வெளிச்சத்தின்
புனரமைப்புகள்
நிச்சயம்
அன்று காற்றின் வேகத்தை
சீர் செய்தன
மழையும், புயலும்
ஆள் அரவமற்ற மலை
முகடுகளிலிருந்து
சமவெளிக்குள்
புகுந்துவிட்டன
நிறைய ஆடுகள்
வெட்ட வெளிப் பட்டிகளில் அங்குமிங்கும்
அலைவுற்றன
காதலோடு நின்றிருந்த
வேர்களற்ற விதை
மழையை எதிபார்த்திருந்தது
எவருக்கும் கல்லால் இதயம்
புனையப்பட்டிருக்கலாம்
ஊசலாடியபடி
தேடப்படும்
கற்பனைகளை
கவிதைகள்
மூடியிருக்கின்றன
என்றும் இல்லாத
வெற்றிடம் அது
ஏதோ வேண்டும்
நிலைப்பாடற்ற
நினைவுகளை
தடம் மாற்றி
நிறுத்தி வைக்கலாம்
இருப்பினும்
முற்பகலும் பிற்பகலும்
மாறி மாறி
உமிழும் ஒரு நீள மின்னலாய்
இந்த நாட்கள்
கடந்து கொண்டே செல்கின்றன.
****
மடிந்து கொள்ளும்
சாயங்காலங்கள் ராத்திரிக்கான விடுப்புகளை
மனம் விட்டுப்
பிரகாசிக்கின்றன
நினைக்கப்படும் பொழுதுகளில் நினைவுக்கான நியாபகங்கள்
அழிந்து விடுகின்றன
மாறாக மறக்க நினைக்கும் நியாபகங்கள்
நியாயங்களுடன்
வாதாடுகின்றன
ஒளிச்சிதறல்களை இந்த
பூமி பிரதிபலிப்பதைப் போல,
ஒவ்வொருவரின் நியாயங்களும்
ஏற்க இயலாத
நியாயங்களும்
திணிக்கப்படும்
நியாயங்களும்
எந்த ஒரு நிமிடத்திலும்
நிறைவைத் தருவதே இல்லை
முகடுகளில் மிளிரும்
அப்பழுக்கற்ற சுனையை
அருந்திய படி மிளிரும்
புற்களைப் போன்ற
ஒருவர் கூட
உயிர்ப்புடன் இல்லை.
*******