இணைய இதழ் 115சிறுகதைகள்

மை வட்டங்கள் – கா. ரபீக் ராஜா

சிறுகதை | வாசகசாலை

நாசர் அண்ணன் இறந்த செய்தி அலுவலகம் கிளம்பும் போது வந்தது. தகவல் சொன்னவர்கள் வேறு எதுவும் சொல்லவில்லை. அதன்பின் அம்மா யார் யாரிடையோ பேசிதான் அது ஒரு தற்கொலை என்ற தகவல் கிடைத்தது. நாசர் அண்ணன் எனக்கு சொந்தம் கிடையாது. என் பாட்டி காலத்தில் இருந்தே புதுக்கோட்டை தாண்டி சுல்தான் வகையறா எனும் ஒரு குடும்பத்துடன் நட்பு இருந்தது. அண்ணா முதலமைச்சராக இருந்த பொழுது ஒரு நாகூர் சந்தக்கூட்டில் எங்கள் இரு குடும்பமும் சந்தித்து பின் நட்பாகி இன்று மூன்றாவது தலைமுறையாக நட்புடன் இருக்கிறார்கள். இப்பொழுது இல்லை. ஆனால், நாசர் அண்ணன் மவுத்துக்கு என்னை அனுப்பி வைக்க அம்மா தீர்மானித்துவிட்டார்.

எனது பனிரெண்டாம் வயதில் ஒரு அதிகாலை பார்சா பெரியம்மா எங்கள் வீட்டுக்கு வந்தார். பார்சா பெரியம்மாவுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். மகளின் கல்யாண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த இந்த நேரத்தில் அவர் வீட்டுக்கு வந்தது பத்திரிகை கொடுத்து அழைப்பதற்காக இருக்க வேண்டும். ஆனால், பார்சா பெரியம்மா முகரசம் அப்படி இல்லை. வார இறுதியில் தவறாமல் பூசும் கருப்பு சாயம் தலையில் படியாமல் இருந்தது. கண்ணில் மை குறைபாடு வேறு! என் அம்மாவை விட இருவது வயது மூத்தவர். ஆகாத கணவரை விரட்டிவிட்டு ஆள் வைத்து விவசாயம் பார்க்கும் ஓரளவு பொருளாதார வசதியுள்ள குடும்பம். மூத்த மகன்தான் நாசர். திருமணமாகி விவசாயத்தை பார்த்து வந்தார். அவருக்கு வாக்கப்பட்டது வசதி குறைப்பட்ட ஒரு ஏழை மோதினாரின் மகள். இதுகுறித்து பார்சா பெரியம்மா அடிக்கடி அம்மாவிடம் குறைபட்டு பேசுவார், “வெறும்பய மக! எத பாத்து இவகிட்ட மயங்குனான்ன்னு தெரியல. அவ்வளவு பெரிய தொடை அவளுக்கு!” என்பார். இத்தனைக்கும் பார்சா பெரியம்மா பார்த்த பெண் அது. “ஏழை குமருக்கு வாழ்க்கை கொடுத்தா அல்லா உசத்தி வப்பான்!” இதுவும் பார்சா பெரியம்மாதான் சொன்னது. இரண்டாவது மகன் செய்யது எங்கோ ஒரு நாட்டில் வேலை செய்கிறார். நல்ல சம்பளம். பெண் பார்த்து வந்தார்கள். அதற்கு முன்னதாக கடைசி மகள் பரகத்துக்குதான் இப்போது திருமண ஏற்பாடு.

வந்ததும் வராததுமாய் பார்சா பெரியம்மா அம்மாவை கட்டிப்பிடித்து அழுதார். “மொத்தமா முப்பது பவுன் நகையை யாரு எடுத்துட்டு போனதுன்னு தெரியல!” என சொல்லும் பொழுது அம்மாவின் மீதான பிடி இன்னும் இறுகியது. அவ்வளவு பெரிய மனுஷி அழுவதற்கு ஆறுதலாய் அம்மாவும் கண் கலங்க முடிவு செய்திருக்க வேண்டும். அம்மா சேர்ந்து அழுது பார்சா பெரியம்மாவுக்கு தேற்றுதல் சொன்னார். பார்சா பெரியம்மா அழுதது இடி போல இருந்தது. அவ்வப்போது ஒரு மூக்கை அடைத்து இன்னொரு மூக்கில் காற்றை செலுத்தினார். அந்த ஆவேசத்தில் வாசலில் ரெண்டு கோழிகள் ஓடிவிட்டு பின் பழைய இடத்தில் வந்து குருணையை கொத்தியது.

