முதலாளித்துவத்தை நோக்கிய விழைவு அமெரிக்கப் பண்பாட்டில், அதிலும் குறிப்பாக மத்திய வர்க்கத்து மனிதர்களுக்கு பெரும் தேடலாக அமைந்தது. பணிக்குச் சென்று ஊதியம் பெற்றுக்கொண்டிருந்த மக்கள் முதலாளியாவதை விரும்பினர். சொந்தமாகத் தொழில் தொடங்கலாம் எனும் நோக்கம் எல்லோரிடமும் தொற்றிக் கொண்டது. இந்தியாவிற்கும் இந்த வியாதி தொற்றியது. இன்றளவும் சிறிய அளவிலாவது ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று நினைக்காத முப்பது வயதினரைக் காண்பதரிது. இதற்கு இணைகோடாக பணம் ஈட்டும் எண்ணம் பணப்பெருக்கம் எனும் குணம் நோக்கி மடை மாறியது. ஊதியங்கள் செலவுகளில் கரைந்து விடுகின்றன. முந்தைய தலைமுறை போல சொத்துகளைச் சேர்க்க முடியவில்லை எனும் ஏக்கம் கனவுகளாக பரிணமிக்கின்றது. கடனட்டைகளும், கடனும் அன்றாடத்தின் பகுதியாகி விட்டன. சிக்கனமும் சேமிப்பும் கட்டாயப்படுத்தப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. பணவீக்கத்தின் முகத்தை இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் மாற்றியமைத்தன. ஐநூறு ரூபாய் சகஜமாகியது. பணம் உள்நாட்டிலேயே தன் மதிப்பை இழக்கத்துவங்கியது. மதிப்பை இழந்து, அறிந்துகொள்ள முடியாத வண்ணம் கரையும் பணத்தை தக்க வைக்கவும், பன்மடங்காகப் பெருக்கவும் நவீன மனம் விழைகிறது.
முந்தைய தலைமுறை சேமிப்பை நாடியது எனில் இந்த தலைமுறை முதலீட்டை நாடுகிறது. பணம் சார்ந்த நூல்கள் அதிகம் இளைஞர்களிடம் விற்பனையாகிறது. (அதில் எத்தனை சதவிகிதம் வாசிக்கப்படுகிறது என்பதும், வாசித்தவர்களில் எத்தனை பேர் நடைமுறையில் அதில் சொல்லப்படும் முறைமைகளை பயன்படுத்துகிறார்கள் என்பதும் தனியே பேசப்படவேண்டிய விஷயம்.) கைவசம் இருக்கும் பணத்தை இரட்டிப்பாக்கும் பேராசை இயல்பு நிலைக்கு நகர்ந்துவிட்டது. பணத்தின் மீது குவிக்கப்படும் அளவுக்கதிகமான கவனம் பணம் சார் மதிப்பை மக்கள் மீது பூசுகிறது. காலந்தோறும் நிகழுந்து கொண்டிருக்கும் அம்சமெனினும் அதன் வெளிப்பாட்டில் மாற்றத்தை உணரமுடிகிறது. நிலைத்த சொத்துகளை வாங்கி ஆடம்பரங்களை வெளிப்படுத்திய தலைமுறைக்கும், வாங்கி குவித்தலில் கவனம் செலுத்தும் தலைமுறைக்குமாக இடைவெளிகள் வெளிப்படுகின்றன. நுகர்வின் மீது அதீத நாட்டம் கொள்ளும் மனிதர்களின் வாழ்வும், உறவுகளும், மென்னுணர்வுகளும், குடும்பமும், அன்றாடமும் ‘நிலைத்த’, ‘நீடித்த’ எனும் நிலையை அடைய சிக்கல் கொள்கின்றன. அப்படியான சிக்கலைப் பேசும் நாவலாக அமைகிறது பா.கண்மணி எழுதிய “இடபம்”.
