இணைய இதழ்இணைய இதழ் 86கவிதைகள்

கிருத்திகா தாஸ் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

நிலாப் பொழுதுகள்

நிலவில்
ஒரு மாளிகை உண்டு
அங்கு
நான் வாழ்ந்ததுண்டு

போன யுகத்தில்
என் விரல் கலைத்த மணல்கள்
இன்னும் நிலவில் சுவடுகளாய்

நேற்று
நிலவில் நான் தூவிய விதைகள்
இந்நேரம்
நட்சத்திரங்களாய் முளைத்திருக்கும்

வெள்ளை நுரையாடை
தேவதையொருத்தி
என்னோடு விளையாட வருவாள்
முழுமதி நாட்களில்

புதுநிலவு நாளில் மட்டும்
தோன்றி மறையும் நீரோடையில்
யாருக்கும் தெரியாமல் நான்
பூமிக்கும் சூரியனுக்கும்
சென்று வந்ததுண்டு

நட்சத்திரம் உதிரும் பொழுதுகளில்
யாழ் மீட்டும்
என் மாளிகைப் புறாக்கள்,
எங்கிருந்தோ சில
மரகதக் கற்களைச்
சேமித்து வைத்திருக்கின்றன
என் அலங்காரத்திற்காய்

பறவைகள் பூக்கும் மரத்தில்
இரண்டு மஞ்சள் நிற
வண்ணத்துப் பூச்சிகளைக்
கொய்து வைத்திருந்தேன்
நான் விளையாட

என் பாதங்களடியில்
வானவில் பூக்கும்
நாட்களில் மட்டும்
அமிர்தம் சுரக்கும்
கிணறொன்று உண்டு
என் மாளிகைத் தோட்டத்தில்

நிலவு சிவந்துவிடும்
பொழுதுகளில் மட்டும்
என் வெண் புரவியோடு
நிலவின் மேடுகளேறி
நான்
ஒளிந்து கொள்வதுண்டு

கிரகங்களை வீழ்த்திய என்னவன்
என் விரல் பிடித்து
என்னை
இங்கேயே காத்திருக்கும்படி
சொல்லிச் சென்றிருக்கிறான்

குளிர் பொழியும் காலங்களில்
கிழக்கு நோக்கிச்
செல்லும் பறவையொன்று
என்னவனின் வருகையைச்
சொல்லிச் சென்றது

பிறையுடுத்திய நாட்களில்
உள்ளங்கைகளில்
விண்மீன்கள் ஏந்திக் காத்திருக்கிறேன்
மீண்டுமொரு முழுமதிக்காய்

முன்பொரு நாளில்
நிலவில்
ஓர் மாளிகை இருந்ததுண்டு
அங்கு
நான் வாழ்ந்ததுண்டு
நிலவின் ராணியாய்.

****

ராஜகுமாரி

அவள் ஒரு ராஜகுமாரி
ஒன்றோடு ஒன்று பரீட்சயமில்லாத
கண்ணீர்த் துளிகள் சில உண்டு அவளிடம்
காலங்கள் அத்தனையும் தனக்குச்
சொந்தமெனக் கொண்டிருந்த அவள்
தன் சேனைகளை மட்டும் இப்போது வரை
வசந்தங்களுக்குள் அனுமதித்ததில்லை
முன்பொரு முறை கவனித்திருக்கிறேன்
கருநீலப் பருந்து ஒன்றினை
ஒத்திருக்கும் அவளது இடது கண்
இரண்டாம் பிறை நள்ளிரவில்
தன் ஒற்றர்களுள் ஒருவனான
முகமில்லாத துடுப்புக்காரன்
தந்து சென்றதென மாணிக்கக் கல்லையொத்த
கல்லொன்றைக் காட்டியிருக்கிறாள் ஒரு முறை
அவளின்னும் பாதுகாத்திருக்கும்
ஒற்றைத் துளையிட்ட விளக்கினொளி
மோதும்போது மட்டும்தான்
அவளது கோட்டை வாயில்
திறக்குமென்று எப்போதும் சொல்லுவாள்
கடைசியாய் அவளது சிம்மாசனத்தில்
அவள் அமர்ந்திருந்தபோதுதான்
அவளது சிரசு துண்டிக்கப்பட்டதெனச் சொன்னவளது
கண்ணீர்த் துளிகள் சாம்பல் நிறப்
பாம்பு போல் நெளிந்து கொண்டிருந்தன
அவை
ஒன்றோடு ஒன்று பரீட்சயம் இல்லாதவை
பின்பொரு நாளில் அவளறியாமல் கவனித்தேன்
அவளது நகக்கண்களில் நெருப்புக் குறி இருந்தது
ஆம்… அவள் ஒரு ராஜகுமாரி.

****

புழுதி

புழுதி படிந்திருக்கும் என்
நேற்றைய பிம்பங்களை
என் அறையின்
இடது பக்கச் சுவரில்
சாய்த்து வைத்திருக்கிறேன்
கனவு கண்டு கொண்டிருப்பதாய்
எனக்கு நானே
பொய் உரைத்துக் கொண்டு
எதிர்க் கோட்டில்
நடந்து கொண்டிருக்கிறேன்
இருப்பினும்
என் விழி மையத்துக்குள்
நான் செல்லாத திசைகள்
மீதான நிழல்கள்
காற்றடிக்கும்போது படபடக்கும்
பொய்கள் அத்தனையையும்
ஈர அலைகளுக்குள்
காகிதக் கப்பல்களென
மிதக்க விட்டுவிட்டேன்
இந்நேரம்
அவை மூழ்கியிருக்கும்
சுழன்று கொண்டிருந்த
காற்றினடியில்
உருண்டிருந்த மணலுக்குள்
புதைத்து விட்டேன்
உடைந்துவிட்ட என் பிம்பத்தை
அப்படியே பிரதிபலித்த
கண்ணாடித் துண்டு ஒன்றை
என் அறை இருளில்
உருகிக் கொண்டிருக்கும்
மெழுகின் நுனிக்குள்
சிறகு வடிவத்திலொரு
பெருநெருப்பு ஒளிந்திருப்பதாக
கற்பனை ஒன்று
வந்தபோதுதான்
இடது பக்கச் சுவரில்
நான் சாய்த்து வைத்திருந்த
புழுதி படிந்த
என் பிம்பத்துக்கு
நிழல் ஒன்று
வளர்ந்து கொண்டிருந்தது.

*********

kritikakavithaikal@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button