கட்டுரைகள்
Trending

வியல் என்பது பெருங்காடு

காயத்ரி (மனநல ஆலோசகர்)

மனிதன் என்றுமே ஒரு வேட்டைக்காரன்தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதன் பின்தான் விவசாயம் செய்து நாகரீக வளர்ச்சி அடைந்தவனாக மாறுகிறான். அதன் பின் அவனது வளர்ச்சி அவனை சிந்திக்கத் தெரிந்தவனாக மாற்றுகிறது. அந்த சிந்தனை மூலம் தன்னை மீறி ஒரு சக்தி இருப்பதாக அவன் நம்பத் தொடங்குகிறான். அப்படி அவனுக்குத் தேவையான அளப்பரிய சக்தியை அடைய அவன் பார்த்த, உணர்ந்த இயற்கையையும், மிருகங்களையும் இணைத்து கடவுளாக வழிபடவும் செய்கிறான். அந்த வழிபடும் முறையை அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேதங்களாக மாற்றுகிறான். அப்படி மாற்றும் பொழுது விலங்குகளுக்கு மனித உருவம் கொடுத்து கடவுளாக வேதத்தில் ஒரு முத்திரை பதிக்கிறான். ‘செத்’ என்ற கிரேக்க கடவுளுக்கு மிருகத்தின் தலையும், மனித உடலும் இருக்கும். விநாயகருக்கு யானைத் தலையும், மனித உடலும், நரசிம்மருக்கு சிங்கத் தலையும், மனித உடலும் இருக்கும். இப்படி கடவுளுக்கு என்று ஒரு உருவ வழிபாடு உருவாக்கப்பட்டது. அதன் பின் தான் செய்த பாவங்கள், கர்மாக்கள் நீங்க மிருகங்களைக் கடவுள் பெயரில் பலி கொடுக்கவும் செய்தான். இப்படியாக என்னதான் படிப்பு, அறிவியல், தத்துவம், சித்தாந்தம் என்றெல்லாம் சொல்லி வெளியே திரிந்தாலும் அவனுக்குள் ஒரு வேட்டைக்காரன் இருந்து கொண்டேதான் இருக்கிறான்.

இதை இப்படியே விட்டால் மனிதன் மிருக இனத்தை அழித்து விடுவான் என்று சொல்லி, ‘1901 ECO TOURISM’ என்கிற அமைப்பு மூலம் காடுகளைப் பாதுகாப்பது என முடிவு எடுத்தார்கள். ஆனால் இது அப்படியே கொஞ்சம் தலைகீழாக மாற ஆரம்பித்து விட்டது. காடுகளை சுற்றுலாத் தளம் போல் பார்க்க வரலாம் எனச் சொன்ன போது மனிதன் காட்டை என்ன மாதிரி குப்பை ஆக்க முடியுமோ அந்த அளவுக்கு பண்ண ஆரம்பித்து விட்டான். இதில் விலங்குகளை துன்புறுத்திப் பார்க்கவும் செய்தான். இதைத் தடுக்க 1960ல் Prevention of Cruelty to Animals Act (PCA) கொண்டு வந்து வனவிலங்குகளைத் துன்புறுத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் எனவும் அரசாங்கம் சொன்னது. ஆனாலும் மனிதனது ஆட்டம் இன்று வரை நிற்கவில்லை. இத்தனைக்கும் ஆயிரக்கணக்கான ANIMAL WELFARE அமைப்புகள் இருக்கின்றன. 2/3 பங்கு வீட்டில் நாம் PET ANIMALS வேறு வளர்க்கிறோம். எத்தனையோ விலங்கு பூங்காக்கள், மிருகக்காட்சி சாலைகள் இருந்தும் 50% வழக்குகள் பதிவாகிக் கொண்டுதான் இருக்கின்றன.

இங்கு நாம் என்ன செய்கிறோம் என்றால்… நாம் என்ன நினைத்து விலங்குகளுக்கு ஒன்றைச் செய்கிறோமோ அதைத்தான் விலங்குகளும் அப்படியே உணர்கின்றன என தப்புக் கணக்கு போடுகிறோம். அந்தத் தப்பு கணக்கில் தான் நமக்கும், விலங்குகளுக்கும் பிரச்சினை ஆரம்பம் ஆகிறது.

