CBF-2026சிறப்புப் பகுதி

­நல்லா இருக்க வேண்டிய புத்தகக் காட்சியும் நாலு வாசக அப்பாவிகளும்!– பரிசல் கிருஷ்ணா

திருப்பூரில் புத்தகக் காட்சி எப்போதுமே மாதக் கடைசியில் ஆரம்பித்து ஏழாம் தேதிக்கு முன்னர் முடித்து விடுவார்கள். இப்போது வரை அப்படித்தான் என்று நினைக்கிறேன். அங்கே ஏழாம் தேதிதான் சம்பள நாள். ஒவ்வொரு புத்தகக் காட்சியின் போதும் வாங்க வேண்டிய புத்தகங்கள் பட்டியல் இருந்தாலும் பொருளாதாரச் சிக்கல் காரணமாக, வெறும் கையோடுதான் திரும்ப நேரும். ஏதோ ஒரு ஆண்டில், அந்தப் புத்தகக் காட்சி நடத்தும் பின்னல் புக் டிரஸ்ட், ஒரு குறிப்பேடு வைத்திருந்தார்கள். அதில் கீழக்கண்ட கவிதையை எழுதினேன்.

உலகப் புத்தகக் கண்காட்சி


சுற்றிலும் நாவூறும்
வண்ண வண்ணப் பணியாரங்கள்
சத்துணவு வகையறாக்கள்
கனமில்லாப் பையை
வெறுங்கையால் துழாவியவாறு
பார்வையால் பருகி
வலம் வருகின்றான்
உலகளந்தப் பெருமாளின்
விசுவரூபப் பசியுடன்

– நீல பத்மநாபன்


நீல பத்மநாபனின் இந்தக் கவிதையை எழுதிவிட்டு, தேதியை மாற்றக் கூடாதா என்று கோரிக்கையெல்லாம் வைத்தேன். ஒவ்வொரு புத்தகக் காட்சியின் போதும் இக்கவிதை என் மனதில் ஓடும். ஒருமுறை சென்னைப் புத்தகக் காட்சியில் ஒரு வாசகர், டிராலி ஒன்றில் புத்தகங்களை வைத்து அள்ளிக்கொண்டு போனபோது, பெருமூச்சு விட்டு, ‘இப்படி நாம் நிறைய புத்தகங்கள் வாங்குவதும், அதை வாசிப்பதும் எப்போது?’ என்று எண்ணியதுண்டு. சீர் வாசகர் வட்டம் புத்தக சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்ததில், அது போன வருஷம் நடந்தது. டிராலி ஒன்றில்தான் புத்தகங்களை வாங்கிச் சென்றேன்.

***

2008 அல்லது 2009 அல்லது 2010தான் சென்னைப் புத்தகக் காட்சிக்கு முதன்முதலில் நான் வந்தேன். மிகச்சரியாக வருடம் நினைவில்லை. ஆனால், அந்த பிரமிப்பு நினைவில் இருக்கிறது. இருந்தது. ஸ்டால்களை சும்மா சுற்றிப் பார்க்கவே அரைநாள் பிடிக்கும் என்பது போல அத்தனை வரிசைகள். முதல்நாளே அத்தனை கூட்டம். சென்ற வருடம் வரை, வருடம்தோறும் கலந்து கொண்டிருக்கிறேன். 2015 வரை திருப்பூரிலிந்து ஓரிருநாட்கள் மட்டும் வந்து போகும் நான், சென்னைவாசி ஆகிவிட்டபின் – கிட்டத்த்தட்ட – நடக்கும் எல்லா நாளும் செல்லும் பழக்கத்தை மேற்கொண்டேன்.

என்னைப் பொறுத்தவரை, எனக்கு முழு உற்சாகமளிக்கும் நாட்கள் புத்தகக் காட்சி நடக்கும் நாட்கள்தான். வாங்குவது குறைவாக இருந்தாலும் மேய்வதற்கு ஏற்ற இடமாக அதுதான் இருக்கும். எல்லா எழுத்தாளர்களையும் சந்திக்க முடியும். எழுத்தாளர்களை சந்திக்கும் வாசகர்களின் உற்சாகத்தைப் பார்ப்பதையே நான் சிறந்த அனுபவமாக உணர்வேன்.

