இளையவன் சிவா கவிதைகள்

மன்னித்து விடுகையில்
இறக்கையாகிப் போகும் மனதைப் போல
மன்னிப்பைக் கோருகையில்
கனத்துக் கிடக்கும்
பாறாங்கல் மனதை
உங்களின்
ஒற்றைப் புன்னகையோ
ஒரு துளிக் கண்ணீரோ
லேசாக்கி விடலாம்
கேட்பதும் யாசிப்பதும்
எளிதென முடிந்த பின்
கொடுப்பதற்கு மட்டும்
கொம்பு சீவி நிற்பதேன்?
*
எப்போதாவது
கனவுகளில் வரும்
அம்மாவிடம்
கேட்டுவிடத் துடிக்கிறது
எப்போதும் கனவுகளில் வரும்
அப்பாவின் மிரட்டல்
உன்னை உறங்க விடுமா என்று?
*
பற்றுதலின் அலைகளில்
மனக்கடலுக்குள்
மூழ்கடித்து விடுகிறாள்
ஆழ்மனதில் அலைந்தபடி
கனவுகளை உச்சரிக்கும் நானோ
வானத்தைப் பரிசாக்கி வர
சிறகுகளை விரிக்கிறேன்
அப்போதும் காதலியின் பிடிக்குள்
இரண்டு இறகுகள்.
*
மனத்தூரிகை
முகத்தில் வரையும்
மறையாச் சித்திரமென
விரியட்டும் புன்னகை
துடைப்பான்களைத் தாண்டி
மகிழுந்தை முத்தமிடும்
மழைக்கும்
கண்ணாடியின் மீதான
கவனத்தைப் போலவே
உம்மிடமிருந்து சிந்தட்டும் புன்னகை
இதழ் விரிக்கும்
புன்னகை என்பது
வானத்தை அளக்கும் பறவையின்
இறகை விரித்தலுக்கு ஒப்பானது
எல்லோரது இதயத்திலும் ஊடுருவி
உம்மை நிலைநிறுத்த
இருப்பு வெளிப்படுத்தும் புன்னகையில்
அன்பையே சித்திரமாக்கிவிடுகிறது மனம்.



