
மனிதனுக்கு மனிதன் உதவுவது இல்லை என்று பலரும் புலம்பக் கேட்டிருப்போம். ஒருசில சமயங்களில் நாமே கூட புலம்பியும் இருப்போம். இருப்பினும் முகமறியா ஒருவருக்கு உதவும் எண்ணம் நமக்குள்ளே தோன்றுவதில்லை. ஏனெனில் நாம் தான் ஏற்கனவே மனிதர்களோடு இருக்கும் நம்பிக்கையைத் தொலைத்து விட்டிருக்கிறோமே. பின்னர் எங்கிருந்து உதவப் போகிறோம். ஆனால், இதைப் போலவே தான் மற்றவர்களும் இருப்பார்கள் என்கிற எண்ணம் மட்டும் நம்முள்ளே தோன்றுவதே இல்லை. மன்னிக்கவும். கடந்த சில மாதங்களாக என் சித்தம் மிகத் தெளிவாகக் குழம்பிப் போயிருப்பதால், இப்படி சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எழுதவும் பேசவும் துவங்கியிருப்பதால், நான் எழுத நினைத்ததை விடுத்து வேறு ஏதேதோ எழுதிக் கொண்டிருக்கிறேன். வாசகர்கள் பொறுத்தருள்க.
நேற்று பின்மதியம் அல்லது முன்மாலை நேரத்தில் ஐசிஐசிஐ வங்கியின் சிடிஎம்மில் பணம் செலுத்தச் சென்றிருந்தேன். பணம் செலுத்த எனக்கும் முன்னே நான்கு பேர் அந்த அறையினுள் இருந்ததார்கள். இந்த கோவிட் காலத்தில் ‘சோஷியல் டிஸ்டன்சிங்’ என்கிற புதுவார்த்தையை, இதற்கு முன்பாக 2004-ல் கடலோர கிராமங்களைப் பெருஅலை வந்து தாக்கியபோது ‘சுனாமி’ என்கிற ஒரு ஜப்பானிய வார்த்தையை அறிந்து கொண்டதைப் போல, இப்பொழுது இந்த கொரோனா வைரஸ் ‘சோஷியல் டிஸ்டன்சிங்’ என்கிற புது வார்த்தையை, ஒரு புது வழக்கத்தை நமக்கு கற்றுத் தந்திருக்கிறது. நம் மக்கள் வாழும் வாழ்க்கையின் அவசரம் எவரையுமே அந்தப் பழக்கத்தைக் கைக்கொள்ள தயாராயில்லாமல் செய்துவிட்டிருக்கிறது. ஆனால், கூட்டத்தோடு ஓடிக் கொண்டிருப்பவன் எழுத்தாளனாக இருக்கமுடியாதே. அதனால் அந்த ஏடிஎம் அறையினுள் இருந்து யாரேனும் ஒருவர் வெளிவருவதற்காக வெளியே காத்திருக்க முடிவு செய்தேன்.
நாம் சும்மா நிற்கும் நேரம் தானே நம்முடைய கண்கள் நம்மைச் சுற்றி என்னென்ன நிகழ்கிறது என்பதைப் பார்க்க அலைபாயும். என் கண்களும் அலைபாய்ந்தது. என்னைப் போலவே ஆனால், என்னைப் போலல்லாமல் அரைக் கதவு மூடப்பட்டிருந்த வங்கியின் வாயிலில் நான்கு பெண்கள் அமர்ந்திருந்தார்கள். மாஸ்க் கூலர்ஸ் சகிதம் என் முகத்தை மூடி போட்டு மறைத்திருந்தாலும் என்னை அடையாளம் கண்டுக் கொள்ளும் செக்யூரிட்டி என்னைப் பார்த்து புன்னகையோடு கையசைத்தார். நானும் கையசைத்தேன். பின்னர் அவர் அருகில் நின்றுக் கொண்டிருந்த பெண்ணிற்கு ஏதோ உதவும் பொருட்டு வங்கியினுள் சென்றுவிட்டார்.