சுஜாதாவின் நூல்களைப் படித்துக் கொண்டிருந்த ஆரம்ப காலகட்டத்தில் ‘உண்மையான வாசகன் நேரில் சந்திக்கும் இரகமில்லை’ என்று அவர் ஏதோ எழுதப் போக, அவரைச் சந்திக்கவே இல்லை நான். ஆனால், புத்தகக் காட்சியில் சில வாசகர்கள் எழுத்தாளர்களிடம் ஆர்வமாகப் பேசும் போதும் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் போதும் உடனிருந்து கவனிப்பது எனக்கு ஒரு நல்லனுபவம். அதுவும் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து புத்தகக் காட்சிக்கு பெரும்பாலும் எல்லா நாட்களும் செல்வதால் நிறைய அனுபவங்கள்!

***

மனுஷ்யபுத்திரனிடம் பெரும்பாலும் கல்லூரி இளைஞர்கள், “அந்த ‘அழுகை வராமலில்லை’ கவிதை இருக்குல்ல சார்..” என்று நெருங்குவார்கள். மனுஷ்யபுத்திரனுக்கு அருகில் இருக்கும் நாற்காலியில் பெரும்பாலும் ஒரு முழு விஐபியோ, ‘பாதி விஐபி’யோ உட்கார்ந்திருப்பார்கள். அவரோடு பேசிக்கொண்டே வாசகர்களுக்கு கையொப்பமிட்டுக் கொடுப்பார். எஸ்.ராமகிருஷ்ணனிடம் பேசும் வாசகர்கள் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி கொப்பளிக்கும். பெயரைக் கேட்டு கையொப்பமிடுவார் எஸ்ரா. அவரது எழுத்தில் பிடித்த கதையை, நாவலின் காட்சியை சொல்லிப் பேசுவார்கள். அதையும் தாண்டி எஸ்ராவிடம் நான் வியந்த விஷயம், பலரும் – நான் உட்பட – ‘எந்த நூல் வாங்கலாம்?’ என்று கேட்டால், நூலின் பெயர், எந்த ஸ்டாலில் கிடைக்கிறது என்பதைச் சொல்லி அனுப்புவார்.

அதேபோலவே நூலை எழுதிய பல இளம் எழுத்தாளர்கள் எஸ்ரா, ஜெயமோகன் (ஜெமோ) இருவரையும் சந்தித்து அந்த நூலைக் கொடுத்து அதுகுறித்துப் பேசிச்செல்வார்கள். ஜெமோ, ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட நாட்களில் வந்து செல்வார். சமீப ஆண்டுகளாக அவரது விஷ்ணுபுரம் பதிப்பக ஸ்டாலில்தான் வாசகர்களைச் சந்திக்கிறார்.

ஜெமோவை சந்திப்பவர்கள் வரிசையில் நின்று சந்திப்பதைப் பல ஆண்டுகள் பார்த்திருக்கிறேன். தொடர்ச்சியான வாசகர்கள் என்றால் ஜெமோ பெயரைக் குறிப்பிட்டு அழைத்து போட்டோ எடுத்துக் கொள்வார். ஜெமோவை ஆண்டுதோறும் விமர்சித்து எழுதியவர்களைக்கூட ஜெமோ புன்னகையுடன் எதிர்கொண்டு பேசிக் கொண்டிருப்பார். ஜெமோவைச் சந்திக்கும் வாசகர்களிடம் ஒரு பரவச மனநிலையைக் கண்டிருக்கிறேன்.

