ஓட்டால்
‘அண்ணல் அம்பேத்கர் போராடி பெற்ற ஜாதிய அடக்குமுறைக்கு எதிரான இடஒதுக்கீடு சிதைக்கப்படுகிறதா?’அன்று தொலைக்காட்சியில் அதுவே அனல் பறக்கும் விவாதமாயிற்று. ஒருவரின் மதம், கல்வி, அவரது வர்க்க நிலை, அவர் வாழுமிடம் எல்லாம் மாறலாம்; ஆனா சாதி மாறாது, ஊரும் சேரியும் ஒன்றாகும் வரை இடஒதுக்கீடு தேவை. தொண்ணூறு வயதிலும் பள்ளித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பெயர்களும், சிறையில் இருந்த படியே பட்டம் பெற்றவர்களின் பெயர்களையும் நமது ஊடகங்கள் தூக்கி கொண்டாடியதை பார்த்திருக்கிறோம். கிராமத்தில் பிறந்த நான் நகரத்தில் பிழைக்கிறேன், நகரம் வெறுத்த அந்த எதிர் வீட்டு பணக்கார தம்பதி மேகமலையில் ஹோட்டல் ஒன்றை கட்டி அங்கேயே இடம் பெயர்ந்து போனார்கள். எனக்கு தெரிந்த வரை மேற்கு மலைகளில் நெகிழி முழுதும் ஆக்கிரமிப்பு செய்யாத மலைகளில் மேகமலையும் ஒன்று. இப்படி மேட்டுக்குடி நட்டு வைத்த கட்டிடங்களும்,தேயிலை தோட்டங்களும் மலையை மெல்ல மூட துவங்கிவிட்டன – அதெல்லாம் நமக்கெதுக்கு? நாம ஒரு விடுமுறைக்கு அங்கு சென்று,முகப்புத்தகத்தில் படங்களை பதிவிறக்கம் செய்வதோடு நிறுத்திக்கொள்வோம். சரி இடஒதுக்கீட்டுக்கு வருவோம் – வர்க்கம், வர்ணம் இரண்டுமே நம் தமிழ் திரையுலகம் வெகு காலமாய் பேசாத கருத்துக்கள். அட… நாம இன்னும் தாலி சென்டிமென்ட்டை விட்டே வெளிய வரல, போங்க தம்பி.
‘ஓட்டால்’ – படம் பார்த்த நேரம் அன்டன் செக்கோவின் ‘வன்கா’ மூளையின் இடுக்குகளில் இருந்து மெல்ல திரண்டு வெளிவந்து நூறு வருடங்களுக்கு முன்பு ருசியாவில் எழுதப்பட்ட கதை, இன்னும் இந்தியாவில் நாம் எளிதில் கடந்துவிடும் நிகழ்வாக மாறிப்போனதை உணர்த்தியது. பட்டாசு தொழிற் சாலையில் முடங்கிப்போன எழுத்துக்களின், புது புத்தகங்களை தாங்க நினைக்கும் பிஞ்சு கைகளின் கதை அது.
கேரளத்தில், எப்போதும் நீரின் நசநசப்பு நிறைந்த குட்டநாட்டில் விரிகிறது கதை. ஓடைகளில் பயணிக்க கட்டு மரங்களை பயன்படுத்தும், இன்னமும் ஆற்றின் கரைகளில் வழுமரங்களில் ஏறி விளக்கு பொருத்தும் பல மனிதர்களின் கதை. நீர் சூழ்ந்த அந்நாட்டில் அறுவடை முடிந்த பிறகு வாத்து பண்ணை அமைப்பது வழக்கமாய் கொண்டிருந்த மேட்டுக்குடிகளிடம் வேலை செய்யும் தினக் கூலிகளின் கதை. வாத்துகளின் ‘குவாக் குவாக்’ சத்தங்களுக்கிடையில் பாடிக்கொண்டே வாத்து மேய்க்கும் தாத்தாவின் வாஞ்சைகளை இறுக்கப் பற்றியவனாய் ‘குட்டப்பாயி’ எட்டு வயதில் எல்லா குழந்தைகளுக்கும் கிடைக்கும் ஈசல் சிறகுகள் கொண்டு சுற்றித் திரியும் இவனுக்கு, தனக்கும் தன் தாத்தா வேலை பார்க்கும் வயல்களின் முதலாளி மகனான டிங்குவுக்கும் இருக்கும் வேறுபாடுகள் தெரியாது. பெற்றோரை இழந்த குட்டப்பாயிக்கு ஒற்றை சொந்தமாய் அவனது தாத்தாவும், கடைசி சில நாட்களை கடக்க நினைக்கும் ஓட்டை விழுந்த மரபரிசலாய் அவன் தாத்தாவும் நமக்கு குட்டநாட்டை சுற்றிக் காட்டுகின்றனர். டிங்கு படிக்கும் பள்ளிக்குச் சென்று ஜன்னல் வழி கதை கேட்பான். வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை சுழற்சி படத்தை வரைய மறந்த டிங்குவுக்கு ஜன்னல் வழி கூட்டுப்புழுவையும், பட்டாம்பூச்சியையும் கொடுத்து கூட்டுக்காரனாகிறான் குட்டப்பாயி.
தூக்கணாங்குருவி கூட்டை காண்பித்து பருவம் முடிந்து சின்னக் குருவிகளுடன் தாய் குருவி பறந்து செல்லும் என்று சொல்லும் தாத்தாவிடம்; ‘அப்போ அம்மா அப்பா இல்லாத குருவிக என்ன செய்யும்?’ என்று குட்டப்பாயி கேட்கையில் இமைகளின் ஓரத்தில் மட்டும் பெருகிய நீரை சிரமப்பட்டு உள்ளே தள்ளியது இப்போதும் நினைவில் இருக்கிறது.
