இணைய இதழ்இணைய இதழ் 100நேர்காணல்கள்

“இது நாவல்களின் காலம்” – எழுத்தாளர் இரா.முருகன்

நேர்காணல் | வாசகசாலை

ஒரு கவிஞராக இலக்கிய உலகில் நுழைந்து பின் சிறுகதை எழுத்தாளராகவும் நாவலாசிரியராகவும் பரிணமித்தவர் எழுத்தாளர் இரா.முருகன் அவர்கள். இதுவரை இருநூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். நாவல்களில்  குறுநாவல்கள் நாவல்கள் பெருநாவல்கள் எனவும் கவிதையில் வெண்பா மற்றும் நவீனகவிதைகளும், பத்தி எழுத்துக்களில் தன்னனுபவம், துறைசார் கட்டுரைகள், திறனாய்வுக் கட்டுரைகள் ஆகியவைகளும் எழுதியுள்ளார். அரசூர் வம்சம் நாவல் தொடர் தமிழ் இலக்கியத்தில் மாய எதார்த்த வகைப் புனைவுக்கான குறிப்பிடத்தக்க ஒன்று. இவை தவிர  திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் அவருடைய பெருநாவலான மிளகு வெளியாகியுள்ளது. அவருடைய உரைகள் எப்பொழுதும் சுவாரசியமானவை. இலக்கியம் இசை பயணம் என கலந்து செல்பவை. இனி, அவருடனான உரையாடல்….

1) தகவல் தொழில் நுட்ப துறையின் பணியாளர்கள் மீது ஒரு புரிதல் உண்டானது மிகச் சமீபத்தில்தான். அதுவரை அவர்கள் மீது ஒரு விலக்கத்தைத்தான் ஊடகங்கள் /திரைப்படங்கள் பதிவு செய்திருந்தன. பொதுமக்களிடமும் அவர்கள் மீது அமெரிக்க மாப்பிள்ளை போன்ற ஏளனமும், மனதளவில் ஒருவித எதிர்ப்பும் இருந்தன.  இன்று அந்த சூழல் மாறியுள்ளது.  உங்களுடைய ஆரம்பகால கதைகளில் (உதாரணமாக சிலிக்கான் வாசல்) அது உருவாக்கும் மன அழுத்தம் அங்கு நிகழும் மனித உரிமை மீறல் குறித்து எழுதியிருக்கிறீர்கள். ஆனால் அது வந்த காலத்தில் அது பொதுச்சமூகத்துக்கான எதிர்நிலை வாதம்தான்.  அன்றைக்கு அதை எழுத எண்ணியது ஏன்?

நான் சிறுகதை எழுத வந்ததும் இந்தியாவில் ஐ.டி ஒரு துறையாக அசுர வேகத்தில் வளர ஆரம்பித்ததும் கிட்டத்தட்ட  ஓரே காலத்தில்தான். 1984 ல் நான் கவிதையிலிருந்து சிறுகதைக்கு வந்தேன்.  1984 ன் இறுதியில்தான்  ராஜீவ்காந்தியும் கணினியாக்கமும் -ஐடியும்  முறையே இந்திய அரசிலும் இந்தியக் கல்வி, தொழில், நிர்வாகத்திலும் புது வரவாக நுழைந்து ஒரு மாபெரும் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது நிகழ்ந்தது.

ஐடி வந்தவுடனே அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. ஏன்னு கேட்டீங்கன்னா  அதில் வருகிற சம்பளம். அது வரைக்கும் பேங்க் ல் வர உத்யோகம்தான் ரொம்ப முக்கியமா இருந்தது. பேங்க் மாப்பிள்ளைதான் வேணும்னு எல்லாருமே பேசிக்கொண்டிருந்த காலம்.  அப்பொழுது பேங்க் சம்பளம் தான் பெரிய விஷயம். ஆனால் ஐடி வந்த பிறகு அதைவிட நாலு மடங்கு பெரிய சம்பளம்லாம் கிடைக்க ஆரம்பித்தது. நான் பேங்க் கிளை அதிகாரியாக ஏழெட்டு வருடம் இருந்து, வங்கி கணினித்துறையில் அடுத்த பதினைந்து வருடம் கணினி மென்பொருள் வடிவமைத்து உருவாக்கும்  டெக்னோ பேங்கராக ஐ.டிக்கு வந்தவன். வங்கி கணினித்துறை போதுமென்று தனியார் ஐடி பன்னாட்டு நிறுவனப் பணிக்கு மாறினேன். அப்பொழுது  1984 லிருந்து 1999 ல் டாட்காம் bust ஆகும் வரைக்குமான பதினைந்து வருடங்கள் அப்படியே  ஏறுமுகமாகவே போனது. அதுவரை அந்த துறைக்கு வெளியில் இருந்தவர்கள் பலர்  அதன் மீதான பொறாமையில் நிறைய கற்பனை செய்துகொண்டு பலவிதமாக  பேசிக்கொண்டும் இருந்தனர். அதை அவ்வாறே சிலபேர் எழுதவும் செய்தார்கள். அதன் விளைவாக பொது மக்களிடம் ஒரு தவறான கருத்தே சென்று சேர்ந்தது. அதுவரை நான் எழுதிய கதைகள் எல்லாமுமே ஐ.டி  வராத கதைகள்தான். என் எழுத்து தனியாகவும் நான் பணிபுரியும் துறை தனியாகவும்தான் இருந்தது. அதற்குப் பிறகுதான் ஐ.டி-யைப் பற்றியும் எழுதத் துவங்கினேன். இந்தத் துறை குறித்து, முக்கியமாக ஐடி ஊழியர்கள் பற்றி, அவர்களுடைய work-life balance பிரச்சனைகள் பற்றி, ஐ.டி துறையில் இருக்கிறவனாக சரியான புரிதலைத் தருவது என் நோக்கமாக இருந்தது.

அந்தகாலங்களில் குறிப்பாக  பிறதுறைகளில் ஒய்வு வயது என்பது வேறு. ஆனால்  ஐ.டி கணினித் துறைப் பணியில் நாற்பது வயது எய்துகிறவர்களுக்கு இனி அநேகமாகச் சந்திக்க வேண்டிய தேக்க நிலை, பணி நிரந்தரம் குறித்த கவலைகள் ஏற்பட்டு   ஒரு கலக்கத்தை தந்துவிடும். நம்மை எல்லாரும் முந்திச் சென்று விடுவார்களோ என்று தோன்றும். அதுவரை ஏறுமுகமாக இருந்த வாழ்க்கை சற்று தடுமாறும். இதன்பின்னர் நான் என்னவாகப் போகிறேன் என்கிற குழப்பமும் வந்து சேர்ந்திருக்கும். அது ஒரு இருத்தலியல் பிரச்சனையாக போய் நின்றுவிடும் சாத்தியமும் உண்டு. கடும் வேலையை வாங்கும். 24 மணிநேரமும் வேலை செய்ய வேண்டிய நிலை இருந்தது அதன் deadlines மிகவும் விசித்திரமாக இருக்கும். பத்துநாள் வேலைய இன்னும் நாலுபேரை சேர்த்து வச்சு நாலுநாள்ல முடிங்க என்று சொல்லுவாங்க..  இதை பற்றி பேசாமல் அங்கு ஆண்களும் பெண்களும் ஒண்ணா சுத்தறாங்க. ஒழுக்கக் கேடான விஷயங்கள் நடக்கும் என்றெல்லாம் இஷ்டத்துக்கு கற்பனை செய்து, சொல்லி எழுதப்பட்டிருந்த காலங்களில்,   என் கதைகளில் சிலிக்கான் வாசலிலும் லாசரஸ் நாற்பது, இளைப்பாறுதல் போன்ற கதைகளிலும் ஐ.டி .யில் நடுத்தர அல்லது இளைய நிலைகளில் பணிபுரிபவர்களை மையமாக வைத்தது எழுதினேன்.  முதல் இரண்டும், இரண்டும் இந்தியா டுடே தமிழ் இதழிலும், அடுத்துக் கூறியது இலக்கியப் பத்திரிகையான உயிர்மையிலும்  வந்தன. விடுமுறை தராத அந்த விசித்திர  சம்பவங்களை வைத்து 24X7 என்கிற கதையை ஆனந்த விகடன் தொகுப்புக்காக எழுதினேன். இவ்வாறு ஐ.டி யில் இருந்தாலும் பத்து வருடங்கள் ஏதும் அது பற்றி எழுதாமல் இருந்தவன் 1990 களில் ஐ.டி பற்றி எழுத துவங்கி 1998 ல் பார்த்தீர்களானால் ஐந்துக்கு மூன்று ஐ.டி யைப் பற்றியே இருக்கும். அதன்பின் அந்த துவக்ககால அலைகள் அடங்கிய பின்னர்தான் மூன்றுவிரல் என்கிற ஐ.டி .துறை குறித்த எனது முதல் நாவலை 2002இல் எழுதினேன்.

2) அதன் தொடர்ச்சியாக அடுத்த கேள்வி.. அதேநேரம் இன்று ஐ.டி வேலை சலித்து போகிறது என்று எழுத துவங்கி விட்டார்கள். ஐடி வேலையை விட்டுவிட்டு விவசாயம் செய்ய வருகிறார்கள். இது போன்ற இருத்தலியல் பிரச்சனைகளை இலக்கியவாதிகள் தொடர்ச்சியாக எழுதியும் வந்துள்ளார்கள். இலக்கியத்தில் இந்த இருத்தலியல் trend லும் இயல் வாழ்க்கையில் IT துறை மீதான trend லும்   ஒருசேர இருந்தவர் நீங்கள். மூத்த எழுத்தாளராக இதைப்பற்றிய உங்கள் பார்வையை தொகுத்து செல்ல இயலுமா?

 இப்பொழுது பெரும்பான்மை அயல்நாடு வாழ் தமிழர் மனநிலைப்படி  அங்கே போய் இருந்து வேலை பார்த்து, பத்து வருஷத்துல போரடிக்குது விவசாயம் பண்ணப்போறேன் வேறு வேலை பண்ணப்போறேன்னு கிளம்ப நினைக்கறதாகச் சொல்றாங்க. ஆனால் எத்தனை பேர் சொல்றபடி செய்யறாங்க? அவங்க நல்ல வேலையில இருக்காங்க நல்லா சம்பாதிக்கிறாங்கதான். வேணாம்னு சொல்லல நல்லா இருக்கட்டும்.  . வேலையில் வரும் repeatation போரடிக்குதுன்னு சொல்றாங்க. இந்த repeatation எங்கதான் இல்ல? நான்  28 வருஷங்கள் ஐ.டி ல இருந்தாலும் அதுல இரு existential  பிரச்சனை எனக்கு ஒருசில நேரங்களில் தான் தோன்றியது. அது பணி நிமித்தமாக குடும்பத்தை அடிக்கடி வருடக் கணக்கில் பிரிவதால் ஏற்பட்டது.   பழங்கால இலக்கியத்திலேயே வருமே, பொருள் வயின் பிரிதல்,   அதன் ஒரு வடிவம். இந்த ஆட்டங்களுக்கான விதிமுறைகளை மீற முடியாது. 

நான் என் வாழ்க்கையிலும், கதைகளிலும் உபதேசங்கள் செய்யறவன் கிடையாது. ஒவ்வொரு கதையிலும் நீதி போதனை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் உடையவன் அல்ல என்பதும் ஒரு காரணம். ஆனால் சில இடங்களில் அனுபவம் சார்ந்த ஆலோசனைகள் சொல்லியிருக்கிறேன்.  இந்த இருத்தலியல் பிரச்சனையும்தான்  எந்த துறையிலதான் இல்ல?  அதனால நல்ல வருமானம், குழந்தைகளுக்கும் குடும்பத்தினருக்கும் நல்ல கெளரவமான, பாதுகாப்பான  வாழ்க்கை என அமைத்துத் தரும் துறை எதுவாக இருந்தாலும் அது நல்ல துறைதான். அதுக்குள்ளே இந்த இருத்தலியல் சிக்கலையெல்லாம் போட்டு மொலடோவ் காக்டெயிலாக்கிக் கதையை வாசகர்மேல் பிரயோகிக்க வேணாம்னுதான் நான் சொல்லுவேன்.