“போலீஸ்ல புகார் கொடுக்க வேண்டியதுதானேக்கா!” என்ற அம்மாவின் ஆலோசனையை அந்த அழுகையில் அலட்சியமாக மறுத்து தலையாட்டினார். கொண்டை அவிழ்ந்து கொட்டியது. அதை மீண்டும் எடுத்து கட்டியபொழுது அதில் ஒரு உறுதி இருந்தது. “திருடன் எடுத்துட்டு போயிருந்தா புகார் கொடுக்கலாம். வீட்டு ஆளுங்களே எடுத்தா என்ன செய்யிறது, ஏ அல்லாவே!” என அம்மாவிற்கும் அல்லாஹ்விற்கு ஒரே நேரத்தில் செய்தியை பகிர்ந்து கொண்டார்.

“என்னக்கா சொல்ற?” அம்மாவிற்கு ஆர்வம் கூடியது. அதே நேரத்தில் பார்சா பெரியம்மா யாரை குறிவைத்து சொல்கிறார் என்பதை ஓரளவு யூகித்தது போல இருந்தது. “ஆமாடி, அந்த நாசர் பயலும் அவன் பொண்டாட்டியும்தான் நகையை எடுத்துருக்கணும். நா கண்ணால பாக்கல. ஆனா, கண்ணாடி மாதிரி மனசுல ஓடுது, பாத்துக்க!” என மீண்டும் அழுதார். அம்மாவிற்கு என்ன சொல்வது என தெரியவில்லை. அதேபோல் இங்கு வந்து என்ன தீர்வு கிடைக்கும் என பார்சா பெரியம்மா நம்புகிறார் என்று புரியாத கேள்வி அம்மாவுக்கு இருந்தது.

“சரிக்கா, அவங்க எடுத்தாதகவே இருக்கட்டும். அவங்கிட்டயே நேரா கேக்க வேண்டியதுதானே. எதுக்கு பஸ்ஸேறி இங்க வந்த?” என எப்பொழுதும் சுத்தி வளைத்துப் பேசும் அம்மா அன்று நேரடியாக விஷயத்துக்கு வந்தது ஆச்சரியம்தான். அம்மாவின் நேரடிக் கேள்வி பார்சா பெரியம்மா ஏற்கனவே எதிர்பார்த்தது போல இருந்தது. என்றாலும் அதை வெளிக்காட்டாதவள் போல அமைதியாக இருந்தாள். அம்மாவிற்கு என்ன பேசுவது என தெரியவில்லை, அப்படி இருக்கும் புரியா சூழலில் அம்மா யோசிக்காமல் அடுப்படிக்குச் சென்றுவிடுவார். நாலைந்து சட்டிப்பானைகள் உருளும் பொழுது அடுத்து என்ன செய்வது என்ற யோசனையும் கூட வந்துவிடும்.

அம்மா காப்பி போட்டு வரும் வரை பார்சா பெரியம்மா அழுது கொண்டிருந்தார். காப்பியை குடிக்கும் வரை அழுகையை நிறுத்தி விட்டு பின் மீண்டும் அழுதார். அழுகையில் அவரது மூக்குத்தியை விசித்திரமாக திருகி சரி செய்து வைத்துவிட்டு மீண்டும் அழுதார். “சரிக்கா நீ ஆசை தீர அழு. நா ரேஷன் கடைக்கு போய்ட்டு வர்றேன்!” என நேரடியாகச் சொல்லாமல் அம்மா ரேஷன் கடைக்குச் சென்றதும் எனக்குப் புதிதாக இருந்தது. ஆம்பள கூட்டம் கம்மியாக இருக்கும் ரேஷன் கடையில் நான் வாங்குவதுதான் வழக்கம். அன்று அம்மாவே போனது அதிசயம்தான். அது பார்சா பெரியம்மாவை எதிர்கொள்ள அம்மா எடுத்துக் கொண்ட அவகாசம் என நினைத்தேன்.

