இணைய இதழ்இணைய இதழ் 86சிறுகதைகள்

பனம் பழ நிறத்தில் ஒரு உலகம் – வண்ணதாசன்

சிறுகதை | வாசகசாலை

ந்திரா மயிலப்பபுரம் வரை டிக்கட் எடுத்திருந்தாள். அது அடுத்த ஸ்டாப்தான். அதிக தூரம் ஒன்றுமில்லை. ஆனால், மானா விலக்கில் நிறுத்தச் சொல்லி ஈஸ்வரியோடு இறங்கிக் கொண்டாள். ஈஸ்வரி சின்னப் பிள்ளை. அதற்கு என்ன தெரியும்? அதற்கு எல்லா இடமும் ஏறுகிற இடம்தான். எல்லா இடமும் இறங்குகிற இடம்தான். அம்மா சொன்னால் சரி.

பஸ் கண்டக்டர் முதலில் கீழே இறங்கி நின்று ஈஸ்வரியை இரண்டு கக்கத்திலும் கையைக் கொடுத்துத் தூக்கிப் படியில் இருந்து தரையில் இறக்கிவிட்டார். ‘அம்ம்..மாடி’ என்று அவரிடமிருந்து ஒரு குரல் வந்தது. இந்திரா இறங்குவதற்காக ஒதுங்கி வழிவிட்டு நின்றார். இந்திரா அவரிடம் ஒன்றும் கேட்கவில்லை. அவராகவே, ‘ சித்தாத்துல தண்ணி ஒண்ணும் ஜாஸ்தி போகலை. கரண்டை அளவுதான்’ என்று சிரித்தார். ‘பார்த்துப் போங்க’ என்றார்.

இந்திரா ஈஸ்வரியைக் கையில் பிடித்துக்கொண்டே பஸ் போகும் வரை அதே இடத்தில் நின்றாள். அந்த பஸ்ஸில் தானும் ஈஸ்வரியும் மட்டுமே வந்தது போலவும் தங்களை மட்டுமே இறக்கிவிட்டுவிட்டு அது போவதாகவும் நினைத்துக் கொண்டாள். பஸ்சில் கூட்டம் இருக்கத்தான் செய்தது. இவள் இப்படி நிற்பதைப் பார்த்ததும் பஸ்ஸில் இருந்து யாரோ கையை அசைத்து விடை கூடக் கொடுத்தார்கள். யாராக இருந்தால் என்ன? இந்திரா பதிலுக்குக் கையை அசைத்தாள். ஈஸ்வரியை இடுப்பில் தூக்கி வைத்து அவளையும் கை அசைக்கச் சொன்னாள். அசைப்பதற்கு அவள் உடனே தயாராக ஆகாததால் ஈஸ்வரி கையை இந்திராவே பிடித்து அசைத்தாள். இந்திராவுக்கு அப்படிச் செய்யப் பிடித்திருந்தது.

முன்பு மானா விலக்கில் ஒரு தாம்போதி உண்டு. தண்ணீர் ஓடி ஓடி அந்த இடத்தில் ஆற்றுமணல் போல ஒரு தெளிந்த மணல் கிடக்கும். ஓர் ஆலமரமும் இருந்தது. அளவில் சிறிய, நிறையப் பழங்கள் பழுத்திருக்கும் மரம். மழைக்காலத்தில் அந்த மரத்தைச் சுற்றிக்கொண்டு வந்து இந்தத் தாம்போதியில் தண்ணீர் ஓடும். ஒரு தண்ணீர்ப் பாம்பு தலையைத் தூக்கிக் கொண்டே வளைந்து வளைந்து நீந்திப் போனது நினைவு வந்தது. இப்போதைய பஞ்சாயத்து ரோட்டில் பாம்பு நெளிவதை அவளால் கற்பனை கூடச் செய்ய முடிவதில்லை. நெளிவதற்கும் நெளியாமல் இருப்பதற்கும் அதனதன் சூழ்நிலை வேண்டியதிருக்கிறது.

கல் மண்டபத்தில் எப்போதோ நடந்த பஞ்சாயத்து எலெக்‌ஷனுக்கு கூஜா சின்னத்திற்கு ஓட்டுப் போடச் சொல்லி சுண்ணாம்பில் பருமனாக எழுதியிருந்தார்கள். கல் மண்டபங்கள் மட்டும் எப்படி அப்படியே இருக்கின்றன. அது பழசாவதும் இல்லை. புதிதாவதும் இல்லை. 