பங்கு சந்தை முதலீடு மையப்படுத்திய நாவல் என்பதே இந்த நாவல் மீது ஈர்ப்பு ஏற்பட முதல் காரணம். அவை முழுக்க முழுக்க சமகாலச் சங்கதி. இருபது ஆண்டுகளுக்கு முன் பங்குச் சந்தை முதலீடுகள் அன்றாடப் பணிகளைக் கடந்த, தனித்த உழைப்பின் அடையாளமாக, அதிர்ஷ்டத்தின் மீது ஏற்றபடும் அம்சமாக இருந்திருக்கிறது. மேலும் காலம் கடந்தாலும் மாறாமல் இருக்கும் அம்சம் “முதலீடு சந்தை அபாயத்திற்கு உட்பட்டது” எனும் சொற்றொடர். இந்த முதலீடு அறிவுசார் விஷயமாகிறது. ஒரு நிறுவனத்தின் மீது முதலீடு செய்வதற்கு முன் அந்த நிறுவனம் சார்ந்த தகவல், லாப நஷ்ட கணக்கு, அவை உலகமயமாக்கலில் அளிக்கும் பங்கு/சார்பு நிலை, பிற நாடுகளின் (குறிப்பாக அமெரிக்கா) அரசியல் மாற்றங்களால் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், எண்ணெய் விலையின் மாற்றங்கள், உள்நாட்டு அரசியல் பிரதிபலிப்புகள் ஆகிய பல்வேறு அம்சங்களை அறிய வேண்டியிருக்கிறது. அத்தகவல்களின் அடிப்படையிலேயே நம் முதலீடுகளின் லாபமும் நஷ்டமும் அடங்கியிருக்கின்றன. தொடர்ச்சியாக விழிப்புடன் உலகை கவனிப்பதே நம் முதலீட்டின் மூலதனமாகிறது. இது முன்னரே கூறியதைப்போன்று அறிவுசார் செயல்பாடாகிறது.
இந்த அறிவுசார் விளையாட்டில் நமக்கு லாபம் கிடைத்தாலும் அறத்தின்பால் தர்க்கமொன்று எழுந்தவண்ணமுள்ளது. நமக்கு லாபம் தரும் நிறுவனம் ஏதோ ஒரு நிலத்தில் குறிப்பிட்ட இன மக்களை ஒடுக்குகிறது அல்லது இயற்கை வளங்களைச் சுரண்டுகிறது என்று வைத்துக் கொள்ளலாம். இப்போது நம் கவனம் அந்த நிறுவனத்துடைய பங்கு ஏறுமுகத்தில் இருப்பதன் மீது குவியுமா அல்லது மானுட இடர்களின் மீது சாய்வு கொள்ளுமா? இந்த முரண் நவீன சுயநலத்திற்கான வேராகிறது. கீழ்மைகள் நம்மை அறியாமலேயே நம் மீது கவிழ்வதை நல்லதொரு புனைவாக பா.கண்மணி புனைந்திருக்கிறார்.
கதையின் நாயகி லக்கி ஸ்டாக்ஸ் எனும் சிறிய நிறுவனத்தில் கேஷ் மார்க்கெட் பிரிவில் பணி செய்கிறாள். ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் பிரிவில் கற்றுக்கொள்ள விரும்பி முதலீடுகளில் முயற்சி செய்கிறாள். அது ஒரு சிறிய நிறுவனம். குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள். மேலும் அதன் முதலாளி அவளுடைய நெடு நாளைய சிநேகிதன். நாயகியின் தனிப்பட்ட வாழ்வு தனிமை நிரம்பிய வாழ்வாகவே அமைகிறது. சட்டகத்திற்குட்பட்ட வாழ்வை அவள் விரும்புவதில்லை. திருமணம் அவளுக்கு இணக்கமாக அமையாது போகின்றது. காதலித்தவனுக்கு திருமணம் நிகழ்கிறது. ஆனாலும் கட்டுபாடுகளற்ற உடலுறவில் நாட்டம் கொள்கிறாள். பணம் குறித்து பேசுவதற்கு ஈடாக நாவலில் காமமும் பயணிக்கிறது. காமத்தையும் பொருள்முதல்வாதப் பார்வையில் அணுகும் நாயகியின் தன்மை நாவலுக்கு வலு சேர்க்கிறது. முதலீடுகளில் அதிகம் தோல்வியைச் சந்திக்கும் நாயகியின் வாழ்க்கை எப்படியெல்லாம் பயணிக்கிறது என்பதே நாவலின் மையக்கதை.