3) சுஜாதா பாணி எழுத்து என்று உங்களை வகைப்படுத்துவதில் எந்த வாசகருக்கும் உடன்பாடு இருக்க இயலாது. நீங்களுமே இது ஒரு வாழ்த்தாகவும் வசையாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளீர்கள். அது எழுத்து நடை என்பதைக் காட்டிலும் களம் என்பது முக்கிய காரணமா என்று யோசித்திருக்கிறேன்.  நீங்கள் எழுதிய வாழ்க்கை முழுக்க urban society என்பதால் இவ்வாறு எண்ணப்படுகிறதோ என்று எனக்கும் தோன்றும். சுஜாதா உங்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர் என்று உங்கள் உரையாடல்கள் வழி அறிந்திருக்கிறேன். அவர் மீதான அந்த மதிப்பும் மரியாதையும் தாண்டி, கறாராக இந்த விமர்சனம் குறித்த உங்கள் பதிலைச் சொல்லுங்கள்?

முதலில் நான் நகரங்களின் கதைக்காரனா என்ற மதிப்பீடு சரியானதா எனத் தெரியவில்லை. உள்ளடக்கமும் காலமும் படைப்புச் சூழலைத் தீர்மானிக்கின்றன. அம்பலப்புழையும், சிவகங்கையும், ஹாலிபாக்ஸும், இன்னும் என் பல கதைகளில் சித்தரிக்கப்படும் கதைக் களனும் சிற்றூர் அல்லது சிறு நகரமாக வேண்டுமானால் இருக்கும். அதேபோல் அரசூர் வம்சத்தில் வரும் 1850களின் மதறாஸும், விஸ்வரூபம் நாவலில் வரும் 1900களின் மதறாஸும், அச்சுதம் கேசவம் மற்றும் வாழ்ந்து போதீரேவில் கதை நிகழும் 1960களின் சென்னையும் ஒன்றிலிருந்து ஒன்று முற்றிலும் வேறுபட்டது. அந்த வளர்சிதை மாற்றத்தை சென்னை பற்றி எழுதும்போது கொண்டு வரலாம். ஆனால் பெருநகரங்களின் அன்னை Mother of all cities ஆன லண்டன் பற்றியோ அதற்கு அடுத்த புராதன ஐரோப்பிய மாநகரான எடின்பரோவைப் பற்றியோ காலம் தோறும் அந்நகர்களைச் சித்தரிக்க நிறைய பிரயாசை எடுக்க வேண்டி வருகிறது. பழமையைப் பேணி புதுமையை புகுத்தும் அந்த நகரங்களில் மதுக்கடைகளில் இருந்து கல் பாவிய தெருக்கள் வரை பத்தொன்பதாம் நூற்றாண்டு இன்னும் திடமாகக் கவிந்திருப்பதால் எதுவும் மாறாத சூழலாக ஒரு தோற்றம். லண்டனை இரண்டு வருட காலத்தில் காலாற நடந்து பார்த்து உணர்ந்து அல்புனைவாக லண்டன் டயரி பயணக் குறிப்பு நூல் எழுதியது  நான் படித்து உணர்ந்த லண்டனுக்கும் இப்போது  இருந்து சுற்றியலைந்து உணரும் லண்டனுக்கும் என்ன நுண்ணிய வேறுபாடு என்று கண்டுகொள்ளவும் தான்.

சுஜாதாவுக்கு வருவோம். அவருடைய எழுத்து தீவிர இலக்கியமும் அல்ல அதே சமயம் முழுக்கச் சந்தைப் படுத்தப்பட்ட எழுத்தும் அல்ல. அவருக்கான இடம் என்பது மிகவும் தனித்துவமான ஒன்று. ஆனால் நகரம் கதையை மட்டுமே எத்தனை வருஷம் சொல்லுவீங்க என்று கேட்கிறார்கள். ஒரு பேச்சுக்காக சுஜாதாவின் தரமான ஒரே கதை நகரம் மட்டும்தான் என்று வைத்துக்கொண்டு அவர் எழுதியதை எல்லாம் வீசி எறிய முற்படுகிறவர்களிடம் ஒரு கேள்வி கேட்கலாம் என்று தோன்றுகிறது – சுஜாதாவுக்காவது ஒரு நகரம் இருக்கு காலகாலத்துக்கு அவர் பெயரைச் சொல்லிக்கொண்டு. உங்கள் பெயரைச் சொல்ல நீங்க என்ன எழுதியிருக்கீங்க?     என்னைப் பொறுத்தவரை ஒன்று சொல்றேன். நான் சாஹித்ய அகாடமிக்காக இந்திய  இலக்கிய சிற்பிகள் என்கிற வரிசையில்  சுஜாதா குறித்து ஒரு monograph  எழுதிப் போன ஆண்டு அகாதமி பிரசுரமாக வெளியானது.  சுஜாதாவின் தமிழ் உரைநடைப் பங்களிப்பு பற்றி நம்பாமல் அகாதமி இலக்கியச் சிற்பிகளில் ஒருவராக அவரைக் கணித்து, என்னை அவரைக் குறித்துப் புத்தகம் எழுதப் பணித்திருக்காது. நம்பாமல் நானும் எழுதியிருக்க மாட்டேன்.

 எனக்கு சுஜாதா மீது பெருமளவு மதிப்பு இருக்கு. அதேபோல நான் சுஜாதாவை கடந்து போனேன் என்பதும் உண்மைதான்.  அவரிடமிருந்து நான் பெற்றவைகள் உண்டு. அதை வைத்து என்னை உள்நோக்கிப் பார்த்து அவரை வணங்கி, ஆரவாரமில்லாமல் இயல்பாக நான் அவரைக் கடந்து போனேன். சுஜாதா மட்டுமல்ல அவர்போல எனக்கு நீண்டகால நண்பராக புதுமைப்பித்தனோ சுந்தர ராமசாமியோ இருந்திருந்தாலும் இப்படித்தான் ஆகியிருக்கும் – அவரையும் கடந்து போகவேண்டியிருக்கும். Rolling stone  does not gather any mass but it gathers momentum  என்று சொல்வார்கள். அதுபோலத்தான்.. ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்.   பொத்துனு ஒரே இடத்துல புளி மூட்டை மாதிரி கிடக்கக் கூடாது.

4) உங்கள் எழுத்துக்கள் எவ்வளவு பெரிய நாவல்களானாலும் சீக்கிரமாக வாசித்து விட முடிகிறது. அதற்கு வாசிப்பின்பம் என்பது ஒரு முக்கிய காரணம். அது வெறும் பகடி அல்ல. அதற்கு வாசகரை சிரிக்க வைக்க வேண்டிய நோக்கம் ஏதும் அல்ல என்றும் புரிகிறது. ஆனால் நாம என்ன சொன்னாலும் நடக்கிறதுதான் நடக்கும் என்று சொல்வது போல ஒரு பொறுப்புத்துறப்பு உங்கள் அனைத்து படைப்புகளிலும் உள்ளது. அந்த உணர்வை தக்கவைத்தபடி இருப்பதன் காரணம் என்ன? எழுத்தின் வழியாக அதை கண்டடைந்தீர்களா?

நீங்க சொல்வது ஆச்சரியம்தான்.   Que Sera Sera ன்னு Doris Day பாடுவாங்களே  அப்படி  ஒரு fatalyst மனநிலை இருப்பதாக நான் நினைக்கவில்லை.ஆகவே இந்த கருத்தை ஒரு அபிப்ராயமாகத்தான்  எடுத்துக் கொள்ள சொல்ல முடியும். இதோடு நான் முழுமையாக உடன்படவும் முடியாது.  சில கதைகளில் சில சூழ்நிலைகளில் அப்படி தோன்றுகிறது என்றால் அது அந்த கதாபாத்திரங்களின் குரலாக, இயக்கமாக, எதிர்வினையாக இருக்கலாமே தவிர அது என்னுடைய கருத்தும் வினையாக்கமும் அல்ல.

அப்புறம், வாசிப்பின்பம் பத்தி சொன்னீங்க. கிட்டத்தட்ட 1200 பக்கங்கள் கொண்ட மிளகு நாவலை மூன்று நாளில் வாசித்தேன் என்று ஒரு வாசகி கூறினார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.  புதுமைப் பித்தன் சொல்கிற புரிந்து கொள்ளக் கடினமான இரும்புக் கடலைகள் இல்லை என் எழுத்துகள். படிக்க முடியாத ஒரு வரியைக் கூட எழுதக்கூடாதுன்னு தீர்மானம் செய்து எழுதுவது அது. 

  வேகமாக வாசிப்பதைத் தவிரப் படித்துவிட்டு உள்வாங்கி அதைப்பற்றிக் கருத்து மோதலாகச் சண்டை    போடவோ இல்லை மனம் திறந்து பாராட்டவோ முடிந்தது என்றால் எனக்கு இன்னும்  சந்தோஷமாக இருக்கும்.

5) சமீபத்திய உரையாடலில் கவிஞர்.ஆத்மார்த்தி அவர்கள் பேசுகையில் ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், இரா.முருகன் மூவரும்  மூன்று திசைகளை காட்டுவதாக கூறினார். அதைக் கேட்டபோதே  அசோக ஸ்தூபி சிம்மங்களில் ஒருவர் தத்துவத்தையும், ஒருவர் அற்புதத்தையும் நீங்கள் அபத்தத்தையும் காட்டி நிற்பதாக மனதில் தோற்றம் எழுந்தது. அதில் தவிர்க்க முடியாத ஒன்று அவை பார்க்கும் திசைகள் வேறானாலும் தூண் ஒன்றுதான் என்பது. அந்த தூணை இந்திய தொன்மங்கள், மரபு என எடுத்துக் கொள்ளலாமா?  யதார்த்தம்   மாய யதார்த்தம்  பின்நவீனத்துவம் என அனைத்து வகையிலும் எழுதிய நீங்கள் இதை பின்புலத்தில் வைத்தபடி இருக்கிறீர்கள். அதன் மீதான உங்கள் மதிப்பீடு என்ன?

