‘யாதும் டிசைன், யாவரும் டிசைனரே’ – ஏன் டிசைன் தெரிந்து கொள்ள வேண்டும்? – மாரியப்பன் குமார்
தொடர் | வாசகசாலை
முதலில் டிசைன் என்பதற்கு விளக்கம் தெரிந்து கொள்வது அவசியம். இந்த வார்த்தையை நாம் பொதுவாக எல்லா இடங்களிலும் பயன்படுத்தி இருப்போம். இதற்கு தீர்க்கமாக ஒரு விளக்கம் தருவதென்பது சற்று கடினம். எனவே உதாரணங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம்.
“அந்த முதல் கேக் சூப்பரா இருக்கு, அதை பேக் பண்ணுங்க” என்று கேக் கடையில் சொல்லியிருப்போம் இல்லையா?
இதில் டிசைன் என்பது நிறம், தோற்றத்தை மட்டுமே குறிக்கும். அதில் உள்ள டிசைன் கண்களுக்கானது மட்டுமே. எந்த கேக் என்று தேர்வு செய்ய உதவுவதோடு டிசைனுடைய வேலை முடிந்து விடுகிறது. அதன் பின்னர் நமக்கு அதன் ருசிதான் முக்கியம்.
மற்றொரு உதாரணத்தைப் பார்க்கலாம். மளிகைக் கடையில் பல் துலக்கும் ப்ரஷ் ஒன்றை வாங்குவதாக வைத்துக் கொள்வோம்.
- “அந்த பிங்க் கலர் சின்ன ப்ரஷ் குடுங்க” என்று குறிப்பிட்டுக் கேட்டிருப்போம்.
இந்த உதாரணத்தில், நிறத்தைக் குறிப்பிட்டுக் கேட்டாலும் உண்மையில் அது பயனாளரைப் (user) பொறுத்து மாறுபடுகிறது. ப்ரஷ்களின் உருவ அளவு அது சிறியவர்களுக்கானதா அல்லது பெரியவர்களுக்கானதா என்று நமக்குக் காட்டுகிறது. இங்கே பயனாளர் ஒரு குழந்தை. எனவேதான் ‘சின்ன ப்ரஷ்’ என்று கேட்டு வாங்குகிறோம். அதே நேரம் நிறமும் இங்கே பயன்படுத்தப்படுகிறது. ‘பிங்க் கலர்’ என்று குறிப்பிட்டுக் கேட்க காரணம், அது குழந்தைக்கு பிடித்த நிறமாக இருக்கலாம், வீட்டில் இரண்டு குழந்தைகள் இருப்பதால் வெவ்வேறு நிறங்கள் தேவைப்பட்டிருக்கலாம் அல்லது பெண் குழந்தைக்கு பிங்கதான் பிடிக்கும் என்று அப்பாவே முடிவு எடுத்திருக்கலாம். இதில் டிசைன் தோற்றத்தைத் தாண்டி, இந்தப் பொருள் யாருக்கானது என்பதையே தீர்மானிக்கிறது.
இதுதான் டிசைன் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம். எல்லாப் பொருட்களிலும் டிசைன் இருக்கும். ஆனால் சிலவற்றில் அவை வெறும் தோற்றத்தோடு மட்டும் நின்று விடாமல், நாம் அதைப் புரிந்துகொண்டு பயன்படுத்த வேண்டியதாக இருக்கும். அவ்வாறு புரிந்து கொள்ள பயனாளர்கள் எந்த சிரமும் படக்கூடாது. இதை உறுதி செய்வதே டிசைனுடைய வேலை.
பயனாளர்களையும் அவர்களின் தேவையையும் புரிந்துகொண்டு வடிவமைப்பதே டிசைன்.
டிசைன் எல்லாத் துறைகளுக்கும் பொதுவானது. கட்டுமானம், தயாரிப்பு, ஆடை வடிவமைப்பு, மென்பொருள், கம்ப்யூட்டர் விளையாட்டு, திரைத்துறை என சொல்லிக்கொண்டே போகலாம். மேற்கண்ட எல்லாத் துறைகளுமே ஏதேனும் ஒரு பொருளை உருவாக்குகின்றன. அவை பெரும்பாலும் நேரடியாக பயனாளர்களுக்கானதாக இருக்கும்.
