தொடர்கள்
Trending

‘யாதும் டிசைன், யாவரும் டிசைனரே’ – கண்ணோடு பேசும் நிறங்கள்-2- மாரியப்பன் குமார்

தொடர் | வாசகசாலை

முந்தைய கட்டுரையில் கூறியது போல வெறும் தோற்றத்தோடு மட்டும் இல்லாமல் ஒரு தொடர்பையும் உருவாக்குவது தான் டிசைன். கண்ணால் பார்ப்பதால் மட்டுமில்லாமல், கேட்டல், தொடுதல் மற்றும் பேசுவதாலும் இந்த தொடர்பை ஏற்படுத்துகிறோம்.

நிறம், எழுத்து, உருவங்கள், இடைவெளி போன்றவைதான் பார்த்தல் மூலம் நாம் தொடர்பு ஏற்படுத்த உதவுகின்றன. அவற்றைப் பற்றி முதலில் புரிந்து கொள்ளலாம்.

ஒரு நிறத்தை அல்லது நிறக்கலவைகளை பார்க்கும்போது நம்மை அறியாமலே அது குறிக்கும் அர்த்தத்தை புரிந்து கொள்கிறோம். உதாரணத்திற்கு கீழே உள்ள மொபைல் போன் திரையில், செயலிகளின் நிறத்தை மட்டும் வைத்து எது வாட்சப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என்று உங்களால் கண்டு பிடிக்க முடிகிறது அல்லவா?.

இவை பரவலாக எல்லோரின் போனிலும் இருப்பதாலும், தினசரி நாம் அவற்றைப் பார்ப்பதாலும் உடனடியாக நம்மால் அடையாளம் காண முடிகிறது. இங்கே நிறம், ப்ராண்ட்களை(Brand) ஒன்றிலிருந்து மற்றொன்றை தனித்து அடையாளப்படுத்த உதவியிருக்கிறது.

உதாரணத்திற்கு, உங்களது வங்கிக்குச் சென்று பாருங்கள். வாசலில் தொங்கிக் கொண்டிருக்கும் பெயர்ப்பலகையில் இருந்து பாஸ்புக், ஏ.டி.எம் திரை, மொபைல் செயலி, வலைதளம் வரை எல்லாவற்றிலும் குறிப்பிட்ட ஒரே நிறங்களை மட்டுமே காண முடியும்.

ஒருவர் எத்தனை வங்கிகளில் வேண்டுமானாலும் அக்கவுண்ட் வைத்திருக்கக் கூடும், எனவே எந்த வங்கி சம்பந்தப்பட்ட பொருள் மற்றும் சேவையைப் பயன்படுத்தப்போகிறோம் என்று மக்கள் சுலபமாக கண்டுகொள்ள வங்கிகள் தங்களுக்கு என்று சில நிறங்களை தேர்ந்தெடுத்திருக்கின்றன.

நிறங்கள் தரும் அர்த்தங்கள் அதோடு மட்டும் நின்று விடாமல், ‘நாம் என்ன புரிந்து கொள்ள வேண்டும், புரிந்து கொண்டு அடுத்து என்ன செய்ய வேண்டும்’ என்கிற குறிப்பையும் சில இடங்களில் நமக்கு தருகின்றன. உதாரணத்திற்கு டிராபிக் சிக்னல். நாம் சாலையில் எப்போது நிற்க வேண்டும், செல்ல வேண்டும் என்று டிராபிக் விளக்குடன் தொடர்பு ஏற்படுத்துவதால் தெரிந்து கொள்கிறோம்.

முதல் உதாரணத்தில் காட்டப்பட்டது போல டிராபிக் விளக்கின் நிறங்கள் குறிப்பிட்ட நிறுவனத்தால் அவர்களது ப்ராண்டை நிறுவக் கொண்டு வரப்பட்டது அல்ல. உலகம் முழுக்க எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறை. உலகத்தின் எந்த மூலையில் உள்ள டிராபிக் லைட் தயாரிப்பாளர்களாலும் இந்த நடைமுறையை மாற்ற முடியாது, அப்படி மாற்றினால் நம்மால் ஏற்றுக்கொள்ளவும் முடியாது (ஜப்பான் தவிர!). நம் ஊரில் சிவப்புக்கு பதில் இனிமேல் ஊதா என்று மாற்றினால் அதனால் ஏற்படும் குழப்பங்களை நினைத்துப் பாருங்கள்.