மனோகரன் இந்திராவிடம் சொல்லியிருக்கிறான், அவனுடைய அப்பா ஒரு தடவை சுயேட்சையாக தோணி சின்னத்தில் நின்று தோற்றுப் போனதாக. வெள்ளைத்தாளில் நீல நிறத்தில் அச்சடிக்கப் பட்டிருந்த தோணியை வரைந்ததும் பூமி விலாஸ் பிரஸ், கருவம்புத்தூரில் அச்சடித்துக்கொண்டு வந்து கொடுத்ததும் அப்பாவின் நண்பரும் அப்பாவின் நடுநிலைப் பள்ளியில் வேலை பார்த்தவருமான எபநேசர் சார்தான். அப்பாவை அவர் கிண்டல் பண்ணும் நெருக்கத்தில் இருந்தார். ‘ சித்தாத்துக் கரண்டை அளவு தண்ணீரில் நீரு போட் விட்டு எந்தக் கடலுக்குப் போகப் போறேரு?’ என்று அப்பாவிடம் அவர் சொன்னதை மனோகரன் சொல்லியிருக்கிறார். அப்போதே எபநேசர் சார் புல்லட் வண்டியில்தான் பள்ளிக்கூடத்துக்கு வருவாராம். எபநேசரைப் பற்றி மனோகரன் சொல்லச் சொல்ல இந்திராவுக்கு அவரைப் பார்க்க வேண்டும் போல இருக்கும்.

இந்திரா ஈஸ்வரியைக் கூட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள். ஓதுவார் காப்பி கிளப் எல்லாம் இப்போது இல்லை. ஒரு ஏ ஒன் மொபைல் கடை வந்திருந்தது. அப்படியே போனால் அகிலாண்டத்து அம்மன் கோவில் ஆற்றங்கரை மணலில் புதைந்தது போல, அல்லது மணலுக்குள் இருந்து முளைத்து வந்துகொண்டு இருப்பது போல இருக்கும். ‘லேசா கோயில் ஒருபக்கம் குறுக்கைச் சாய்ச்சுக்கிட்டு நிக்கிற மாதிரி இருக்கு’ என்று மனோகரனிடம் இந்திரா சொல்லியிருக்கிறாள்.

கற்றாழை வேலி வைத்துக் கட்டின மண்சுவரும் குடிசையுமாக இருக்கிற இடத்தில் இருந்த பூசை மடம் தாத்தாவிடம் மனோகரன் இந்திராவை அழைத்துப் போயிருக்கிறான். அவர் இவளை யார், என்ன என்று எல்லாம் கேட்கவில்லை. மனோகரன் பக்கத்தில் நெருக்கமாக இவள் உட்கார்ந்திருப்பது குறித்தும் அவர் பொருட்படுத்தவில்லை. நிறைய தேவாரம், திருவாசகம் எல்லாம் பாடினார். மனோகரனிடம் அவரும் அவருடன் மனோகரனும் அவ்வளவு சந்தோஷமாகப் பேசிக்கொண்டு இருந்தார்கள். இப்போது அந்த இடத்தில் பூசை மடம் இருந்த அடையாளமே இல்லை. மணல் அள்ள வந்ததாக இருக்கலாம் ஒரு ஜே சி பி நின்றுகொண்டு இருந்தது.

இந்திரா ஈஸ்வரியிடம் ‘தூக்கிக் கொள்ளட்டுமா குட்டி?’ என்று ஆற்றுக்குள் இறங்கும் போது கேட்டாள். வேண்டாம் என்று தலையை ஆட்டவும். ‘ அம்மா கூடவே வா. நல்லா இருக்கும். ஸ்கூல் கேட்டில் இருந்து க்ளாஸ் ரூமுக்குப் போவே இல்ல. அதே மாதிரி நினைச்சுக்க, சரியா’ என்றாள். அதற்கும் தலையை அசைத்தது. கொஞ்ச தூரம் இருவரும் பேசாமல் ஆற்றுக்குள் நடந்தார்கள். தண்ணீர் தெளிவாக, கொஞ்சம் வெயில் தந்த வெதுவெதுப்புடன் இருந்தது. சிறு மீன்கள் வந்துவிட்டுப் போயின. ஈஸ்வரி அந்த ஆற்றை, மணலை, மீனை எல்லாம் புரிந்துகொண்டது போல ஒரு முகத்தை அடைந்திருந்தாள். மீன்களைப் பற்றிக் கூட எதுவும் பேசவில்லை. 

