செஃபோரா அவனைத் தாரிகாவின் படுக்கையறைக்கு அழைத்துக்கொண்டு போனாள். துவண்ட முல்லைக்கொடி போலப் படுத்துக்கொண்டிருந்தாள் தாரிகா. அவர்கள் வந்ததும் எழுந்து உட்கார முயன்றாள். அவன் அவளைப் பரிசோதித்து விட்டு “லுக்ஸ் லைக் வைரல். யூ ஷூட் டேக் கம்ப்ளீட் ரெஸ்ட்” என்று சொல்லிக்கொண்டே சில மருந்துகளை எழுதிக்கொடுத்தான். தாரிகாவும் அவனும் மெல்லியப் புன்னகையைப் பரிமாறிக்கொண்டனர். அவன் செஃபோராவிடம் கொஞ்ச நேரம் பேசிவிட்டுச் சென்றான்.

செஃபோரா மீண்டும் தாரிகாவின் அறைக்குள் வந்தாள். தான் தந்த அந்த பெயிண்ட்டிங் தாரிகாவின் அறை மூலையில் அலட்சியமாக சாய்ந்து கிடப்பதைப் பார்த்தாள். அதையெடுத்து மேஜை மேல் வைத்தாள். தாரிகாவின் அருகில் வந்து அமர்ந்துகொண்டு அவளை தன் மடியில் கிடத்திக்கொண்டாள். தாரிகா கண்களை மூடி உறங்க ஆரம்பித்தாள். மூன்று நாட்கள் செஃபோரா தாரிகாவுடன் அவள் வீட்டிலேயே தங்கி அவளைக் கவனமாகப் பார்த்துக்கொண்டாள். ஆனால், தாரிகாவிற்குக் காய்ச்சல் குறைந்தபாடில்லை. அவள், சஞ்சய் பணியாற்றும் மருத்துவமனையிலேயே அட்மிட் ஆனாள். அந்த வாரம் செஃபோராவிற்கு பல்கலைக்கழகத்தில் முக்கிய வேலையிருந்ததால் அவள் செல்ல வேண்டியிருந்தது. எனினும் அவள் இரவு நேரங்களில் தாரிகாவுடன் மருத்துவமனையிலேயே தங்கினாள். பகல் நேரத்தில் சஞ்சயும் தாரிகாவும் அறிவியல், தத்துவம் என்று நிறையப் பேசிக்கொண்டார்கள். நான்கு நாட்களில் தாரிகா குணமடைந்தாள். வீட்டிற்குச் செல்லத் தயாரானாள். அன்று அவர்கள் மூவரும் இரவு உணவைச் சேர்ந்து உண்டார்கள். சிரிப்பும், பேச்சும் இசையுமாக மூவரும் மகிழ்ச்சியில் திளைத்திருந்து விடைபெற்றுக்கொண்டார்கள். செஃபோரா தாரிகாவை அவள் வீட்டில் கொண்டு விட்டாள். காரில் இருவரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. காரிலிருந்து இறங்கும்போது செஃபோரா தாரிகாவை இதழில் முத்தமிடத் துடித்து அவள் கன்னத்தைப் பற்றி இழுத்தாள். தாரிகா மென்மையாக விலகிக் கொள்ள முயன்றாள். “பார்டன்” (Pardon) என்று சட்டென கையை விலக்கிக்கொண்டாள் செஃபோரா. கார் கண்ணாடியில் அவர்கள் இருவரின் கண்களும் ஆழத்தில் மூழ்கித் தவித்துக் கொண்டிருந்தன.

“நீ இன்னும் டயர்டா இர்க்கேன்னு நென்க்கிறேன். ரெஸ்ட் எட்த்துக்கோ” என்று கதவைத் திறந்து விட்டாள் செஃபோரா.

“தேங்க்ஸ்” என்று அவளை ஆழமாகப் பார்த்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள் தாரிகா. வீட்டின் வாசல் விளக்கு அணைந்தது. கார் கீச்சென்று சத்தமிட்டு வேகமாகப் புறப்பட்டு மறைந்தது.

