இணைய இதழ் 121சிறுகதைகள்

அந்திமாலை நேரங்கள் – தேவவிரதன்

எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பு அடையாறில் ஓர் முக்கியமான பகுதியில் இருக்கிறது. இன்று, முக்கியமான பகுதி என்றால், அருகே ஏகப்பட்ட கடைகளும், வாகன, மற்றும் மக்கள் போக்குவரத்து இருந்தாக வேண்டும். நான் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு முன் குடி வந்த ஒற்றை படுக்கை அறை குடியிருப்பு எங்கள் கட்டிடம். அப்போது இப்படி இல்லை. சற்று அமைதியாக இருந்தது. அதில், முதலில் என்னைப் போல் வேடு வாங்கிக் கொண்டு வந்த பலர், இங்கிருந்து கிளம்பி நகரின் பல்வேறு இடங்களுக்கு, பெரிய குடியிருப்புகளுக்கு மாறி விட்டனர். ஒரு சிலர் வீட்டை வாடகைக்கு விட்டு இருந்தனர். சிலர் பூட்டியே வைத்து இருந்தனர்.

வாடகைக்கு வருபவர்களும் மாறிக்கொண்டேதான் இருந்தனர். கீழ் தளத்தில் இருந்த ஒரு பிளாட் கொஞ்ச நாட்களாகக் காலியாக இருந்தது. அதன் சொந்தக்காரர் வீட்டின் சாவியை என்னிடம் கொடுத்து, தான் தேர்வு செய்து அனுப்பும் மனிதர்கள் குடி இருக்க பிளாட்டை பார்க்க வந்தால் திறந்து காட்டும் படி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அன்று காலை ஒரு புதிய எண்ணில் இருந்து எனக்கு போன் வந்தது.

‘ஹலோ’ என்றேன்.

என் பெயரைக் கேட்ட பின் அவர், ‘என் பெயர் கிருஷ்ணன். நானும் உங்கள் தெருவில்தான் இருக்கிறேன். உங்கள் குடியிருப்பில் ஓர் பிளாட் காலியாக இருப்பதாகக் கேள்விப்பட்டு அதன் சொந்தக்காரரிடம் பேசினேன். அவர் உங்கள் பெயரைச் சொல்லி வீட்டை பார்க்க உதவி செய்யச் சொன்னார்’ என்றார்.

‘சரிதான். நீங்கள் வந்து பார்க்கலாம். சாவி என்னிடம் உள்ளது. திறந்து காட்டுகிறேன்’ என்றேன்.

‘சரி. நான் பதினோரு மணிக்கு வருகிறேன்’ என்றார் கிருஷ்ணன்.

*****

பதினோரு மணிக்கு அந்த கிருஷ்ணன் அவர் மனைவியுடன் வந்து என்னைச் சந்தித்தார். தனியார் நிறுவனத்தில் வேலையில் இருப்பதாகக் கூறினார். வேறு எதுவும் எனக்கு குறிப்பாகத் தெரியவில்லை. கிட்டத்தட்ட ஐம்பதுகளின் இறுதியில் இருப்பவர் போல் தோன்றியது. தொள தொள வென்று ஒரு பான்டும், சட்டையும் அணிந்திருந்தார். அவர் மனைவிக்கும் சாதாரண குடும்பப் பெண் தோற்றம்.

பரஸ்பர அறிமுகத்திற்குப் பின் தரை தளத்தில் இருந்த அந்த பிளாட்டுக்கு அவர்களை அழைத்துச் சென்றேன்.

நான் முதலில் சொன்னபடி மிகச் சிறிய குடியிருப்புதான். ஓர் சிறு ஹால், சமையலறை, படுக்கையறை, ஓர் கழிப்பறை. குளியலறையில், சமயலறையிலும் பரண் போன்ற பகுதிகளில் இரண்டு சின்டெக்ஸ் டேங்க்குகள் பொறுத்தப்பட்டிருப்பதைக் காட்டி அவரிடம் சொன்னனேன்.

