அந்த திகட்டலான இருளில் ஏதோ அவனிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தது. அவனும் பயத்தோடும் பேராசையோடும் அதைக் கேட்டுக்கொண்டிருந்தான். மேஜையின் மீது இருந்த வெள்ளிக் காசுகளில் ஒன்றிரண்டு கீழே விழ, திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான். அறையைச் சுற்றிலும் நோட்டமிட ஒரு துஷ்டம் அறைக்கு வெளிப்புறம் இருந்து நகைப்போடு அவனைப் பார்த்துக்கொண்டிருந்தது. எழுந்துபோய் கீழே விழுந்து கிடந்த வெள்ளிக்காசுகளை எடுத்து மேஜையின் மீதிருந்த மற்ற காசுகளோடு சேர்த்து வைத்தான். மொத்தமாக முப்பது காசுகள். அவை அங்கு ஒளிர்ந்த தீச்சுடரின் வெளிச்சத்தில் பிரகாசித்தன. அவற்றை அவன் ஆசையோடு வாரி அழகு பார்க்க,”நேரமாகின்றது.. இது தக்க சமயம் ஜூதா..” என்ற அந்தக் குரல் காற்றில் அவன் காதுகளை நிரப்பியது. திரும்பி வெளியே பார்த்தான்.
அழுகிய கொடூர தோற்றமுடையதும், தலையில் இரண்டு கொம்புகளையும், முட்கள் கொண்ட நாக்கையும், வலைந்த கூர்மையான வாலையும், கருக்கான பட்டையம் போன்ற பற்களையும் கொண்டிருந்த அந்த மிருகம் அவனை வஞ்சனை சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தது. குழுமிக்கிடந்த வெள்ளிக் காசுகள் மீண்டும் கீழே சிதற, திடுக்கிட்டவன் சற்று பயத்தோடு படுக்கையில் விழுந்தான். வெள்ளிக் காசு ஒன்று விழுந்த வேகத்தில் ஓய்வெடுக்காமல் சுழன்று கொண்டிருந்தது..
“கிளம்பு.. கிளம்பு ஜூதா!” என்ற ஒரு சத்தம்.. மீண்டும் அறை வாசலைப் பார்த்தான். அந்த மிருகம் இப்போது அங்கு இல்லை. குரல் அவனுக்குள் இருந்து வந்துகொண்டிருந்தது..
“பந்தியிலிருந்து வந்து இரண்டு மூன்று மணிகளை கடந்துவிட்டது.. இன்னேரம் பஸ்காவும் முடிந்திருக்கும் அல்லவா?” – அவன் தனக்குள்ளே கேட்டுக்கொண்டான்.
“ஆமாம்.. முடிந்திருக்கும்.” என்று பதில் குரல் வந்தது. ஆனால், அது இப்போது அவன் தலைக்கு மேலிருந்து வந்துகொண்டிருந்தது. நிமிர்ந்து மேலே பார்க்க அந்த மிருகம் மேற்தளத்தில் அவனைப் பார்த்தபடி தலைகீழாக உலாவிக்கொண்டிருந்தது.
வெளியேறி வேகமாகக் கிளம்பியவன் பிரதான ஆசாரியனும் வேதபாரகரும் இருந்த குழுவைச் சேர்ந்தான். அவனுக்கென்றே காத்திருந்தாற் போல அவன் எழுந்து நடந்தனர். அவனுக்குப் பின்னால் ஒரு கூட்டம் தீப்பந்தங்களோடும், தடிகளோடும், வேறு சில ஆயுதங்களோடும் நடந்து வர, கூட்டத்தோடு கூட்டமாக வந்துகொண்டிருந்த அந்த மிருகம் அவனை வாஞ்சையோடு பார்த்து நகைத்தது.
கெத்சமனேவுக்கு வெளியே போதகர் கூட்டம் நிறைந்திருக்க, வேத பாரகரில் ஒருவன், ”இத்தனை கூட்டத்தில் அந்த இயேசு யார் என்று எங்களுக்கு எப்படித் தெரியும்? அவனை இதுவரை நாங்கள் காணோம்” என்று கேட்டான்.
“கவலை வேண்டாம்.. நான் யாரை நெருங்கி அவனை முத்தம் செய்கிறேனோ அவன்தான்.. அவனே இயேசு.. அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள்” என்றவனின் தலைக்குள் இருந்து,”ஆமாம்.. அவனே இயேசு.. அவனே இந்த ஜனத்தின் சாபம்.. அவனைப் பிடித்துக் கொன்றுபோடுங்கள். உன்னுடையது சரியான திட்டம் ஜூதா..” என்று ஏதோ ஒன்று சொல்லிக்கொண்டு சிரித்தது.