கட்டுரை படிக்கும் சிலருக்கு இதெல்லாம் 80களில் தமிழ் சினிமா பேசிய கதையில்லையா? என்று கேள்வி எழலாம்.
எழவில்லையெனில் தயவுசெய்து பழந்தமிழ் படங்களைப் புரட்டி பார்க்கவும். இந்த கேள்வி படம் பார்க்கும் நேரம் தோன்ற துளியும் வாய்ப்பில்லை.ஜோஷி மங்கலத் தனது திரைக்கதை மூலமும் எம். ஜே. ராதாகிருஷ்ணன் தனது ஒளிப்பதிவு மூலமும் நம் கண்களை கட்டி வாத்து கூட்டங்களோடு குட்டப்பாயி வாழ்க்கையை வேடிக்கை பார்க்க செய்கின்றனர்.
இயக்குனர் ஜெயராஜ் கருத்துபதிவியல் பற்றி முனைவர் பட்டம் பெற்றவர் என்றால் நாம் நம்பும்படியாக இருக்கிறது ஓட்டால். ஒரு மனிதனின் உச்ச உணர்வாகவும் ஆசையாகவும் இருப்பதெல்லாம் அவன் சந்ததி தன்னை விட ஒரு படி மேலே செல்ல வேண்டும் என்பதாகவே இருக்கக்கூடும். வறுமையும், வழியின்மையும் இந்த உணர்வை கேட்கும் கேள்வி தான் படம். இருக்க பற்றிய கைகளை உதறும்போது அவர்களை விடவும் நாமே அதிகம் அவஸ்த்தை படுகிறோம். கோபுரம் போல் பறக்கும் வாத்து கூட்டத்தில் எப்போதும் சிறிய வாத்துகளே முன்னே செல்கின்றன, அவை அப்பா அம்மா இல்லாத வாத்துகளை தொலைய விடுவதில்லை. ஏனோ மனிதர்கள் இந்த கருத்தில் வேறுபடுகிறோம். சுயம் என்ற கொள்கை நம்மிடம் அதிகம் இருக்கவே அதில் சில குட்டப்பாயிகள் சிக்கிக் கொள்கிறார்கள்.
படத்தில் புனைவாக தோன்றிய கருத்துக்களில் பணக்கார வீட்டு சிறுவனாக வரும் டிங்குவின் அம்மா கதாபாத்திரம் குறித்து சொல்ல வேண்டும். இங்கு பல கருத்தியல்கள் வந்து தேய்ந்து, மருவி, உருமாற்றம் செய்யப்பட்டு, சிதைக்கப் பட்டு, அழிந்தும் விட்டன எனினும் இந்த சுழற்சியில் ஒரு சில பெண் குரல்களே கேட்டன.பெரிதாய் ஏதும் செய்யவியலாத பெண் குரலென ஒலிக்கிறது இந்த கதாப்பாத்திரம். மேல்தட்டின் யோசிக்கத்தக்க மனசாட்சி தான் படத்தில் காட்டப்பட்ட அம்மா கதாபாத்திரம். நாம் எல்லோரும் க்ரூரமானவர்கள் இல்லை என்றாலும் நம்முள் இருக்கும் கொஞ்சம் சுயமும், கண்மறைக்கும் இயல்பாகிப்போன “எதுக்கு தேவையில்லாத சுமை“ என்ற கேள்வியும் ஒன்று சேர்கையில் சிலரது கோடி கோடி நீர்க்குமிழி கனவுகள் உடைய தான் செய்கின்றன.
மரிக்கப்போகும் உயிருக்கு துடிப்பை விட நிரந்தர அசைவின்மையே தேவைப்படும் என்பதாய் தாத்தாவாக வரும் குமரகோம் வாசுதேவனின் உணர்ச்சி ஓட்டங்கள். தான் கொண்ட ஒரே சொந்தத்தை பொய் சொல்லி வழி அனுப்ப நேர்ந்த சோகம் தாங்கிய நெஞ்சின் குமுறல்களை முகபாவனைகளில், காதுகள் அடைத்து பரிசல் ஓட்டும் அவர் ஆழத்தில் நம்மை கலங்கடைகிறார் குமரகோம் வாசுதேவன். இவருடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார் குட்டப்பயியாக வரும் அஷாந்த்.
படத்தில் இவர்களைத் தவிர இன்னொரு முக்கிய காதாபாத்திரமாக வருபவர் இயற்கை. குட்டநாட்டின் குளங்களும், வாய்க்கால்களும் அதில் கயிறுத் தூண்டில் கொண்டு மீன்பிடிக்கத் காத்திருக்கும் கிழவரும், குட்டநாட்டில் யாருக்கும் கடுதாசி இல்லை என படம் நெடுக்க சொல்லும் தபால்காரரும், கள்ளுக்கடை ஆட்களும் குட்டப்பாயி கடைசியாக படகில் தன் கனவுகளை தொலைக்கச் செல்வதை பார்த்து அமைதியாய் நிற்பது சமூகத்தில் அங்கங்கு நடக்கும் இம்மாதிரியான மயான அவஸ்தைகளுக்கு நம் அனைவரின் நிலைப்பாடாய் தகிக்கிறது. மலையாள நாட்டு பாடல்கள் மட்டும் தேவைக்கேற்ப தூவப்பட்டு நம் நேரத்தையும் உணர்வுகளையும் வீணடிக்காத படமாய் ஓட்டால்.
- முந்தைய பகுதி