இணைய இதழ்இணைய இதழ் 86கவிதைகள்

ஷினோலா கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

அப்பாவித்தனம்

“இங்க..இங்க பாருங்க
சிரிங்க…” என்றதும்
பல்செட்டின் கடைசிப் பல் தெரிய
குழைகிறாள் பாட்டி

யாரோ ஒருவர் வழி தவற
யாரோ ஒருவர் வழிக்கான
பாதையை விவரிக்கிறார்
கொண்டு போய் விடாத குறையாய்
மேடு பள்ளங்களை எச்சரித்தபடி

இந்த இரண்டு ரூபாயை
எப்படி திருப்பிக் கொடுக்கப் போகிறேனோ என
கனிந்த தவிப்பால் விடைபெறுகிறாள்
அடுத்த நிறுத்தத்தில்
இறங்க போகிறவள்

முக்கியமாய் ஒன்றை அப்பா
விளக்கிச் சொல்லச் சொல்ல
‘அப்படியா எனக்கென்ன தெரியும்?’
என அலுத்துக்கொண்டு
காலிக் கோப்பையை எடுத்தபடி
எழுகிறாள் அம்மா

எனக்குக் கிடையாதா
என முகம் வாடினால்
இரண்டு மிட்டாயையும்
ஒவ்வொன்றாய்க் கொடுத்துவிட்டு
சட்டையில் கையைத் துடைத்துக்கொண்டே
வாய் பிளக்கிறது குழந்தை

எல்லாம் தெரிந்தபடி காட்டிக்கொள்ளும்
முகபாவனையுள்ளவர்களுக்கிடையே
தன்னியல்பில் தனித்திருக்கும்
உள்ளங்களில்
ஊறிக் கொண்டிருக்கிறது
இன்னும் அழகாய்
இவ்வுலகம்.

*****

தனி உலகம்

தனக்கே உரிதான
பிரத்தியேகப் பாதைகள்
ஏராளம் வைத்திருக்கும் பூனைகள்
ஒரு தாவல், ஒரு புகுதல்,
ஒரு பதுங்குதலில்
எப்படி எல்லாவற்றையும் திறந்துவிடுகின்றன?

ஜன்னல் கம்பிகள்,
கதவு இடுக்குகள்,
கலைந்த ஓடுகள்,
சாய்வு சுவர்கள்
எதுவும் இவற்றுக்குத்
தடையாயிருக்கவில்லை

ஏதோ ஒரு மூலையில்
தன்னைத்தானே
சுருட்டிக்கொண்டு
உலகின் தொடர்பற்றிருக்கும்
இப்பூனைகளுக்குத்தான்
எத்தனை ஆசுவாசம்!

மடிக்குள்
புரண்டோடிய பின்னரும்
சிலிர்த்து உருள்கிறது
அதன் இதம்.

****

மெல்லிய அதிர்வு

வழக்கத்தை விட
பாட்டியின் தும்மல் சத்தம்
அதிகமாகவே கேட்டது

தாத்தா புரட்டும்
செய்தித்தாளில்
பெரியதாய் சலசலப்பு

நடந்துதான்
சென்றார் அப்பா
என்றும் இல்லாத அதிர்வு

அம்மா திட்டியது
அன்றுதான் அதிகமாய்
என் காதைக் கீறியது

தம்பி உருட்டும்
சின்னச் சின்னப் பொருளும்
திரும்பிப் பார்க்க வைத்தது

இதுவரை கவனித்ததில்லை
அக்காவின் கொலுசில்
அசைந்தாடும் இசையை

அடுப்பங்கரையில்
கீழே விழுந்த கரண்டி
வாசல் தாண்டி ஒலித்தது

அட,
எதிர் வீட்டு
புது மாப்பிள்ளையின்
கொஞ்சலும் கெஞ்சலும் கூடக் கேட்கிறதே…

என்ன ஆயிற்று இன்று!
வியர்வை துடைத்து
மேலே பார்த்தேன்
ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது
மின்விசிறி
குளிர்சாதனப் பெட்டியிலிருந்து
ஒழுகிக்கொண்டிருந்தது தண்ணீர்

புரிந்து போயிற்று
இன்று மின்வெட்டு.

*******

shinnodolly1028@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button