கொஞ்சம் நடு ஆற்றுக்கு வரும் போது, ஆழம் ஒன்றும் பெரிதாகக் கூடாவிட்டாலும், ஈஸ்வரியை எடுத்துக்கொள்ளத் தோன்றியது. ‘ அம்மா கிட்டே வா’ என்று அவளைத் தூக்கி வைத்துக்கொண்டாள். அகிலாண்டத்தம்மன் கோவிலைத் திரும்பிப் பார்த்தாள். முன் பக்கம் இன்னும் மனோகரன் வீட்டுக்குப் போகக் கரையேற வேண்டிய தூரத்தையும் பார்த்தாள். இந்திராவுக்கு நிரம்பிவிட்டது போல இருந்தது, ஈஸ்வரியை இறுக்கமாகக் கட்டி முத்தமிட்டுக் கொண்டு அப்படியே நடு ஆற்றில் நின்றாள். 

மனோகரன் ஊர்ப்பக்கத்து ஆற்றங்கரையில் இரண்டு மூன்று நாணல் திட்டுகள் உண்டு. இப்போது ஒன்றையும் காணோம். ஆற்றங்கரையில் கூட்டம் கூட்டமாகக் கரும்புப் பூ போலப் பூத்திருப்பவைதான் நாணல் என்று அதுவரை இந்திரா நினைத்துக்கொண்டு இருந்தாள். மனோகரன் காட்டிய நாணல் திட்டும் நாணலும் வேறு மாதிரியாக, முப்பட்டையான பச்சையில் திண்ணமாக, குளிர்ச்சியான வாள் போல இருந்தன. பிடுங்கினால் முறிந்த மணிக்கட்டு எலும்பாக, கிழங்கு போன்ற வெள்ளைப் பகுதியோடு வந்தன. 

அந்தத் திட்டு, தாராக் கோழிகள் முட்டையிடத் தோதுவானதாக இருக்கும் என்று ஒரே விசையுடன் ஒன்றன் பின் ஒன்றாக முடிவற்று நகர்ந்துகொண்டே போன தாராக்களைப் பார்த்ததும் தோன்றியது. தாரா மேய்க்கிறவர் இடது கையில் உறுதியான பிரப்பங்கூடையை முட்டை சேகரிப்பதற்குக் கோர்த்திருந்தார். சாயங்கால மஞ்சள் வெயிலில் தலைப்பாகை கட்டிய அந்த வெற்றுடல் மினுங்கியது. அவர் உண்டாக்கிய நாக்கடிச் சத்தம் ஆறு முழுவதும் பிறை பிறையாக நெடுக விழுந்தபடியே போனது. இந்திரா தாராவோடு கடைசித் தாராவாகப் போய்க்கொண்டு இருந்தாள்.

ஆற்றிலிருந்து கரை யேறினதும் ஈஸ்வரியை இறக்கிவிட்டாள். என்ன தோன்றியதோ? எதற்குச் சொன்னாளோ? ஈஸ்வரி இந்திராவைப் பார்த்து,’ நல்லா இருந்ததும்மா’ என்றது. இந்திரா ஆறு தனக்குப் பின்னால் நடந்து வரவேண்டும் என்று விரும்பினாள். 