“அதனால் என்ன? பத்து நாளில் பழகிவிடும்” என்று நினைக்கலாம். வாகனங்களை நிற்க செய்ய சிவப்பு நிறத்தை பயன்படுத்தக் காரணம் என்ன என்று கீழே உள்ள படத்தை பார்த்தால் உங்களுக்கே தெரிந்து விடும். சிவப்பு நிறம் என்பது அபாயத்தைக் குறிக்கவும், உடனடியாக கவனிக்கப்பட வேண்டியவற்றை குறிக்கவும் உலகம் முழுக்க பயன்படுத்தபடுகிறது.

டிசைனர்கள் இவற்றைத் தெரிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியம். நிஜ வாழ்வில் இப்படி பயன்படுத்தப்படும் நடைமுறைதான் வலைதளங்கலும் மொபைல் போன்களிலும் கூட பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் பயனாளர்களுக்கு புதிதாக எதையும் சொல்லித்தர வேண்டிய அவசியம் இல்லை. சிவப்பு நிறத்தில் Password பகுதியை குறித்துக் காட்டுவதன் மூலம், ஏதோ சரி இல்லை என்று பயனாளர்கள் அவர்களாகவே புரிந்து கொள்வார்கள்.

சமீபத்தில் ‘வோடபோன்’ என்ற சிம் கார்டு நிறுவனம் ‘ஐடியா’ நிறுவனத்தோடு இணைந்து ‘vi’ என்று தனது பெயரை மாற்றிக் கொண்டது. ஊர் முழுதும் உள்ள அனைத்து ரீசார்ஜ் கடைகளிலும் பழைய பெயரை அகற்றி விட்டு புது பெயரைக் கொண்டுவருவது என்பது சாதாரண காரியம் அல்ல. சில இடங்களில் ‘வோடபோன்’ என்ற பழைய பெயரும், சில இடங்களில் ‘vi’ என்றும் பார்க்க முடிகிறது.

நாம் உபயோகப்படுத்தி வந்த நிறுவனம் தான், தன் பெயரை மாற்றிக் கொண்டது என்ற தகவல் எத்தனை பேருக்கு சென்றடைந்திருக்கும் என்பது கேள்விக்குறி!

இதில் வேடிக்கை என்னவென்றால், நம் நாட்டில் இப்போது இருக்கும் மூன்று சிம் கார்டு நிறுவனங்களும் ஒரே நிறத்தை பயன்படுத்துகின்றன.

நிறத்தை தேர்வு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். நன்கு ஆராய்ச்சி செய்த பின்னரே நிறத்திட்டங்களை (color scheme) முடிவு செய்ய வேண்டும். பின்னர் அதிலிருந்து அடிக்கடி மாறக்கூடாது.வெவ்வேறு புது நிறங்களை அறிமுகப்படுத்தவும் கூடாது. அப்படி கட்டாயமாக மாற்றம் செய்ய வேண்டுமானால் அது முழுமையானதாக இருக்க வேண்டும். ஏற்கனவே பழக்கப்பட்டவர்களுக்கு குழப்பம் ஏற்படுத்திவிடாதவாறு சரியாக விளம்பரப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

மற்றொரு முக்கியமான விஷயம், நாம் தேர்ந்தெடுக்கும் நிறங்கள் எல்லாராலும் எளிதாக பிரித்து அறியக்கூடிய நிறங்களாக இருக்க வேண்டும். பயனாளர்கள் சிலர் பார்வைத்திறன் குறைந்தோ அல்லது நிறக்குறைபாடு பாதிப்புள்ளோராகவோ இருக்கலாம். Protanomaly என்ற ஒரு வகையான நிறக்குறைபாடு பாதிப்புள்ளவர்களுக்கு சிவப்பு நிறம் கீழே காட்டப்பட்டது போல தான் தெரியும்.

இந்த பிரச்சனையத் தீர்க்க, மற்ற டிசைன் காரணிகளான எழுத்துருக்கள்(Typography), உருவங்கள்(Icons), சத்தங்கள் போன்றவை உதவி செய்கின்றன. உதாரணத்திற்கு மேலே உள்ள படத்தில், வெளியே செல்லும் வழியைக் காட்ட Exit என்ற எழுத்தும் மற்றும் வெளியே செல்லும் மனித உருவமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றைப் பற்றி அடுத்து வரும் அத்தியாயங்களில் காணலாம்.

 

தொடரும்…

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button