absurdityயோ cynisismமோ நான் தொன்மங்களின்பாற் பட்டவன். தொன்மங்கள் இல்லையென்றால் நான் இல்லை. அரசூர் வம்சம் நாவல்லேயே  பார்த்தீர்களானால் அந்தக் கதை நடக்கும் காலத்துக்கு முற்பட்ட, கதைக் காலத்தில் உயிரோட இல்லாத, ஆனால்  நாவலில்    பங்கு  ஆற்றுகின்ற முன்னோர்கள்  வந்துடுவாங்க. அந்த  மூத்தவர்கள் சோழில  இறங்கி பேசுவாங்க. புகை உருவமாக ராஜாவோட பேசுவாங்க. அவங்க இருக்காங்களா இல்லையாங்கிறதைல்லாம் ரொம்ப போட்டு குழப்பிக்காம   சாதாரணமாக எடுத்துக்கிட்டு அந்த ராஜாவோ மத்தவங்களோ  அப்படியேதான் வாழ்ந்துக்கிட்டு  இருப்பாங்க..  அதுதவிர கட்டுக்கிழத்தியாக ( சுமங்கலியாக) இறந்து  போனவங்க வந்து சுப்பம்மான்னு ஒரு பாட்டியம்மா தொண்டையில இறங்கி பாட்டு பாடுவாங்க. அந்தக் கிழவி களைத்துப் போகும்போது புகையிலைக்கடைக் காரர் குரலிலே கீச்சுகீச்சுன்னு பெண்குரலாக ஏறிப் பாட்டைத் தொடர்வாங்க. இதெல்லாம் முன்னோர் இன்னும் இருக்காங்க, அப்பப்போ வந்து வழிநடத்துவாங்க என்கிற இந்து மதம் தொடர்பான தொன்மத்தின் பாற்பட்டது. அரசூர் வம்சம் நாவல்லயே வரும். மத்த கதைகள்லயும் வரும். குலதெய்வம் கோயிலுக்கு படையல் வைக்கப் போகும் ஒரு குடும்பத்தோட அந்த குலதெய்வமே வந்து சாப்பிடும். வாழக்காயும் தேங்காயும் அலுத்துடுச்சு, கவிச்சி படையுங்க என்று அதிகாரமாகச் சொன்னாலும், அதெல்லாம் முடியாது உனக்கு சைவம் தான் படையல்னு மூதாதையோர் சொல்லியிருக்காங்க, அதை வாங்கிக்க என்று கராராகச் சொல்லி அனுப்பும் அந்தக் குடும்பம். அப்படி கல்லத்தி என்று ஒரு கதை எழுதியிருக்கேன்.   அச்சுதம் கேசவம் நாவல்லே ஹரித்வாருக்குப் போகும் முதியவர்கள் அங்கே கங்கை நதிப் பிரவாகத்தில் தீபங்களை மிதக்கவிட்டு கண்ணீர் மல்க நிற்பது விவரமாக விரியும். விஸ்வரூபம் நாவலில் பகவதி வாராணசியில் கங்கைப் பிரவாகத்தில் மரிப்பாள். ஒரு இந்துவுக்கு அதி உன்னதமான இறப்பு கங்கை நதியில் நதிப் பிரவாகத்தில் மூழ்கி இறப்பது என்று நான் கேட்டு, பகிர்ந்து, நம்பும் தொன்மம் என் மூலம் என் கதாபாத்திரங்களுக்குக் கடத்தப்பட்டு வரும். வாழ்ந்து போதீரே நாவலில் இறுதியில் கொச்சு தெரிசா இந்து மதத்தைத் தழுவி அவள் மூத்த பாட்டனார் கிட்டாவய்யர் நூறு வருடம் முன்னால் சந்தர்ப்பங்களால் ஜான் கிட்டாவய்யர் ஆனதை முடித்து வைக்கும் காட்சி தொன்மங்களை அடிப்படியாக்கி எழுதியது. சொல்லப் போனால் தொன்மங்களே எழுதிக்கொண்ட நாவல் பகுதி அது. எனக்கு என் முதல் கதைகளில் ஒன்றான தேர் கதையிலே இருந்து  எழுத்துப் பகிர, கருத்துப் பரிமாறத் தொன்மங்கள் தேவையாத்தான் இருக்கு.   அவை  வாழ்க்கையா இருக்கு. என் முன்னோர்களின் நம்பிக்கைகளும் அனுபவங்களும் குளிகை போல் திரட்டி தலைமுறை தலைமுறையாகக் கொடுக்கவும் வாங்கவும் ஏற்படுத்தப்பட்டவை இந்தத் தொன்மங்கள். தொன்மம் மூலம் அவர்கள் என்னோடு உரையாடுகிறார்கள். அதுக்காக தக்கரீதியா போட்டு  மண்டைய குழப்பிக்க வேண்டாம். ரொம்ப நம்பிக்கையும் வேண்டாம். நம்பிக்கை வைப்பதும் வைக்காததும் நம் விருப்பம், கொண்டு சேர்க்கிற அளவு நம்பிக்கை இருந்தா போதும். இருந்ததுன்னா அது உங்களை கொண்டு போகும்.  

6) தொடர் கவனம் தேவைப்படும் ஐடி  துறையில் பணியாற்றியபடி இருநூற்று ஐம்பதிற்கும் மேல் சிறுகதைகள் மற்றும் எழுதிய பதினொன்று நாவல்கள் அனைத்தும் பெருநாவல்கள், திரைப்பட வசனங்கள் என உங்கள் நேரத்தை  எவ்வாறு தொகுத்துக் கொள்கிறீர்கள்?

இதை நீங்க past tense ல கேட்டிருக்கணும். இப்ப பணி ஓய்வு பெற்ற பிறகு என் காலம் என் கையில் தான் இருக்கு. ஆனால்  வேலையில இருந்தபோது அதுவும் தனியார் துறை பெரும் ஐ டி கம்பெனி வேலையாக வெளிநாட்டில் இருந்தபோது எழுதிய என்னுடைய எல்லாக் கதைகளும், முக்கியமாக நாவல்கள், அநேகமாக ஞாயிற்றுக் கிழமையில் எழுதியவை தான். என்னுடைய நேரங்களை நான் செலவழிக்க மேலதிகாரிகள் அனுமதித்தால், கார்ப்பொரேட் வாடிக்கையாளர்களோடு கூடியிருந்து சீரான சமூக உறவுகளைப் பேணாமல் இருந்தால் (மதுக்கடைக்குப் போகாமல் இருந்தால் என்றும் கூறப்படும்) கூடுதலாக சனிக்கிழமை மாலை நேரங்களில் எழுதமுடியும். அரசூர் வம்சம் தொடரில் அச்சுதம் கேசவம் பாதி எழுதும்போது ரிட்டையர்டு ஆனேன்.   ரிட்டையர்டு ஆன பிறகுதான் ஆகப் பெரிய நாவல்கள்  எழுதினேன். N.S  மாதவனோட மலையாள நாவல் லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள் = பீரங்கிப் பாடல்கள் என்ற அற்புதமான avant garde படைப்பை மொழிபெயத்தேன். தியூப்ளே வீதி ங்கிற பெரிய பயோ பிக்‌ஷன் நாவல் அப்பத்தான் வந்தது. அதுக்கப்புறம் எமர்ஜென்ஸி காலகட்டத்தில் நிகழும் இன்னொரு பெரிய நாவல் 1975 எழுதினேன். தொடர்ந்து ராமோஜியம் வந்தது. இப்ப மிளகு வந்திருக்கிறது. உத்தியோகத்தில் இருந்தபோது நான் கிடைத்த நேரங்ககளையெல்லாம் பயன்படுத்திக் கொண்டேன். அப்போது நேரத்துக்கு அடிமை செய்து வாழ்ந்தேன். இப்போது கடியாரம் எனக்குக் கீழ் படிந்து இருக்கிறது

7) அரசூர் வம்சம் தொடர் நாவலின் துவக்கப் புள்ளி உங்களுக்கு கிடைத்த ஒரு பழைய டைரி என்று சொல்லியிருக்கிறீர்கள். இன்று வாசிப்பை மனதிற்குள் ஓட்டி பார்த்தாலும் ஐயணை, கனபாடிகள், பனியன் சகோதரர்கள், அந்த முதிய ராஜா ராணி, பறந்துகொண்டிருக்கும் வயசன் ஆகியோர் பாத்திரங்களாகவும், கிட்டாவையர் கிறிஸ்துவிற்கு மாறும்போது கொள்ளும் அலைக்கழிப்பு , சபலமும் வெள்ளந்தியும் கொண்ட சின்னசங்கரனின் மனோபாவம்,  என தருணங்களும் நினைவில் நிற்கின்றன. அவற்றில் ஒரு குடும்ப வரலாறு என்பது சுவாரசியமான தன் வரலாறு என்பதைத்தாண்டி அது இலக்கியமாகவும் ஆவணமாகவும் ஆகும் தருணங்கள் நிகழ்கின்றன. தலைமுறைக்கு  மாறும் சமூக விழுமியங்களும் பதிவாகின்றன. இவை அனைத்தையும் பதிவு செய்வதுதான் நோக்கமாக இருந்ததா..

அரசூர் வம்சம் ஆரம்பிக்கும் போது என்கிட்ட family tree இல்லை. வீட்ல பெரியங்க கூட பேசி இப்படித்தான் இருந்திருப்பாங்கன்னு ஒரு image இருந்தது. அதை வச்சு உத்தேசமா எழுதினதுதான். அதை ஆரம்பிச்சது கூட     மேற்கு யார்க்‌ஷயர் கவுண்டியில் ஹாலிபாக்ஸ் என்ற    ஒரு உற்சாகமான சிறு நகரம். பணி நிமித்தமாக போய் அங்கே ஒரு வருடம் வசித்தபோது ஒரு ஞாயிற்றுக் கிழமையில் எழுத ஆரம்பிச்சதுதான். ரெண்டு குடும்பம் இருக்கும், ஒண்ணு அம்பலப்புழை குடும்பம் மத்தொண்ணு அரசூர் குடும்பம். அதில் அம்பலப்புழை குடும்பத்தைப் பற்றி எனக்கு பெரிசா ஒண்ணும் தெரியாது. அதாவது கொஞ்சம் தெரியும்.   எங்கள் தலைமுறையே சமையற்காரர்கள் தான். சைவ சமையல் சமைக்கிறவர்கள். அந்தணர்கள்.  அதில் வருமானம் போதலைன்னு புகையிலை விற்க ஆரம்பித்தனர். அந்த புகையிலை வியாபாரத்தோடத்தான் அவர்களுடைய நல்ல காலமும் அரம்பிச்சது நல்ல காலம் இல்லாத காலமும் வர ஆரம்பிச்சது. அந்த அம்பலப்புழை குடும்பத்தில பிதாமகன்னு சொல்றது மாதிரி மாதாமஹி, ஒரு வல்யம்மை. அதாவது பெரிய அம்மாள். அவர்களை மையமாக வைத்துத்தான் கதையே எழுதப்போறேன்னு முடிவுக்கு வந்துட்டேன். ஆனால் அவங்க பேரே எனக்குத்தெரியாது. நான் பகவதின்னு பேரு வச்சு நாவலை எழுத ஆரம்பிச்சேன். எங்க வீட்ல லக்ஷ்மி அப்புறம் பர்வதம்ன்னு பேரு வைப்பங்க. ஆனால் பகவதின்னு பேரு வைக்கும் வழக்கம் இல்லை. ஆனாலும் அப்படியே எழுதி ஆரம்பிச்சேன். சில தகவலுக்காக பெரியவங்களை கூப்டுக் கேப்பேன். அவர்கள் அப்படி தள்ளாத வயசு.. பேசியவர்கள் அடுத்த சில காலங்களில் இறந்துடுவாங்க.. அல்லது ஏதும் ஞாபகம் இல்லைன்னு சொல்லிடுவாங்க. அந்தளவு தள்ளாத வயசு. அதனால் ஒரு சட்டகமாக அந்த இரு குடும்பங்களை எடுத்துக் கொண்டு உள்ளே கற்பனையாக எழுத ஆரம்பித்தேன். விஸ்வரூபம் எழுதின போது அதில் முப்பது சதவீதம் குடும்ப வரலாறு கிடையாது. அந்த நாவலும் 1890 லேந்து 1936 வரையிலான காலத்தை பேசும். நாவலும் பெரிய நாவல். குடும்பவரலாறு கொஞ்சம் உண்டு. ஆனால் பெருமளவு கற்பனைதான்

அந்த பேரு பத்தி சொல்லிட்டிருந்தேன் இல்லையா. என்னுடைய தங்கை இங்க திருச்சில இருக்கிறவங்க. உன் கதையை படிச்சேன் அந்த பேரு எல்லாம் எங்கேந்து எடுக்கிறன்னு கேட்டாங்க. என்னா அவங்க தூரத்து சொந்தமான ஒரு கனபாடிகள்ட்ட கேட்டப்போ அவர் அந்த வல்லியம்மே பேரு பகவதி. உங்க பரம்பரையிலே ரொம்ப வித்தியாசமான பேருன்னு சொன்னாராம். அன்னைக்கு ஒருநாள் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது.

என்னோட நாவல்ல எங்க குடும்பத்தோட family tree கொஞ்சம் இருக்கும். ஆனால் பெருமளவு கற்பனைதான். கற்பனை மனிதர்களும், அசலானவர்களும் இடம் பெற்ற ஃபேமிலி ட்ரீ. நெட்டுலே கிடைக்கற சாப்ட்வேர் பயன்படுத்தி தான் ஃபேமிலி ட்ரீ வரையறது. வாழ்ந்து போதிரே, அச்சுதம் கேசவம் ரெண்டு நாவலிலும் புத்தகத்தோட தொடக்கத்தில் ஃபேமிலி ட்ரீ இருக்கும். யார் யார்க்கு என்ன உறவு என்று குழப்பமில்லாமல் புரிந்து கொள்ள அது ரொம்ப பயன்படும்.

8) அந்நாவல் தொடர்களில் விஸ்வரூபம் நாவலுக்கு முதலிடம் தரும் நண்பர்கள் அதிகம். விஸ்வரூபம் நாவலில் அப்பட்டமாக வரும் மகாதேவனின் காமம், கரும்பு தோட்ட வேதனைகள் என ஒப்பு நோக்க அலைச்சலும் தேடலும் அதிகம் கொண்ட நாவல். மற்றவை அமைதலும், நிறைதலும் கொண்டவை என்றும் தோன்றும். அழகியல் ரீதியாகயும் விஸ்வரூபம் முதலிடத்தில் இருப்பதாகவே கருதுகிறேன்.   அந்த தொடர்நாவல்கள் குறித்த வரிசை மதிப்பீடு உங்களுக்கு உள்ளதா?