ஏடிஎம் அறையிலிருந்து ஒருவர் வெளியே வரவும், நான் உள்ளே சென்றேன். பணம் டெபாசிட் செய்ய, எனக்கும் முன்னே முன்று பேர். நான் உள்ளே நுழைந்ததும், எனக்குப் பின்னேயே மற்றொருவரும் நுழைய, இப்பொழுது எனக்கு முன்னே மூவர். என் பின்னே ஒருவர் என அந்த எட்டுக்கு நாலு அறையினுள் ஐந்து பேர். டெபாசிட் மெஷின் போக மூன்று ஏடிஎம் மெஷின்கள். நல்லவேளை பணம் எடுக்க எவரும் வரவில்லை. இல்லையெனில் அந்த அறையினுள் ஒரு சிறு கூட்டமே கூடி இருந்திருக்கும். மெஷினில் பணம் போட்டுக் கொண்டிருந்தவர், அவர் பணம் செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு எண்ணை மிக மிகப் பொறுமையாக அந்த மெஷினின் அரையிருட்டில் மறைந்திருந்த பொத்தான்களில் தட்டிக் கொண்டிருந்தார். இல்லை தட்டிக் கொண்டேயிருந்தார். ஒருவேளை அவருக்குப் பார்வைக் கோளாறு போலும். முதலில் ஒருமுறை பன்னிரெண்டு இலக்க எண்ணைத் தட்டிவிட்டு, மெஷினின் தொடுதிரையில் தெரிந்த எண்ணை, தன் கையிலிருந்த பேப்பரில் எழுதியிருந்த எண்ணோடு ஒப்பிட்டுக்கொண்டார். பின்னர் “ப்ப்ச்” என்ற ஒலியோடு அந்த பட்டுவாடாவை ரத்து செய்துவிட்டு, மீண்டும் கவனமாக பேப்பரிலிருந்த எண்ணைப் பார்த்து மிகமிக கவனமாக மெஷினிலிருந்த பொத்தான்களில் அமுக்கினார். இப்பொழுது என் பின்னேயிருந்து “ம்ம்ம்ப்ச்” என்றவொரு சப்தம்.. திரும்பிப் பார்த்தேன். முப்பதிலிருந்து முப்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க நடுத்தரவயது இளைஞன். அவனைப் பார்த்து புன்னகைத்தேன். நாடியோடு இணைந்திருந்த மாஸ்கோடு, அவன் தேமேவென்று என்னைப் பார்த்தான். ஒருவன் புன்னகைத்தால், மறுபுன்னகைக் கொடுக்கக் கூட மனதற்ற சமூகம். உள்ளுக்குள் திட்டிக் கொண்டேன். (நான் மாஸ்க் அணிந்திருந்ததால் என்னுடைய புன்னகையை அவன் பார்த்திருக்க வாய்ப்பிருந்திருக்காது என்பது மிகத் தாமதமாகவே எனக்குப் புரிந்தது)
இரண்டாவது முறை அந்த மனிதர் மிகச் சரியாக பன்னிரெண்டு இலக்க எண்ணை டைப்படித்துவிட்டார் போலும், அவர் முகத்தில் திருப்தியாய் ஒரு புன்னகை விரிந்தது. மனிதனின் அவசரம் மெஷின்கள் உணர்வதில்லையே. அது அதனுடைய வேகத்திற்கு ஒவ்வொன்றாய் கேட்க, அந்த மனிதரும் மெஷினின் ஒவ்வொரு கேள்விக்கும் யெஸ் கொடுக்கவும், ‘ட்ரப்’ என்ற சப்த்தத்தோடு, மெஷினில் ஒரு அறை திறந்தது. இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களை உள்ளே வைத்தார். அந்த இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களையும் அது எண்ணி முடித்து, அதைப் பணம் செலுத்துபவரிடம் தெரிவித்து, அது சரிதானா என்று