கரிகாலன் கவிதைகள்

ரகசியச் சுடர்
~
ஒரு ரகசியம் அவ்வளவு அற்புதமானது
இந்தப் பகல் பிரகாசமாக இருந்தது
எனக்குள் எந்த மர்மத்தை ஒளித்துவைத்திட முடியும்?
என்பதுபோல் அதற்கொரு திமிர்
ஆற்றின் போக்கில் நீலமேகம்
மிதந்து செல்கிற பகலிது
பளிங்குபோல துலக்கமுறும்
இப்பகலால் என்ன சுவாரஸ்யம்?
கிளைகள் மீது மஞ்சள் கொன்றைகள் மலரும் பகற்பொழுதில்
ஒரு மரத்தின் ரகசியம்
வேர்களாக இருக்கின்றன
மறைந்துகிடக்கும் கருணையின் நீரூற்றை அவ்வேர்கள் முத்தமிடுவதை
ஒரு போதும் காணமுடியாது இப்பகலால்
ஆம், எப்போதும்
ஒரு ரகசியம் அவ்வளவு அற்புதமானது
அது நம் மனசுக்கு
மேலே இருக்கும் முகத்தில்
சில கொன்றை மலர்களை விரிக்க
பகல் கூச்சப்பட்டு அந்தியாகிறது
உலகின் எல்லா கிளைகள் மீதும் பளிச்சென இருள்
ஒரு சுடராக மலர்கிறது.
***
பொன்சாய்
~
ஏழு மலைகள் தாண்டி
ஏழு கடல்கள் தாண்டி
நான்கு யுகங்கள் தாண்டி
முப்பது கல்பங்கள் தாண்டி
பதினான்கு உலகங்கள் தாண்டி
நள்ளிரவின் தாழைத் திறந்து
உள்ளே ஒரு பெண் வந்தாள்
ஜப்பான் தோட்டம் போன்று
என் இதயம் குறைவானது
அதேவேளை எல்லைகளற்றது
அதில் அவள் ஒரு பொன்சாய்
தாவரத்தை நட்டாள்
அனைத்து அன்பையும்
ஒரு தேக்கரண்டியில் நீராக்கி
அதன் வேரில் வார்த்தாள்
‘இது இறந்தால் நம் அன்பு இறந்துவிடும்’
கவனித்துக் கொள்ளெனக் கூறி
விடியற்காலை விழுந்த
மழைத் துளிகளுக்கிடையே
காற்றென நழுவி
அவள் வெளியேறுவதை
பொன்சாய் தாவரத்தின்
இரண்டு இலைகளாகிவிட்ட கண்கள்
இமைமூடாமல் பார்த்தபடி இருந்தன
இந்த பொன்சாய்க்கு
அதிகம் தண்ணீர் ஊற்றமுடியாது
அதிகம் எருவிட முடியாது
பிறகு அது என்னை மீறி வளர்ந்துவிடும்
என் தோட்டம் காணாமல் போய்விடும்
இந்த பொன்சாய்
குறைவாக இருக்கிறது
எல்லாமாகவும் இருக்கிறது
ஒரே ஒரு நிறைவின் மழைத்துளி
இதன் சிறிய உயிருக்குப் போதும்.
***
என் கதை
~
இது என் கதை
இதை நான்தான் எழுதுவேன்
அவசரப்பட்டு இதிலிருந்து வெளியேறினால்
இந்தக் கதையை
என் எதிரி எழுதும் ஆபத்து இருக்கிறது
அவனுக்கு நான் சேவகம் செய்ததாக
எழுதிக் களிப்பான்
என் காதலியை அபகரித்து
அனுபவித்ததாக திருப்தியடைவான்
என்னை ஊமையாக்கி
என் சொற்களை
இம்மண்ணில் புதைப்பான்
என் விழிகளைக் குருடாக்கி
இருளில் என்னை சிறைவைப்பான்
என்னுடைய துப்பாக்கியை மறைத்து
ஒரு மலவாளியை
என் கையில் கொடுப்பான்
என் கண்ணீரால் நிறைந்தது
இந்த நகரத்தின் நதியென்பான்
என்னிடம் பெரிதாக
எந்த அழகியலும் இல்லைதான்
என் பாட்டியின் கதைகளைக்
கேட்கச் சகியாமல்
எங்கள் தெய்வம் ஓடிப்போன
கதையைத் தாத்தா கூறியிருக்கிறார்
அவர் தோளை சூரியன் கடித்துத் தின்றதைச் சொல்லி
இரவில் அழுவார்
என் கதையில்
அவர் முன்னால் சூரியனை
முட்டி போடச் சொல்வேன்
இந்த தருக்கத்தைப்
புரிந்து கொள்ள முடியாமல்
குழம்பும் எதிரி முன்னால்
என் கதையிலிருந்து
வெடிச்சிரிப்பு சூறாவளியாகக் கிளம்பும்
ஆனாலும் நெற்றிப்பொட்டில்
துப்பாக்கியை வைத்து
அவனை நான் சுடப் போவதில்லை
அவன் மனைவிக்கோ
பிள்ளைகளுக்கோ
தீங்கு செய்யப்போவதுமில்லை
இந்தக் கதையின் முடிவில்
அவன் நாணும்படி
அவனை நான் மன்னிப்பேன்.