அரசூர் வம்சம் துவக்கம்தான். அது நிலை கொள்வது வாழ்ந்து போதீரே -வில். இதில் விஸ்வரூபம் இரண்டாவதா வருது.. அதில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பெரிய அலைச்சல் இருக்கு. அதனால் அது முதலிடத்துக்கு வந்துடுது. என்கிட்ட அழகியல் வரிசை கேட்டீங்கன்னா விஸ்வரூபம் அரசூர் அம்சம் அப்புறம் மூணாவது இடத்துல மற்ற இரண்டு் நாவல்களும் இருக்கும்

9) அச்சுதம் கேசவம் நாவலில் மயில் வரும் இடம் மிகவும் சுவாரசியமானவை. ஆங்காங்கு காமத்திற்கு தொடர்புடையாதாக வருகிறது. ஆனால் இந்தியாவின் தேசியப் பறவையான அது  இங்கிருந்து பிரிந்து சென்றவர்களுக்கு இந்தியாவை நினைவூட்டுவதாகவும் வாசக பார்வையில் புலப்படுகிறது. இதுபோல ஒவ்வொரு நாவலுக்கும் ஒரு குணாதிசயம் இருக்கிறது. அதன் பிரச்சனைகளும் வேறு வேறு. ஆனால் இவற்றை தொடர்ச்சியாக ஒரே பாத்திரங்களை வைத்து  எழுத வேண்டுமா என்கிற கேள்வியும் வருகிறது. இதை வேறு பாத்திரங்களை வைத்து தனித்தனியாக எழுதினாலும் இதன் முன் / பின் தொடர்ச்சி இல்லாது போனாலும் அவை நின்றிருக்கும் அல்லவா. அதை அரசூர் வம்ச தொடர்ச்சி என்றுதான் எழுதயிருக்க வேண்டிய கட்டாயம் என்ன? அது ஒரு விளையாட்டாக செய்ததா அல்லது ஏதாவது குறைந்திருக்கும் என்று கருதுகிறீர்களா?

முதலில் இந்த மயில் பத்தி சொல்லிடறேன். ஏன்னா ஒரு விஷயம் ஞாபகம் வருது. இந்தியாவின் தேசியப்பறவையா எதை கொண்டு வரணும்னு கேட்டப்போ “The great indian bustard” ஐ கொண்டுவரத்தான் விரும்பறாங்க. ஆனால் அரசு கடிதப் போக்குவரத்திலே ஏதாவது சொல்பிழை வந்து அர்த்தம் மாறிடும்னு அடுத்த இடத்துல இருந்த மயிலை தேசியப்பறவையா அறிவிக்கிறாங்க.

இப்ப அரசூர் நாவல்களை ஏன் தனித்தனியா  இல்லாத ஒரே தொடரா எழுதனும்னு கேட்டீங்கன்னா, இதில் ஒரு வாழ்க்கை அனுபவம் முழுமையாக இருக்கு. ஒரு  கதாபாத்திரம் இளமைல எப்படி இருக்கு இருபத்தஞ்சு வருஷம் கழிச்சு எப்படி இருக்குன்னு பார்க்கிறத சொல்றேன். அப்படியே அவங்க இறந்தாலும் காலத்துல முன்பின்னா பயணிச்சு இங்க வந்துடுவாங்க. அதில் எனக்கு இன்ஸ்பிரேஷன் யாருன்னா நக்யூப் மஹ்ஃப்யூஸை சொல்லலாம். எகிப்திய எழுத்தாளர். நோபல் பரிசு பெற்றவர். அவர் கெய்ரோ ட்ரையாலஜி எழுதினார். The Sugar Street trilogy -ன்னும் சொல்லுவாங்க. கெய்ரோவுல அந்த தெரு மிகப்பிரபலமானது என்கிறார்கள். இன்னும போய்ப் பார்க்கும் வாய்ப்பு கிட்டலை. அவருடைய நாவல்களில் இப்படித்தான் கால வரிசையும் நேரடியா இருக்கும். ஷுகர்ஸ்டிரீட் பற்றி ஒரு trilogy எழுத முடிகிற போது நாம் ஏன் நம்முடைய மக்களின் பிறந்த ஊரையும் அவர்கள் உலகின் பல பகுதிகளில் வாழ்ந்த ஊர்களையும் பற்றி எழுதக்கூடாது என நினைத்து தோன்றியதுதான் இந்த நாவல். மார்க்கோஸ் எழுதிய தனிமையின் நூறு ஆண்டுகளில் துணைப்பாத்திரமாக வரும் கர்னல் “No one writes to colonel” ல முக்கிய பாத்திரமாக வருவாரு. அவரோட best நாவல் அது. தனிமையின் நூறு ஆண்டுகள்  கதையில ஒரு பொண்ணு,  அப்பா அம்மா பேச்சை கேட்காமல் கண்காட்சிக்குப் போன குற்றத்துக்காக  பாதி மனுஷியும் மீதி பிராணியுமாக -நாக கன்னி போல மாறிடுவா. அவ ஒரு தொடர்ச்சி மாதிரி மார்க்வஸ்ஸின் அடுத்த நாவல்களிலும் வருவாள். இப்படி தொடர்ச்சியாக பாத்திரங்கள்  வருகிறது போல சொல்லிகிட்டே போவார். அது மாதிரிதான் அரசூர் நாவல்களில் சன்னமான இழையாகத் தொடர்ச்சி தட்டுப்படும். இந்த நான்கு நாவல்களையும் தனித்தனியான நாவல்களாக வாசிக்க முடிஞ்சாலும் இப்படி அங்கே இங்கே தொடர்வதில் ஒரு ரஸம் இருக்கு

10) முந்தைய கேள்வியின் தொடர்ச்சியாக, காணாமல் போன குடும்பம் என விஸ்வரூபத்தில் மகாதேவனின் குடும்பம் வருகிறது அது உண்மையில் உங்கள் family tree  டைரியின் வழி தேடி கிடைக்காதவரா அல்லது சமூகம் கால ஓட்டத்தில்  மறந்த நபர் பற்றிய குறியீடு எனக் கொள்ளலாமா? இதை எப்படிப் புரிந்து கொள்வது… என ஒரு குழப்பம் எழுந்தபடி இருப்பதில் இருந்து வாசகரை கழட்டிவிடலாம் அல்லவா.. இந்த எண்ணங்கள் அது தொடர்நாவல் என்பதால்தானே தோன்றுகிறது?

நானும் முந்தைய கேள்வியின் பதில்லேந்து ஆரம்பிக்கிறேன். நீங்க மயில் பத்தி கேட்டீங்க, மயில் வந்து தொடர்ச்சியா ஒரு கதாபாத்திரமா வரும். பகவதி கோயிலுக்கு போய்ட்டு திரும்ப வரும்பொது ஒரு பத்து மயில் ஒண்ணா சேர்ந்து அப்படியே ஓடி வரும். ஒண்ணும் பண்ணாது. ஆனால் பகவதிக்கு ஒரு பயம் வந்துடும். தில்லியிலே சின்னச் சங்கரன் வீட்டு முற்றத்திலே மயில் ஆடும். அதேமாதிரி இங்கிலாந்து யார்க்‌ஷயரிலே கொச்சு தெரிசாவின் வீட்டு வாசலில் ஒரு மயில் வந்து ஆடும். அங்கே ஏது மயில்? இங்கே விட்டுப்போன தொன்மம், மரபை எல்லாம் அங்கே இருந்து நினைத்து ஏங்கும் தெரிசாவுக்கு மயில் ஒரு குறியீடு. அந்த நினைப்புகளோடு தெரிசா, நாவல்   முடியும்போது சாரதாவாக மாறுவாள். பெயர் குறிப்பிடப்படாத சிறிய ஆப்பிரிக்க நாடு ஒன்றில் வீட்டு வரவேற்பறையில் வைத்த ஓவியத்திலிருந்து வெளியே வந்து மயில் ஆடும்.     நாவல் தொகுதி முடிவாக, வாழ்ந்து போவீரே நாவல் இறுதி வாக்கியங்கள் – லெ தான்ஸ் தெ பான் என்பது மரணப் படுக்கையில் இருந்து அமேயர் பாதிரியார் இறுதியாக சொல்லியது. அது பிரஞ்சு மொழியில் இருந்தது. மயில் ஆடுகிறது என்பது அதன் பொருளாகும். இப்படி பொதுவாகவே மயில்  leit motif ஆக, முக்கியமான கதாபாத்திரங்களோடு பிணைந்த உருவகமாக, குறியீடாக  எல்லாம் வருது. 

இப்படித்தான் அந்த காணாமல் போன மகாதேவன் குடும்பமும். மகாதேவனோட அம்மா தன்னோட அஸ்திகலசத்துல இருக்கும் எலும்புத்துண்டு வழியாக  கதாபாத்திரங்களோட பேசிகிட்டு இருப்பாங்க. காலமும் தூரமும் பொருட்டில்லாதவங்களா வருவாங்க. மத்தபடி என் குடும்ப family tree ல தேடிக்கிடைக்காதவங்க எல்லாம் இல்ல..

11)  காமம் என்பது அன்றாட வாழ்வில் சகஜமான ஒன்று ஆனால் அது ரகசியமான ஒன்றாகவும் ஆகிவிடும்போது இத்தகைய கிளர்ச்சியூட்டும் நடை ஒரு நகைப்பை உண்டாக்குகிறது என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் அதைதாண்டி இந்த நாவல்களில் அனைவரும் காமத்தில் பீடிக்கப் பட்டவராக வருகிறார்கள். உதாரணமாக மகாதேவன் திருக்கழுக்குன்றத்தில் ஒரு தெலுங்கு பெண்ணிடம் பீடிக்கப்படுவதும் அவன் காமத்தாலேயே அழிந்து அலைக்கழிக்கப்படுவதும் ராவாக வருவது நாவலின் மையமாகவே உள்ளது. ஆனால் பிற உப பார்த்திரங்களின் காமம் சார்ந்த வர்ணனை ஒருவர் குறிப்புகள் வந்து கொண்டே இருப்பது நாவலுக்கான தேவையாக இருந்ததா? அவை வெறும் அடல்ட் நகைச்சுவை என்பதை தாண்டிய சித்தரிப்புகள்தான் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் காமமாடுவது மட்டும் பொதுவாக இருப்பது நாவல் தொடருக்கு “கண்டிப்பாக வயது வந்தவர்க்கு மட்டும்” என்று குறிப்பிடும் அளவு போய்விடுகிறது. அதை குறித்த உங்கள் பார்வை என்ன?

நான் இதில் கணவன் மனைவி அன்பை எழுதிருக்கேன். தெரஸா மேஜரை கல்யாணம் பண்ணிகிட்டு இங்கிருந்து கிளம்பி ஐரோப்பா போனபிறகு அவர் போரில் இறந்திடுவாரு. அவருக்காக இவள் புரோட்டஸ்டன்ட்லேந்து கத்தோலிக கிறிஸ்துவத்தில் இருந்து புரோட்டஸ்டண்ட் ஆக மாறிருப்பாள். அப்ப அவள் அவர் நினைவாகவே இருப்பாள். அத்தனை மறுமண வாய்ப்புகளையும் நிராகரித்து விட்டு அவர் நினைவாகவே இருப்பாள். இதில் காமம் எங்கே இருக்கு? அதுக்கப்புறம் ஸ்காட்லாந்துக்கு விட்ட முதல் ரயில் வண்டில பயணத்துல அரசர் போனதை எழுதியிருப்பேன். அந்தக்கால ஸ்காட்டிஷ் டைம்ஸ் தினசரிப் பத்திரிகை நடையிலயே,   அந்தக்கால ஆங்கிலத்தில் எழுதி அந்தக்காலத் தமிழில் மொழிபெயர்த்த மாதிரி இருக்கும் அது. இந்த மொழியாக்கத்தில் சிருங்காரமும் காமமும் எங்கே இருக்கு? அப்புறம் இந்தியா மொரீஷியஸ் ஐரோப்பான்னு  மூணு பிரதேசங்கள் அதன் மக்களைப் பற்றி எழுதிருக்கேன். எல்லாம் அந்த மண்ணின் வழக்கும் கலாசாரமும் கலந்து எழுதினது. ஆனால் வாசித்து பேசும்போது காமம் தான் முன்னணிக்கு வந்துடுது. ஏன்னே தெரியல.