அடுத்து இரண்டு வாரமாக, வெள்ளி, சனிக்கிழமை சந்திப்புகளை ஏதோ காரணம் சொல்லி தவிர்த்து விட்டாள் தாரிகா. அவர்களின் கைப்பேசி அழைப்பின் நேரத்தை செஃபோராவின் கருவளையம் படர்ந்த கண்கள் துழாவி துழாவிப் பார்த்துக்கொண்டிருந்தன. மணிகள் நிமிடங்களாகி, கடைசி இரண்டு வாரத்தில் நிமிடங்கள் நொடிகளாக இளைத்திருந்தன. செஃபோரா தன் கூந்தலைக் கோதிவிட்டுக்கொண்டு தலையைப் பின்பக்கமாக வளைத்தாள். தாரிகாவின் தெற்றுப்பல் அங்கிருந்த புகைப்படத்திலிருந்து அவளை ஈட்டிபோல தாக்கியது. அவள் தலைமுடியை முடிந்து கொண்டே எழுந்து, கார் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

கடற்கரை மணலில், கடல் அலைகள் அவள் பாதத்தைத் தீண்டாத தூரத்தில், எனினும் அதன் தெறிக்கும் சாரல் கன்னத்தில் ஒட்டும் தூரத்தில் அமர்ந்திருந்தாள் செஃபோரா. அந்திக்கருக்கல். இரவைப் பிரசவிக்க, கால்களை விரித்துக் கிடந்த சூரியக் கதிர்களினூடே வழியும் இரத்தக்கடல் பனிக்குடம் உடைந்த நீரின் அடிவாரத்தில் பரவிக்கொண்டிருந்தது. செஃபோராவின் கலைந்த கூந்தல், சோளக் கதிரை சுட்டுக்கொண்டிருக்கும் அக்கிழவியின் அடுப்பிலிருந்து கிளம்பிய புகைபோல வளைந்து நெளிந்துகொண்டிருந்தது. கடலில் எழும்பிய சில அலைகள் மட்டுமே கரையை வருடிச் சென்றன. மற்றவை கடலுக்குள்ளேயே கரைந்து கொண்டிருந்தன. அன்பு பரஸ்பரமானதென்றாலும், பல நேரங்களில் அதற்கான அங்கீகாரத்தைத் தரும் அதிகாரம் ஒருவரிடத்தில் மட்டுமே குவிந்து விடுகிறதல்லவா, அதைப் போல. கரை சேர்ந்த அலைகளுக்கு அங்கீகாரம் கொடுத்தது கடலா? கரையா? செஃபோரா தன் இரு உள்ளங்கைகளிலும் கடற்கரை மண்ணை பிறாண்டி எடுத்து, பிடி பிடித்து மீண்டும் கீழே உதறிக்கொண்டிருந்தாள். அச்செயலின் வேகம் இதயம் துடிக்கும் அனிச்சைச் செயலுக்கு ஈடுகொடுத்துக்கொண்டிருந்தது. 

அவள் அருகில் வந்த கடலை விற்கும் வண்டியின் கீழே தொங்கவிடப்பட்டிருந்த பெட்ராமாக்ஸ் விளக்கிலிருந்து வந்த ஒளி அவள் முகத்திலும் கழுத்திலும் படர்ந்தது. அவள் தொண்டைக்குழி உள்ளும், புறமும் கடலலைபோல் நகர்ந்தது. புடைத்த நரம்பின் மேல் முத்து முத்தாய் துளிகள். கண்ணீர்த்துளியா, நீர்த்துளியா என்று அவள் விழிகளைப் பார்ப்பதற்குள் அந்தக் கடலை வண்டி நகர்ந்து இருட்டில் தொலையவிட்டது அவள் முகத்தை. அவள் இருட்டை வாரி அணைத்துக்கொண்ட அக்கணம் ஒரு அழுகுரல் கேட்டது. சற்று நேரம் கழித்து செஃபோரா அங்கிருந்து நகர்ந்தாள்.

தாரிகா, தன் படுக்கையில் தலையணையை தன் மார்புக்கு முட்டுக் கொடுத்துக்கொண்டு, இரு கால்களையும் முன்னும் பின்னுமாக ஆட்டிக்கொண்டு, கைப்பேசியில் யாருடனோ சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தாள்.

“அம்மா” என்று கதவு திறந்த அவ்வறைக்குள் வந்த அத்விகா அவள் ஃபோன் காலில் இருப்பதைப் பார்த்து நாக்கைக் கடித்துக்கொண்டு வெளியே போகத் திரும்பினாள்.

“ஹேய், இரு” என்று சொல்லிவிட்டு, “ஜ வில் டாக் டூ யூ லேட்டர்” என்று எழுந்து உட்கார்ந்தாள் தாரிகா.

“நான் கேம்ப் போய்ட்டு வந்து கேக்க மறந்துட்டேன். செஃபோராவோட டிஸ்கஸ் பண்ணியா?”