***
உடைந்ததன் அழகு
~
உடைந்தவற்றை குப்பைத் தொட்டியில் போட
யாரும் தயங்காத காலமிது
ஆனாலும் யாருடைய காலோ இடறி
சிலவேளை நம் இதயம் உடைகிறது
உயரத்தில் இருப்பதை
எடுக்கும் அவசரத்தில்
வேண்டியவர்கள் தட்டிவிட
அருகில் இருக்கும்
நம் மனம் தவறி விழுந்து
உடைகிறது
அப்படித்தான் நான் வளர்க்கும் பூனை
எலியைத் துரத்தும் வேகத்தில்
ஒரு தேநீர் கோப்பையை உடைத்தது
இன்று பகல் முழுவதும்
ஃபெவிகால் கொண்டு
கோப்பையை ஒட்டுவதை இளக்காரமாகப்
பார்த்தது அப்பூனை
இளமையை
பரிபூரணத்தை
மிகுதியைக் கொண்டாடும்
காலம் வளர்த்த பூனையது
அதற்குத் தெரியாது
வடுக்களின் அழகைக் கொண்டது
என் ஒட்டப்பட்ட இதயம்
குறைபாடுகளை மறைக்க விரும்பாமல்
இணைக்கப்பட்ட விரிசல்களின்
வனப்பைக் கொண்டது என் மனம்
இவற்றை ஒட்டியவள்
ஒரு கிண்ட்சுகி கலைஞர்
அவள் கைரேகை படிந்தது
இப்பீங்கான் கோப்பை
இதை இந்தப் பூனைக்கு
எப்படி புரிய வைப்பது?
●
பி.கு :
கிண்ட்சுகி – உடைந்ததை ஒட்டி,
அபூரணத்தின் அழகைத் தழுவும்
ஜப்பான் கலை
***
பலி
~
உன் மலை உச்சியில் ஏறி
முகில் கூட்டங்களைத்
தொட்டுப் பார்ப்பதில்
தொடங்கிய போட்டியிது
ஒன்பது அடி உயரமும்
ஐந்து அங்குல அகலமும் கொண்ட
இன்னொருவன் போட்டிக்கு வந்தால்
உன்னை எண்ணி சதா
கிண்ணாரத்தை வாசிக்கும்
போர்க்கவசம் ஏதுமணியாத
இச்சிறுவன் என்ன செய்வான்?
உன் சமுத்திரத்தில் குதித்து
முத்தெடுக்கும் தருணம்
எதிரியின் கரமும் ஆழத்தில்
துழாவிக் கொண்டிருந்தது
குளிரில் உனது நதி உறைந்தது
அதனுள் மூச்சுத் திணறிய
மீனை மீட்க
கோடரியை உயர்த்திய நேரம்
அவனும் எதிரே நின்றான்
உன் மின்னலை லாந்தராக்குவதில்
உன் அருவியில் சூடு தணிப்பதில்
உன் நட்சத்திரத்தை
சட்டைப் பொத்தானாக்குவதில்
எம் இருவருக்கிடையே போட்டி
இரண்டு தனங்களுக்கிடையே
கிடக்கிறது உன் தேசத்தின் அரியணை
யார் வெல்வார்? யார் அமர்வார்?