அவரிடம் ஊர்ஜித்துவிட்டு, அந்த பட்டுவாடாவை முடித்து, அதற்கான ரசீதை பணம் செலுத்தியவரிடம் கொடுத்தது. அவர் வெளியேறவும் வரிசை முன்னகர்ந்தது. திரும்பிப் பார்த்தேன். என் பின்னே அத்தனை நேரமும் நின்று கொண்டிருந்த இளைஞனைக் காணவில்லை. அதற்கடுத்த இருவரும் என்னைப் போல அடிக்கடி இந்த மெஷினோடு பணப் பரிவர்த்தனை நிகழ்த்துபவர்கள் போல. எவ்வித பிசிறுமில்லாமல் பணத்தைச் செலுத்திவிட்டு வெளியேறினர். என் முறை வந்து பணத்தை டெபாசிட் செய்யும் பொழுது தான் மெஷினின் அருகிலேயே ஒரு காகிதப்பை அனாதையாக கிடந்ததைப் பார்த்தேன். இப்பொழுது அந்த ஏடிஎம் அறையினுள் என்னைத் தவிர்த்து எவருமில்லை. எனக்கு முன்னே வந்திருந்த எவரோ ஒருவர் தான் இந்தப் பையை விட்டுச் சென்றிருக்கவேண்டும்.. ஒரு சிறந்த குடிமகனாக என்னுடைய கடமை அந்த பையை உரியவரிடம் ஒப்படைத்தாக வேண்டுமே. அந்த பையினுள் என்ன இருக்கிறது என்று கூடப் பார்க்காமல், பணத்தை டெபாசிட் செய்துவிட்டு வெளியே வந்த கையோடு, செக்யூரிட்டியிடம் சென்று, ஏடிஎம் அறையினுள்ளே ஒரு பை அநாதையாக கிடப்பதைத் தெரிவித்தேன். உடனடியாக அவரும் உள்ளே சென்று அந்தப் பையை எடுத்து வந்தவர், “காலி பை சார். யாரோ பணத்தைக் கொண்டு வந்துட்டு வச்சுட்டு போயிட்டாங்க போல” என்றார். “சரி, எதுக்காச்சும் உபயோகப்படும்” என்று சொல்லிவிட்டுத் திரும்பிய என்னை அவர், “சார்”அழைத்தார்.
நான் ஏற்கனவே சொன்னதைப் போல, நான் முகமூடி அணிந்து அவர் முன் சென்று நின்றாலும் என்னை அடையாளம் கண்டுகொள்ளும் அளவுக்கு என்னோடு பழக்கமுள்ளவர் என்பதால், “சொல்லுங்கண்ணே” என்றேன்.
“சார், உங்களுக்கு இந்த பேங்க்ல தான் அக்கவுண்ட் இருக்கா” சற்று தயக்கத்தோடேயே கேட்டார்.
அந்த செக்யூரிட்டி ஐசிஐசிஐ வங்கிக்கு செக்யூரிட்டியாக வருவதற்கு முன்பு, ஐடிபிஐ வங்கியில் செக்யூரிட்டியாக இருந்தார். என்னுடைய நடப்பு கணக்கு அந்த வங்கியில் என்பதால் அப்பொழுதிருந்தே அவரை எனக்குத் தெரியும். இதுவரையிலும் ‘வணக்கம் சார்’, ‘நல்லாயிருக்கீங்களா சார்?’, ‘பார்த்து ரொம்ப நாளாச்சே சார்’ என்பதைத் தவிர்த்து வேறு எதுவும் என்னிடம் அவர் பேசியதில்லை. முதல் முறையாக என்னிடம் உதவியொன்றைக் கேட்க முனைகிறார். அந்த உதவி என்னவாக இருக்கும்..? பண உதவியெனில் எவ்வளவு பணம் கேட்பார்..? சின்னதாக ஐம்பது நூறு என்றால் கொடுத்துவிடலாம். ஒருவேளை குடும்பக் கஷ்டம் அது இது என்று சொல்லி பெரியதாக ஏதேனும் கேட்டால், அதை எப்படித் தவிர்ப்பது..? மனதில் பலவாறாக சிந்தனை ஒடியது என்றாலும், அது எதையுமே முகத்தில் வெளிப்படுத்தாமல், “ஆமாண்ணே” என்றேன்.