மகாலிங்கம் நீலகண்டன்னு அண்ணன் தம்பிங்க கதையை எழுதறேன். மகாலிங்கம் வந்து காம வறட்சியில இருப்பவரு. ஆனால் காம உணர்வு உச்சத்துல இருப்பவரு. நாட்டு மருந்து வாங்கி வந்து அரையில தடவிகிட்டு படுத்தா அந்த நாத்தம் தாங்க முடியாத மனைவி போய் வெளியில் படுத்துக்குவாள். அப்படித்தான் அவர் நிலை. அதனால்தான் அவர் ரெட்டி கன்னிகையை பார்த்தவுடன் அத்து மீறராரு. அந்த வர்ணனையை எழுதும்போது அது அப்படியே வந்துவிட்டது. வடிவேலு “ஒரு ஃப்ளோவில வந்துடுச்சி” ன்னு சொல்லுவாரு இல்லையா அந்தமாதிரி இது. சரி அப்படியே இருக்கட்டும்னு விட்டுட்டேன். ஆனால் அதுவும் எங்கேயும் வேலி தாண்டவில்லை. மகாலிங்கத்தின் தம்பி நீலகண்டன் அவர் மனைவி கற்பகம். அவரும் அனுதினமும் காமத்திலயே யோசிச்சும் ஆழ்ந்தும் இருப்பவர்.

மகாலிங்கம் அப்புறம் மொரீஷியஸ்ல ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிப்பாரு. அதாவது அவள் இவரை கல்யாணம் பண்ணிப்பாள்னு சொல்லனும். எப்பல்லாம் அவளுக்குத் தேவையோ அப்ப என்னை திருப்திபடுத்துன்னு படுத்தி எடுக்கும் ஒரு ஆள். அவர் அப்புறம் லண்டன் போய் திரும்ப இந்தியா வந்து தன்வீட்டு எதிர்லயே அடையாளம் தெரியாதவரா பரிதாபமா இறந்து போவாரு.  இந்தப் பக்கம் நீலகண்டனுக்கு அல்சைமர் வந்து தின்பது கழிப்பது தெரியாத ஆளா இருப்பாரு. ஒரு கட்டத்துல பொண்டாட்டியே அடிக்க ஆரம்பிச்சிருவாள்.  இந்த நீலகண்டன் கேரக்டர் இந்திரா பார்த்தசாரதிக்கு ரொம்ப பிடிச்சது. எப்படி போதம் கெட்டு நினைவு தவறிப் போறார், இப்படி இருக்கற கதாபாத்திரத்துக்கு ரோல்மாடல் யாருன்னு விசாரித்தார்.

 இப்படி பலதும்தான் இந்த அரசூர் வரிசை நாவல்களிலே இருக்கு. ஆனால் வாசிக்கும்போது   காமம் முன்னாடி வந்துடறதோ என்னவோ..

12) மாய எதார்த்த வகை நாவங்களில் உங்கள் எழுத்துக்கள் தனித்துவமானவை. அதன் காரணம் அது மேற்கத்திய நவீன இலக்கிய வகை மாய எதார்த்தமாக இல்லாமல் பண்டைய கதை சொல்லல் முறையான ஆயிரத்தோரு இரவு, விக்ரமாதித்யன் வகையிலும் இல்லாமல் இடைப்பட்ட ஒரு வகையாக இருப்பதுதான். அந்த நடையை எவ்வாறு கைகொண்டீர்கள். அதில் உங்களுடைய முன்னோடிகள் என யாரைக் குறிப்பிடுவீர்கள்?

நிச்சயமா இந்த நடை முன்னோடிகள் இருக்காங்க. முதலாமவர் மஹாகவி பாரதியார். அவர் எழுதின நவதந்திரக் கதைகள் ரொம்ப சுவாரசியமானவை. வியாபர போட்டியில் இருக்கூறி செட்டியார்களுக்கு இடையே ஒரு ஐயர் சாமியார் வேடம் போட்டுப்போய் மஏ மஏ ன்னு ஒரு மந்திரத்தை உபதேசிப்பார். அதனை அர்த்தம் என்னான்னு கடைசில சொல்லுவார். (மற்றவனை ஏமாற்றியவனை மற்றவன் ஏமாற்றுவான்). அதைச் சொல்கிற tongue in cheek பழங்காலத் தமிழ்நடை அபூர்வமானது. அவருடைய அந்தரடிச்சான் சாகிப் கதை கூட அப்படிப்பட்டது தான்.

நடை முன்னொடியாக நான் வரித்த இரண்டாமவர் புதுமைப்பித்தன். கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் லாம் என்னமாதிரியான கதை.. அதெல்லாம்தான் இன்ஸ்பிரேஷன்

13) இலக்கியத்தில் அதிகம் இசை குறித்த உரையாடல்கள் வருகின்றன. இசையின் பாதிப்பை கதாபாத்திரத்தின் அச்சமய மனநிலையோடு இயைத்து  கொண்டு வருவதை தொடர்ந்து செய்கிறீர்கள்.  ஒரு இசை மீதான உங்கள் பார்வை என்ன?

வீட்ல அம்மா நல்லா பாடுவாங்க. அப்பா இசை ரசனை உள்ளவர். கேட்க மட்டும் செய்வார். மீதி யாரும் கூட பாட மாட்டார்கள் ஆனால் பாட்டுன்னா அது கர்நாடக சங்கீதம்தான். நான் அந்த இசை இல்லாமல் இருந்துவிடுவேன்னு தான் தோணுது. என்ன மாதிரி அருமையானது, கர்நாடக இசைன்னு சொன்னேன்னா ஹிந்துஸ்தானியை மிஸ் பண்ணிடறேன். மெண்டல் ப்ளாக் வருது.folk இசையை, போன நூற்றாண்டின் இன்னும் fast beat இசையை, ஜிம் ரீவ்ஸின் country musicஐ, உம் கல்த்தும் பாடிய மனதை உருக்கும் எகிப்திய இசையை ரசிக்காம விட்ருவோமோன்னு தோணுது. எல்லாத்துக்கும் மேல போன நூற்றாண்டு பிரஞ்சு இசையாக எடித் பியப் பாடிய கானங்களும் அப்படியே. நான் ஷானெ ரிக்ரெட்டெ ரைன் என்று உருக்கமாகப் பாடிய அந்தப் பாடகி நம்ம எம்.எஸ் சுப்புலட்சுமிக்கு சமகாலத்தவர். கிட்டத்தட்ட ஒரே மாதிரி வாழ்க்கை. நான் ஷானெ ரிக்ரெத்தெ ரைன் என்ற பியஃப் கானத்துக்குப் பொருள் குறையொன்றும் இல்லை தான்! ஆமா, இசை இரண்டு வெவ்வேறு கலாச்சாரங்களை இணைக்கும் மகத்தான விஷயம். இசை மேல எனக்கு பெரிய ஈடுபாடு உண்டுதான். இதையெல்லாம் கூட எழுத்தில் நான் முழுக்கக் கொண்டுவருவது இல்லை. இந்த ரசனை பின்புலமா வருமே தவிர எப்போதும் மையம் வச்சு எழுத முடியாது. மீண்டும் கல்யாணி போன்ற என் சிறுகதைகள் இசையில் இசைந்தவை. 

ஆனாலும் இப்ப யுவன் எழுதற அளவு எல்லாம் என்னால் இசை பத்தி் எழுத முடியாது. யுவனைப் பார்த்தீங்கன்னா ஹிந்துஸ்தானியை மையம் வச்சு நாவலே எழுதறார். என்னால அதை எழுத முடியும்னு தோணலை. அதுக்கு காரணம் கர்னாடக இசைன்னாலுமே நான் செலக்டிவ் ஆக சஞ்சய் சுப்பிரமணியன் குரலுக்கு அதிகம் விருப்பமுள்ளவன் ஆயிட்டேன். வேற யார் பாடினாலுமே இதை சஞ்சய் பாடினா எப்படி இருக்குமோன்னுதான் நினைச்சு பார்க்கற மாதிரி ஆயிடுது. அவருக்கு அப்புறம் டி.எம். கிருஷ்ணா வறாரு. அப்புறம் தான்.

எழுத்தில் எனக்கு இது எங்க கை கொடுக்குதுன்னா சில கதாபாத்திரங்களோட பழக்கத்தை குணாதிசயத்தைக் காட்ட பயன்படுது. ‘சாகர சயன விபோ’ ங்கிற எம்.டி.ராமநாதனோட மெதுவான பாகேஸ்ரீ பாடல் உண்டு. அதை வச்சு பரமனை அது அவர்தானான்னு  அவர் மகன் இனம் காணுவான். அது பின்னால தவறாகிவிடும். எங்கே? மிளகு பெருநாவல்லே தான்.  

அப்புறம் மயில் மார்க் குடைகள்னு ஒரு சிறுகதை. அதில் அவள் ‘புரந்தரதாஸரோட தேவர்நாமாவை’ பாடுவாள். ராகி தந்ந்தீரோன்னு. அந்த பாட்டு அந்த கதாபாத்திரத்தை மேலும் வளர்த்து எடுக்குதுன்னா பயன் படுத்துவேன். இந்த அளவோடதான் இருக்கேன்.   சஞ்சயை இன்னும் என் கதையில் கொண்டு வரலை.

14) அதோடு தொடர்ச்சியான மற்றொரு கேள்வி, சமகால இலக்கியத்தில் கர்நாடக இசை பற்றி எழுதுவதில் நீங்கள், யுவன் மற்றும் சுரேஷ்குமார இந்திரஜித் ஆகியோர் நினைவுக்கு வரும்போது எழுத்திலும் தனி வகையில் நீங்கள் மூவரும் இயங்குவதும் தொடர்ந்து புலனாகிறது. ஒருவித கலைத்து போட்டு அடுக்கும் எழுத்துமுறை மூவருக்கும் பொதுவாக உள்ளது. இசைக்கு அதில் பங்கு உள்ளதா?

அப்புறம் மூணுபேரும் சஞ்சய் குரலுக்கு ரசிகராகவும் இருக்கோம்னு சொல்வீங்க. ஆனால் அது எல்லாமே அமைஞ்சு போயிடறது உண்டுதான். அவ்ளோதான். அதுக்கும் இசைக்கும் சம்மந்தம் இருக்கிற மாதிரி எனக்கு ஏதும் அபிப்ராயம் இல்லை.

15) உங்கள் துவக்ககால இலக்கிய அறிமும் மற்றும் அன்றைய சூழல் எவ்வாறு இருந்தது? சுஜாதா எழுத்தை இலக்கியம் அல்ல என நிராகரிக்கும் சூழலில் நீங்கள் கிரேஸிமோகன் அவர்களின் கவிதையை(வெண்பா)  உங்கள் நாவலில் கையாண்டிருந்தீர்கள். இந்த இடைவெளியை எப்படி பார்க்கிறீர்கள். இவ்வாறு நிராகரித்துச் சொல்லும் போது எழும் விமர்சனங்களுக்கு ( தனிப்பட்ட நட்புகளுக்கு அப்பாற்பட்டு) பொதுவான  பதில் என்னவாக இருக்கும்?

நான் 1980களில் கவிதை எழுதிக் கொண்டிருந்தேன். பிரச்சனை இல்லை. ஏன்னா எல்லோரும் கவிதை எழுதுவாங்க. நான் கவிதைலேந்து சிறுகதை நாவலுக்குள்ள வரும் போது தொடர்ச்சியா கணையாழி சுபமங்களாவில் எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது முன்றில் இலக்கியப் பத்திரிகை விற்கும் கடையிலே, மா.அரங்கநாதன்  நடத்தினது அது, அங்கே இலக்கிய ஈடுபாடுள்ள நண்பர்கள் கூடும் கூட்டம் அநேகமாக தினசரி நடக்கும். அங்கு சாரு, எஸ்.ராமகிருஷ்ணன் எல்லாம் வருவாங்க. பிரமிள்  வருவார். விக்ரமாதித்யன் அடிக்கடி தலையைக் காட்டுவார். ஜெயந்தன்  வருவார். நான் வாரத்துக்கு ஒருநாள்ங்கிற மாதிரி போயிடுவேன். இன்னார் இன்னார்னு ஏதோ ஒரு காம்பினேஷன்ல உரையாடல் நடக்கும். முன்றில் பத்திரிக்கையில் எனது கதைகள் வந்திருக்கு, வந்த போது ஜெயந்தன் ஆழமான விமர்சனங்களை வச்சிருக்கார். எஸ்,ராமகிருஷ்ணனும்.