நாயகி பணிபுரியும் நிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் குறைவே. அந்த வாடிக்கையாளர்களின் நுட்பமான விவரணைகளின் வழியே பணத்தை பொதுமக்கள் அணுகும் விதத்தை வேறுபடுத்தி, விவரித்து சொல்லியிருக்கிறார். பணத்தை யார் மதிக்கிறார்களோ அவர்களிடம் தங்கும் என்பது பொதுக்கூற்று. அதை எப்படியெல்லாம் மதிக்கிறார்கள் என்பதன் வகைமையை வாடிக்கையாளர்கள் குறித்த விவரணைகளில் உணரமுடிகிறது.
நாவலில் பயணப்படும் காலம் முன்பின்னாக நகர்வதில்லை. நேர்கோட்டில் குறுகிய காலட்டத்தில் நிகழ்ந்து முடிகிறது. நாயகிக்கு பெரிதாக நினைவேக்கங்களும் இல்லை. எதிர்காலம் குறித்த பெரிய கனவுகளும் இல்லை. அன்றைய தினத்தில் முழுமைக்குமாக வாழ முனைகிறாள். தேய்வழக்கான வாழ்க்கையின் மீது பரிகாசமிருக்கிறது. கேள்விக்குட்படுத்துதல் நிகழ்கிறது. திருமணம், அதிலும் குறிப்பாக ஒரே ஆணுடனான அனைத்தையும் பகிர்தல், குறிப்பட்ட வயதில் சொந்த வீடு, கார் எனப் பொருளீட்டி வாழ்க்கையை (சமூகம் முன்வைக்கும்) நல்ல நிலைக்கு உயர்த்துதல் ஆகிய விஷயங்கள் ‘எல்லைகள்’ எனும் சொல்லுக்குள் நாயகிக்கு அர்த்தப்படுகின்றன. எல்லைகளை மீறி செய்யும் செயல்களே அவளுக்கான ஆற்றாலாகின்றன. பணியிடத்திலும் சக ஊழியர்கள் சொல்லும் ‘லாபம் போதும்’ போன்ற சொல்லாட்சிகள் அவளுடைய பேராசையைக் கிளர்த்துகின்றன. சற்று நேரம் தாமதித்து, நஷ்டம் விளைந்தாலும் அதை குறைகளின்றி ஏற்றுக்கொள்கிறாள்.
