கொற்றவையாக்கும் காதல்
முட்டுவேன் கொல்! தாக்குவேன் கொல்!
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆ! ஒல்! கூவுவேன் கொல்!
அலமர அசைவு வளி அலைப்ப என்
உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே
குறுந்தொகை – 28
பாடியவர்: ஔவையார்
திணை: பாலை
வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிந்த தலைவன் குறித்த காலத்தில் மீளாமையால் உண்டான துயரை தலைவி தோழிக்கு உரைத்தது.
இயற்கை நிகழ்வு ஒன்றின் மீது உணர்வுகளை ஏற்றிக்கூறும் சங்கக்கவிதைகளில் இதுபோன்ற நேரடியான கவிதையைக் கண்பது அரிது. ‘நீர் வார் கண்ணை’ , ‘உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி’ , ‘நோம் என்றால் நோம் நெஞ்சே’ என்ற வரிகளுக்கு மத்தியில் முட்டுவேன்,தாக்குவேன் என்று உரத்துக் கூறி ‘மனதின் முச்சந்தியில்’ வந்து நிற்கும் குரல் இது.
சங்கப்பாடல்களில் காதல் என்ற சொல் இல்லை. காமம் என்ற சொல் மட்டும்தான். இன்று நாம் காதல் என்றும், காமம் என்றும் பிரித்து கூறும் உணர்வுகளை இந்தப்பாடல்களில் உள்ள வரிகளை முன்பின்னாக வைத்து புரிந்து கொள்ளலாம். சங்ககால சொல்லாட்சியில் காதல் உணர்வுகளை ‘நோய்’ என்ற சொல்லால் குறிப்பது குறித்து எனக்கு வியப்பு உண்டு. கல்லூரி இளங்கலை இரண்டாம் ஆண்டு இறுதிப் பருவத்தில் எங்களுக்கு ‘நோய்’ என்ற சொல்லின் மீது ஒரு முனையில் ஆர்வமும்,மறுமுனையில் மிகுந்த சோர்வும் இருந்து. அப்போது மருத்துவ நுண்ணுயிரியல் [Medical Microbiology] மற்றும் நோய் எதிர்ப்பியல் [Immunology] எங்களுக்கு முக்கியப் பாடங்களாக இருந்தன. நிறைய மனப்பாடம் செய்ய வேண்டியிருக்கும். திடீரென்று தூக்கத்தில் எழுந்தால் வரிசையாக நுண்ணுயிர்களின் பெயர்களும், நோய்களின் பெயர்களும்,மருந்துகளின் பெயர்களும் மூளையில் ஓடும். நாளின் இறுதிவகுப்பாக தமிழ் வகுப்பு நடைபெறும். களவியலின் தகையணங்குறுத்தல், குறிப்பறிதல், புணர்ச்சி மகிழ்தல், நலம் புனைந்துரைத்தல், காதல் சிறப்புரைத்தல் என்ற ஐந்து அதிகாரங்கள் பாடப்பகுதியாக இருந்தன.
ஒருநாள் தமிழ் வகுப்பில் தோழி நிஷா, தமிழாசிரியர் ராதாவிடம் ‘காதலும் ஒரு ‘நோயா’ மேம்? ‘ என்று சலிப்பாகக் கேட்டாள். “க்ளாசா இது? பக்கத்து டிபார்ட்மெண்ட்ல எவ்வளவு சிரிப்பு சத்தம் கேக்குது. உங்களுக்கு களவியலும், காதல் சிறப்புரைத்தலும் நடத்தி நான் நாசமாப் போக,” என்றார். “மேம்… நீங்க டைவர்ட் பண்ணாதீங்க..காதல் ஒரு டிசீஸா,” என்று நிஷா பிடிவாதமாக நின்றாள். நான் கொட்டாவியை மறைக்க வாயில் கைவைத்ததைப் பார்த்த தமிழாசிரியர் முறைத்தபடி,”அம்மணிக்கு நல்ல தூக்கம்.. நிஷாவுக்கு பதில் சொல்லு. இல்லாட்டி க்ளாஸவிட்டு வெளிய போ,” என்றார். நிஷாவிடம், “டிசீஸ்ன்னா என்ன..?” என்றேன். “Unusual physical and mental conditions in living being..” என அவள் கூறத் தொடங்கவும், “போன செமஸ்டர்ல்ல குறுந்தொகை படிச்சோம்ல. அதுல பசலை படர்தல்…மட நெஞ்சே அப்படில்லாம் வரும். அதெல்லாம் டிசீஸோட ஒத்துப்போகும். இப்ப படிச்ச திருகுறள்ல தலைவி தன்னைப் பார்க்கறதே ‘ஒரு நோக்கு நோய் நோக்குன்னு’ தலைவன் சொல்றான். அந்தப்பார்வையே தலைவனுக்கு பிசிக்கலி… மெண்டலி ஹார்மோன் இன்ட்யூசரா ஆகுது. அதைத் தான் வள்ளுவர் நோய்ன்னு சொல்றார். ஷார்ப்பா சொல்லனுன்னா.. அப்நார்மல் ஹார்மோனல் ஆக்டிவேஷன்,”என்றேன்.