அப்புறம் கணையாழி ஆசிரியர் கஸ்தூரி ரங்கன் தினமணிக்கதிர் எடிட்டராக இருந்தபோது என்னிடம் கதை கேட்டிருந்தார். நானும் இடம்பெயர்தல்னு ஒரு கதையை எழுதி கொடுத்திருந்தேன். சிங்கப்பூரில் இருந்து இந்தியா வரவேண்டிய நெருக்கடியில் இருப்பவனோட கதை. அதை கண்டிப்பா வணிக இதழ்க்கான கதைன்னு சொல்லமாட்டேன். அது வணிக இதழ்ல வெளிவந்தது.  அப்போது முதல் நான் வணிகப் பத்திரிகை, இலக்கியப் பத்திரிகை என்று அந்த இரண்டு குதிரைகளிலும் ஒரே சமயத்தில் சவாரி செய்து கொண்டிருந்தேன். இப்போ இரண்டு குதிரை இருக்கா என்ன?

இப்ப வணிக இதழ்கள்ல ஜெயமோகன் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர்லாம் எழுதிட்டாங்க. நான் ரொம்ப காலமாகவே எழுதினேன். வணிக பத்திரிக்கைன்னா அதோட ரீச் அதிகம். ஆனால் அந்த இடைவெளி ரொம்ப நைந்து போயிடுச்சி.  

அப்புறம் கிரேஸி மோகன் உதாரணத்துக்கு வறேன். அங்க எனக்கு ஒரு வெண்பா தேவைப்பட்டது. என் நண்பர்களில் நன்றாக வெண்பா எழுதக்கூடியவர் கிரேஸி மோகன். அதனால் அவரிடம் கேட்டேன். அவர் முடியலைன்னா இன்னொரு நண்பரான கமல்ஹாஸனிடம் கேட்டிருப்பேன். அவர் ஒருவேளை வெண்பாவிற்கு பதிலாக ஆசிரியப்பா கொடுத்திருக்கும் வாய்ப்பும் இருந்திருக்கும்.

16) (கடலூர் சீனு) தத்துவத்தில் உங்களுக்கு ஈடுபாடு  உண்டா? வரலாற்று அசைவையும்  வாழ்க்கை சுழிப்பையும் சமூக மாற்றங்களையும் அதில் மானுடத்தின் அகப் புற ark நிகழும் விதத்தையும் புனைவால் தொடர முனைகையில் நிச்சயம் தத்துவம் குறுக்கே வந்து நிற்குமே. போரும் அமைதியும் நாவலின் பிற்சேர்க்கையில் டால்ஸ்டாய் ஒரு தத்துவ பாடமே எடுத்திருக்கிறார்.

இதில் உங்கள் பார்வை என்ன?

Character Arc பத்தி கேட்கிறீங்க. என் கதைகளில் வளர்சிதை மாற்றம் அனுபவிக்கும் முழுமையான கதாபாத்திரங்கள் வருவதில்லை.  ஏன்னா காலமும் வெளியும் time space continuum தொடர்ச்சியில் அவை அலைந்து திரிந்து அதிர்ந்து கொண்டிருப்பது ஒரு கணமாகவோ, ஒரு யுகமாகவே இருக்கக் கூடும்.   அதன் வடிவமைப்பு எனக்கு கடினம் கிடையாது.

தத்துவம்னு கேட்டீங்கன்னா ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி சொல்ற மனிதன் படைத்த மனிதன் போன்ற கடவுள் anthropomorphic கடவுள்   ரொம்ப பிடிச்ச விஷயம். தரிசனக் கதைன்னு நான் ஒரு கதை எழுதிருக்கேன். மனிதர்களோடு உறவாட அடிக்கடி வந்து போகும் கடவுள் பற்றியது அது. சம்பிராதயமான ஆந்த்ரொபொமார்பிக் கடவுள் இல்லை இவர்.  அப்புறம் ஜேகே சாவு குறித்து சொல்லியது என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. நமக்கு நம் சாவைப்பற்றி கவலையில்லை. நமக்கு நெருங்கியவர்கள் இறந்து போவதைப் பற்றித்தான் கவலை என்று. அதை மையமாக வச்சும் ஒரு கதை எழுதியிருக்கேன். அப்புறம் சிபி நாயர் கதை ஒண்ணு..  அவர் கதகளி கலைஞர். கடவுளுக்கு டப்பிங் கொடுக்க போவார். அந்தமாதிரி கதைகளில் அவர் பாதிப்பு உண்டு. வாழ்ந்து போதீரோ இறுதி அத்தியாயம் முழுக்க ஆன்மிகம் இடைகலந்த தத்துவ வெளிப்பாடு தான்.

அவரோட ரெண்டு தத்துவ நூல்கள் வச்சிருந்தேன். இப்ப அவை வீட்டுக்குள்ள எங்க இருக்குன்னு தெரியலை. வீடு சுத்தம் பண்ணும் போது பரணுக்கு போயிருக்கனும்

17)  (கடலூர் சீனு) ஜெய்ப்பூர் இலக்கிய விழா வழியே இன்றைய இந்திய இலக்கியம் குறித்து நீங்கள் பெற்ற புதிய அறிதல் ஏதேனும் உண்டா?

அதில் மூணு அமர்வுகள்தான் நான் ஸூம் மீட் மூலம் பார்வையாளனாகக் கலந்துகொண்டவை. இன்னும் சிலவற்றிலும் கலந்து கொள்ள வேண்டும் என நினைத்தும் இயலவில்லை. எல்லாம் யுடியூபில் இருக்கு. மெல்ல பார்க்கணும்.

அந்த மூணு நிகழ்வுகள் – பதினேழாம் நூற்றாண்டில் மராட்டியில் முதன்முதலாக எப்படி யேசு கதா என்று கொண்டு வந்தனர் என்பது குறித்த அமர்வு ஒன்று. அதில் பேசியவர் கூறியபோது “ஒவ்வொரு மொழிக்கும் ஒரு குணாதிசயம் உண்டு. அதை ஒருவர் தொடர்ந்து  பேசும் போது பேசுபவரின் முகபாவம் உடல்மொழி எல்லாம் அதற்கேற்ப மாறும். நீங்கள் உங்களை முன்வைக்கும் முறை கூட மாறும் என்றார். அது மிகவும்  ஆச்சரியமாக இருந்தது. தமிழகத்துல இருக்கிற ஒருத்தர் மூணுவருஷம் கொச்சில இருந்தால் இப்படி நம்ம முகபாவம் உடல்மொழில்லாம்  மாற வாயப்பு இருக்குன்னுதான் நானும் நினைக்கிறேன்.

அப்புறம் நந்தன் நிலகேணி மீட்டிங் ஒன்று.  இன்று நாம் உபயோகிக்கும் gadjet களுக்கு நாம் எப்படி அடிமை ஆகிட்டோம்னு பேசினார். இப்ப கூட பார்த்தால் உங்க கேமிராவுக்கு ஏற்ப நான் வந்து உட்கார்ந்து அதற்கேற்ப தலைகாணியை அட்ஜஸ்ட் பண்ணிதான் உட்கார வேண்டியிருக்கு. அப்புறம் அதை லைட்டா ஆட்டிவிட்டாலும் கீழ விழுந்துருமோன்னு பத்திரமா அதை பார்த்தபடியே பேசிகிட்டு இருக்கோம். அடிமை ஆகிட்டோம்னுதான் தோன்றது

அப்புறம் மூணாவது சுஹாசினி ஹைதர் கூட ஒரு பங்களேதேஷ் ரிப்போர்டர் பாகிஸ்தானி ரிப்போர்டர் எல்லாரும் கலந்துரையாடின zoom மீட்டிங் ஒண்ணு. இவங்கல்லாம்  பேசறப்போ எல்லை கடக்காத கருத்து உருவாக்கம் எப்படில்லாம் நிகழும்ங்கிறது ஆச்சரியமாத்தான் இருக்கு. அவங்க தான் முதலில் break பண்ணினாங்கன்னு இவங்களும் இவங்கதான் மிஸைல் விட்டாங்கன்னு அவங்களும் மாத்தி்மாத்தி குற்றம் சாட்டிகிறாங்க. ஆனாலும் அடிப்படையில் ஒரு அன்பு தென்படுது. அது ஒரு நல்ல உரையாடல். No holes barred discussion னு சொல்லுவார்கள் இல்லையா அப்படிப்பட்ட ஒண்ணா இருந்தது. அதில் பாகிஸ்தான்லேந்து வந்தவங்க ஹிஜாப் அணிந்திருந்தாங்க.  பங்களாதேஷ்லேர்ந்து வந்தவங்க அப்படி ஏதும் அணியவில்லை. That was also interesting

18) ( கடலூர் சீனு) உங்கள் நோக்கில் இந்திய மொழிகளில் அல்லது உலக மொழிகளில் இருந்து இவையெல்லாம் தமிழுக்கு அவசியம் வந்தாக வேண்டும் என்று உங்கள் பார்வையிக்கோணத்தில்  ஒரு 5 ஆக்கங்களை சொல்லலாம் என்றால் இவற்றை சொல்வீர்கள்?

நிறைய வந்தாச்சு இல்லையா… நூறாண்டு தனிமை வந்தாச்சு. இந்தியாவுக்குள்ளேயா….  கன்னடத்துலேந்து பருவம் வந்தாச்சு. மலையாளத்துலேந்து NS மாதவன் அப்புறம்பால் ஸக்காரியா எல்லாரும்தான் வந்தாச்சு. மராட்டிலேந்து அருண் கொலெட்கரை நான் மொழிபெயர்த்து வச்சிருக்கேன். அவருடைய குடும்பத்தார் அனுமதிச்சவுடனே கொண்டு வந்துடலாம். நிறையத்தான் வந்திருக்கு. இன்னும் வராததா… குந்தர் கிராஸின் ஜெர்மன் நாவல் The Tin Drum அப்புறம் The Sugar street trilogy ஐ கொண்டு வரலாம்

19) அரசூர் வம்சம் தொடர் நாவல்கள் மற்றும் ராமோஜியம் எழுதி முடித்த பின்னர் ஒரு பெருநாவலான மிளகு எழுதுவதற்கு  காரணம் என்ன? எந்தவகையில் மிளகு உங்களை ஈர்த்தது?

அரசூர் வம்சம் தொடர் நாவல்கள் நான்கும் நிறைவு செய்து, பயோ பிக்‌ஷன் தியூப்ளே வீதி அடுத்து எழுதினேன். தொடர்ந்து என் நண்பரும் சிறந்த மலையாள எழுத்தாளருமான என்.எஸ்.மாதவனின் ‘லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள்’ நாவலைத் தமிழில் ‘பீரங்கிப் பாடல்கள்’ என்று மொழிபெயர்த்தேன், அதற்குப் பிறகு நெருக்கடி நிலை (எமர்ஜென்ஸி) காலகட்டத்தைச் சித்தரிக்கும் 1975 நாவல் எழுதி முடித்தேன். தொடர்ந்து ராமோஜியமும் மிளகும் எழுதினேன். இவை அத்தனையுமே பெருநாவல்கள் தாம்.

ராமோஜியம் எழுதுவதற்கு முன்பே கொங்கண் கடற்கரையில் நான்கு நூற்றாண்டு முன்பு செழித்து வளர்ந்த மிளகு ஏற்றுமதி வர்த்தகம் பற்றி எழுத நண்பர் கமல் ஹாசன் மூலமாக ஒரு தூண்டுதல் இருந்தது. கர்நாடகம், கேரளம், கோவா, தமிழகம் என்று நீண்டு போகும் மிளகுப் பாதை அது.