மீறல்களின் மீது ஈர்ப்பு ஏற்படுதல், சொந்த முடிவுகளில் மட்டுமே நம்பிக்கை கொள்ளுதல், பேராசையின் தீயை வளர்த்தல், சுயநலமாகவே சிந்தித்தல் ஆகிய அனைத்தும் நாயகியின் நுட்பமான சித்தரிப்புகளில் வாசகர்களுக்கே புலப்படுகின்றன. அவளுடைய தன்னுணர்வில் அவை கீழ்மைகளின் சாயலைப் போர்த்திக் கொள்வதில்லை. சோ.தர்மன் எழுதிய “சூல்” நாவலில் பானை வனையும் மனிதனைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பார். அவன் பானைகளை வனைந்து தெருத் தெருவாக விற்பவன். அவனிடம் பேரம் பேசுவது எளிது. ஏனெனில் பானை வனைபவனால் கோபம் கொள்ளமுடியாது என்று சொல்லியிருப்பார். கோபம் உடலை இறுக்கும் தன்மை கொண்டது. பானை வனைதல் நயம்பட செய்ய வேண்டிய செயல். இந்தக் கூற்று வாழ்க்கை குறித்த முக்கியமான சித்தரிப்பாக உணர்கிறேன். தொடர்ந்து ஒரே செயலை செய்வதன் மூலம் அதன் அம்சம் நம் வாழ்வின் அம்சமாக மாறிவிடுகிறது. இங்கு நாயகிக்கு நிகழ்வதையும் அப்படியே அர்த்தப்படுத்த விழைகிறேன். அனைத்து கீழ்மைகளும் அவளை அறியாமலேயே ஆக்ரமிக்கின்றன. அவற்றிற்கு மூலதனமாக பணமே அமைகிறது. சூதாட்டத்தைப் போல அடுத்து வரும் லாபம் நோக்கி நஷ்டங்கள் பேராசையைத் தூண்டிவிடுகின்றன. லாபங்களும் மேலதிக லாபங்களுக்கு உந்தித் தள்ளுகின்றன. பணம் பெருக்கப்படுவதன் பிண்ணனியில் நிறுவனங்கள் நிகழ்த்தும் நாடகங்கள் அர்த்தமிழந்து வெறும் எண்களால், தகவல்களால் அறிதல் முடிந்துவிடுகிறது. நிலையாமை மெய்யியல் தத்துவமாக நிலைகொண்டிருந்த பண்பாட்டில் அனைத்திலும் நிலையாமை சகஜமாகிப் போனதில் இந்த தலைமுறைக்கும் நுகர்வுத்தன்மைக்கும் பெரும் பங்குண்டு. இந்த நாவலின் நாயகி அதற்கு சான்று.
கதையின் முடிவில் நாயகியின் வாழ்க்கை மேம்படுகிறது. மத்தியதர வாழ்க்கையிலிருந்து சற்று மேலேறுகிறாள். ஆனால், சக மனிதர்களின் மீதான அவளது பார்வை சுயநலத்தின் பிடியிலிருந்து வழுவாமல் நிற்கிறது.
முதலாளித்துவத்தைப் பேசும் நாவல்கள் பெரும்பான்மையாக சுரண்டலைப் பேசக்கூடியன. அவை பாதிக்கப்படுபவரின் இடத்திலிருந்து கதைகளைச் சொல்கின்றன. இந்த நாவல் முதலாளித்துவ மனநிலையை உருவாக்கும் சூழ்நிலையை விவரிக்கின்றது. இங்கே சகஜமாகும் விஷயங்களே அச்சுறுத்துகின்றன. பணமதிப்பிழப்பு நிகழ்ந்த பின் இரண்டாயிரம் ரூபாய் தாள் அறிமுகப்படுத்தப்படுகிறது. சந்தையில் இரண்டாயிரம் எனும் இலக்கம் செலவுக்கான அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்படுகிறது. டெபிட், கிரெடிட் கார்டுகளை நாம் கடையில் கொடுத்து ஸ்வைப் செய்கிறோம். அதற்கு ஆகும் நேரம் சில விநாடிகள். அதைத் தவிர்க்க டேப் அண்ட் பே எனும் முறையை வங்கிகள் கொண்டுவருகின்றன. பணம் ஈட்டுவதற்கு ஆகும் நேரம் பன்மடங்காகிற நிலையில் மக்களிடமிருந்து பணம் வெளிச் செல்வதற்கான கால நேரத்தை நுகர்வுச்சூழல் வெகுவாக குறைத்திருக்கின்றது. நுகர்வின் வசீகரம் நம்மை பணத்தை நோக்கி இயல்பை மீறிய வேகத்தில் இட்டுச்செல்கின்றது. சுயநலம் கொண்டவர்களாக மாற்றுகின்றது. நவீன மாற்றங்களுக்கேற்ப நம்மால் தகவமைத்துக்கொள்ள மட்டுமே இயலும் என்பதே கள யதார்த்தம். இயன்றால் முடிந்தமட்டும் அறம்சார்ந்து செயல்பட்டு முதலீடு செய்யலாம், அதுவும் எவ்வளவு தூரத்திற்கு என்று அறுதியிட்டு சொல்ல முடியாது. இது ஒரு தீராப்பசி.