இப்பொழுது அனைவரும் சுற்றுலா என சொல்லிக் கொண்டு காட்டுக்குள் போய் புகைப்படம் எடுத்துப் போடுவது, மிருகங்களுடன் செல்ஃபி எடுப்பது, மிருகங்கள் செய்யும் விசயங்களை புகைப்படம் & காணொளிகள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது, என நாம் செய்யும் சாகசங்களைல் விளம்பரப்படுத்த விரும்புகிறோம். ஆனா விலங்குகள் வசிக்கும் இடத்தை எந்த அளவிற்கு குப்பையாக்குவது, மதுவருந்தி விட்டு மது பாட்டில்களை வெளியே எறிந்து விடுவது, பபுள்கம், பிளாஸ்டிக் பைகள் என அந்தக் காட்டை விலங்குகள் மற்றும் பறவைகளால் உபயோகிக்கவே முடியாத அளவிற்கு செய்து விடுகிறோம். இதன் விளைவாகப் பல விலங்குகள், பறவைகளை எந்த அளவுக்கு அழிக்க முடியுமோ அந்த அளவுக்கு அழித்து விடவும் செய்கிறோம். அதன் பின் புகைப்படம் போட்டு அதையும் விளம்பரம் செய்ய ஆரம்பித்து விட்டோம்.

இவை அனைத்தும் கடந்து ஏன் விலங்குகளை கொலை செய்கிறார்கள் எனப் பார்க்கும் போது பல பதில்கள் கிடைக்கின்றன. ஒரு பக்கம் பிசினஸ் என சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் உளவியல் ரீதியாக என்ன காரணங்கள் இருக்கும் என ஆராய்ச்சி செய்கிறார்கள். இதற்காக
அமெரிக்காவில் உள்ள Colorado Department of Correction என்ற அமைப்பு ஒரு சர்வே எடுக்கிறது. யார் எல்லாம் விலங்குகளை அதிகமாகக் கொடுமை படுத்துகிறார்கள் என்பதுதான் அதன் சாராம்சம். 38% Child abuse செய்பவர்களும், 68% பெண்களைக் கற்பழித்த கிரிமினல்களும் தான் அதிகமாக விலங்குகளைத் துன்புறுத்தி, கொலை செய்பவர்களாக இருக்கிறார்கள் என இந்த அமைப்பு நமக்கு ஒரு பதிலை கொடுக்கிறது.

ஏன் இவர்கள் கிரிமினல் ஆக மாறி வாயில்லா பிராணிகளை கொடுமை செய்கிறார்கள் எனத் தெரிகிறது. ஆனால், அதை மீறித் தொடர்ந்து அந்தக் குற்றத்தை செய்யக் காரணம் என்ன எனப் பார்க்கும் போது FBI அமைப்பு மூலம் நமக்கு ஒரு பதில் கிடைக்கிறது.
Federal Bureau of investigation (FBI) சொல்ல வரும் விசயம் என்னவென்றால், “இதற்கெல்லாம் பெரிதாகக் காரணங்கள் எதுவும் இல்லை. ஒரு ஜாலிக்காக செய்கிறார்கள். ஒரு உயிரின் வலியை சந்தோசமாகப் பார்க்கிறார்கள். அதனால் தொடர்ந்து இந்தக் குற்றத்தை செய்பவர்களாக மாறியும் வருகின்றனர். அவர்களுக்கு அந்தக் குற்றத்தை விட மனம் வரவில்லை” என்பதுதான். இப்படியாக ஒவ்வொரு அமைப்பும் மனிதர்களின் வேட்டை குணத்தை நேர்மையாக சர்வே எடுத்து அதை உளவியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் பதில் சொல்கின்றன.

இந்த இடத்தில்தான் மக்களாகிய நாம் Positive Discipline பற்றிப் பேசிக்கொண்டும் இருக்கிறோம். காடுகளை சுத்தமாக வைக்கவும், மிருகங்களைப் பாதுகாக்கவும் உரக்க குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் மனிதன் வேட்டைக்காரன்தான். அந்த குணம் இருக்கும் வரை காட்டு மிராண்டித் தனம் அவனை விட்டுப் போகாது. கண் முன் மனிதன் நம்பிய, அவன் உருவாக்கிய, கடவுளாக மாற்றிய இயற்கை மற்றும் மிருகங்களை அவன் அழிக்கவும் தொடங்கி விட்டான்.

அதை மீறி நம் கண் முன்னால் இருக்கும் மிருகங்கள் நிம்மதியாக இருக்க நாம் உதவி செய்வது நம் கடமை என நமக்கு நாமே உறுதி மொழி எடுத்தால் மட்டுமே ஓரளவுக்கு மிருகவதையைத் தடுக்க முடியும். எழுத்தாளர் ஜெயமோகன் சொல்வது போல, “எறும்பு இருக்கும் இடத்தில் மனிதனும் வாழ்கிறான்.” என்ற உண்மையை ஆழமாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு அடுத்து அரசாங்கம், விலங்கு அமைப்புகள் என எல்லாரும் அவரவர் பங்குக்கு சமூகப் பொறுப்புடன் உதவி செய்யும்போது மிருகங்களும் நிம்மதியாக இந்த பூமியில் வாழ முடியும். இந்த பூமி அனைவருக்குமான பொது சொத்து. இதை மனிதர்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button