இன்னைக்கு அடிச்ச வெயில் மாதிரி என் வாழ்நாள்ள ஒரு நாளும் பாத்ததில்ல…கண்டிப்பா இன்னைக்கு எறங்கிருங்க…எந்த வழியா வருங்கன்னுதான் தெரியல…கால் தடம் பதியற அளவு கூட மண்ணுல ஈரம் இல்ல…ஆனாலும் தண்ணி தேடி வருதுங்க…
எந்தப் பக்கம் சத்தம் வந்தாலும் எந்திரிச்சு பயப்படாம, சத்தம் வந்த தெச ஓடு…எதிர் முட்டு வாங்கி யானைகிட்ட பொழச்சவன் எவனும் இல்ல…ஒரே முட்டுல போயிச் சேர்ந்தா கோடி புண்ணியம்…இழுத்துட்டு கிடந்தா விடாதாமே…சொட்டு உசுரு கூட மிச்சம் வைக்காமே, மிதிச்சே எடுக்குமாமே…முகத்த மட்டும் எப்படியாவது மிதிக்காம பாத்துக்கணும்…உசுரு போற நேரத்தில மொகமாவது,மயிராவது…எங்க மிதிக்குமுன்னு யாருக்குத் தெரியும்…ஒரு வேளை முகம் அடையாளம் தெரியலன்னா… ஆதார் அட்டை ஜோப்புல இருக்கில்ல…கண்டுபிடிச்சிருவாங்க…
எப்படியும் இன்று யானை மிதித்தால், காலையில் அடையாளம் காணப்பட்டு,அரசு மருத்துவமனயில் அறுத்துப் போடப்படும் உடல், நாளை இரவுக்குள் மண்ணில் புதைக்கப் பட்டுவிடும். நாளை மறுநாள் புதன்கிழமை. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது.கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்துக்கு விடுப்பு எடுக்க வாய்ப்பில்லாத நாள். கண்டிப்பாக வருவார். வருபவர் யானை மிதித்துத்தான் உயிர் போயிருக்கிறது என்பதை மாவட்ட வருவாய்த்துறைக்கு தகவல் அனுப்பி, அவர்கள் வந்து அறுத்துப்போட்ட உடலை ஆராய்ந்து சான்று கொடுத்தவுடன், இரண்டு லட்ச ரூபாய்க்கான காசோலை கையில் கிடைத்து விடும்.
பாவம் ராசாத்தி.கட்டிய பாவத்திற்கு அதை வாங்கிக் கொண்டு எங்கெல்லாம் அலையப் போகிறாளோ…நூறு நாள் வேலைப் பணம் வருவதற்காக புதிதாகத் திறந்த வங்கிக் கணக்குப் புத்தகம், கதவுக்கு மேலே கரையான் அரிக்காத, தடை செய்யப்பட்ட லேசு பாலிதீன் பையில் சுற்றப்பட்டு, ஓட்டு மூங்கிலில் சொருகி வைக்கப் பட்டிருக்கிறது. கால் எட்டாதே…பித்தளைக் குடத்தைக் குப்புறப் போட்டு ஏறினால் எட்டப் போகிறது.
பெற்ற மகள் எதற்கு வாழாவெட்டியாக வீட்டில் இருக்கிறாள், அவள் பார்த்துக் கொள்வாள். கஷ்டத்திலும் பத்தாவது வரை எதற்கு படிக்க வைத்தோம்.இது மாதிரி காலங்களில் அரசு தரும் மானியங்களையும்,உதவிகளையும் அதிகாரிகளிடம் கெஞ்சிக்கூத்தாடி வாங்கத்தானே…வாங்கி விடுவாள்.ஏற்கனவே திருமணத்திற்கு தாலிக்குத் தங்கமும், பணமும், கமிசன் போக மீதி வாங்கிய அனுபவம் அவளுக்கு இருக்கிறது.