அங்கே கூடியிருந்த வெகுவான ஜனங்களைப் பார்த்து போதகர் குழு அதிர்ச்சியடைந்திருக்க, ஜுதா இயேசுவை நெருங்கிப்போய்,”ரபீ வாழ்க..” என்று சொன்னபடி அவர் கன்னத்தில் முத்தமிட்டான், அவரும் எல்லாம் அறிந்தும் அறியாதவராய்,”சிநேகிதனே.. என்னத்திற்காக வந்திருக்கிறாய்?” என்று கேட்டு முடிப்பதற்குள், பிரதான ஆசாரியரின் ஆட்கள் அவரைப் பிடித்துக் கொண்டனர். அவரைக் காட்டிக்கொடுத்துவிட்டு அந்த இடத்தைவிட்டு ஓடியவன் நடப்பவற்றை தூரத்திலிருந்து கண்காணிக்க ஆரம்பித்திருந்தான்.
அந்த கொடூர இரவு நீண்டுகொண்டிருக்க,”என்னத்திற்காக இந்த பயம்.. உன் ஜனத்திற்காக உபயோகமானதை செய்தாய்.. வேத பாரகர் கொடுத்த பணத்தை செலவுசெய்து களித்திரு” என்று அந்தக் குரல் தொடர்ந்து அவனது மனதிற்குள் இருந்து வெளிப்பட்டபடி இருந்தது.
தேவ குமாரன் உடலின் சதைகள் கிழிக்கப்பட்டு உதிரம் அந்த தண்டனை களம் முழுவதும் சிதறியிருக்க, அதை யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்த அவரைக் காட்டிக்கொடுத்த ஜுதா கண்ணீரோடு தரையிலே உட்கார்ந்து புலம்பினான். அந்த புனிதரின் வலியின் துடிப்புகள் அவன் காதுகளைத் துளைக்க அங்கிருந்து விரைந்து ஓடிப்போனான்.
“பாவம் செய்தேன்.. நான் பாவம் செய்தேன்..”
“யார்.. நீயா? யூதேயர்களின் நெறிமுறைகளைக் கெடுத்தவன் அவன்.. அவனுக்கா பரிதவிக்கிறாய்?” என்று அந்தக் குரல் மிகவும் சன்னமாக கேட்டு மறைந்தது. அவன் கண்களைத் துடைத்துக்கொண்டு நேரே பார்த்தான். அது ஒரு மரத்திற்கு பின்னால் ஒளிந்துகொண்டு அவனை ஒருவித கோபாக்கினையோடும் சிரித்த முகமாயும் பார்த்தது.
“யார் நீ..?”
“எதற்கு அழுகிறாய்?”
“நான் பாவம் செய்தேன்!”
“ஒருக்காலும் இல்லை..” என்று சொல்லிக்கொண்டு அவனுக்குள் இறங்கிய அந்த துஷ்டம் அவனது மூளைக்குள் உட்கார்ந்துகொண்டு அழுத்தம் கொடுத்தது. அவன் அந்த தனிமையிலிருந்து ஓடிப்போனான்.
தேவகுமாரன் சிலுவையில் அறைந்து உயிரிழக்குமளவும் அவற்றை ஒரு மூலையில் நின்று பார்த்துக் கொண்டிருந்த அவன், தான் எவ்வளவு பெரிய தவறைச் செய்துள்ளோம் என்று மனம் வெதும்பி அழுது புலம்பி, தன்னுடைய அறைக்குச் சென்று மேஜையின்மீது காத்துக்கிடந்த அந்த பாவப்பட்ட வெள்ளிக்காசுகளை கையில் எடுத்துப் பார்த்தான். அவை முழுவதும் தேவ குமாரனின் இரத்தத்தால் நிரம்பியதாய் உணர்ந்து அறையின் ஒரு மூலைக்கு அவற்றை வீசி எறிந்தான்..
ஒரு கேவலமும் அவலட்சணமும் நிறைந்த சிரிப்புச் சத்தம் அந்த அறையினை நிரப்பியது,
“யாரது..?” என்று அவன் மெதுவாகவும் அறையை நோட்டமிட்டபடியும் கேட்டான்.
“துரோகி..” என்று கோபமாகச் சொன்னது அந்தக் குரல்.
“இ.. இல்லை..!”