“இந்த வீக் எண்ட் பேசப்போறேன்” என்று எச்சிலை விழுங்கிக்கொண்டாள் தாரிகா.

அத்விகா அவள் கண்களைப் பார்த்தாள். அவள் மெலிதாகப் புன்னகைத்து, அத்விகா அவளுக்குத் தந்துவிட்டுச் சென்ற புத்தகத்தை அவளிடம் மீண்டும் கொடுத்தாள்.

“படிச்சிட்டேன். இப்போ தெரியுது நீ ஏன் ‘எல்ஜிபிடி’க்கு இவ்ளோ சப்போர்ட் பண்றன்னு. டீப் எமோஷன்ஸ். ஆனாலும் இது இயற்கைக்கு மாறானதுதான்னு நெனைக்கிறேன்” என்றாள் தாரிகா.

“அம்மா, என்னோட ஃபிரண்ட நான் பக்கத்துலருந்து பாத்துருக்கேன்ம்மா. அவ என் கண்ணு முன்னாடி செத்துப் போனாம்மா. இந்த சொசைட்டி, அப்புறம் அவ ஃபேமிலியோட இக்நோரன்ஸ்னால”

தாரிகா தலையசைத்தாள். அவள் கண்கள் கலங்கின. 

“டாக் டூ ஹர் சூன்” என்று நகர்ந்தாள் அத்விகா. தாரிகா அவளையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

செவ்வாய்க்கிழமை செஃபோராவிடமிருந்து அழைப்பு வந்தது.

“ஹேய்” என்றாள் தாரிகா.

“எப்டி இர்க்க?”

“நல்லாயிருக்கேன்”.

“வெள்ளிக்கிழமை மீட் பண்லாமா? என்னோட வீட்ல? “

“இல்ல, அமடோரால”

“ஓகே”

வெள்ளிக்கிழமை, செஃபோரா தரையை முட்டும் கருப்பு வண்ண ஸ்லீவ்லெஸ் டிரஸ் ஒன்றை அணிந்து கொண்டு முகக்கண்ணாடி முன் நின்று தன் மெல்லிய குவிந்த இதழில் சிவப்பு வண்ண லிப்ஸ்ட்டிக்கை தீட்டிக்கொண்டிருந்தாள். அவள் சாம்பல் நிற முடி அவள் முன் தலையிலிருந்து சரிந்து பறவையின் இறகைப்போலக் கன்னத்தை வருடிக்கொண்டிருந்தது. அவள் அதைத் தன் டியூலிப் விரல்களால் வளைத்து பின்னங்காதில் சொருகிக்கொண்டாள். மெல்லியப் புன்னகை கண்ணாடியில் ஜொலித்தது. அவள் ட்ரஸ்ஸிங் டேபிளில் இருந்த ஒரு சிறிய, கைக்கு அடக்கமான கருப்பு நிற டப்பாவை எடுத்து திறந்தாள். சிறிய வெள்ளைக்கல் பதித்த மோதிரம். ‘டப்’ என்று டப்பாவை மூடினாள். 

தாரிகா, நீல வண்ண சுடிதாரில் அந்த கடைக்கு வெளியே இருந்த சோஃபாவில் அமர்ந்திருந்தாள். செஃபோராவைப் பார்த்ததும் அவள் கண்கள் விரிந்தன. “யூ லுக் பியூட்டிஃபுல்” என்றாள். “மெர்சி” என்று புன்னகைத்தாள் செஃபோரா. இருவரும் உள்ளே நுழைந்தார்கள். ஆளுக்கொரு ஜஸ்கீரீம் கப்பை எடுத்துக்கொண்டு மீண்டும் வந்து வெளியே உட்கார்ந்து கொண்டார்கள். இருவரும் ஐஸ்கீரீமை தங்கள் உதட்டுக்குள் உருக்கிக்கொண்டிருந்தார்கள். நான்கு விழிகளும் ஒன்றாய் மூடித் திறந்தன. தொண்டைக்குள்ளிருந்த குளிர்ச்சியும் மனதுக்குள்ளிருந்த வெப்பமும் புணர்ந்து, வியர்த்து, இருவரின் நெற்றியிலும் பூத்தது. மௌனப்பூக்கள்.

“சஞ்சய் பத்தி என்ன நெனைக்கிற?” என்று மௌனப்பூக்களைக் கொய்தாள் தாரிகா.