அம்மா போனதும் பார்சா பெரியம்மா ஆறுத்தலடைந்தது போல இருந்தது. கண்ணாடியில் முகம் பார்த்துக் கொண்டாள். கொஞ்சம் பான்ஸ் பவுடர் அடித்துக் கொண்டாள். ஒன்னரைக்கு ஒண்ணு அடி கண்ணாடியில் முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தாள். சற்றுமுன் அழுது அனத்திய பார்சா பெரியம்மா போலவே இல்லை. அவ்வப்போது ஜன்னல் வழியே எட்டி வெளியே பார்த்தாள். அது அம்மா வரவு குறித்தா என தெரியவில்லை.

இப்போது போல இருபத்தைந்து கிலோ சிப்பம் அரிசி இல்லை. தூக்கினால் நூறு கிலோ அரிசி மூட்டைதான். அரிசிகடை சண்முகம் மாமா சீட் உயர்த்தி வைக்கப்பட்ட சைக்கிளில் ஒரே ஆளாக நூறு கிலோ அரிசி மூட்டையை தோளில் சுமந்து வந்து போடுவார். அந்த மூட்டையை பார்க்கும் பொழுது பார்சா பெரியம்மா ஞாபகம்தான் வரும். பார்சா பெரியம்மாவுக்கு கழுத்து இருக்காது. உடலும் தலையும் ஒட்டுப்படும் இடத்தை இதுவரை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை எனத் தோன்றும். அம்மா அடிக்கடி சொல்வார், “பார்சாக்காவை அடக்க ஜில்லாவில் ஆளே கிடையாது” என்று. எனக்கு சண்முகம் மாமா ஞாபகம் வரும். அப்படி பொருத்தம் அடைந்துவிட்ட அரிசி மூட்டையில் பார்சா பெரியம்மா அரிசி அள்ளி மடியில் போட்டு தின்று கொண்டிருந்தார். தன்வீட்டு அறுவடை அரிசியின் ருசி இல்லை எனவும் குறைபட்டு கொண்டார். அம்மா வந்ததும் மீண்டும் அழுகை. நாசர் அண்ணனையும் அவர் மனைவியையும் மிகுந்த ஆபாசமாகப் பேசினார். விஷயம் பெரிது என்பதால் அம்மாவால் மறுத்துப் பேச முடியவில்லை என்பதால் முருங்கைகீரையை ஆய்ந்து கொண்டிருந்தாள்.

பார்சா பெரியம்மா சற்றுநேரத்தில் வெளியே போய்விட்டு வருவதாக சொல்லிவிட்டு போனதும் அம்மா புலம்ப தொடங்கினாள். “நகையை தொலைச்சிட்டி எதுக்கு இங்க வந்து புலம்புதுன்னு தெரியலயே” அம்மாவிற்கு மர்மமாய் இருந்தது. சற்று நேரத்தில் வெளியே சென்ற பார்சா பெரியம்மா குடல் கறியுடன் வந்தாள். “இந்தா இள ஆட்டுக் கொடலு. முருங்கைகீரையை வச்சிட்டு இத சமைச்சு போடு!” என்றாள். நானும் அம்மாவும் ஒரே நேரத்தில் பார்சா பெரியம்மாவின் முகத்தை பார்த்தோம். ஒரு தீர்வு கண்ட திருப்தி தெரிந்தது.

என் அத்தா வெளிநாட்டில் வேலை பார்த்து வந்ததால் நானும் அம்மா, தங்கை மட்டுத்தான். தங்கை அதிராம்பட்டிண மதரஸாவில் படித்தாள். ஆம்பளை இல்லாத வீடு கொஞ்சம் சவுரியமாதான் இருக்கு என தன் சரீரத்தை மொசைக் தரையில் பரப்பி பத்துக்கு பதினாறு அறையை நிரப்பினாள். அம்மா குடல் கறி தயாரிப்புக்கு போனதற்கான பாத்திர உருட்டல்கள் கேட்டது.