தமிழாசிரியர்,”திருமணம் முடித்து பிள்ளைபேறுக்குப் பிறகு பரத்தைக்கிட்ட போயிவான். இந்த நோயெல்லாம் சரியாகி நார்மலாகிடுவாங்கன்னு சொல்லி முடிக்க வேண்டியது தானே ,”என்று கூறி என் தோளில் தட்டி சிரித்தார்.
“இந்தப்பாடல்கள் எல்லாமே அழகான கற்பனைகள் தானே மேம்,”
“இப்பதான் முழிச்சிருக்க… நிஷாவுக்கு நோயான்னு சந்தேகம். இவ இன்னும் கொஞ்ச நேரத்துல காதல் பொய்ன்னு சொல்வா பாத்துக்கங்க,”
உடனே காயத்ரி எழுந்து, “ஆமாம் மேம். இமேஜினேசன் தான்..பபுள் மேக்கிங் மாதிரி”என்றாள்.
“பபுள் மேக்கிங்கா?”
“வள்ளுவரே காதலை எவ்வளவு ஜெயண்ட்டா மாத்தறார் பாருங்க மேம்…அனிச்சப்பூவை விட மென்மையானவர்கள்; சூடான உணவை சாப்டா நெஞ்சத்தில் இருக்கும் காதலருக்கு சுடுமாம். இப்படி சொல்றதெல்லாம் பபுள் மேக்கிங் தானே மேம். சின்னப்பிள்ளையிலருந்து அவர சீரியஸான ரைட்டராவே நினைச்சுட்டேன் மேம்,”
தமிழாசிரியர் புன்னகை மாறாமல் “அவர் சீரியஸ் ரைட்டரா இருக்கறதாலதான் அறம்,பொருள் மாதிரி காதலையும் இவ்வளவு சீரியஸா எழுதியிருக்கார். இது ஒரு எக்ஸ்ட்ரீம் ஸ்டேட்…அதனாலதான் தக்க வச்சிக்கறது சவாலா இருக்குன்னு நினைக்கிறேன்,” என்றார்.
“திருக்குறள்ல்ல, குறுந்தொகையில வருகிற ஃபீல் எல்லாம் டீன்ஏஜ் ப்ராளம் மேம்..ட்ரெய்ன் அவுட் குயிக்லி,” என்றாள் காயத்ரி.
[காதலில் இருக்கும் மக்கள் எல்லாம் சர்வ ஜாக்கிரதையாக சிவனே என்று அமர்ந்திருந்தார்கள். கேள்விகளெல்லாம் ஆர்வகோளாறுகளுக்கானது. தமிழாசிரியர் உட்பட. அவரும் அப்போது மணமாகாத இருபத்து எட்டு வயது பெண்]
ஔவையாரின் இந்தப்பாடல் காதல் என்ற தன்நிலையழிதல் மனநிலையில் எடுத்துக் கொள்ளத் தக்கது. எனக்கு சமிக்ஷாவை எட்டு வயதில் இருந்து தெரியும். மிக மெல்லிய உடல்வாகும் அதற்கு எதிரான குரலும் கொண்டவள். ஒன்பதாம் வகுப்பில் நம்மை நோக்கிப் பாய்ந்து வரும் ஆங்கில இலக்கணம், அல்ஜீப்ராவை எல்லாம் கடந்து காதல் வந்து நிற்கும் என்றால் அது வலிமையானது என்று ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அதுவும் பதினொன்றாம் வகுப்பு ‘சூப்பர் சீனியரை’ காதலிக்கும் தைரியமெல்லாம் அவளுக்கு வரும் என்று குடுகுடுப்பைக்காரன் கூட நினைத்திருக்க மாட்டான். என்றாலும் தானே கதவைத்தட்டி, தானே திறந்து, தானே ஆசனமிட்டு அமர்ந்து, அமர்ந்த உள்ளத்தை அலமர வைப்பது தான் காதல் என்று நினைக்கிறேன்.