இந்த டிசைன் எப்படி அந்தப் பொருளுக்கும் நமக்கும் பாலமாக வேலை செய்கிறது?
நாம் ஒருவரிடம் பேசுவதும், அதற்கு அவர் பதில் சொல்வதும்தான் உரையாடல். இந்த உரையாடல் என்னும் இருவழித் தொடர்புதான் நம் எண்ணங்களை எதிரில் உள்ளவருக்கும், அவர் எண்ணத்தை நமக்கும் தெரியப்படுத்துகிறது. இதேபோல, நாம் பயன்படுத்தும் பொருள்களும் நம்முடன் உரையாடுகின்றன, டிசைன் மூலமாக.
உதாரணத்திற்கு, டிவி — ரிமோட்
டிவியின் ஒலியை அளவை மாற்ற அதற்கான பட்டனை அழுத்துவோம் (இது நாம் டிவியிடம் பேசுவது)
உடனே டிவியின் திரையில் ஒலி அளவு எவ்வளவு என்று தோன்றும். (இது நமக்கு டிவி தரும் பதில்)
இதுபோல வாஷிங் மெஷின், ஏ.டி.எம், பைக் என்று தினசரி வாழ்க்கையில் இப்படி நிறைய சாதனங்களோடு உரையாடுகிறோம். அந்த உரையாடல் கரடு முரடாக இல்லாமல் சுமூகமாக அமைய அதன் டிசைன் சிறந்ததாக இருக்க வேண்டும்.
“சரி, டிசைன் நல்லாருந்தா என்ன? இல்லைனா என்ன? வேலை செஞ்சா போதாதா?” என்று நமக்கு தோன்றலாம்.
நல்ல டிசைன் என்பது பயனாளர்களின் வேலையை சுலபமாக்குவது மட்டுமின்றி, பயனாளர்களை தவறு செய்யாமல் தடுக்கவும் வேண்டும். அப்படியே தவறாக ஏதேனும் செய்தாலும், அதிலிருந்து வெளியேறும் வழியையும் காட்ட வேண்டும்.
உதாரணத்திற்கு, நம்மில் எத்தனை பேர் ஏ.டி.எம் இல் பணம் எடுத்த பின்பு நமது Debit card ஐ மறந்து விட்டு வந்திருப்போம். சில நேரம் காவலாளி அல்லது நமக்கு அடுத்து பணம் எடுக்க வருபவர் நம்மைக் கூப்பிட்டு மறந்து விட்ட கார்டை திருப்பிக் கொடுப்பார்கள்.
‘சே…’ என்று தலையில் அடித்துக் கொண்டிருப்போம். ஆனால் உண்மையில் தலையில் அடிக்கப்பட வேண்டியது அந்த ஏ.டி.எம் ஐ வடிவமைத்தவர்கள்தான். ஏனெனில் இங்கே பிழை செய்தது பயனாளர் அல்ல, தவறு ஏற்படுமாறு டிசைன் செய்தவர்கள்தான்.
பணம் எடுத்த பின் கார்டு வெளியே எடுத்தல்
கார்டை செருகி விட்டு, PIN மற்றும் தேவையான தொகையை உள்ளிடுவோம். ’க்க்ர்ர்ர்ர்…’ என்று சத்தம் வந்த பின்னர் நம் கவனம் முழுவதும் பணம் எப்போது வெளியே வரும் என்பதில் மட்டுமே இருக்கும். பின்னர் பணம் கையில் கிடைத்த உடன் நமது வேலை இங்கே முடிந்தது என்று மூளை சொல்லிவிடும். ‘Take your card’ என்று திரையில் வருவதை கவனிக்காமல் வெளியே சென்று விடுவோம்.
அந்த அறிவிப்பை திரையில் காட்டினால் மட்டும் போதும் என டிசைனர் நினைத்தது இங்கே தவறாகி விட்டது. பயனாளர்கள் எங்கே தவறிழைக்க வாய்ப்புள்ளது என முன்னரே அறிந்து கொள்வது அவசியம்.