சாரு நிவேதிதா வேறு ரகம். மாடர்னான இளைஞர்களும் பெண்களும் அவரைச் சூழந்திருப்பதுண்டு. சாருவின் டிரஸ்ஸிங் ஸ்டைலே ஒவ்வொரு நாளும் சுண்டி இழுக்கும். அவரிடம் எதையும் பேசலாம் என்பதால் வாசகர்கள் ரொம்பவும் நட்போடு உரையாடிக் கொண்டிருப்பார்கள். பா.ராகவன், பாஸ்கர் சக்தி உள்ளிட்ட சீனியர் எழுத்தாளர்கள் எந்த பந்தாவும் இல்லாமல் புன்னகையோடு வாசகர்களிடம் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள்.

பெரிய எழுத்தாளர்கள் தாண்டி அந்த வருடம் புத்தகம் போட்ட எழுத்தாளர்கள், வளரும் எழுத்தாளர்கள் இவர்களைச் சந்திப்பது வாசகனுக்கு ஒரு சவால். எதிர்கொண்டால் எப்படியாவது அவர்கள் நூலை வாங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். ஒரு சிலர் ‘இந்தா வெச்சுக்கங்க’ என்று கொடுப்பார்கள். இலவசமாக வாங்கும்போது நா.முத்துக்குமார் கவிதை வேறு நினைவுக்கு வந்து தொலைக்கும்.

“வேல்கண்ணன், வாசகசாலைல கவிதைக்காரன் இளங்கோ உன்னைத் தேடிட்டிருக்காரு…”, “குணா, ஜீரோ டிகிரில பாரா வந்துட்டாரு.. கேட்டியே’, ‘டிஸ்கவரில பிருந்தா சாரதி புக் ரிலீஸ் நடக்குது.. ஒரு அஞ்சு நிமிஷம் வந்துர்ரேன்’ – இப்படி கல்யாண வீட்டுக் குரல்கள் ஆங்காங்கே கேட்டுக்கொண்டே இருக்கும். நண்பர்களோடு போனால், ஆளாளுக்குப் பிரிந்து, பின் சேர்ந்து காபி குடித்துவிட்டு மீண்டும் பிரிந்து என்று புத்தகக் காட்சி அனுபவம் என்பது எழுத்தில் விவரிக்க முடியாத ஒன்று.

***

‘ஸ்ருதி டிவி ‘கபிலன் இலக்கியத்தின் சொத்து. அவருக்கு எழுத்தாளர்களையும் எழுத்தாளருக்கு அவரையும் நன்றாகவே தெரியும். எந்தப் புத்தக வெளியீடாக இருந்தாலும் அவரைத் தேடுவார்கள். முன்கூட்டியே சொல்லிவிட்டால் எப்படியாவது வந்து ஆஜராகி விடுவார். யாரிடம் என்ன கேட்பது என்றறிந்து கண்டெண்ட் வாங்கி விடுவார். அவரது யூட்யூப் பக்கத்தில் போனாலே அந்த வருட வெளியீடுகள் குறித்து அறிந்து கொள்ள முடியும். அவரைத் தவிர்த்து, சமீப வருடங்களில் வேறு பல யூட்யூபர்கள், செய்தி சேகரிக்க இளைஞர்கள் என்று பலரையும் மைக் கேமரா சகிதம் பார்க்கிறேன்.

சில வருடங்களுக்கு முன் கழிவறைக்கு அருகே ஒரு சிற்றரங்கு அமைக்கப்பட்டிருந்தது. அரங்கம் முழுவதும் பல எழுத்தாளர்களின் படங்கள். ஒரு நிகழ்வு முடிந்து நான், கவிஞர் வெய்யில், அகரமுதல்வன் உள்ளிட்ட பலர் அமர்ந்திருந்தோம். ஒரு இளைஞன் கையில் மைக்கோடு வந்து அங்கிருந்த ஒரு எழுத்தாளரின் படத்தைக் காட்டி, “இவரைப் பேட்டி எடுக்கணும். எங்க இருப்பார்?” என்று கேட்டான். அவன் காட்டியது தி.ஜானகிராமன். நாங்கள் அவனை மேலும் கீழும் பார்த்து, “அவர் உயிரோடயே இல்லையேப்பா” என்றோம். அடுத்து ஜி.நாகராஜன் படத்தைக் காட்டி கேட்டான் என்று நினைவு. வெய்யில், ரட்சகன் நாகார்ஜூனாவாக மாறி கை நரம்புகள் புடைக்கவே, நான் அவரை ஆசுவாசப்படுத்திவிட்டு சாரு நிவேதிதாவின் புகைப்படத்தைக் காட்டி, “இவர் ஓகேவா?” என்று கேட்டேன்.