யாரும் எதிர்பார்க்காத ஒரு கோடைவிடுமுறை மதியம் அது. அவன் வீட்டிற்கு முன்னால் மழையால் கரைந்த மண்சுவர் வீடு ஒன்று உண்டு. அந்த சந்தில் நின்று சமிக்ஷா அவனுடன் பேசிக்கொண்டிருந்தாள். அதனால் அவளின் அம்மாவைத்தவிர மற்றவர்களுக்கு அதிர்ச்சி இல்லை. எங்கள் ஊரை சங்ககாலத்து மூதூர் என்று தம்பியிடம் அடிக்கடி சொல்வேன். பாட்டனார், முப்பாட்டனார் காலத்தில் இருந்தே நூற்றுக்கு அறுபது திருமணங்கள் உடன்போக்கு திருமணங்கள் தான். ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக இருப்பதுதான் காரணம். அப்படி இருந்தும் காதல் உடன்போக்கில் தான் சென்று சேர வேண்டியிருக்கிறது. ஒருவாரத்தில் இருவீட்டாராலும் ஏற்றுக்கொள்ளப்படும். பதிமூன்று வயதில் தான் சாதி என்ற ஒன்று முகத்தில் அறைந்து சிறுபான்மை இன பெண்களை மேலும் இற்செறிக்கும். கிராமங்களில் சிறுபான்மை இனம் என்பது ஊர் ஊருக்கு மாறுபடும். என் தலைமுறையில் எனக்கு இருந்த சுதந்திரம் கூட இன்றுள்ளவர்களுக்கு இல்லை என்றே சொல்வேன். ஒரு புறம் காற்றைப் போலொரு சுதந்திரம். மறுபுறம் பலூன் போல வீங்கி நிற்கும் அடைசல்.
அன்று சமிக்ஷா அவள் அம்மாவிடம், “நம்ம தெருவில் எத்தனை பேர் லவ் பண்றாங்க நான் மட்டும் இவனை ஏன் பண்ணக்கூடாது?” என்று கேட்டாள். அவளைச் சுற்றி காதல் நுரைக்கும் தன் தலைமுறையை பார்க்கிறாள். அவளால் இன்னும் சாதியை புரிந்து கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு முறையும் அவன் வீட்டு வாசலில் சென்று நிற்பவள் அவள் தான். பள்ளி முடித்து நெல்லறுப்பு வண்டி ஓட்டுநரான பின் அவனுக்கு சாதி என்பது என்ன என்றும், அதன் வலிமை என்ன என்றும் புரிந்துவிட்டது. அவனைத்தேடிச் சென்று பேசும் இவளிடம் தெரு மக்கள் அனைவரும் இது சரிவராது என்று புரியவைக்க முயல்கிறார்கள். கோபத்தில் சுடும் வெயிலில் தெருவில் மாட்டுக்கு நீர் வைக்கும் தொட்டியின் அருகே அமர்ந்திருக்கிறாள். இந்த ஆறுஆண்டுகளில் அவள் மனதின் உறுதியால் தெருவின் உள்ள அம்மாக்களின் மனதிற்கு நெருக்கமாகியிருக்கிறாள். அவன் வீட்டு சொந்தங்களே, ‘இந்த பழாப்போன சாதி குறுக்க வரலேன்னா அந்தபிள்ளையை கட்டி நம்ம கடனை கழிச்சிறலாம்’ என்று சொல்கிறார்கள். இதே வார்த்தைகள் என்னுடைய அப்பா, சித்தப்பாவை நோக்கி இன்றும் சொல்லப்படுவதைக் கேட்கிறேன். ‘இந்த சாதி மட்டும் குறுக்க நிக்கலேன்னா மாமன் ரெண்டு பேரையும் வேறவுகளுக்கு விட்டுக் குடுத்திருப்போமா’ என்று சொல்லி அம்மா வயதில் உள்ள பெண்கள் சிரிப்பார்கள். அந்த சொல் வெறும் விளையாட்டல்ல என்று கேட்கும் போது புரியும்.