மாலை நேரத்தில் அம்மாவை அழைத்த பார்சா பெரியம்மா தன் திட்டத்தைச் சொன்னார். “நான் இங்க வந்தது திகம்பரத்தை பாக்கதான். எல்லா விஷயத்தையும் நல்லபடியா தெரிஞ்சிட்டு ஊருக்குப் போனதும் இருக்கு, அந்த வெட்டுக்கிடா தேவுடியாளுக்கும் நா பெத்த தாயொலி மவனுக்கும்!” என்றதும் அம்மாவிற்கு குடல் கலங்கியது. அதை சொல்லிக் கொண்டிருக்கும் போதே அம்மாவின் மறுப்பு பலமாக இருந்தது.

“ஆஸ்தாபிருல்லாஹ்!”

“அக்கா, நீ ஒழுங்கா போலீஸ்ல சொல்லி புகார் கொடு. தேவையில்லாத வேலையை பண்ற. இந்த விஷயம் வெளிய தெருஞ்சா நல்லாருக்காது. அல்லாவுக்கு பயப்படணுக்கா. மறுமையில அல்லாவுக்கு பதில் சொல்லணும். நாசர்கிட்ட நான் வேணா பேசிப் பாக்குறேன்!” என்றதும் பார்சா பெரியம்மாவுக்கு ஆவேசம் வெறியாக மாறியது. அடிதொண்டையில் இருந்து கர்ஜனை செய்தாள். பள்ளி நண்பன் ராஜேஷ் வீட்டில் பெரிய ஸ்பீக்கரை மண்பானையில் கவிழ்த்து விட்டு இசையை ஆழமாக கேட்டு ரசிப்பார்கள். அப்போது பாடல் ஒலி துல்லியமாகவும் அழுத்தமாகவும் இருக்கும். இப்போது அப்படித்தான் இருந்தது பார்சா பெரியம்மாவின் குரலும்!

“அல்லாகிட்ட நா பதில் சொல்லிக்கிறேன். நகை எங்க போச்சு? இதுக்கு அல்லாகிட்ட பதில் இருக்கா?” என்பதை பார்சா பெரியம்மா பல ஆபாச சொற்களுக்கு நடுவே சொல்லி முடித்தாள். அம்மாவிற்கு பேச ஒன்றுமில்லை. தவிர அத்தாவை ஊருக்கு அனுப்ப முழுதாய் வட்டியில்லா கடனாக ஐம்பது ஆயிரம் பார்சா பெரியம்மா கொடுத்தது. தவிர ஊருக்கு ஆள் வரும்போதெல்லாம் கொஞ்சம் அரிசியும், கேப்பையும் வரும்.

திகம்பரம்! வெத்தலையில் மை போட்டு பார்ப்பவர். சுற்றியிருக்கும் சிவகங்கை ஜில்லாவில் மை போட்டு பார்ப்பதில் வல்லவர் என பெயரெடுத்தவர். ஒருமுறை தீர்க்கமுடியாத கொலை வழக்கில் குற்றவாளியைப் பிடிக்க திகம்பரத்தின் மைதான் உதவியது என ஒரு செய்தி உண்டு. திகம்பரத்தின் அருமை கடல் கடந்து சிங்கப்பூர் வரை பரவியிருந்தது. அவர் பயன்படுத்தும் வெத்தலை இமயமலையில் கிடைக்கும் எனவும், மை கிடைக்கும் விஷயம் பரம ரகசியம் எனவும் சொல்லக் கேட்டிருக்கிறேன். திகம்பரம் எனது அய்யாவுக்கு நல்ல பழக்கம். ஆகவே அய்யா திகம்பரத்தை “ஏமாத்து தயொலி” என்பார். என்றாலும் கடையில் காணாமல் போன இருபதாயிரம் பணத்தை அவரிடம்தான் மைபோட்டு மீட்டதாகச் சொல்வார்கள்.