கெரெஸொப்பா பிரதேசத்தில் மிளகு ராணி என்று போர்த்துகீசியர்கள் அரசி சென்னபைரதேவியைக் கொண்டாடி அவரோடு மிளகு வர்த்தகத்தில்  ’கொள்வதும் குறைபடாது கொடுப்பதும் நிறைவுபடாது’ சாமர்த்தியமாக ஈடுபட்டார்கள்.  அந்த வர்த்தக உறவு நீடித்திருக்க, சென்னபைரதேவி 54 ஆண்டுகள் தொடர்ந்து அரசாட்சி செய்ததும் முக்கிய காரணம். உலக அளவில் சாதனை இது.

சென்னபைரதேவி பற்றி அறிந்து கொள்ள அவர் இயங்கிய, கெரஸொப்பா, ஹொன்னாவர் போன்ற வடக்கு கன்னட சிறுநகர்கள், ஊர்கள் ஆகியவற்றை நேரில் சென்று பார்த்துவர ஆசை மிகுந்தது. சென்னாவையும் மிளகு வர்த்தகத்தையும் பற்றித் தெளிவாக அறிந்த நண்பர்கள் யாரும் இருந்தால் உரையாடி வரலாமே என்றும் தோன்றியது.

என் நண்பரும் திரைப்பட நடிகரும் இலக்கிய ஆர்வலருமான திரு ரமேஷ் அரவிந்த் கன்னட எழுத்தாளர் டாக்டர் கஜானன சர்மா அவர்களின் நட்பைப் பெற வழி செய்து கொடுத்தார். சர்மாவும் சென்னா பற்றியும் மிளகுப் பொற்காலம் குறித்தும் கன்னடத்தில் நாவல் எழுத முனைந்திருந்தார் என்பது தற்செயலாகக் கிட்டிய எழுத்து சார்ந்த ஒற்றுமையாகப் படைப்பூக்கத்தைத் தீவிரமாக்கியது.

ஆனால் என் செய்ய? பெருந்தொற்று கொரானா உலகையே முடக்கிப் போட்ட காலம் என்பதால் நாங்கள் சேர்ந்து சென்னாபைரதேவி சம்பந்தமாக தேடல் பயணம் வைக்க முடியாமல் தொலைபேசி உரையாடல்களாக எங்கள் தேடல் தொடர்ந்தது. பெருமழைக்காலம் இதற்குள் தொடர, இருக்கப்பட்ட தரவுகளை வைத்து ஷராவதி, கோகர்ணம், ஹொன்னாவர் பற்றிய பழந்தகவல்கள், சென்னபைரதேவியின் வாழ்க்கையை பல தரமாகச் சொல்லும் இத்தாலியப் பயணி, போர்த்துகீசிய பயணிகளின் பயணக் குறிப்புகள் என்று கிடைத்த தகவலை சீர்படுத்தி புனைவு கலந்து மிளகு எழுதி முடிக்க, கோவிட் மூன்றாம் அலையும் மெல்ல வந்து  ஓய்ந்தது. கோவிட் வீட்டுக்குள் முடக்கி விட்ட நேரத்தில் முழு கவனம் செலுத்தி ஈடுபட ஏதாவது வேண்டி இருந்தது. என்னைப் பொறுத்து அது மிளகு நாவலை எழுதியது.  

20) வரலாற்றுத் தரவுகளாக அறியப்பட்ட மிளகு வணிகம் போன்று பிற பொருள்கள் (காபி/தேயிலை, உப்பு வணிகம்) ஆகியவை இந்திய அரசின் மீது  நிகழ்ந்த ஆதிக்கம் என்கிற அளவில் உயர்மட்ட அளவில் கவனிக்கப்படும் ஒன்று. ஆனால் மிளகு நாவல் அதன் உள்வட்ட அரசியலை கூறுகிறது. அதநேரம் தனிமனிதனாக, போர்த்துகீசியரான பெத்ரோ மீது மதிப்பும் நேமிநாதன் மீது விலக்கமும் வருகிறது. மிளகு நாவலுக்கான பின்புலத்திற்காக நீங்கள் மேற்கொண்ட ஆய்வுகள் உள்ளனவா?

மிளகு வரலாற்று நாவல் அல்ல என்று நினைவு படுத்துகிறேன்.அது ஒரு polymorphic historical fantasy. வரலாறு, quantam mechanics க்வாண்டம் மெக்கானிக்ஸ், commodity trading கமோடிட்டி ட்ரேடிங், சமூக, கலாசாரப் பதிவான எழுத்து என்று பன்முகத் தன்மை கொண்ட புனைவு.

வரலாறு, நாவலை முன் நடத்திச் செல்ல உதவுகிறது. வரலாறு இல்லாத இடத்தில் புனைவு வந்து நிரம்பி வெற்றிடம் இல்லாதாக்குகிறது. வரலாற்றுத் தரவுகள் புனைவுக்கு அனுசரணையாக எடுத்தாளப்படுகின்றன நாவல் முழுநீளமும்.

பெத்ரோவும், நேமிநாதனும் முழுக்க point – counterpoint ஆகச் சித்தரிக்கப்படும், வரலாற்று அடிப்படையில் எழுந்த முழுக்க முழுக்கக் கற்பனையான கதாபாத்திரங்கள். நல்ல சமணன் – கபடமான போர்த்துகீசியன் என்று நாம் பழகிய சம்பிரதாயமான அடையாளங்களுக்கு (stereotypes) நேர் எதிரானவர்கள் என்ற சித்தரிப்பை இலக்கிய முரண் தொடர்பானதாக வேண்டுமானால் கருதிக்கொள்ளலாம்.

 54 வருடம் சென்னபைரதேவி அரசாட்சி செய்தாலும் சரித்திரத்தின் அடிக்குறிப்புகளில் கூட மிகச் சில மொழிதல்கள் உள்ளதேயன்றி அவரைச் சுற்றிப் போகும் வரலாற்றெழுத்து ஏதும் இல்லை என்பது ஆச்சரியமான விஷயம். கிட்டத்தட்ட சமகாலத்தவரான உள்ளால் பிரதேச மகாராணி அப்பக்கா தேவி பற்றிக்கூட குறிப்புகள் உண்டு – அப்பக்கா என்று மூன்று தலைமுறையாக பாட்டி, அம்மா, மகள் மூன்று பேருக்கும் குழப்பமாக ஒரே பெயர் இருந்தாலும்! கெருஸொப்பா என்ற துறைமுக நகரமே செழித்து வளர்ச்சி அடைந்தது சென்னபைரதேவி காலத்தில். ஆனால் அது விரைவில், மக்கள் வெளியேறியதால் பாழடைந்து போனது ஆச்சரியமான விஷயம். அடுத்திருந்த கெலதி பிரதேச அரசாங்கப் படைகள் கெருஸொப்பாவை அழிக்க முகாந்தரம் இல்லை. வரலாற்றுத் தரவுகள் இல்லாமல் இருந்தாலும் சென்னபைரதேவி காலத்தில் ஐரோப்பிய யாத்திரீகர்கள் கெருஸொப்பா வந்து தங்கி இருந்து விரிவாக எழுதியிருக்கிறார்கள். முக்கியமான தரவுகளில் அவையும் பிரதானமாக உண்டு.

21) மீண்டும் ஒரு பழைய கேள்விதான்..மிளகுராணி கதை மற்றும் கதாபாத்திரங்களோடு அரசூர் வம்சத்தினரின் இளம் தலைமுறைகளை கொண்டு வந்து இணைத்தது சுவாரசியம்தான். ஆனால் குறிப்பாக  எவ்விதத்தில் அது நாவலுக்கு உதவுகிறது அல்லது  தான் உருவாக்கிய பாத்திரங்கள் மீதான பற்று ஆசிரியருக்குத் தொற்றிக் கொண்டுவிட்டதா?

நாவலாசிரியருக்குத் தான் உருவாக்கிய பாத்திரங்கள் மேல் எப்போதுதான் பற்று இல்லை!  முன்பு சொன்ன மார்க்வெஸின் நூறாண்டு தனிமை நாவலில் ஒரு காட்சியில் வந்து போகிற கர்னல் இன்னொரு நாவலில் வருவார். சபிக்கப்பட்டு பாதி உடல் பாம்பாகும் பெண்  மார்க்வெஸின் நாவல்கள் பலவற்றிலும் வந்து  போவாள். பழகியவர்களைக் கூடுதல் வாத்சல்யத்தோடு எதிர்கொள்கிறோமே அதுபோல் அரசூர் வம்ச பாத்திரங்களில் சில மிளகிலும் வந்து போகும். ராமோஜியத்தில் தி.ஜாவின் மோகமுள் கதாபாத்திரங்கள் வந்து போவது போல் இதெல்லாம் ஒரு ரசானுபவம் தரத்தான். எழுதும் போது இயல்பாக கதை கடந்து வந்து போகிற பாத்திரங்கள் அவையெல்லாம்.

22)  மிளகு நாவலில் ஆட்சியைப் பிடிப்பதற்காக, வணிகம் செய்வதற்காக சற்றும் சம்பந்தமிலாத வழிபாட்டு இடங்களை அவமதித்து குழப்பம் விளைவித்து மத அரசியல் செய்யும் போக்கு குறித்த உங்களுடைய விமர்சனம் எழுந்துள்ளது. இதை இன்றைய அரசியல் மீதான விமர்சனமாக வைக்கலாமா? அல்லது இதுதான் என்றும் தொடரும் ஒன்று என்கிறீர்களா? மூத்த எழுத்தாளராக வரும் தலைமுறைகள் மீது திணிக்கப்படும் இத்தகைய மனரீதியான தாக்குதல்கள் மீது உங்கள் பார்வை என்ன? இது உங்களுக்குள் ஏற்படுத்தும் பாதிப்பு ஏற்படுத்துகிறதா? இந்த போக்கு உங்களை பாதிக்கிறது என்றால்  உங்களை நம்பிக்கை கொள்ளச் செய்வதும் / ஆசுவாசப்படுத்துவதும் எது?

கோவா குற்ற விசாரணை (Goa Inquisition), இந்தக் கதை நடந்ததாகக் கருதப்படக்கூடிய அதே பதினாறாம் நூற்றாண்டில், ஒரு ஐம்பது வருடமாவது முன்னால் நிகழ்ந்தது. போர்த்துகீஸ் அரசாங்கம் காலனிகள் மேல் ஏவிவிட்ட அந்த வன்முறை இந்திய இந்து மத, கலாச்சார, மொழி அடையாளங்களைத் துடைத்தெறிந்து கத்தோலிக்கக் கிறித்துவம் பரவவும், மதத்தோடு கூட மிளகு தலையாய வாசனைத் திரவியங்களின் வணிகம் போர்ச்சுகல்லுக்கு கூடுதல் சாதகமாக விளங்கவுமானது அன்றோ. கோவில்களை இடித்ததும் இதன்  நீட்சிதான்.

கிட்டத்தட்ட இந்தக் காலத்தில் மதத்தைப் பரப்புவதையும், நாடு பிடிப்பதையும் குறிக்கோளாகக் கொண்டு பிஜப்பூர், கோல்கொண்டா முதலிய சுல்தானிய பேரரசுகள் விஜயநகரப் பேரரசை தலைக்கோட்டை யுத்தத்தில் வீழ்த்தி விஜயநகரப் பேரரசர் அலிய ராமராயரின் சிரம் கொய்து தலைநகர் ஹம்பியை சிதைத்துச் சின்னாபின்னமாக்கிய பேரவலம் நிகழ்ந்தது.

 ஆப்கானிஸ்தானில், இந்த நூற்றாண்டில், பிரம்மாண்டமான, கீழைத்திசைக் கலாசார அடையாளங்களான பாமினியன் புத்தர் பெருஞ்சிலைகளைத் தகர்த்த அராஜகமும், பங்களாதேசத்தில் மிக அண்மையில் சிவராத்திரிப் பெருநாளன்று சிவன் கோவிலை அழிக்க முற்பட்ட நிகழ்வும் மதம் தொடர்பான வன்முறை, மிளகு நாவலில் வரும் அசுரவித்து விளைத்த பேய்மிளகு மாதிரிக் கெல்லி எறிய எறிய மறுபடி முளைத்து வரும் என்று தோன்ற வைக்கிறது.