“ஒரு சின்ன உதவி பண்ண முடியுமா?” ஒருவிதமான அவஸ்தையோடு கேட்டார். நான் எதிர்பார்த்தைப் போல உதவி என்றே வந்துவிட்டார். இனி தடுப்பாட்டம் ஆடவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன் என்றாலும், “சொல்லுங்கண்ணே” என்றேன் அதே நட்பு தொணிக்கும் குரலில் நானும். பேங்கின் வாசலில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணை அழைத்தார். மிக நேர்த்தியாக கருப்பு நிற ஜீன்ஸும் வெள்ளை முழுக்கை டீஷர்ட்டுமாய் வந்த அந்த பெண்ணின் முகத்தில் கவலையோடு குழப்பத்தின் ரேகை. இப்பொழுது என் மனதினுள், நான் எதிர்பார்த்தது நிகழாமல் வேறு ஏதோவொன்று நிகழப்போவதை நினைத்து குழப்பத்தோடு கவலையின் ரேகை.
“சார், இந்தப் பொண்ணுக்கு கொஞ்சம் கேஷ் எடுக்கனும். அவங்களோட ஏடிஎம்க்கு ஒருநாளைக்கு 20000 தான் லிமிட். அதை எடுத்துட்டாங்க. இன்னும் ஒரு ஏழாயிரம் எடுக்கனும். இன்னிக்குள்ள காலேஜ்க்கு ஃபீஸ் கட்டனுமாம். உள்ள வேலை பார்க்கிற பொண்ணுங்க கிட்ட கேட்க முடியாது. அவங்களுக்கு சேலரி அக்கவுண்ட்டுங்கிறதால, வெளியே இருந்து கேஷ் வந்தா அவங்களுக்கு சிக்கல் ஆகிடும். உதவ முடியுமா சார்?” – ஓங்குத்தாங்காய் வளர்ந்த உடம்போடு, பார்ப்பவரை மிரட்டும் கிடா மீசையோடும் இருக்கும் அந்த மனிதர் என்னிடம் இந்தக் கோரிக்கையைச் சற்றுச் சன்ன்மான குரலில் குறுகியபடியே கேட்டார்.
அந்தப் பெண்ணைப் பார்த்தேன். என் பதிலுக்காக அவள் முகம் காத்திருப்பதாய் தோன்றியது. ஒருவேளை அது உண்மையாய் கூட இருக்கலாம். அந்தச் செக்யூரிட்டியிடம், “கேஷ் எடுத்துக் குடுக்கிறது தான, அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்லை. என்னோட ஏடிஎம் கார்ட் கார்ல இருக்கு, அதை மட்டும் எடுத்துட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு, பேங்க் வாசலில் நிறுத்தியிருந்த காரிலிருந்து பர்ஸை எடுத்து வந்தேன்.
நான் பர்சை எடுத்துக் கொண்டு அவர்கள் அருகில் வரவும், “அண்ணா உங்ககிட்ட gpay இருக்காண்ணா?” என்று மிகத் தணிந்தக் குரலில் அந்தப் பெண் என்னிடம் கேட்டாள். “நம்பர் நோட் பண்ணிக்கோங்க” என்று அந்தப் பெண்ணிடம் என்னுடைய ஜீபே எண்ணைக் கொடுத்தேன்.