“ஆபீஸ்ல அனுப்ச்சு நாலஞ்சு பேரையாச்சும் எடுக்கணும்னு சொன்னாங்க சார். ரெண்டு மூணு பேரை எடுத்து அனுப்ச்சேன். ஃபேமஸ் ரைட்டர்ஸ் எடுத்து அனுப்புன்னுட்டாங்க. எனக்கு ரைட்டர்ஸ்லாம் யாரும் தெரியாது. வெளில பேசிட்டிருந்தப்ப இந்த ஹாலுக்குள்ள ரைட்டர்ஸ் போட்டோஸ் இருக்கும், அதுல சிலரைப் பார்த்து பேட்டி எடுங்கனு ஐடியா கொடுத்தாங்க. அதான் வந்தேன்” என்று சரண்டர் ஆனான். சாரு, ஜீரோ டிகிரியில் இருப்பார் என்று ஸ்டால் எண் சொல்லி அனுப்பினோம்.

இதன்மூலம் சொல்ல வருவது யாதெனில், செய்தி சேகரிக்க அனுப்புபவர்கள் கொஞ்சம் புத்தகங்கள் பற்றி அறிந்தவர்களை அனுப்பலாம். அல்லது சொல்லிக்கொடுத்தாவது அனுப்பலாம்.

***

புத்தகக் காட்சியில், ‘அதை நடத்தும் அமைப்பினரின் பங்கு சிறப்பாக உள்ளதா?’ என்று ஒரு கேள்வி எல்லா புத்தகக் காட்சியின்போதும் மனதில் அலையாடும். திருப்பூரில் நாங்கள் வலைப்பதிவர்கள் இணைந்து ‘சேர்தளம்’ என்றொரு அமைப்பை நடத்தி வருகிறோம். அங்கு பின்னல் புக் டிரஸ்ட், சில வருடங்களுக்கு முன் எங்களுக்கு முன் பகுதியில் ஓர் இடம் ஒதுக்கித் தந்தார்கள். புதிதாக வாசிப்பவர்களுக்கு இருக்கும் ஐயங்கள், எந்தப் புத்தகம் வாங்கலாமென்ற யோசனைகள். சமூக ஊடகக் கணக்கு ஆரம்பித்துக் கொடுப்பது, அவர்கள் தேடி வந்த புத்தகம் எந்த அரங்கில் கிடைக்கிறது என்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் எல்லாம் செய்தோம். அது ஒரு மனதுக்கு மகிழ்ச்சி தந்த அனுபவமாக இருந்தது.

சென்னை புத்தகக் காட்சியில் அரங்கு எண்களை நினைவு வைத்துக் கொள்வதும், எண் கொண்ட ஸ்டால்களும் F வரிசை ஸ்டால்களும் எங்கே எந்த வரிசைக்கிரமத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை நான்கைந்து நாட்களானாலும் மனதில் நிற்காது. உயிர்மை, வாசகசாலை, ஜூரோ டிகிரி, டிஸ்கவரி, காலச்சுவடு, க்ரியா, தேசாந்திரி, விஷ்ணுபுரம், நூல்வனம், யாவரும் உள்ளிட்ட (இன்னும் பல) நாம் ரெகுலராகப் போகும் அரங்குகளை மட்டும் எந்த வரிசையில், எத்தனாவது என்று இரண்டு நாட்கள் சுற்றி நினைவில் வைத்துக் கொள்வேன். இருந்தாலும் சில மனதில் பதியாமல் அங்கே இங்கே என்று அலைய நேரிடும்.