ஹம்பி சிதிலங்களைப் பார்க்கும்போது ஒரு எழுத்தாளனாக இனம் புரியாத மன வருத்தம் நானூறு வருடம் கழித்து அது நேற்று நடந்ததுபோல் எழுகிறது. ஹம்பி மட்டுமில்லை. மொழியின், மதத்தின் பெயரால் கட்டவிழ்த்து விடப்படும் எந்த வன்முறையும் எழுத்தாளனை, அவற்றைப் பற்றி எழுதாவிடினும் எதிர்மறையாகப் பாதித்து, படைப்பில் பிரதிபலிக்கும். பிரதிபலிக்க வேண்டும். எழுத்தாகவோ, பேச்சாகவோ எழுப்பப்படும் வன்முறையும் இதில் அடக்கம்.

23)  வணிகமும் சமணமும் கலந்த ஒரு முரணாக ஒரு இழையை காட்சியமைக்கிறீர்கள்.. இது ஒருபக்கம் பொருள் ஈட்டும் பற்று மறுபக்கம் துறக்கும் திகம்பரம் என சமணத்தின் இரு பிரிவுகளை கூறுகிறது.  சமண  பஸதிக்குள் புத்திர பாசத்தில் சென்று விழும் பரமன் என இந்த duelaity பாத்திரங்கள் வரை நீளுகிறது. சமணம் மீதான உங்களுடைய பார்வைகளை கூற இயலுமா..? அது குறித்து எழுதும் எண்ணம் உள்ளதா?

 இந்தக் கதை நிகழும் காலத்தில் சமணம் தன் தனி அடையாளத்தைப் பெரும்பாலும் தொலைத்து வைதீக இந்து மதத்தில் கலந்து கரைந்து கொண்டிருந்தது. சென்னபைரதேவி சதுர்முக பசதி கட்டிய அதே சுறுசுறுப்போடு கோகர்ணம் சிவன் கோவிலில் திருப்பணி செய்கிறார். இது வரலாறு. நாவலில் சென்னாவின் தத்தெடுத்த புத்திரனாக வரும் நேமிநாதன் இந்த இருமை கரைந்துவரும் ஒருமை மத நம்பிக்கை சார்ந்து கெலதியில் சிவன் கோவிலில் வழிபடுகிறான். வரலாறு அடிப்படையான புனைவில் சென்னபைரதேவி சிவராத்திரியன்று கெருஸொப்பா சிவன்கோவிலில் வழிபாடு செய்யப் போகிறாள் – சமண மதத்தவள் ஆக இருந்தாலும். இது இயல்பாக கதையிலும் வரலாற்றிலும் நடந்த நிகழ்வு. நேமிநாதன் கதாபாத்திரம் போர்த்துகீசிய கார்டெல் வணிகக் குழு யோசனைப்படி சிவன் கோவிலில் வெடியை விட்டெறியவும் அதே போல் சமண பசதியில் மாமிசத் துண்டை எறியவும் நடந்த சதியின் பின்னணியில் இருக்கிறான். அதுவரை இல்லாததாக, இந்த இரு மதங்களுக்கு நடுவே பரஸ்பர நம்பிக்கை குறைந்து ஒருவரை மற்றவர் சந்தேகப்படும் சூழல் அங்கே உருவாகிறது. மதம் தொடர்பான வன்முறையின் மோசமான அம்சம் வன்முறையைத் தூண்டி விடுவது. அப்படிச் செய்கிறவர்களை அடையாளம் காண்பது கடினம். மக்களே போல்வர் அக்கயவர். இந்த நிலை சீர்படுமா? மானுடத்தில் நம்பிக்கை வைக்கும் இலக்கியமும், கலைவெளிப்பாடுகளும் அதற்கான நம்பிக்கை தருமா? காலம் தான் சொல்ல வேண்டும்.

சமணம் பற்றி நாவலில் சென்னபைரதேவி உரத்த சிந்தனையாகவும் அப்பக்கா தேவியோடான உரையாடலிலும் சொல்வதுதான் என் நோக்கும். நான் பேச வைத்தபடிதானே அவர்கள் பேசுவார்கள்.

மகாத்மா காந்தியின் அஹிம்சை   சமணத்திலிருந்து கால்கொண்டது. பெண்ணுக்கு சுவர்க்கம் கிட்டாது, அவள் ஆணாக மறுபடி பிறந்தே சுவர்க்கம் புக நோற்க வேண்டும் என்பது போன்ற நம்பிக்கைகளை  கடந்து அஹிம்சையை, புலால் மறுப்பை, கள்ளுண்ணாமையை ஆயிரம் ஆண்டாக பாரத பொதுமனப்பாங்கில் ஏற்படுத்தியிருப்பது சமணம். மகாத்மா காந்தியின் வாக்கால், வாழ்க்கையால் மறு உறுதி செய்யப்பட்டது இவை அனைத்தும்.

பரமன் சுழலும் சதுர்முக பசதிக்குள் நுழைவது ஒரு இலக்கிய உத்திதான். வாசகருக்கு நாவலோட்டத்தில் பழக்கமான பசதியை காலத்தில் முன்னும் பின்னும் சென்று வரும் உத்திக்கான கருவியாகப் பயன்படுத்த நாவலில் வருகிறது அது. மற்றப்படி சுழலும் கட்டிடங்கள் அறிவியலுக்கு அப்பாற்பட்டவை.

24)  உப கேள்வி.. ( இது ஒரு ஜாலியான கேள்விதான்.. வேண்டாமெனில் விட்டுவிடலாம்) முருகன் என்று  பெயர் இருந்தாலும் தமிழகத்தை அடுத்து உள்ள  பகவதி, குருவாயூர், கர்நாடக ஜைனம் அளவு தமிழக ஆன்மீகம் குறித்து எழுதவில்லையே  அது குறித்து எழுதும் எண்ணம் உள்ளதா?

பெயருக்குக் கதை எழுதணுமா? செஞ்சுட்டாப் போறது..

அச்சுதம் கேசவம் நாவலில் அரசூர் சிவாலயத்தில் வழிபட, திருவெம்பாவை ஓத அதிகாலையில் போகும் பகவதி மூலம் கொஞ்சம் தமிழ் ஆன்மீகத்தைத் தொட்ட நினைவு. அரசூர் வம்சத்தில் வைகை நதியில் நீராடி மதுரை மீனாட்சி திருக்கோவிலில் வணங்கி வரப் போகும் கனபாடிகளும் நினைவில் வருகிறார். இதென்ன, பக்திக் கணக்கு பார்க்கிறதாக நீண்டுவிடும் போலிருக்கே!

25)  இன்றைய இலக்கிய போக்கு குறித்த உங்கள் பார்வை / விமர்சனம் என்ன? உங்களுக்கு அடுத்த தலைமுறையில் நீங்கள் வாசிக்கும் எழுத்தாளர்கள் யார் யார்?

 எழுபதுகளில் தமிழ்ச் சிறுகதையின் இரண்டாம் பொற்காலம் வந்த பிறகு (1940களின் மணிக்கொடிக்காலம் முதல் பொற்காலம்) இந்த நூற்றாண்டுத் தொடக்கத்தில் சிறுகதைகள் வரவு குறைந்திருந்தது. இப்போது மறுபடி சிறுகதைகள் நிறையத் தென்படுகின்றன.

மற்றப்படி இது நாவல்களின் காலம். சிறுகதை எழுதி வந்தவர்களும் கவிஞர்களும், கட்டுரையாளர்களும், ஓவியர்களும், சிற்பிகளும், பேச்சாளர்களும் குறைந்தது தலைக்கு ஒரு நாவலாவது எழுதுவதைக் காண மகிழ்ச்சியாக உள்ளது.

கலைச்செல்வி, ஆத்மார்த்தி, ஸ்ரீதர் நாராயணன், சுநில் கிருஷ்ணன், வா.மு.கோமு என்று தொடங்கும் நீளப் பட்டியலாக அடுத்த தலைமுறைப் படைப்பாளர்கள் சிறப்பாகச் சிறுகதையிலும் தொடர்ந்து நாவலிலும் செயல்படத் தொடங்கியுள்ளனர். பெரிய பட்டியல் இது. விரிப்பின் பெருகும். அவர்களுக்கு நல்வரவு. அறிவியல் புனைகதை எழுதத்தான் படைப்பாளிகள் குறைவு. சுதாகர் கஸ்தூரி தனியனாக நினைவு வருகிறார்.

26) இன்றைய காட்சி ஊடக காலத்தில்  முன்பிருந்த தீவிர இலக்கியம் & வெகுஜன எழுத்துக்கான இடைவெளி குறைகிறதா.. இனி  எழுத்தாளர்களுக்கான இடம் எத்தகையாதாக இருக்கும் எனக் கருதுகிறீர்கள்?

காட்சி ஊடகம் பெரும்பாலும் coordinated collaborative effort ஒருங்கிணைத்த கூட்டு முயற்சி அடிப்படையில் இயங்குவது. வெகுஜன எழுத்தாளருக்கும் தீவிர இலக்கிய எழுத்தாளருக்கும் அங்கே இடமுண்டு.  தொடர்ந்து நிகழும் காட்சி ஊடக இடையூடுகள் இரு தரப்புக்கும் இடையே இடைவெளியைக் குறைத்துக்கொண்டு வருகின்றன. இது தனியாளுமை அடிப்படையில் நிகழ்வது. சார் என்ற மரியாதை விளியைப் பயன்படுத்தத் தொடங்கும்போது தீவிர இலக்கிய எழுத்தாளர் இந்த இடைவெளியைக் கடக்கிறார்.

27) மீண்டும் சுஜாதாவிலேயே முடிக்கலாம்.. அவர் எழுதிய கணையாழியின் கடைசி பக்கங்கள் மற்றும் கற்றதும் பெற்றதும் போன்றவை பலதரப்பட்ட தளங்களில் விரிந்து சென்றவை. அது போல இலக்கியம், இசை, தகவல் தொழில் நுட்பம், விளையாட்டு, மெய்யியல் என பல தளங்களில் நீங்களும் எழுதியுள்ளீர்கள். இன்று காட்சி ஊடங்கள் தன் hits வருமானத்மிற்காக  அன்றைய செய்திகளை விவாதித்து சென்றுவிடுகின்றன. இன்று சுஜாதா கட்டுரைத் தொடர் போல ரசனை / விமர்சன அனுபவ கட்டுரைகளின் தேவை பெருகியுள்ளதா?  அது போன்ற ஒரு தொடர் எழுதும் எண்ணம் உண்டா?

பத்திக் கட்டுரை விஷயத்தில் சுஜாதா ஒரு ஜாம்பவான். அவரை இதுவரை இந்த விஷயத்தில் யாரும் ஜெயித்ததில்லை.

அரசியலோ, இலக்கியமோ, சமூக விமர்சனமோ, அறிவியலோ, அவை குறித்த column பத்திரிகைப் பத்திகள் பெரும்பாலும் வசீகரமானவை. வெகுஜனப் பத்திரிகையில் தீவிர இலக்கியம் குறித்து நோகாமல் நோன்பு நூற்கிறதாகவும், அரசியல் விமர்சனம், அயல்தேச சினிமா அறிமுகம், குறு பயணக் கட்டுரையாக முந்தாநாள் கனடாவில் வான்கோர் நகரம் போய் வந்தது என்றும் எல்லாம் பத்தியாகலாம். விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் தொடங்கி வைப்பதாகவும் சில பத்திகள் திகழ மற்றவையும் அடிக்கடி கண்ணில்படத் தொடர்ந்து வருவதால் வாசகர் கவனத்தை ஈர்க்கும்.  குங்குமத்தில் ‘அற்ப விஷயம்’, திண்ணையில் ‘வார பலன்’, விகடனில் ‘உலகே உலகே உடனே வா’- தமிழில் முதல் இண்டர்நெட் பத்தி, கல்கியில் டிஜிட்டல் காண்டீன், யுகமாயினியில் ’ஏதோ ஒரு பக்கம்’ என்று நான் எழுதிக் குவித்தாகி விட்டது. போதும். (புரவிக்கு பத்தி வேண்டுமானால் உள்பெட்டிக்கு வாருங்கள்).

நேர்கண்டவர்கள்: எழுத்தாளர் காளிப்ரஸாத் & சுரேஷ்பாபு

நன்றி: கடலூர் சீனு

புகைப்படங்கள்: சுரேஷ்பாபு

(வாசகசாலை சார்பாக வெளிவந்த கலை இலக்கிய மாத இதழான புரவியின் ஏப்ரல் 2022 மற்றும் மே 2022 இதழ்களில் இரண்டு பாகங்களாக வெளியான நேர்காணல்)

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button