தலை குனிந்திருந்த சொபோரா, கருப்பு டப்பாவை, இடது உள்ளங்கையில் இறுக்கி மூடி, தன் ட்ரெஸோடு பதித்துக்கொண்டு நிமிர்ந்தாள்.

“ஜான்ங்டி மோன்சூயர்” (gentil monsieur)

தாரிகா புருவம் உயர்த்தினாள். “ஸ்வீட் ஜென்டில்மேன்” என்று தாரிகாவின் இதழ்களைப் பார்த்தாள்.

“ஐ திக் ஐ லவ் ஹிம்” என்று அவை அசைந்தன.

செஃபோராவின் சொப்பு வாய் விரிந்தது. அவள் தாரிகாவின் கண்களைப் பார்த்தாள். அவள் மை கரைக்குள் கட்டுப்பட்டுத் தேங்கி ஜொலித்துக்கொண்டிருந்தத கண்ணீர், செஃபோராவின் கன்னத்தில் கரைபுரண்டு ஓடியது. அவள் அவசரமாக அதைத் துடைத்துக்கொண்டு “ஜே சி கோன்த்தௌ போ து ஆ” (je suis content pour toi) என்றாள். “ஜ மீன் ஐ யம் ஹேப்பி ஃபார் யூ” என்று புன்னகைத்தாள்.

தாரிகா பெருமூச்சு வாங்கிக்கொண்டே” என்ன மன்னிச்சுடு, ஐ நோ” என்று ஆரம்பிப்பதற்குள் “சஞ்சய்ட்ட சொல்லிட்யா” என்றாள் செஃபோரா.

“ம்” என்று தலையாட்டினாள் தாரிகா.

முறிவுகள் அதிக வார்த்தைகளை எடுத்துக்கொள்வதில்லை. வார்த்தைகள் நீண்டு விட்டால் எங்கே அடுத்தவர் மீண்டும் வந்து அந்த இடைவெளிக்குள் அமர்ந்து கொண்டுவிடுவாரோ என்ற எச்சரிக்கை. ‘ம்’ என்று அடுத்தவர் மனதைக் கிழித்து தொங்கவிடும் ஒரு சொல் ஆயுதமே அதற்குப் போதுமானதாகிவிடுகிறது. சில நேரங்களில் சிலருக்கு அந்த அரை மாத்திரை அளவு ஆயுதம் கூட தேவைப்படுவதில்லை. மொழியினும் வலியது மௌனம்.

“போலாமா?” என்றாள் செஃபோரா.

“சஞ்சய் வரான்” என்று வழியைப் பார்த்தாள் தாரிகா.

வானின் நீல வண்ண குர்தியணிந்து, சிரித்துக்கொண்டே அவர்கள் டேபிளுக்கு அருகில் வந்து கொண்டிருந்தான் சஞ்சய். செஃபோரா எழுந்து அவனைக் கட்டிக்கொண்டாள். இருவரும் பார்த்தார்கள். அவள் அவனைப் பார்த்துக் கண்சிமிட்டினாள். அவன் தன் இரு கைகளையும் விரித்து உதட்டைப் பிதுக்கிச் சிரித்தான். தாரிகா எழுந்து அவன் பக்கத்தில் போய் நின்று கொண்டாள். படர்ந்த நீல வானமாய் இருவரின் தோள்களும் இணைந்திருந்தன. 

“போலாமா?” என்றாள் செஃபோரா.

மூவரும் நடந்தார்கள். தாரிகா சஞ்சயுடன் காருக்குள் புதைந்து கொண்டாள். செஃபோரா அவள் காரை அவர்களின் காருக்குப் பின்னால் ஸ்டார்ட் செய்தாள். கார்கள் நகர்ந்தன. இரண்டாய்ப் பிரியும் சாலை வந்தது. தாரிகா திரும்பி செஃபோராவைப் பார்த்தாள்.

“என்னை என்ன செய்தாய் வேங்குழலே, எனக்கும் உனக்கும் ஒரு பகையில்லையே” என்று கருப்பு நிற பருத்தி சேலையில் வீணையை வாசித்துக்கொண்டிருந்த அந்தக் கிழவியின் கண்கள், எதிரே தொங்கிக் கொண்டிருந்த, கழுத்துகள் பின்னிக்கிடந்த அந்தப் ஃபிளெமிங்கோ பறவைகளை உள்வாங்கிக் கொண்டிருந்தன. கண்களுக்குள் மல்கிய கண்ணீரில் வானவில் வளையாமல் சிதறிக்கிடந்தது போன்றதோர் ஒளியியல் மாயை. 

*****

biodeepa5467@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button