மையில் ஓடும் காட்சியை விவரித்துச் சொல்வதற்கு ஒரு சிறுவனாக என்னை பார்சா பெரியம்மா எப்பொழுதோ தேர்ந்தெடுத்து விட்டார். அம்மாவிடம் வெறும் தகவல் தெரிவிக்கவே வந்திருக்கிறார். அம்மாவிற்கு துயரமான இருந்தது. இதில் அம்மாவுக்கு உடன்பாடு என்பதை நம்பிக்கை இல்லை என சொல்லியிருக்கிறாள். இந்த மாந்திரிகத்தில் கலந்து கொள்ளும் சிறுவர்களுக்கு மூளையில் ஏதேனும் பிசக்கு ஏற்படும் என யாரோ எப்போதோ சொன்னது அம்மாவுக்கு இப்போது ஞாபகம் வந்ததா இல்லை இட்டுக்கட்டியதா என தெரியவில்லை. அதைச் சொல்லி பார்சா பெரியம்மாவிடம் மன்றாடாத குறையாக சொல்லிப் பார்த்தாள். பார்சா பெரியம்மா திகம்பரத்திடம் என்னை கூட்டிச் செல்வதில் உறுதியாக இருந்தார். அல்லாஹ் பெயரை சொல்லும்போதெல்லாம் பார்சா பெரியம்மா பேய் போல கண்களை உருட்டிப் பேசினாள். அல்லாவே வந்தாலும் திகம்பரத்தை பார்த்துவிட்டுதான் மறுசோலி என அம்மாவின் எல்லா கருத்தையும் மறுத்தாள்.

முன்கூட்டியே பேசி வைத்தபடி திகம்பரம் மாலையில் வரச் சொல்லியிருந்தார். அதற்கு முன்னதாக பார்சா பெரியம்மா என்னை கடைக்கு கூட்டிக்கொண்டு சென்றாள். புதிய உடை, சில விளையாட்டு பொருள்கள், தின்பண்டம் என பெரிய பையில் அள்ளி கொண்டு வந்த மகிழ்வை இப்போது கூட உணர முடியும். வாழ்வில் சந்தித்த சில ஏகநிறைவான தருணங்களில் அதுவும் ஒன்று.

அம்மாவிற்குதான் முகம் சரியில்லாமல் இருண்டு போனது. என்னிடம் ஏதோ சொல்ல நினைத்தாலும் பார்சா பெரியம்மா என்னை விட்டு அகலாது நின்றது அம்மாவுக்கு அசௌகரியமாக இருந்தது. இறுதிவரை ஏதோ சொல்ல நினைத்து திகம்பரத்தின் வீட்டுக்கு கண்கள் கலங்க பரிதவிப்புடன் அனுப்பி வைத்தாள்.

வீட்டிலிருந்து ஒரு ஐநூறு அடியில் திகம்பரத்தின் வீடு இருந்தது. இயற்பெயர் செல்லையா. கேரளாவில் சென்று மாந்திரீகம் கற்று சிறிது நாளில் திகம்பரம் என தன்னை அழைத்துக் கொண்டார். சிகப்பு வேட்டி, காவித் துண்டு, எப்பொழுதும் இருபது நாள் மொட்டைதலை என மிக சாதாரணமாக இருப்பார். அந்த சாதாரணத்தில்தான் மற்ற மாந்திரீக ஆட்களை விட வேறுபட்டு நின்றார். குறி சொல்லும் நேரம் தவிர்த்து தெரு மக்களோடு மக்களாக வெகு இயல்பாக பழகி வருவார். செடி வேலி தாண்டிய அவரது வீட்டுக்குள் சென்றால்தான் திகம்பரத்தின் இன்னொரு வாழ்க்கை திறக்கும்.