கார்டை எடுத்த பின்னரே பணத்தை எடுத்தல்
இந்தப் பிழையை சரி செய்யும் விதமாக சில ஏ.டி.எம் களில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. கார்டை எடுக்காமல் பணத்தை எடுக்க முடியாது என்பதே அது. இங்கே பணம் எடுக்க வேண்டும் என்ற நமது குறிக்கோள் தடைபடுகிறது. அதனால் Card ஐ மறப்பது நிச்சயமாக நடக்காது.
இங்கே நடக்கும் தவறு, ஒரு நபரை அல்லது சிலரை பாதிக்கலாம். இந்த பாதிப்பு சிறிய அளவிலானது மற்றும் சரி செய்யப்படக் கூடியது. இதே பாதிப்பு உயிர் சம்பந்தப்பட்டதாக இருந்தால்? அல்லது பேரழிவை உண்டாக்கினால்? அப்படிப்பட்ட சம்பவங்களும் நடந்திருக்கின்றன.
மேலே காட்டப்பட்டுள்ள இரண்டு Spray களும் ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று பூச்சிக்கொல்லி மருந்து மற்றொன்று உணவுக்காக பயன்படுத்துவது. இதில் உணவுக்கான Spray ஐ பூச்சி மீது தவறாக தெளிப்பதால் எந்த பாதிப்பும் இல்லை, ஆனால் பூச்சிக்கொல்லியை உணவில் தவறாக தெளித்து விட்டால் உயிருக்கே பாதிப்பு ஏற்படும். இந்த தவறுக்கு முழுக்க முழுக்க காரணம் டிசைன் மட்டுமே.
இதே போன்ற ஒரு தவற்றால் ஒரு ஊரே அழிய வேண்டிய சூழ்நிலை அமெரிக்காவில் ஏற்பட்டது. 1979 இல் Three Mile Island என்ற இடத்தில் உள்ள அணு உலை செயலிழந்து அணுக்கதிர் வீச்சு வெளியே கசிந்தது.
அவசர அவசரமாக மக்களை வெளியேற்றியது அரசாங்கம். அரசாங்க பதிவுப்படி எந்த மரணமும் நிகழவில்லை என்று காட்டப்பட்டது. ஆனால் உண்மை வேறு என மக்கள் கூறுகின்றனர். அணுவெடிப்பின் கோர தாண்டவம் எப்படி இருக்கும் எனத் தெரிந்து கொள்ள ரஷ்யாவில் நிகழ்ந்த ‘Chernobyl’ விபத்து பற்றி தேடிப் பாருங்கள்.
Three mile island விபத்து நடக்க காரணம், ஒரு சிறிய விளக்கு! அணு உலையில் மிக முக்கியமான பகுதி சரியாக வேலை செய்கிறதா என்று காட்டவேண்டிய விளக்கு அது. அது கவனிக்கத்தக்க வகையில் டிசைன் செய்யப்படவில்லை. மேலே காட்டப்பட்ட படத்தைப் பார்த்தால் புரியும், தவறு மிக எளிதாக நடக்க வாய்ப்புள்ளது. மேலும் தெரிந்து கொள்ள…
இப்போது புரிந்திருக்கும் நல்ல டிசைனின் முக்கியத்துவம். நம் ஊரிலும் அணு உலைகள் உள்ளன. மெட்ரோ ரெயில், விமானம், தொழிற்சாலைகள் இப்படி எல்லா இடங்களிலும் இது போன்ற சிக்கலான சாதனங்கள் கையாளப் படுகின்றன. இவற்றை வடிவமைக்கும் பொறுப்பு டிசைனர்களுடையது. எனவே முழு புரிதல் இல்லாமல் உருவாக்கப்படும் எந்த ஒரு டிசைனும் தோற்க நேரிடலாம். அதோடு ஆபத்தாகவும் முடியலாம்.
எனவே எந்த ஒரு பொருளும் சிறப்பாக வடிவமைக்கப் பட வேண்டியது இன்றியமையாதது.
அடுத்து வரும் பகுதிகளில், டிசைனின் முக்கிய மூலக் கூறுகளான நிறம், உருவம், மொழி நடை, பாணி போன்றவற்றைப் பற்றி விரிவாகக் காணலாம்.
தொடரும்…
Fantastic