ஹவுஸ் ஓனர் உங்களிடம் சொல்லி இருப்பார் என்று நினைக்கிறேன். இங்கு தண்ணீர் கஷ்டம். அதனால், காலை வேளையில் ஒரு மணி நேரம்தான் தண்ணீர் விடுவோம். அந்த நேரத்தில் முடிந்த வேலைகளைச் செய்வதுடன் டாங்கிலும் நிரப்பிக் கொண்டுவிட வேண்டும். மறுநாள் காலை வரை தேவைக்கான ஏற்பாடு இது’ என்றேன்.

கிருஷ்ணன் தலை அசைத்தார்’எங்களுக்கும் தண்ணீர் கஷ்டம் இருக்கிறது. பிரச்சினைகள் தெரியும். ஆனால், எங்கள் பிளாட் பெரிசு. நாங்கள் இந்த தெருவில்தான் அந்தக் கோடியில் இருக்கிறோம்’ என்றார்.

அதற்குள், அந்த சிறிய குடியிருப்பை சுற்றி பார்த்த அவர் மனைவியின் முகத்தில் அதிருப்தி தெளிவாகத் தெரிந்தது.

‘மிகவும் சிறியதாக இருக்கிறதே?’ என்றார்.

கிருஷ்ணன் புன்னகைத்தார்’அதுதான் தெரியுமே? இரண்டு பேர்தானே?’ என்றார்.

நான் அவரிடம்’உங்கள் இருவருக்குமா?’ என்றேன். அவர்’இல்லை’ என்பது போல் தலை அசைத்தார்.

‘எங்களுக்கு இல்லை. இவள் அப்பா -அம்மாவுக்கோ அல்லது என் அப்பா- அம்மாவோ இருக்க’ என்றார்.

நான் பதில் சொல்லவில்லை. அவரே தொடர்ந்தார்.

‘நாங்கள் இப்போது இருப்பது மூன்று படுக்கை அறைகள் கொண்ட பிளாட்தான். ஆனால், எங்களோடு இப்போது இவள் பெற்றோர், என் பெற்றோர் ஆகியோரும் இருக்கின்றனர். வயதானவர்கள்’ என்றார் சற்று வருத்தமான குரலில்.

‘ஓ..’ என்றேன் பொதுவாக.

‘காரணம் இவள் ஒரே பெண். நான் ஒரே பையன், வேறு வழியில்லை’ என்றார்.

அந்தப் பெண்மணியின் முகத்தில் எந்த வித உணர்ச்சிகளும் தெரியவில்லை. ஆனால், எனக்கு அவள் மனதில் அதிருப்தி ஓடுவது புரிந்தது.

‘நாங்கள் இடம் பார்ப்பது இவள் பெற்றோருக்கோ அல்லது என் அப்பா அம்மாவுக்கோதான். எல்லோரும் ஒரே இடத்தில் இருப்பது சற்று பிரச்சினையாக இருக்கிறது’ என்றார் மெதுவான குரலில். தொடர்ந்து’நானோ, இவளோ அவர்களுக்கு சாப்பாடு உட்பட எல்லாம் தினம் கொண்டு வந்து கொடுத்து வீடுவோம். அது பிரச்சினை இல்லை’ என்றார்.

எனக்கு இப்போது பிரச்சினை தெளிவாகவே விளங்கியது. சம்பந்திகள் ஒரே வீட்டில், வீட்டில் கூட இல்லை, ஒரே பிளாட்டில் சேர்ந்து இருப்பதாவது? அதுவும் நம் நாட்டில்?

நானும்’அப்படியானால், பிரச்சினை இல்லைதான்’ என்று சொல்லி வைத்தேன்.

அவர் மனைவியின் முகம் இறுக்கமாகவே இருந்தது. இவர் பேசுவதற்கு முன்’சரி. அப்படி என்றால், உங்க அப்பா அம்மா இங்கு வந்து இருக்கட்டும்’ என்றாள்.

கிருஷ்ணனின் முகம் மாறியது’என் அப்பாவுக்கு வயசு அதிகம். அவர்களை தனியாக விடுவதாவது?’ என்றார். அவர் குரலில் சற்று கோபம் தொனித்தது போல் தோன்றியது.

‘ஏன்? என் அப்பா அம்மா மட்டும் சிறு வயதுக்காரர்களா? உங்கள் அப்பா அம்மாவை விட ஐந்து பத்து வயசு வித்தியாசத்தில் தானே இருப்பார்கள்?’ என்ற அந்தப் பெண்மணி தொடர்ந்து’என் அம்மாவுக்கு’ஆர்த்ரைடிஸ்’ இருப்பதால் கட்டாயம் என் உதவி வேண்டுமாக்கும்’ என்றாள் .