அந்த பெண் என்னோடு பேசிக் கொண்டிருந்த நேரத்தில், அந்த பெண்ணின் அருகிலேயே மத்திம வயதுடைய பெண் ஒருவரும் வந்து நின்றார். அநேகமாக வந்து நின்ற மத்திம வயதுப் பெண் அந்த இளம் பெண்ணின் அம்மாவாக இருக்க வேண்டும். “ஏழாயிரமா போடாத, பத்தாயிரமா போடு” என்றார் அந்த மத்திம வயது பெண். ஜீன்ஸ் அணிந்த பெண்ணோ அவரைச் சற்று முறைத்துப் பார்த்துவிட்டு என்னைப் பார்த்தார். அப்படி அந்தப் பெண் பார்க்கையில் அவஸ்தையோடு மன்னிப்பு கேட்கும் தொனியில் பார்த்ததைப் போன்றிருக்கவும், “ஒண்ணும் பிரச்சனை இல்ல அனுப்புங்க” என்று நட்புத் தொனியில் நானும் புன்னகையோடு சம்மதித்தேன்.
அந்த பெண் ஜீபேயில் பணம் அனுப்ப, செர்வர் எரர். “சர்வர் எரர் காமிக்குது” என்றாள். நானும் நிதானமாக, “ஒண்ணும் அவசரமில்ல, நீங்க பொறுமையா இன்னொருக்கக் கூட ட்ரை பண்ணுங்க” என்றேன். இருப்பினும் அவள் இம்முறை சற்றுப் பதட்டத்தோடேயே முயன்றாள்.
மீண்டும் சர்வர் எரர்.
அந்தப் பெண்ணின் அவஸ்தையைப் பார்க்க எனக்குப் பாவமாய் இருந்தது. அருகில் நின்று கொண்டிருந்த செக்யூரிட்டியின் முகத்தைப் பார்த்தேன். அவரது முகமோ பரிதாபத்தோடும், பச்சாதாபத்தோடும் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தது. சரி, வேறு வகையில் முயற்சி செய்து பார்க்கலாம் என்று எனக்குத் தோன்றியதால், அந்தப் பெண்ணிடம் அவளது ஜீபே எண்ணைக் கேட்டேன். தயக்கமெதுவுமின்றி அவளும் தர, ஜீபேயில் அந்த எண்ணைக் கொடுத்தேன். அந்த எண்ணிற்குச் சொந்தமான பெயர் ‘ஜெஸ்ஸி’ என்று அது காட்டியது.
“ஜெஸ்ஸி..?” என்றேன்
“ஆமாம்” என்றாள்.
அவளது எண்ணுக்கு என்னுடைய ஜீபேயிலிருந்து ஒரு ரூபாய் அனுப்பினேன். முதல் முயற்சியில் எனக்கும் ‘செர்வர் எரர்’. நான் மீண்டும் முயற்சிக்க, இம்முறை பணப் பரிமாற்றம் வெற்றிகரமாக நிகழ்ந்துவிட்டது. “சரி, இப்ப அனுப்பி பாருங்க” என்றேன்.
அவள் அவளுடைய மொபைலிலிருந்து முயற்சித்தாள். மீண்டும் சர்வர் எரர்.
அடுத்தபடியாக, “உங்ககிட்ட ஐசிஐசிஐ பேங்கோட ஐ மொபைல் ஆப் இருக்கா?” என்றேன். இல்லை என்று உதட்டைப் பிதுக்கினாள்.
“ஐ மொபைல் இருந்ததுன்னா அக்கவுண்ட் நம்பர் ரெஜிஸ்டர் பண்ணாமலேயே பத்தாயிரம் வரை ஒன் டைம் ட்ரான்ஸ்ஃபர் பண்ணலாம்” என்றேன்.
அந்தப் பெண்ணின் முகத்திலிருந்த பரிதவிப்பு, நேரம் செல்லச் செல்ல அதிகரித்தபடியே இருந்தது.