இன்னும் எந்த சத்தமும் கேட்கவில்லை.மணி எவ்வளவு இருக்கும்.கண்டிப்பாக இன்று யானை வருமா?…
அந்த மருமக நாயி என்ன வார்த்தை கேட்டுப் புட்டான்…சண்டாளப் பாவி…இத்தன நாலு அவன் கையில வாங்கித் திண்ணத நெனைச்சா வாந்தி வருது.கந்து வட்டிக்கெல்லாம் வாங்கிக் கொடுத்தேனே…நன்றி கெட்ட ஜென்மம். ரேசன் அரிசியத் திண்ணு நாக்கு செத்துப் போச்சுன்னு ஒரு மூட்டை பொன்னி அரிசி கேட்டேன்…அது கூடவா இல்லன்னு சொன்னே…காலையில பார்ரா… நான் லட்சாதிபதி…
என்ன…
உசுரு இருக்காது…பரவாயில்ல… உன் மாமனாரு பொணமா ஆனாலும்,லட்சாதிபதி பொணண்டா…மறக்காம பொன்னி அரிசி வாங்கி வாயில போடுங்க…
யாரு யாருக்கு கொடுக்கனும்முனு எல்லாத்தையும் அந்த ரெட்டவரி நோட்டுல எழுதி வெச்சிருக்கேன்.கொடுத்தது போக மீதி ஒரு லட்சம் இருக்கும். எடுத்துட்டுப் போயி இந்த வாட்டியாவது ஒழுங்காப் பொழைக்கச் சொல்லு ராசாத்தி
நம்ம சாதில மாமியாருக்கு நகை போடாம எவன்டி பொண்ணு கொடுத்தான்? எதோ புள்ளை ஒத்தக் காலு இழுத்து நடக்குதுன்னு கொடுத்தேன். அந்த நன்றிக்கடன் வேண்டாம். நெனச்சிப் பார்க்கணும்.
இந்த ஈனப் பையனுக்குக் கொடுத்ததுக்கு…முத்துவேல் மச்சான் சொன்ன மாதிரி, மொண்டின்னு எழுதிப் போட்டிருந்தா கவர்மெண்டு வேலை கூட கெடச்சிருக்கும்.அவன் அவ்வளவு சொல்லியும் அறிவில்லாம விட்டுட்டேன். நம்ம புள்ளைய நாமலே பழிக்கலாமான்னுதானே விட்டேன்…இருந்தாலும் எழுதிப் போட்டிருந்தா, இன்னைக்கு யானைக்காக காத்திருக்க வேண்டியதிருந்திருக்காது.போனாப் போகுது விடு.நல்லதுக்கு காலம் இல்ல.
என்ன…வம்சத்த கண்ணுல பாத்திட்டுப் போகணும்முன்னுதா இவ்வளவு நாளு அமைதியா இருந்தேன். இவன் தான் மாசத்துல இருபது நாளு இங்க கொண்டு வந்து விட்டுட்டுப் போயிர்ரானே…அப்புறம் எங்கிருந்து தழைக்கும்.
சல சலவென சத்தம் கேட்க, எண்ணங்களை கட்டுப் படுத்தி சுற்றும் முற்றும் பார்த்தான் அன்னாசி. நிலவின் வெளிச்சத்தில் எதுவும் மட்டுப்படவில்லை. காற்றின் வேகம் அதிகமாகவே இருந்தது. கண்களை மூடிப் படுத்துக் கொண்டான்.கன்னத்தின் அச்சு அவன் படுத்துக் கொண்டிருக்கும் ஆற்று மணலில் பதிந்தது. மணல் துகள்கள் மூக்கில் செல்லாதபடி மெதுவாக சுவாசித்தான்.
ஆட்கள் ஏதோ பேசிக் கொண்டு அங்குமிங்கும் ஓடுவது போல இருந்தது. திருடர்கள் என்று நினைத்துக் கொண்டான். எழுந்து துரத்தலாம் என்று நினைக்கும்போது சத்தம் குறைந்திருந்தது.
தலையை மெல்லத் தூக்கி பார்த்தான். ஆற்றைச் சுற்றியும் முட்புதர்களாக இருந்தது. தூரத்தில் ஒரு விளக்கின் ஒளி தெரிந்தது.எழுந்து அமர்ந்து கொண்டான்.
இந்த வருஷம் தாத்தாவானா …பூவோடு எடுக்கறதா வேண்டியிருக்கோமே…வேண்டுதல் தப்புனா குடும்பத்துக்கு ஆவாது…என்ன பண்ண…பொதைச்சதுக்கு அப்புறம் சாமி தோண்டியா வேண்டுதல் கேட்கப் போகுது…ஒரு நூறு ரூபாய் ஆத்தாளுக்கு உண்டியல்ல போடச் சொல்லி ரெட்டவரி நோட்டுல எழுதிருக்கலாமே…ஒரு லட்ச ரூபாய் கைக்கு வந்தா… ராசாத்தி ஒரு நூறு ருபாய் கூடவா உண்டியல்ல போடாம விட்டுருவா……இந்தக் காலத்துல காசு கைக்கு வந்தா ஆளுக எப்படி மாறுவாங்கன்னு சொல்ல முடியாது.
