
கடைசித் துளி
அரிதாய்
மிகச் சமீபமாய்
கேட்ட அந்தக்
குருவி சத்தத்தால்
எனது சிறுவயது
ஞாபகத்திற்கு
சிறகு
முளைத்துக் கொண்டது
அப்போதெல்லாம்
குருவிகள் எத்தனை
எளிதாய் உறவுகளாய்
கலந்துவிட்டன தெரியுமா?
வீட்டில் ஒரு நபரைப் போல
அத்துணை உரிமை
அவற்றுக்கு
அன்றெல்லாம் தனியாக
அதற்கு இடம் கிடையாது
பழசாய்க் கிடந்த
எங்கள் வீட்டு
கேஸ் அடுப்புதான்
அதன் உறைவிடம்
அதிலும் அலைந்து
திரிந்து சேர்த்த
வைக்கோல்
சிறு குச்சிகளைக்
கொண்டு ஒரு கூடு
தயார் செய்துவிடும்
வெளியில் எளிதாய்
காயவைத்த தானியங்கள்தான்
உணவுக்கெல்லாம்
இதில் தவறி விழுந்த
குருவிக் குஞ்சுகளை
நம் கைப்பட எடுத்து
கூட்டில் வைத்திட முடியாது
அதற்காகவே
செய்தித்தாள்
பத்திரிக்கை அட்டை
இவற்றில் எடுத்து
குஞ்சுகளை அதன்
கூட்டில் சேர்த்தது நன்றாகவே
நினைவிருக்கிறது
இன்றும் பசுமை தட்டும்
இந்நினைவுகளிலிருந்து
குருவிகளை விட்டு
நெடுந்தூரம் வரை
வந்துவிட்டதே நிதர்சனம்
எங்கோ அடி ஆழத்திலே
அதன் குரல்
கேட்கிறதே…
கேட்கிறதா உங்களுக்கும்?
கேட்பதாய் நினைத்தாவது
பாருங்கள்…
சிறகுகளை
புதைத்துவிட்ட பின்பும்
அழுத்திக் கிடக்கும்
அதன் மூச்சின்
நுனி ஓசைதான்
நாம் தொலைத்த
நாகரிக
உயிரோட்டத்தின்
கடைசித் துளி.
*
தனிமையின் இறகுகள்
நாள்பட்ட நெஞ்சில்
நான் பட்ட துன்பம்
நாணலின் கீற்றாய்
வளைந்து ஓடிட
காத்திருந்த காதல்
ஓடிச்சென்று
ஒளிந்த உள்ளம்
இந்தத் தனிமையினிடத்தா?
வெறுங்கை வீசிடும்
வேதனையின் உச்சம்
வறுமைப் பசிக்கு
அனலிலிட்ட நெய்யாகிட
உன்னைப் பிரிந்து
வதைந்த உள்ளம்
தனிமைத் தீக்கு
தீரா இரையாகுதே
நாளும் நோகும்
தனிமையின் பிடியை
திரையை விலக்கி
தளர்த்திட விழைகிறேன்
பிரிவின் கனம் தாளாது
தனிமையின் இறகுகள்
மெல்ல குடை சாய்கின்றன
காதலின் மடியில்.