ரசிக்கிறாய்
உனது வலது மார்பில்
இடக்கன்னத்தில்
நள்ளிரவின் கருமையை மீறி மின்னுகிறது
பெருங்காம யுத்தத்தில்
பலியான கடவுளின் ரத்தம்.
***
கோடை
~
சூப்பர் மார்க்கெட்டுகளில்
குளிர் பானக் கடைகளில்
உணவகங்களில் இருந்த
தண்ணீர் பாட்டில்கள்
திருடு போவதாகப் பரவிய செய்தியை
அரசாங்கம் முதலில்
வதந்தி என்றே நினைத்தது
பறவைகள் குழுவிலும்
இதே பிரச்சனைதான்
தாம் அருந்தும் நீர்நிலைகளை
மனிதர்கள் திருடுவார்களா?
மரங்களைத் துளைப்பதுபோல்
அவை நெகிழிகளில்
ஓட்டையிடப் பழகின
தண்ணீர் போத்தல்கள்
காணாமல் போவதை
எல்லைப் பிரச்சனையென
ஒரு தொலைக்காட்சி கூறியது
இல்லை, அது மதப்பிரச்சனையென
ஓர் அரசியல் கட்சி பிரச்சாரம் செய்தது
பாகிஸ்தான் சதியென்றார்கள்
சீனாவைத் தவிர வேறு யாரென்றார்கள்
தண்ணீர் பாட்டிலைக் கண்டுபிடிப்பதற்கு
துப்பாக்கிகள் வழங்க
ஏகாதிபத்தியங்கள் முன்வந்தன
இப்போது துப்பாக்கிகளும்
காணாமல்போகத் தொடங்கியிருந்தன
தண்ணீர் பாட்டில்களுக்காக
காவலுக்கு நின்ற போலீஸ்காரர்
ஒரு சிட்டுக் குருவியால் சுடப்பட்டதை
சிசிடிவியில் பார்த்த புலனாய்வுத்துறை
அதை ஏ.ஐ நிகழ்த்துகிற
குழப்பமெனக் கருதியது
மூன்றாம் உலகப்போருக்கு
குருவிகள் துப்பாக்கி பழகும்
மிகையதார்த்தத்தில்
ஒரு கோடை
அழிந்து கொண்டிருக்கிறது.
***
கீழ்ப்படியாமை
~
விதிகளைப் பின்பற்றுபவர்கள்
அவ்வளவு நல்லவர்களா என்ன?
நீதிமானின் விதிக்கு கீழ்ப்படிந்த
ஒருவரே பகத்சிங்கை தூக்கிலிட்டார்
போலீஸ் கமிஷ்னரின் விதியைப் பின்பற்றும் ஒரு காவலர்
தனக்கு எந்தக் கெடுதியும்
செய்யாத ஒரு மனிதனை
மோதல் கொலை செய்கிறார்
சாதித்தலைவரின் விதியைப் பின்பற்றும் தொண்டன்
ஒரு காதலனின்
தலையைக் கொய்கிறான்
கர்னலின் விதிக்குக் கட்டுப்படும்
ஒரு சிப்பாய் காஸாவில்
ஏதுமறியா குழந்தை மீது குண்டுவீசுகிறான்
விதிக்கு கீழ்ப்படியாமை
ஓர் அன்பின் செயல்.
***
ருசி
~
இந்தப் பறவைக்கு வேகமாகப்
பறக்க உதவும் தன் சிறகுகள் குறித்து
எவ்விதப் பெருமிதமும் இருந்ததில்லை
பழத்தின் கடினமான விதை ஓடுகளை உடைக்கும்
அதன் அலகின் வலிமையை
ஒருபோதும் வியந்ததில்லை
அந்தரத்தில் மிதக்கும் கனமற்ற உடலின்
கச்சிதத் தன்மைக்காக அது கர்வப்பட்டதுமில்லை
காலை அதை ஒரு வேட்டைக்காரன் சுட்டபோது அதற்கு வலித்தது
ஆனாலும் அதற்கு
கவலைப்படத் தெரியவில்லை
இவையெல்லாமும்கூட
காரணமாக இருக்கலாம்
என் உணவுத்தட்டில் இருக்கும்
இந்தப் பறவையின் மாம்சம்
ருசியாக இருப்பதற்கு.
***