ச்…ராசாத்தி அப்படி இல்ல, கண்டிப்பா போடுவா…
லேசாகக் குளிர ஆரம்பித்தது.எழுந்து நின்றான். கால்கள் விரைத்திருந்தது. கால்களை உதறியவாறே சற்று தூரம் நடந்தான். கால்களை முழுவதும் தரையில் ஊன்ற முடியவில்லை.
இவனுக்கு நகையெல்லாம் போட மாட்டேன்னு சொல்லிதானே பொண்ணு கொடுத்தேன்…இப்ப எதுக்கு கேக்குறான்? பெரிய இவன்…தொழில் பண்றானாம்…இப்படி உட்கார்ந்து தொழில் பண்றேன்னு போயி எத்தன பேரு நாசமாப் போயிருக்காங்க…சொன்னா மண்டையில ஏறவே ஏறாது.புள்ளையக் கொடுத்த கடனுக்கு நம்மால கடைசியா இவ்வளவுதான் பண்ண முடியும்.
மீண்டும் சலசலவென சத்தம் கேட்கவே, மீண்டும் படுத்துக் கொண்டான். ஆட்கள் மீண்டும் அங்குமிங்கும் ஓடுவது போலத் தெரிந்தது. இம்முறை துரத்தலாம் என்று நினைக்கும் போது,சத்தம் அவனை நோக்கி வருவது போல இருந்தது. தலையைத் தூக்கிப் பார்த்தான். ‘படார்’ என்ற சத்தத்துடன் எதோ காதை உரசிக் கொண்டு போவது போல இருந்தது. எழுந்து சத்தம் வந்த திசை நோக்கி ஓடினான்.துப்பாக்கியுடன் சிலர் இருளில் ஓடினார்கள். அவர்களைத் துரத்திக் கொண்டே ஓடினான்.
“ஏண்டா…எவன்டா அது…பாரஸ்ட்காரனுக்குத் தெரிஞ்சுது… உள்ள புடிச்சிப் போட்ருவானுக…துப்பாக்கி கொண்டு வந்து யானை சுடற அளவுக்குத் தைரியம் வந்திருச்சா…”
விறைத்திருந்த கால்கள் மண்ணில் பதிவது தெரியாமல் துரத்திக்கொண்டு ஓடினான். துப்பாக்கியுடன் வந்தவர்கள் ஆற்றங்கரையைச் சூழ்ந்திருந்த காட்டின் இருளில் ஓடி மறுபுறமிருந்த சாமியாரின் மடத்தை அடைந்து மறைந்தார்கள்.
முடிந்த வரை ஓடி மூச்சிரைக்க நின்றான். அளவுக்கு மீறிய தாகம் தொண்டையை அடைத்தது.திரும்பி ஆற்றங்கரைக்கு நடந்தான்.
கால்களில் ரத்த ஓட்டம் சீராகியிருந்தது. முட்கள் ஏறுவதை உணர்ந்தான். மெல்ல நின்று அதனைக் களைந்து எரிந்துவிட்டு, நொண்டி நொண்டி இருளில் ஒற்றைக்காலில் நடந்து வந்தான்.
காலில் ஏதோ பந்து போலத் தட்டுப் பட்டது. மிதிப்பதற்கு இதமாக இருந்ததால் கால்களை அதன் மீது வைத்து அழுத்தி ஏறி நின்றான்.
ஏறி நின்ற மறுகணம், அது ‘படார்’ என்று வானைப் பிளக்கும் சத்தத்தில் வெடிக்க, கால்கள் பிளந்து கீழே விழுந்தான். கால்களில் ரத்தம் பீறிட்டுக்கொண்டு வந்தது. வலி தாங்காமல் துடித்தான்.
அன்னாசியின் மருமகன், நாளை தான் வைத்த வெடிமருந்தால் செய்யப்பட்ட பந்தைக் கடித்து விழும் காட்டுப் பன்னியின், ‘வார்’ என அழைக்கப்படும் தோலோடு ஒட்டிய கொழுப்புச் சதையை, மூல வியாதிக்கு மருந்து நிமித்தம் சாப்பிடத் தயாராக, வாயில் எச்சில் ஒழுக உறங்கிக் கொண்டிருந்தான்.