திகம்பரத்தின் வீட்டுக்கு தானும் வர அம்மா எவ்வளவு முயன்றும் பார்சா பெரியம்மா மறுத்து விட்டார். “அரை மணிநேரத்தில் வந்துருவோம்!” என கண்கலங்கி கையெடுத்து இறுதியாக கும்பிட்டது அம்மாவுக்கு ஏதோ போலாகிவிட்டது. பார்சா பெரியம்மா என் கைகளை இறுக்கமாகப் பிடித்து வேறு எங்கும் ஓடிவிடாதபடி அழைத்துச் சென்றாள். நேரம் செல்ல பெரியம்மாவின் பிடி அதிகமானது. கை வலி பயத்தை கொடுத்தது. “அந்த முண்ட எடுத்ததை சரியா பாத்து சொல்லிடு ஏ அப்பனே!” என திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு வந்தார் பார்சா பெரியம்மா. திகம்பரத்தின் வீடு வந்தது பயத்தை கொடுத்தாலும் பார்சா பெரியம்மாவின் அமைதியானது சற்று ஆறுதலாக இருந்தது.

சூரியன் மறையும் நேரத்தில்தான் திகம்பரத்தின் அலுவல் தொடங்கும். எங்கெங்கோ இருந்து ஆட்கள் வருவார்கள். செய்வினை கோளாறு, சொத்து பிரச்சனை, வசியம் என பலதரப்பட்ட பிரச்சினைகளை ஒட்டுமொத்தமாக தீர்த்து வைத்தாலும் திகம்பரத்தின் மனைவி ஓடிப்போய் இருபது வருடங்களாவது இருக்கும் என்பார்கள். மாந்திரீக வேலைக்கு ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்தியிருந்தார். ஏதோ ஒருநாளில் இருவரும் திருமணம் செய்ததாக அறியப்பட்டது. குழந்தைகள் இல்லை. எனக்கு இது கடைசி ஜென்மம் என்பதால் பிள்ளைப் பேறுக்கு வாய்ப்பில்லை என அவரே அறிவித்துக் கொண்டதாக ஒரு தகவல். பங்காளி சண்டையில் இளைய பங்காளி ஒருவன் திகம்பரத்தின் விதையை சேதாரமில்லாமல் கைகளால் பிடுங்கி எறிந்து விட்டதாக சொல்வார்கள். விதை இல்லாமல் கூடுதல் எப்படி சாத்தியம் என தெருவுக்குள் ஒரு விவாதம் ஓடும். இதுபோன்ற வர்ணனைகளுக்கு சிறுவர்களையும் சேர்த்து கொள்ளும் பெருந்தன்மை எங்கள் தெரு பெரியவர்களுக்கு இருந்தது.

பார்சா பெரியம்மாவுடன் திகம்பரம் வீட்டுக்கு நடந்தோம். கூரை வேய்ந்த வீடு. பார்வையாளர்கள் அமர்வதற்கு வெளியே திண்ணை மாட்டு சாணம் போட்டு பூசப்பட்டிருக்கும். எங்களுக்கு முன்னால் ஒரு ஆணும் இரண்டு பெண்களும் அமர்ந்திருந்தார்கள். எங்களோடு சேர்த்து ஐந்து பேர். எவர் முகத்திலும் இயல்பு இல்லை. ஒரு எதிர்பார்ப்பு, பரிதவிப்பு, நம்பிக்கை என முகத்தில் மாறி மாறி ஏற்பட்ட உணர்வை அருகில் காட்டிக்கொள்ள முடியாமல் மனதிற்குள் பேசிக்கொண்டனர். திகம்பரம் உள்ளேதான் இருந்தார். சாம்பிராணி வாடை வெளியே வந்ததும் அங்கே இருந்த பெண்மணி அந்த புகையை தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டார். அதை பார்த்த பார்சா பெரியம்மா என்னிடம் அந்த காட்சியை சுட்டிக்காட்டி வேடிக்கையாக ஏதோ பேசினார். அன்றாட பரிச்சயமான அந்த சாம்பிராணியில் ஏதோ அமானுஷ்யம் புதைந்துள்ளதாக எனக்குப் பட்டது. எப்பொழுதும் பார்க்கும் திகம்பரத்தின் வீட்டின் உள்ளே இருந்து வெளிகாட்சிகளை பார்க்கும் பொழுது ஊரோடு துண்டிக்கப்பட்ட இடம் போல இருந்தது.

