
மன அடுக்குகள்
அடுக்கப்பட்ட புத்தகங்களின் மேல்
அடங்கிக் கிடக்கும் தூசிகள்
வாசிக்கப்படாத பக்கங்களில்
புதைந்து கிடக்கும் புராணங்கள்
கலைத்திட எவர் வருவர் என
அச்சமின்றிக் கட்டிய சிலந்தி வலைகள்
அடைந்து கொள்வதற்கு ஏதுவாய்
பதற்றமின்றி கொசுக்கள்…
என்றோ ஒருநாள்
ஒவ்வொன்றாய் தூசி தட்டப்பட்டு
மீண்டும் அலமாரியில்
அடுக்கி வைக்கப்படுகிறது
இன்னும் நேர்த்தியாய்
இன்னும் அழகாய்
அதே தூசி படிந்த மனதுடன்.
*
புரியாத புரிதல்
விவரிக்க முடியா காட்சிகளை
விழிமுன் உருமாற்றும்
நினைக்க முடியா தூரங்களுக்கு
நொடியில் இடம் மாற்றும்
எதிர்பாரா இன்பங்களில்
இதயம் பொங்க வைத்திடும்
சின்ன வயது நண்பர்களை
ஞாபக முள்ளில் தைத்திடும்
தொலைத்து தேடியவற்றை
கையில் கொடுத்து பறித்திடும்
நேசித்து கிடைக்காதவர்களை
கண்முன் நிறுத்தி வதைத்திடும்
முகமறியா நட்பை
முகம் காட்டாமலே மறைத்திடும்
முடிந்த தேர்வுகள் நடத்தி
முட்டி மோத வைத்திடும்
நம்மை வைத்து
எல்லாம் செய்து விடும்
நிலை புரியும் வரை
நம்மால் ஏதும் செய்ய முடியாது.
*
மிதத்தலின் இதம்
மலை இப்படியாய் தன்னை
இடம்பெயர்த்துக் கொள்கிறது
எடை மறந்த ஆசுவாசத்தில்
சிற்றலைகளைத் தன்னுள்
நிரப்பிக் கொள்கிறது
குளிர்ந்த கிளர்ச்சியின்
இழுப்பு தாளாது
நதியிலேயே விழுந்து கிடக்கிறது மலை
நீர்மட்டம் உயர்ந்ததில் ஆச்சரியமேதுமில்லை.