தூரத்தில் அதே இடத்தில் இன்னும் செங்கல் சூளை இருந்தது. பனை மரங்கள் நின்றன. அதை ஒட்டின பள்ளத்துக்குள் சக்கரச் சாமியார் ஜீவ சமாதி இருக்கும். மனோகரனுடன் ஒரு தடவை இந்திரா போயிருக்கிறாள். அந்தச் சமயத்தில் அங்கே இருந்த எல்லா மாமரங்களும் துளிர்த்து இருந்தன. எல்லாக் கிளைகளின் நுனியிலும் செப்பு இலைகள் தொங்கின. ஒரே ஒரு நாகலிங்க மரத்தில் தூரில் இருந்து ஆள் உயரம் வரை நாகலிங்கப் பூ பூத்துக் கிடந்தது. ஒரு நொடி கூட ஒரே இடத்தில் நிற்காமல் இங்கும் அங்கும் ஒரு மயில் நடந்துகொண்டே இருந்தது.’கூப்பிட்டீங்களா?’ என்று மனோகரனிடம் கேட்டாள். ‘இல்லையே’ என்றான். ‘யாரோ பெயர் சொல்லிக் கூப்பிட்டமாதிரி இருந்தது.’ என்று இந்திரா சொன்னதும். மனோகரன் சிரித்து, ‘போகலாம்’ என்று தோளில் தட்டிக் கொடுத்தது நினைவு வந்தது. 

போகிற வழியில் ஒரு பனம் பழம் விழுந்து கிடந்தது. இந்திரா எடுத்து முகர்ந்து பார்த்தாள். அப்படி ஒரு கனிந்த வாசனை. ஈஸ்வரியின் முகத்துப் பக்கம் கொண்டு போய் நுகரச் செய்தாள். ‘நல்லா இருக்கா ?’ என்று கேட்டாள். ஈஸ்வரி இன்னும் வாசனையை இழுத்த முகத்துடன் இருந்தது. ‘எப்பம்ணு தெரியாது. கொஞ்ச நேரம் கழிச்சு சட்டுண்ணு பிடிக்கும். பிடிச்சுப் போச்சுண்ணா, அதுக்குப் பிறகு ரொம்ப ரொம்பப் பிடிச்சுப் போயிரும் குட்டி’ என்றாள். மனோகரன் மனைவி சந்திரகலாவுக்கு ரொம்பப் பிடிக்கும் . சூட்டில் வெடித்த பனம் பழத்தை ஒருவர் பல்லால் கடித்து நாரோடு உண்ணும் போது, இந்த உலகம் முழுவதும் ஒரு வித வினோத பனம் பழ நிற மஞ்சளாகி விடுகிறது என்று கலா, இந்திராவிடம் சொல்லியிருக்கிறாள். 

சந்திர கலாவுக்கு எல்லாம் தெரிந்திருந்தது. மனோகரனும் இந்திராவும் நல்ல பழக்கத்தில் இருந்தது. ஒரு கட்டத்தில் இந்திராவின் பெற்றோர்கள், என்னதான் தூரத்துச் சொந்தக்காரப் பையன் என்றாலும் சொந்த ஊரில் இருந்து விவசாயம் பார்த்துக் கொண்டு ஒரு நடுநிலைப் பள்ளியை நிர்வகித்து வரும் மனோகரனை விட பெங்களூருவில் வேலை பார்க்கிற, ஏற்கனவே சார்ஜா புரா ரோட்டில் ஒரு அடுக்கக வீட்டுக்கு மாதத் தவணை கட்டத் துவங்கியிருக்கும் தினகர் ராஜ் எல்லா வகையிலும் பொருத்தமானவன் என்று முடிவு செய்து கல்யாணம் செய்து வைத்தது, அது இரண்டு வருடங்களுக்கு உள்ளேயே சரிவராது போனது, இந்திரா தற்கொலைக்கு முயற்சித்தது வரை மனோகரன் மூலம் சொல்லப்பட்டிருந்தது அவளுக்கு.

கலா வக்கீலுக்குப் படித்தவர். மனோகரனைத் திருமணம் செய்வதற்கு முன் சட்ட ஆலோசகராக இருந்திருக்கிறார், தினகர் ராஜுக்கும் இந்திராவுக்குமான மண விலக்கு வழக்கு நான்கைந்து வருடங்களாக நடந்துகொண்டே இருந்தது . மனோகரன் கலாவை அறிமுகப்படுத்திய பிறகுதான் அது வேறு திசைகளில் திரும்பி விரைவாக முடிந்தது. 

