இணைய இதழ் 121கவிதைகள்
செளமியா ஸ்ரீ கவிதைகள்

பறத்தல் எனது சுதந்திரம் எனில்
முடக்கும் சுதந்திரத்தை
யார் கொடுத்தார்?
*
கடக்க முடியாத பாலத்தின் மேல்
முளைத்த புற்கள் ஆடின
நடனம்
இது வாழ்தலின் விளிம்பு நிலையல்ல
தொடர்நிலை.
*
எழுதுகிறேன் யுகத்தின் சோகப் பாடல்
அதில் சோகமே இல்லை
என்னே அவலம்!
*
படர்ந்து வளர்ந்திருக்கும்
தாழம் பூவில்
மணப்பது வாசமல்ல விஷம்
தேனீ வந்தது!
செத்தது!
*
பேசப்படாமல் கொல்லப்பட்ட
உணர்வுகளின் கல்லறை மேல்
பூக்கள் முளைக்காமல் சாகின்றன
வாசம் உண்மை சொல்லிவிட்டால்!
*
தேடித் தேடி சொற்கள் கோர்த்து
மாலை ஒன்று செய்திட்டேன்
அது மயானம் நோக்கிப் பயணிக்கையில்
எல்லா நூலையும் அறுத்திட்டேன்
சொற்கள் இருக்கின்றன
கோர்க்கத் தெரிகின்றது
மயானத்திலிருந்து விடைபெறுகிறேன்.
*
முரண்களின் நடுவே முடிச்சிடப்பட்டு
முடியாமல் நகரும் நாட்கள் தோறும்
மறக்காமல் எழுதிவிடுகிறேன்
வாழ்க்கையை.
*
E Mail : sowmiyashree00@gmail.com