பணமும் காமமும் நாயகியிடம் ஒரே அர்த்தத்தில் புனையப்பட்டிருக்கிறது. பண விஷயத்தில் லாபத்திலும் காமத்தில் கட்டுப்பாடுகளையும் அவள் விரும்புவதில்லை. போதும் எனும் சொல் அர்த்தமிழந்து விடுகிறது. தனக்கான எல்லைகளை விஸ்தரித்துக்கொண்டே செல்கிறாள். அவளுக்கு வாழ்வில் நுகர்வு மட்டுமே நிகழ்கிறது; அனுபவங்கள் அல்ல. அதனாலேயே நாவலின் ஓரிடத்தில் எதிர்காலத்தில் எதை நினைத்து தன்னால் வாழ்வை அசை போட முடியும் எனும் முடிவுகளற்ற தர்க்கத்தை எழுப்பிக்கொள்கிறாள்.
நாவலின் மொழியும் விவரிப்புகளும் கவனச் சிதைவின்றி அமைக்கப்பட்டிருக்கின்றன. பயன்படுத்தும் உவமைகளையும் நாயகியின் அன்றாடத்திலிருந்தே செய்திருப்பது பாராட்டுதலுக்குரியது. சில இடங்களில் மேற்கூறிய இரண்டு அம்சங்களும் தளர்ச்சி கொண்டாலும் அவை வாசிப்பில் சிடுக்கை ஏற்படுத்துவதில்லை. நாயகியின் கடந்த காலம் பேசப்படுவதில்லை. இது தடையாக கதைக்கு இல்லாமல் இருப்பினும் நாயகி ஒரு ஆளுமையாக உருவமெடுக்க நிச்சயம் தடையாகிறது. அவளுடைய பால்யமும், சமகாலத்தில் அவள் கொண்டிருக்கும் வேட்கைக்கும், கொள்கைகளுக்குமான ஊற்றுக்கண்ணை அறியவும் அவை உதவியிருக்கக் கூடும். அளவுக்கு அதிகமாக நாவலில் காமம் சொல்லப்பட்டிருக்கிறதோ எனும் கேள்வியும் எழாமலில்லை. ஃப்யூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் எனும் முதலீட்டுப்பகுதி நம் சமூகத்தில் பல இளைஞர்களின் வாழ்க்கையை குடித்திருக்கிறது. அவை குறித்த மேலதிக தகவல்களோ அல்லது அம்மரணங்கள் குறித்த இடையீடுகளோ இல்லாமல் இருப்பது இந்த நாவலுக்கான பிரத்யேகக் குறை (குறைந்தபட்சம் நாயகியின் பார்வையில் தவறான முதலீடு செய்பவர்களின் கையாலாகாத்தனம் எனும் பகடியாவது சொல்லப்பட்டிருக்க வேண்டும்).
அ-நேர்க்கோட்டு வாழ்க்கையை இயன்றவரை துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார். மேலும் துறைசார் நாவல் என்பதால் ஆரம்ப சில பக்கங்களில் தகவல்கள் சார்ந்த அடிக்குறிப்புகள் தென்படுகின்றன. பங்குச் சந்தை முதலீடு என்பது பல்வேறு கிளைகள் கொண்ட துறை. அவற்றிலிருந்து குறிப்பிட்ட விஷயங்களை தேர்ந்தெடுத்து, அதை வாழ்க்கைப் போக்குடன் ஒட்டி கையாண்டிருப்பது நாவலின் பலம். நல்ல வாசிப்பனுபவம் அளித்த நாவல்.
இடபம் | பா.கண்மணி | நாவல் | எதிர் வெளியீடு