“த்துரோ… கீ..” அந்த வார்த்தை காற்றின் அலைவரிசையாய் அவனை ஆட்கொண்டு ஒடுக்கியது, அவனோ அந்த கொடியதும் பாவமும் நிறைந்த அசுத்த ஆவியை தேடிக்கொண்டிருந்தான். அது எங்கும் அகப்படாததால் பயந்தவன் கீழே சிதறிக்கிடந்த வெள்ளிக்காசுகளை அதே பையில் போட்டுக்கொண்டு வேத பாரகரிடத்தில் சென்றடைந்தான். தேவ குமாரன் மரண ஆக்கினைக்கு உட்பட்டதை நினைத்து மனஸ்தாபப்பட்டு,”குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக் கொடுத்ததினால் பாவம் செய்தேன். இந்த வெள்ளிக்காசுகள் எனக்கு வேண்டாம்.” என்றவன் அவற்றை மேஜையின் மீது வைத்தான். ஒருவேளை அவன் தன்னுடைய பாவத்திற்கான விமோட்சனம் அவர்களிடத்தில்தான் கிடைக்கும் என்று நினைத்திருக்கலாம்.
“காட்டிக் கொடுத்தவன் நீ..அதற்கான கூலியையும் வாங்கிக்கொண்டாய்.. இனி அது உன் பாடு!” என்றவர்கள் அந்த வெள்ளிக் காசுகளை மீண்டும் அவனிடமே நீட்டினர். அதை வாங்க மறுத்தவன் அழுது புலம்பியபடி அங்கிருந்து வனாந்தரத்திற்கு ஓடினான்.
“எங்கே.. எங்கே ஓடுகிறாய் துரோகியே? என்னிடம் வா” என்ற குரல் தொடர்ந்து அவனைத் துரத்த, திரும்பினான். அந்த கொடூர மிருகம் அவனை அலைக்கழித்தபடியே விடாப்பிடியாய் துரத்தியது.
“துரோகியே.. நம்பிக்கை துரோகியே.. தேவ குமாரன் எத்தனை பிரியம் வைத்திருந்தார் உன்னிடம்..? முத்ததினால் காட்டிக்கொடுத்தாயே பாவி” என்று அவனது மூளைக்குள் இருந்த ஏதோ ஒன்று அவனின் எலும்புகளையும் தசைகளையும் வலுவிற்கும் அழுத்தி அவனை வஞ்சித்தது.
“இ.. இல்லை, பாவம் செய்தேன்.. ஆனாலும் வாழவேண்டும்” என்று அவன் வெட்டாந்தரையில் ஓடிக் கொண்டிருந்தான்.
“வாழ்வா.. உனக்கா? எப்படி சாத்தியம்? துரோகத்தில் வளர்ந்த உனக்கு இந்த பிரபஞ்சத்தில் என்ன இருக்கிறது உரிமை..? உன்னை சீடனாகக் கொண்டதை தவிர்த்து அவர் என்ன பாவம் செய்தார்?” என்று அந்த துஷ்டம், தன் கூர்மையான வாலைச் சாட்டையாய் வீசி அவனை முகங்குப்புற கீழே தள்ளியது. அவன் நிலை தடுமாறி புழுதியில் குளித்து எழுந்து தாகத்தோடு ஓடினான்.
துஷ்டம் கேட்ட கேள்விகள் ஒன்றிற்கும் அவனிடம் பதில் இல்லை. அசுத்த ஆவிகள் பல ஒன்றுகூடி அவனை வஞ்சித்து.. ஆட்கொண்டு.. அலைக்கழித்தன,
“பிசாசின் குமாரனே.. எங்களோடு சயனி. அசுத்த ஆவிகளின் அடிமையே.. எங்களோடு இணைந்துகொள்.. இனி உனக்கு இங்கு இடமில்லை” என்று அவனுக்குள் இறங்கிய பிசாசுகள் அவனை பித்தனாக்க முயற்சித்து, அலைக்கழித்து கடைசியாக சாபத்தால் சீரிழந்த ஒரு மரத்தின் அடியில் தள்ளிவிட்டன.
துஷ்டம் அவனுக்கு பின்னாலிருந்த மரத்தினில் ஒளிந்துகொண்டு தனது அவலட்சனமான முகத்தை நீளமாக அவனுக்கு முன்பாக நீட்டி,”பாவக்காரனே.. துரோகியே.. துர்நாற்றம் உன்னைப் பிடித்துக்கொண்டது.. அதை உணர்ந்தாயா?” என்றது.
அவன் தன்னை சுயநினைவிற்கு கொண்டுவர தோற்றுப்போய், களைப்போடு மூச்சை உள் இழுத்தான்.. குமட்டலை உண்டுபண்ணும் அழுகிய துர்நாற்றம் அந்த பகுதியெங்கும் வீச, திரும்பி அவனுக்கு இடப்புறம் பார்த்தான்.