மூன்றிலக்க நான்கிலக்க எண்களில் பணம் அனுப்புகையில் எவ்விதத் தொல்லையுமின்றி பரிமாற்றம் நிகழ்ந்துவிடும் வேளையில், ஐந்திலக்க எண்கள் சில சமயங்களில் இதுபோன்ற சிக்கல்களைக் கொண்டுவந்து விட்டிருக்கிற அனுபவம் எனக்கு ஏற்கனவே நேர்ந்திருப்பதால், அந்த பெண்ணிடம், “சரி பத்தாயிரமா அனுப்பாம ஒரு ஒன்பதாயிரமா அனுப்பிப் பாருங்க” என்று மீண்டும் ஒருமுறை ஜீபேயில் முயற்சித்துப் பார்க்கச் சொன்னேன்.
நான் சொன்னதைப் போலவே, அவளும் முயற்சித்தாள். மீண்டும் சர்வர் எரர்.
அடுத்ததாக நான் ஏதும் சொல்லாமலேயே, அவளுடைய அப்போதைய தேவையான ஏழாயிரம் ரூபாயை அனுப்பிப் பார்த்தாள். மீண்டும் சர்வர் எரர்.
இவை அனைத்தையும் கவலை தோய்ந்த முகத்தோடுப் பார்த்துக் கொண்டிருந்த செக்யூரிட்டி, “சார், என்னோட ifsc கோடைத் தந்தா பணத்தை மாத்திடலாமா.?” என்றார்.
“ஆனா, இவங்க மொபைல்ல ஐ மொபைல் ஆப் இல்லியேண்ணா” என்றேன்.
“இன்னைக்குள்ள வேற காலேஜ் ஃபீஸ் அவங்களுக்குக் கட்டியாகனும். எப்படியாச்சும் பணத்தை எடுத்துக் குடுத்துடலாம்னு பார்க்கிறேன்” அவரது குரலில் நிஜமான வருத்தம். அப்படியே அந்தப் பெண்ணைப் பார்த்து, “ஏம்மா, உனக்குத் தெரிஞ்சவங்க இல்ல சொந்தக்காரங்க யார்ட்டயாச்சும் சொல்லி இவங்க (என்னைக் கை காண்பித்து) அக்கவுண்ட்க்குப் பணத்தைப் போட்டுவிடச் சொல்ல முடியுமா.?”
“அப்படியே அவங்க போட்டு விட்டாலும் என்னால இப்ப பணத்தை எடுத்து குடுக்க முடியாதே அங்கிள்” – உதட்டைப் பிதுக்கியபடியே அந்தப் பெண்ணிடமிருந்து பதில்.
அதே நேரம் அந்த மத்திம வயதுப் பெண்மணி இந்த பெண்ணிடம் ஏதோ சொல்ல, அவரைப் பார்த்து இவள் முறைத்தாள். அந்த முறைப்பில் கோபத்தை விடவும் ஏதோவொரு அங்கலாய்ப்பே தெரிந்தது. ஏதும் குடும்ப விவகாரமாய் இருக்கக்கூடும்.
“அவங்களோட எஸ்பிஐ பேங்க் கார்ட்ல 20000 தான் அலவ் பண்ணியிருக்காங்க. இன்னும் ஏழாயிரம் ரூபாயை எடுத்து இன்னிக்குள்ள காலேஜ் அக்கவுண்ட்க்கு போட்டுவிடனும். ராத்திரி பதினோரு மணிக்கு மேல சிடிஎம்ல பணம் போடவும் முடியாது” அவரது குரலின் வருத்த தொனி கொஞ்சமும் குறையவில்லை.
“என்னண்ணா சொல்றீங்க..? ராத்திரி பதினொரு மணிக்கு மேல சிடிஎம் ஒர்க் ஆகாதா..?” என்று அதிர்ச்சியோடு நான் கேட்டேன். அவரும் சலிப்போடு, “ஆமா சார். ராத்திரி பதினொரு மணியிலிருந்து காலையில ஏழு மணி வரைக்கும் சிடிஎம் ஒர்க் ஆகாது” என்றார்.