‘என் அப்பாவுக்கு கூட பை-பாஸ் ஆகி இருக்கிறது. அவரையும், சற்று காது கேட்காத என் அம்மாவையும் மட்டும் தனியாக விட முடியுமா?’ என்றார் கிருஷ்ணன். அவர் குரலில் லேசான உஷ்ணம் இருந்தது போல் தோன்றியது.

அவர் மனைவியின் முகம் நன்றாக மாறி விட்டது. சட்டென்று’நீங்கள் பார்த்து பேசிவிட்டு வாங்க. நான் வீட்டுக்கு போகிறேன்’ என்று’விருட்’ என்று கிளம்பி விட்டாள்.

அந்தப் பெண்மணிக்கு வீடும் பிடிக்கவில்லை, கணவரின் கருத்தும் ஒப்பவில்லை என்று தெளிவாகத் தெரிந்தது.

கிருஷ்ணன் என்னைப் பார்த்து புன்னகைத்தார்.

நான், சற்று பேச்சை மாற்ற’உங்கள் பிள்ளைகள் எங்கு இருக்கிறார்கள்?’ என்றேன்.

‘எங்களுக்கு ஒரு பிள்ளை; ஒரு பெண். பையன் குடும்பத்துடன் பெங்களூரில் இருக்கிறான். பெண் திருமணமாகி வேளச்சேரியில் இருக்கிறாள். நாங்கள் வேண்டுமானால் அவர்களோடு சென்று தங்கலாம். அது கூட அவ்வளவு சுலபம் இல்லை. என் அப்பா-அம்மா, அவள் அப்பா-அம்மா இவர்களை அங்கு கொண்டு போய் வைத்துக்கொள்ள முடியாதே?’ என்றார்.

‘வாஸ்தவம்தான்’ என்றேன்.

அப்பா அம்மாவை வைத்துக் காப்பதே அந்தரடியாக இருக்கும் இந்தக் காலத்தில் பாட்டி-தாத்தாவை எந்தக் குடும்பத்தில் அனுமதிப்பார்கள்?

‘நீங்கள் இவ்வளவு காலமாக ஒன்றாகத்தானே இருக்கிறீர்கள்? பிரச்சினை ஒன்றும் இல்லையே? இப்போது ஏன் பிரித்துப் பார்க்க வேண்டும்?’ என்றேன்.

‘உண்மைதான். தனியாக இருந்தவர்கள்தான். ஆனால், எத்தனை நாட்கள் சாத்தியம்? இருவரும் எங்களுடன் வந்து கிட்டத்தட்ட ஐந்து வருஷங்கள் ஆகின்றது’ என்றார் கிருஷ்ணன்.

‘அப்படியானால் ஓரளவுக்கு பழகி இருக்குமே?’ என்றேன் நான்.

‘சம்பந்திகள். அது அவ்வளவு சாத்தியமில்லை’ என்றார் கிருஷ்ணன். அவர் முகத்தில் ஏதோவொரு வெறுப்பு தெரிந்தது. நான் பதில் தரவில்லை.

‘நீங்கள் யாருடன் இருக்கிறீர்கள்?’ என்று என்னைக் கேட்டார்.

நான் புன்னகை செய்தேன்.

‘தனியாக இருக்கிறேன். கல்யாணம் செய்து கொள்ளவில்லை. பெற்றோர் போய் வெகு காலமாகி விட்டது’ என்றேன்.

அவர் ஜன்னல் வழியே வெளியே பார்த்தார்.

‘உங்களுக்கு பிரச்சினை ஏதும் இல்லாத வாழ்க்கை’ என்றார்.

நான் வாய் விட்டுச் சிரித்தேன்.

‘எனக்கும் பிரச்சினைகள் உண்டு. ஆனால், உங்களுடையது போல் இல்லை என்பதுதான் வித்தியாசம்’

அவர் முகத்தில் என்ற மாறுதலுமின்றி தலை அசைத்தார். பின், ’நான் ஒன்று சொன்னால் தப்பாக நினைக்க மாட்டீர்களே?’ என்றார்.

