பிரபு கவிதைகள்

பெரும் பிரயத்தனத்துக்குப் பிறகு
பற்றுதலோடும், உயிர்ப்போடுமிருந்த காதலை
சிலுவையில் ஏற்றினாய்
பழிவாங்களுக்கென உன் மீதிருந்த
கருணையையும், பாவத்தையும் முறையே
இடப்பக்கமும், வலப்பக்கமுமாக
சிலுவையில் அறைந்தாய்
நீ காதலிக்கப்பட்டதற்கான பெருங்கருணையை,
உன் மீதான பழிவாங்கலென
உணர்ந்து கொண்டாயோ ஆராதனா !
நீ சுமந்து திரியும் இந்த வாழ்வை,
பாவமென நிர்பந்தித்துக் கொண்டாயோ ஆராதனா!
இயல்பை மீறியதாய் இருக்கும் இந்த வாழ்வு
பழிவாங்கலின் குறியீடென
கடவுளை கடிந்து கொண்டதில்
எந்தக் குற்றச்சாட்டும் இல்லை
உணர்ச்சியற்று இருக்கும்
உன் கால்களுக்கு ஈடாய்
உயிர்ப்போடிருக்கும் இந்தக் காதலை
பெருங்கருணையென எண்ணாது
மடைமாற்ற முடியவில்லையோ உன்னால்?
சக்கரங்களால் தரை ஊன்றியதன்றி
ஒருபோதும் மண்டியிட்டதில்லைதான்
உன் கால்கள்
இருப்பினும், ஊடலற்று காதல் புரிதல் என்பது
உன் தாழ்வுணர்வின் மடத்தனம்
உன் பலவீனத்தால், உன் காதலை
பெருங்கருணைக்குள் தள்ளியது பற்றி
நீ எண்ணாத வரை,
உன் வாழ்வைப் பற்றி
அஞ்சியிருக்கத் தேவையில்லை ஆராதனா…
**********
காற்றின் மெல்லொலியில்
சன்னமாக ஒலித்தது உன் குரல்
முதலில் அதை நினைவின்
எதிரொலியென்றும்,
பிறகு காற்றில் மிதந்த
நம் காதலின் அசரீரியென்றும்
எண்ணிக் கொண்டிருக்கையில்
தளராது ஒலித்தது
நினைவின் கருவில் ஏறிய
அதே அழகிய குரல்
திரும்பிப் பார்க்க மனமில்லை
உறுதிவிட்டுக் கூற முடிகிறது
அது நீயேதான்
எப்படியோ! நீ இப்போது என் சுவாசமற்று
ஓர் நிகழ்காலத்தை உயிர்ப்பித்துவிட்டாய்
மலராத நினைவுகள் வழியே
ஓர் எதிர்காலத்தைக் கட்டமைத்திருக்கலாம்
சுவடுகளின் புழுதியில்
சிக்குண்டு கிடக்கும் நான் ஏன்
உன் இறந்தகாலத்தை
உயிர்ப்பிக்கச் செய்ய வேண்டும்?
நினைவு அதன் கருவின் ஆதியைத்
தொட்டுவிட்டதென்ற பூரணத்துடன் விடைபெறுகிறேன்
பாராது ஒலித்தது,
மலராத முகத்தோடு
அந்த அழகிய உன் குரல்.
***********
நீ எழுத முடியாத
கவிதைகள் வழியாய்,
நான் உயிர் பெறலாம்
நீ பிறழ முடியாத வார்த்தைகள் வழியாய்,
நம் உரையாடல் தொடங்கலாம்
மறந்தொழிக்க முடியாத நினைவுகள் வழியாய்,
என் கதகதப்பை உணர்கிறாயோ..!
நீ கடக்க முடியாத இரவென்ற ஒன்றில்,
நான் நிலவின் கூரையில் அமர்ந்தபடி
நம் நினைவுகளைக் கடத்திக் கொண்டிருப்பேன்
நீ அடைய முடியாத தூரத்தின்
தொடுவானத்தில்தான் நாம்
மீண்டும் சந்திப்போமா என்னவோ..!
நடந்தேறமுடியாதவை மீதுதான்
நம் காதல் படர்ந்தேறியிருக்கிறது
நிலவை, நட்சத்திரங்களை, கடவுளை
காதலிப்பது மாதிரி…