அதே போல மறுமணம் வேண்டாம், ஒரு குழந்தையைத் தத்து எடுத்து வளர்த்தபடியே பேங்க் வேலைக்கும் போய்வரலாம் என இந்திரா முடிவு செய்த போதும் அது சார்ந்த சட்ட நிபந்தனைகளை நிறைவேற்றிச் சரியாகப் பார்த்துக் கொண்டதும் கலாதான். ஈஸ்வரிக்கு கலா சித்தி என்றால் யார் என்று தெரியும். கலா சித்தியைப் பார்க்கப் போகிறோம் என்று சொல்லித்தான் ஈஸ்வரியைக் கூட்டி வந்திருக்கிறாள். 

அதைக் கேட்டதும், ஈஸ்வரி அவசரம் அவசரமாக மெழுகுப் பென்சில்களால் வரைந்த ஒரு வாழ்த்தும், அதை மடித்து அவளே காகிதத்தில் செய்த மேல் புறம் நடசத்திரங்கள் பிறை நிலா எல்லாம் வரைந்து உள்ளே வைத்த உறையும், இந்திராவின் பையில் இருக்கிறது. இந்திரா கொடுக்கக் கூடாதாம், ஈஸ்வரியேதான் கலா சித்தியிடம் கொடுப்பாளாம், சொல்லியிருக்கிறாள்

முத்தாரம்மன் கோவில் பக்கமாகப் போனால் சீக்கிரம் போய்விடலாம். செவ்வாய்க் கிழமை வந்திருந்தால் மாட்டுத் தாவணியாக இருந்திருக்கும். மாடுகளின் வெக்கை நிரம்பிய வாடையால் அந்த இடமே நிரம்பிக் கிடக்கும். இன்றைக்கு மந்தையில் ஆளே இல்லை. கொடை வரப் போகிறதோ என்னவோ முத்தாரம்மன் கோவில் கோபுரப் பொம்மைகளுக்கு வர்ணம் பூசிக்கொண்டு இருக்கிற வாசம் வேப்ப மரம் வரை அடித்தது. 

குடி தண்ணீர்க் குழாய் சரியாக மூட முடியாமல் ஒழுகிக் கொண்டே இருந்தது. கீழே ஒரு பச்சைப் பிளாஸ்டிக் குடம் நிரம்பி கழுத்து விளிம்பில் இருந்து வெயிலும் தண்ணீரும் சிந்திக்கொண்டு இருந்தது. ஈஸ்வரியை பிளாஸ்டிக் குடத்தை ஊடுருவும் வெயிலும் தண்ணீர் அலம்புவதும் ஈர்த்திருந்தது. வெயிலும் தண்ணீரும் எல்லோருக்கும் அழகாகத்தான் இருக்கும் போல. இந்திரா ஈஸ்வரியை முத்திக் கொண்டாள். பனம் பழத்தை இன்னும் கையிலேயே வைத்திருந்தாள்.

மனோகரன் வீட்டு முன்னால் நான்கு ஐந்து பைக்குகள் நின்றன. கலா வாசலில் நின்று யாருடனோ பேசிக்கொண்டு இருந்தாள். தூரத்தில் இருந்தே இந்திராவையும் ஈஸ்வரியையும் பார்த்துவிட்டாள். பக்கத்தில் நின்ற பெண்ணை அனுப்பிக் கூட்டிக்கொண்டு வரச் சொல்லியிருக்க வேண்டும். அந்தப் பெண் பக்கத்தில் வந்து இந்திரா வைத்திருந்த பையை வாங்கியது. ஈஸ்வரியிடம், ‘வாரியா தாயி, நான் தூக்கிக் கிடட்டுமா? என்று கேட்டது. இந்திரா கையில் இருந்த பனம் பழத்தைப் பார்த்தபடி, ‘ஆத்துக்குள்ள கூடி வாரேளோ.?’ என்றது. ‘லயன் வண்டி ஊருக்குள்ள வரைக்கும் வருமே. நம்ம வீட்டுக்கு வாரது தெரிஞ்சா தெரு வாசல் பக்கத்திலேயே இறக்கி விட்டிருப்பாவ’ என்று சிரித்தாள்.