என்றோ இறந்துபோன காட்டு மாடு ஒன்று அழுகி அவனுக்கு நெருக்கமாக நாற்றமெடுத்துக்கொண்டிருந்தது. அதன் அழுகிய உடலையும் உருகுலைந்த முகத்தையும் ஒட்டுண்ணிகள் மொய்த்துக்கொண்டிருக்க,”நீயும் அதைப்போல துர்நாற்றத்திற்கு பாத்திரன் அல்லவா.. குற்றமில்லாத ஒரு உயிரின் இரத்தம் வீணாய் மண்ணில் சிந்தப்பட்டதே.. பாவத்திற்கான சம்பளம் உன் போதகரின் சொற்படி மரணம் அல்லவா? அவரை முத்தஞ்செய்த உன் உதடுகளில் இன்னமும் தேவ குமாரனின் வாசம் இருக்கின்றதோ?” என்றது அந்த மிருகம். அவன் அப்போதும் தன் பாவத்தின் நிமித்தம் கதறித்துடித்தான்.
“செத்துவிடு ஜூதா.. செத்தால் இத்தனை துன்பமும் மன வேதனையும் இராது” என்றது அவனது மனக்குரல்.
அவன் மீண்டும் அந்த இறந்து கிடந்த மாட்டை பார்த்தான். இறந்துபோய் அயர்ந்து அமைதியோடு உறங்கிக் கொண்டிருந்த அந்த மாட்டின் நிலையையும் அமைதியையும் அவனது மனம் விடாபிடியாக வாங்கத் துடித்தது. இறந்த மாட்டின் கழுத்திலிருந்த கயிற்றை அவிழ்த்தவன் அதை மரத்தின் கிளையில் கட்டினான். துஷ்டம் அந்த கயிற்றை அவனது கழுத்தில் மாட்டுவதற்கு உதவி செய்தது. அவன் உயிரை விரைவாய் வாங்கத் துடிக்கும் அதன் கண்களில்தான் எத்தனை வாஞ்சையும், அக்கறையும்!
“செத்துவிடு ஜூதா.. இந்த உலகு இனி நமக்குத் தேவையில்லை.. செத்துவிடு. இனி இங்கு உனக்கு பங்காளர்கள் யார்..? காலம் முழுக்கவும் உன்னை துரோகி என்ற பட்டத்தோடு அழைத்து உன் மனதை ஈட்டியை விடவும் கொடிய அந்த ஆயுதத்தால் குத்தி நொடிக்கு நொடி கொன்று தீர்ப்பர்.. செத்துவிடு ஜூதா செத்து விடு” என்று அவனது உடலுக்குள் திளைத்த குரல் தொடர்ந்து ஒலிக்க, அழுது புலம்பியபடியே அவன் தூக்கிலே தொங்கி, நாக்கு வெளித்தள்ள உயிர் நீத்தான். குடல் சரிந்து, நான்றுகொண்டு செத்தான்.
அவன் உயிரிழந்து ஒருசில நிமிடங்கள் கடந்திருந்த நிலையில் துஷ்டம் நகைப்போடு தோன்றி, அவனை ஏறிட்டுப் பார்த்து, ஏளனமாய் சிரித்தது. பிறகு அவனின் வயிற்றைக் கிழித்து தான் அனுப்பியதும், அவனோடு தொடர்ந்து பேசியதும், அவனை தற்கொலைக்கு தூண்டியதுமான மற்றொரு அசுத்த ஆவியை வெளியே இழுத்து தன்னோடு சேர்த்துக்கொண்டு பாதாளத்திற்குள் சென்றடைந்தது.
வேதபாரகர்கள் அவன் வாங்க மறுத்த அந்த முப்பது வெள்ளிக்காசுகளை ‘பாவத்திற்குட்பட்ட காசு இது’ என்று எண்ணி, அதைக் கொண்டு உயிரிழக்கும் அந்நியர்களை புதைப்பதற்கான இடம் ஒன்றை விலைக்கு வாங்கினர்.
*******
செம்ம எழுத்தாளரே! ஒவ்வொரு வரியும் வலி கலந்து பயணிக்கிறது. இறுதியில் அந்த பாவப்பட்ட வெள்ளிகாசுகளை அந்நியரின் உடலை புதைக்கும் இடம் வாங்குதற்காக பயன்படுத்தி தன் பாவத்தை கழித்துக்கொள்ள நினைக்கும் மூடர்களை என்ன சொல்வது…. சிறப்பான கதை. வாழ்த்துக்கள் ?