பபாசி, எளிதாகச் செய்ய முடிகிற விஷயத்தை இந்த வருடமாவது செய்தால் மனமகிழ்வேன். அதாவது நுழைவாயில் அருகே அந்த வரிசையில் எந்த எண்ணில் எந்த ஸ்டால் என்று எழுதி வைத்திருப்பது போலவே ஒவ்வொரு வரிசையிலும் இடையிடையே வழிவிட இடைவெளிகள் இருக்குமல்லவா, அந்த இடைவெளிகளிலும் அந்தந்த வரிசைகளில் எந்த ஸ்டால்கள் என்று ஒட்டலாம். ஒவ்வொரு முறையும் அத்தனை தூரம் முன்னே நடந்து அதைப் பார்ப்பது கொஞ்சம் சிரமமாகவே உள்ளது.

ஸ்டால்கள் மழை பெய்தால் ஒழுகுவது, வாகன நிறுத்தங்கள் முறையாக பராமரிக்கப்படாதது, கழிவறைகளின் தரம் என்பது போன்றவற்றில் நாம் இன்னும் பல மைல் தூரம் நாம் பயணிக்க வேண்டியதுள்ளது. அதேபோலவே ‘உப்புமா’ ஸ்டால்களின் எண்ணிக்கையை இன்னும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

அதேபோலவே, புத்தகக் காட்சிக்கு வருபவர்கள் உணவு அரங்குகளுக்குச் செல்வதில் சிரமம் தொடர்கதையாகவே உள்ளது. அந்த அரங்குகளுக்கு முன் உள்ள இடங்களில் உட்காரவோ ஏன் நிற்கவோ கூட முடியாமல் மேடுபள்ளமாகவே இருக்கும். என்னதான் டெல்லி அப்பள விற்பனையை புத்தக ஆர்வலர்கள் கிண்டலாகச் சொன்னாலும், அந்த வாடிக்கையாளர்களை மதிப்பதும் முக்கியமல்லவா!

பபாசி நிர்வாகிகள் தேர்தல் முடிந்தபிறகு நடக்கும் புத்தகக் காட்சி. வாசிப்பவர்களை நேசிப்பார்கள் என்று நம்புகிறேன்! புதிய அம்சமாக இப்போதே இன்ஃப்ளூயர்ஸ்களை சமூக ஊடகங்களில் புத்தகக் காட்சி குறித்து காணொளிகள் பதிவிட அழைத்திருக்கிறார்கள். அனுமதி இலவசம் என்று அறிவித்திருக்கிறார்கள். புதிய நிர்வாகிகள், வாசகர்களைக் கவரும் வண்ணம் இன்னும் என்னென்ன புதிதாக செய்யப் போகிறார்கள், அரங்குகளை அமைப்பதில், உள்ளே ஏற்பாடுகளில் என்று என்னென்ன செய்திருப்பார்கள் என்று ஆவலாக எதிர்பார்க்கிறேன்.

சரி, கடைசியாக ஆரம்ப நிலை வாசகர்களுக்காக வாசிக்க ஒரு பட்டியலை வாசகசாலை கார்த்தி கேட்டிருந்தார். ரொம்பவும் யோசிக்காமல், சட்டென்று மனதில் தோன்றும் பத்து இதோ:

1. குட்டி இளவரசன்
2. வால்கா முதல் கங்கை வரை
3. உலக சினிமா – செழியன்
4. கனகதுர்கா – பாஸ்கர் சக்தி
5. அசோகமித்திரன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு
6. கதாவிலாசம் – எஸ்ராமகிருஷ்ணன்
7. அறம் – ஜெயமோகன்
8. சேப்பியன்ஸ் – யுவால் நோவா ஹராரி
9. மய்யம் – தேர்ந்தெடுத்த படைப்புகள்
10. வேர்கள் – அலெக்ஸ் ஹேலி

புத்தகக் காட்சியில் சந்திப்போம்!

-kbkk007@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button