மீண்டும் அந்தப் பெண்ணிடம் திரும்பி, எஸ்பிஐ ஏடிஎம் கார்ட் எனில், ஐசிஐசிஐ வங்கியில் அக்கவுண்ட் இல்லையா என்று என் மனதினுள் நான் நினைத்ததை அந்தப் பெண்ணிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்து, அவளிடமே என் சந்தேகத்தைக் கேட்டேன். ‘ஆமாம்’ என்ற பதிலே அவளிடமிருந்து வந்தது. ஆகையால் மீண்டும் அவளிடம், “எஸ்பிஐ பேங்கோட மொபைல் ஆப்பாச்சும் உங்க கிட்ட இருக்கா?” என்று கேட்டேன். இல்லையென்று தணிந்த குரலில் சொல்லி, சோர்ந்த முகத்தோடு தலையை இடவலமாக ஆட்டினாள்.
அவளருகில் நின்று கொண்டிருந்த மத்திம வயது பெண் மீண்டும் ஏதோ கூறினாள். முகம் முழுக்க இயலாமையால் எழுந்த எரிச்சல் மண்டியிருக்க இவளும் ஏதோ பதிலளித்தாள். அடுத்த ஒருசில நிமிடங்களுக்கு, நாங்கள் நால்வரும் அந்த ஏடிஎம்மின் வாசலில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி நின்று கொண்டேயிருந்தோம். எனக்கு மதிய உணவிற்கான நேரம் வேறு நெருங்கிக் கொண்டிருந்ததால், பசி வேறு வயிற்றைப் பிராண்ட ஆரம்பித்து விட்டிருந்தது. இருப்பினும், அங்கிருந்து என்ன சொல்லிவிட்டு, எப்படி கிளம்பிச் செல்வது என்பது தெரியாமல், வலதுகையில் பற்றியிருந்த ஏடிஎம் கார்டைக் கொண்டு இடதுக்கை பெருவிரலில் தட்டியபடியே நின்றிருந்தேன்.
அதுவரை மனதில் ஏதோவொரு சிந்தனையோடு சாலையில் கடந்து செல்லும் வாகனங்களைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த செக்யூரிட்டி, “சார், ரொம்ப நேரமா நீங்களும் உங்க வேலையை எல்லாம் ஒதுக்கிட்டு நிற்கிறீங்க. நீங்க கிளம்புங்க சார்” தன்னுடைய மெல்லிய குரலால் அந்த அமைதியை உடைத்தார்.
அடுத்ததாக அந்தப் பெண், “அங்கிள், இந்த மெஷின்ல பணத்தை ரீஃபிள் பண்ணிட்டாங்கள்ல, நான் ட்ரை பண்ணி பார்க்கிறேன்” என்றாள்.
நான் செக்யூரிட்டியின் முகத்தைப் பார்த்தேன். ஏடிஎம்மின் உள்ளே சென்ற அந்த இருவரையும் பார்த்தபடியே அவரும், “நீங்க கிளம்புங்க சார், எப்படியாச்சும் உதவிடலாம்னு முயற்சி பண்ணினோம். முடியல. என்ன பண்றது?” என்றார்.
“சரி, நானும் கிளம்புறேன்ணே” சொல்லிவிட்டு நானும் கிளம்பிவிட்டேன். இனி நாளையோ நாளை மறுநாளோ ஐசிஐசிஐ வங்கிக்கு நான் போகையில், நான் போகும் நேரத்தில் அந்த செக்யூரிட்டியும் அங்கே இருந்தால், நேற்றைய தினம் என்னவானது என்பதை அவரிடம் விசாரித்துத் தெரிந்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை என்றேனும் நான் எழதப்போகும் கதைக்கு அந்தச் சம்பவம் கூட கதைக்கருவாக மாறலாம் அல்லவா..?
******