அன்று மேட்டுப்பாளையம் கோவில் ஐயாண்டிக்கருப்பனுக்கு பெரும் பூசை. பெரும்பூசை முடித்து வந்து தெரு கலகலக்கும் வேளை அது. கல்லூரி முடிந்து அவனுடன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து, தோளில் கைப்போட்டு வரும் அவளை கண்ணெடுக்காமல் பார்க்கிறது தெரு. எதுவுமே தடுக்கமுடியாத படி அவளை செலுத்தும் அந்தக் கோபத்தை, அதற்கு காரணமான பேரன்பை இந்தப்பாடலில் நம்மால் பார்க்க முடியும். ஒரு குழந்தை இந்த பொம்மை தான் வேண்டும் என்று சொல்வது நமக்கு திமிராகவோ, பிடிவாதமாகவோ தெரியலாம். பொம்மை என்பது தாயின் முலைக்குப்பிறகு குழந்தை தன் கையில் எடுத்து சுவைக்கும் முதல் பருப்பொருள். அணைத்து உறங்கும் இனிய துணை. ஆனால், ஒரு பொம்மை கேட்டால் வாங்கித்தரலாம்…இதெல்லாம் முடியுமா? என்று காலங்காலமாகச் சொல்கிறோம். என்றாலும் கூட காதல் என்பதை களவாகவே வைத்திருக்க வேண்டிய நடைமுறை அவசியத்தை உணர்ந்தே, காலங்காலமாக அந்த மனப்பழக்கத்தை நம் சமூகம் ஏற்படுத்தியிருக்கிறது என்று நினைக்கிறேன். அது ஒரு அக்கறை. எதார்த்தத்தின் முன் நிற்கும் கேள்விக்குறி. பரத்தமையை பாடும் அதே சங்கக்கவிதைகள் தான், களவியலை அத்தனை வலுவாக முன்வைக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.
நம் சமூகத்தின் மனப்பழக்கம் அப்படியானதாக உள்ளது. எதோ ஒரு காரணத்தால் காதல் பொய்க்கும் எனில் நம் பயல்களின் பூ போன்ற மனம் காலமெல்லாம் அவளைக் குதறி எடுக்கும் என்று அஞ்சியே அம்மாக்கள் பிள்ளைகளிடம் இத்தனை கடுமையாக நடந்து கொள்கிறார்கள். தன்னைப் பிடித்த ஒருத்திக்கு இன்னொருவனையும் எப்போதோ பிடித்திருக்கலாம் என்பதை ஏற்கமுடியாத நொய்மையானவர்களாக இருப்பதைக் காண்கிறோம். மணமான பின் சொல்லால், செயலால் தார்க்கோலை எடுப்பவர்களை நம்பி இந்தப்பெண் இத்தனை சொற்களை எடுத்து வைப்பதைப் பார்க்கும் போது நமக்கு பதட்டமே ஏற்படுகிறது.
ஒரு பதின் வயது குழந்தையின் தூய வெள்ளை மனதின் முதல் பேரன்பின் சொல்லாகத்தான் இந்தப்பாடல் இருக்க வேண்டும். அழுது அடம் செய்யும் குழந்தையின் கூச்சல் இது. முடியாது என்றால் தரையில் அமர்ந்து கைகால்களை உதைத்து அழும். பிடிவாதம் செய்யும். இல்லையெனில் அது தன்னையே கூட அழிக்கும். இது பாலைத்திணை பாடல். வாகை,பாலை போன்ற மரங்கள் அந்த நிலத்திற்கு உரியவை. வலுத்த அடிமரமும்,இடைவெளி விட்ட நீண்ட கிளைகளும் கொண்ட மரங்கள். அவை பாலையின் காற்றில், நண்பகலின் வெயிலில் உழல்வதை மனதில் காட்சியாக்கிப் பார்க்கலாம். காதல் அதைப் போன்ற உழைதலை ஒரு இளம்மனதில் ஏற்படுத்தும் சினத்தை இந்தப்பாடலில் காண முடிகிறது.
நான் ஒருத்திமட்டும்
பெறுதலுக்கு அரிய ஒன்றால்
காற்றில் அலைவுறும் மரத்தை போல துன்புறுகையில்
என்காதல் துயரை அறியாது துயிலும் ஊரை
முட்டி எழுப்புவேன்
தாக்கி எழுப்புவேன்
முடியாதெனில்
சத்தமிட்டு கத்தி எழுப்புவேன்.
(தொடரும்…)