கலா வாசல் நடையை விட்டு இறங்கி வந்து இந்திராவைக் கட்டி அணைத்துக் கொண்டாள் கலா புதிதாக இப்போது கண்ணாடி போட்டிருந்தாள். கண்ணாடியைக் கழற்றிக்கொண்டே, ‘சித்தி டா’ என்று ஈஸ்வரியைத் தூக்கிக் கன்னத்தை நிமிண்டினாள். மறுபடியும் கண்ணாடியை அணிந்து கொண்டாள். ‘கண்ணாடி நல்லா இருக்கா சித்திக்கு?’ என்று ஈஸ்வரியிடம் கேட்டாள். இந்திராவுக்கு சந்திரகலா முன்பை விடவும் இந்தக் கண்ணாடியில் தீர்க்கமாக இருப்பது போல இருந்தது. மனோகரனைப் பார்க்கவேண்டும் என்று விரும்பினாள்.

பேசிக்கொண்டே பனம்பழத்தை கலாவிடம் கொடுத்தாள். இந்திரா கொடுத்ததும் சந்திர கலா அதை முகர்ந்து பார்த்ததும் எந்தப் பிரயாசையும் இல்லாமல் அதுவாகவே நடந்தன.

இந்திராதான் கேட்டாள், ‘என்ன வாசலிலே இத்தனை வண்டி நிக்கி?’ மனோகரனையும் காணோம்?’’ 

இந்திரா உட்கார்ந்திருந்த நாற்காலிக்குப் பக்கத்தில் சந்திர கலா ஈஸ்வரியை இழுத்து நிறுத்திக் கையால் அணைத்துக் கொண்டாள், ‘ஊருல ஒரு துட்டி. மனோகரனுக்குத் தெரிஞ்ச குடும்பத்துப் பொண்ணு . என்ன தும்பமோ. ரோக்கர் அடிச்சுட்டுது’’

இந்திராவுக்குப் புரியவில்லை. ‘ரோக்கர்னா?’ என்று புருவத்தைச் சுருக்கினாள். கேட்கும் போதே அவளுக்கே புரிய ஆரம்பித்திருந்தது, ‘பூச்சி மருந்தா?’ என்று கலாவின் கையைப் பிடித்தாள். தான் தூக்க மாத்திரையில் முயன்றது இந்திராவுக்குள் விரிந்தது. உடல் முழுவதையும் முறுக்கியது. தன்னை யாரோ சக்கையாகப் பிழிந்து வீசுவதை உணர்ந்தாள்.

’கல்யாணம் ஆயிட்டுதா?’ என்றாள்.

கலா தலையை ஆகிவிட்டது என்பது போல் அசைத்தாள்.

‘அதுதான்’ என்று இந்திரா நாற்காலியை விட்டு எழுந்தாள். ‘வா. நாம போயிப் பார்த்துட்டு வருவோம்’ என்று கலாவின் கையைப் பிடித்து இழுத்தாள்.

கலாவின் உடலில் இருந்து இளகி வெளியே வந்த ஈஸ்வரி, இந்திராவின் புடவையைப் பிடித்துக்கொண்டு ஏறிட்டுப் பார்த்தது. ‘அம்மா , சித்திக்கு நான் வரைஞ்ச க்ரீட்டிங்ஸ் எங்கே இருக்கு? எடுத்துக் கொடு’ என்று கேட்டது. இரண்டு மூன்று தடவைகள் உலுக்கியும் இந்திரா ஒன்றும் பதில் சொல்லாததால், அம்மா கொண்டு வந்த பை இருக்கும் மேஜை பக்கத்தில் போய் இழுத்தது. பைக்குப் பக்கத்திலேயே வைக்கப்பட்ட பனம் பழம் உருண்டு கீழே விழுந்தது.

சிறிய தூரம் உருண்டு பனம் பழம் ஒரு இடத்தில் ஓய்ந்து கிடக்கும் வரை ஈஸ்வரி தரையையே பார்த்தது.

குனிந்து பனம் பழத்தை எடுத்து முகர்ந்து பார்க்க ஆரம்பித்தது. சற்றுக் கனத்துடன் ஏந்திய கைகள் மடங்கியிருக்க, வாசனை பிடித்துப் போனது போல , ஈஸ்வரியின் கண்கள் அப்படியே மூடி இருந்தன.

********

vannadasan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. கதையின் கனம் கதையோட்டத்தில் காற்று போலதான் கலந்துள்ளது. படித்து முடிக்கையில் கல்லாக கனக்கிறது.
    இந்தப் பயணம் நாமும் கூடவே பயணப்படுகிற மாதிரியே இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button