நான் வியப்புடன்’சொல்லுங்கள்’ என்றேன்.

‘ஒரு வயதுக்குப் பின் வாழ்வதே ஒரு வரமா அல்லது சாபமா என்று எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்றார்.

நான் புன்னகையுடன், ’அது நாம் வாழ்க்கையைப் பார்க்கும் விதத்தில் இருக்கிறது’ என்றேன்.

அவர் மறுப்பது போல் தலை அசைத்தார். பின், ’சரி. நான் வருகிறேன். பிறகு பார்ப்போம்’ என்று கிளம்பினார்.

****

கிருஷ்ணனை நான் அதற்குப்பின் பார்க்கவில்லை. வீட்டு உரிமையாளர் அதன்பின் அந்த வீட்டில் யாரையும் குடியேற்றவுமில்லை.

எதிர்பாராமல் ஒரு நாள் எங்கள் தெருவிலேயே எதிர் எதிராக பார்த்துக் கொண்டோம்.

‘ ஹலோ’ என்றேன்.

‘ஹலோ…எப்படி இருக்கிறீர்கள்?’ என்றார்.

‘குட்…வேறு இடம் பார்த்து விட்டீர்களா?’ என்றேன்.

‘ஆமாம். பார்த்தாகி விட்டது’. என்றார்.

‘எங்கே?’ என்றேன்.

‘நாங்கள் மூன்று தம்பதிகளும் அடுத்த மாசம் பெருங்களத்தூர் தாண்டி உள்ள ஓர் முதியோர் இல்லத்துக்கு போக முடிவு செய்து விட்டோம். அது ஒன்றுதான் இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு’ இதைச் சொன்னபோது அவர் முகத்தில் தோன்றியது வருத்தமா, திருப்தியா, மகிழ்ச்சியா என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

‘நல்லது. நல்ல முடிவு’ என்றேன் நான்.

‘சரிதான். நான் சொன்ன ஒன்றை நீங்களும் ஒரு நாள் ஒப்புக்கொள்வீர்கள்’ என்றார் அவர் தீர்க்கமான பார்வையோடு.

‘எதை?’

‘மனிதன் ஒரு வயதுக்குப் பின் வாழ்வதே வரமா அல்லது சாபமா என்பதை’ என்றார். அவர் குரலில் எஃகின் உறுதி தெரிந்தது.

ஒரு பெரியவர் தன் சொந்த வாழ்க்கையின் அனுபவத்தை வைத்து ஒரு கருத்து சொல்கிறார். இளமையில் வாழும் வாழ்க்கையை விட வயதான பின் வாழும் வாழ்க்கை சற்று சிக்கலானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. காரணங்கள் பலவாக இருக்கலாம். ஆனால், அதிலும் உண்மை இருக்கிறது.

ஆங்கிலத்தில் ’ப்ளூ’ (நீலம் என்ற வர்ணத்தை குறிக்காது!)) என்ற ஒரு சொல் உண்டு. இதன் பொருள் அநேகமாக எந்த விதமான நம்பிக்கைகளும் இல்லாமல் நாளையோ, எதிர் காலத்தையோ நோக்குவது என்ற அர்த்தத்தில் வரும். முதுமை வரும்போது எதிர்காலம் குறித்த நம்பிக்கைகளும் ஒரு வகையில் மாய்ந்து போகின்றன என்பது ஒரு உண்மைதான். அதைத்தான் கிருஷ்ணன் இப்படி வெளிப்படுத்துகிறார் என்று தோன்றியது.

நான் அவர் போன்ற குடும்பஸ்தனோ, அல்லது இரு வேறு பெற்றோர்களுடனோ, மகன்-மகள் குடும்பங்களுடனோ இணைந்தோ பிரிந்தோ வாழ்ந்த அனுபவம் இல்லை. அதனால், இங்கு என் அபிப்ராயம் முறையாகாது.

‘இருக்கலாம்’ என்றேன்.

அவர் வெறுமே தலை அசைத்துவிட்டு விடை பெற்றுக்கொண்டார்.

நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்; அவர் வார்த்தைகள் சரியா, தவறா என்று!

-gswaminathan19@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button