திகம்பரத்தின் இரண்டாம் மனைவி உடல் மெலிந்து காணப்பட்டார். சில வருடங்களுக்கு முன்பிருந்த புஷ்டியான வடிவத்தை தொலைத்து திகம்பரத்தின் வேலைக்காரி போல இருந்தார். அவள் யாரையும் ஏறிட்டு பார்க்கவேயில்லை. அப்படிப் பார்த்தால் ஏதேனும் ஒரு கேள்வியை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் அமைதியாக இருந்தாள். அவள் பார்க்கும் வேலை ஒன்றும் அவ்வளவு அத்தியாவசியமானதாகத் தோன்றவில்லை. பெரிய தொட்டிக்கு கேணியில் இருந்து தண்ணீர் இறைத்து அதை நிரப்பினாள். பின் குடத்தில் நிரப்பி அருகில் இருந்த செடிகளுக்கு அதை கொட்டி நீர் பாயும் தோரணையை வெறித்துக் கொண்டிருந்தாள். பின் வீட்டு வாசலில் காவல் போல நின்று கொண்டாள். பார்சா பெரியம்மாவுக்கு அவள் ஒரு வேடிக்கையாகத் தெரிந்தாள். அவள் தளர்ந்த மார்பு பற்றியும், புட்டம் குறித்து என்னிடம் பேசியது எனக்கு சங்கடத்தை உண்டு பண்ணியது. பின் தவறை உணர்ந்தது போல, “நீ பெரியவனா ஆனதும் பொண்ணுங்களை இதை வச்சு பரிகாசம் பண்ணக் கூடாது. பாவம் அதுங்களுக்கு என்ன நோவோ? பொம்பள பொறப்பு கெடுகெட்ட பொழப்பு” என பார்சா பெரியம்மா தனது கருத்தை வேறுவழியில் திருப்பினாள்.

சூரியன் முற்றிலும் மறைந்தது. இன்னும் சில ஆண்களும் பெண்களும் வரத் தொடங்கியிருந்தார்கள். சூரிய ஒளி மறைந்தும் மறையாமலும் மசண்டையாக இருக்கும் நேரத்தில்தான் திகம்பரத்தின் குறி பேசும் நேரம். வந்தவர்களிடையே பெரிய அமைதி. திகம்பரம் அவரே உள்ளிருந்து பெயரை அழைப்பார். அதுவரை யாரும் உள்ளே செல்லக் கூடாது. மங்கிய நேரம் இருளத் தொடங்கியது. “கனகாம்பரம்” என திகம்பரத்தின் குரல் ஒலித்தது. எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஒரு வாடாமல்லி புடவை பெண் எழுந்து, “என்னோட பெயர் கனக லெட்சுமி” என்றார். திகம்பரத்தின் மனைவிதான் ஆட்களை உள்ளே அனுப்பும் வேலையைச் செய்பவள் போல வாயிலில் நின்றாள். அந்த பெண்ணின் பேச்சு அவளுக்கு அதிருப்தியைக் கொடுத்தது. வாயிலில் நின்ற மனைவி வீட்டுக்கு உள்ளே சென்று பின் அதே இடத்தில் நின்றாள். இப்போது திகம்பரம் குரல், “நீதான், உள்ள வா!” அந்தப் பெண் மிகுந்த பயத்தில் அருகில் இருந்த இன்னொரு பெண்ணை துணைக்கு அழைத்துச் சென்றார்.

வெகுநேரமாகியும் உள்ளே நடக்கும் எந்த விஷயமும் வெளியே தெரியவில்லை. அவர்கள் உள்ளே சென்றதும் திகம்பரத்தின் மனைவிக்கு கதவைச் சாத்திக் கொள்ளும் வேலை. இந்த கதவைச் சாத்துவதற்கு, திறப்பதற்கும் ஒரு பிரத்யோகமான பெண் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது குறித்து திகம்பரத்தை புதிதாகப் பார்க்க வந்த பெண்களிடம் நிறைய சந்தேகங்கள் இருந்தது என்றாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

திடீரென உள்ளே திகம்பரம் அலறும் சப்தம் கேட்டது. வெளியே இருந்தவர்கள் முகத்தில் பயம் நிலவினாலும் இவையனைத்தும் நன்மைக்கே என்பது போல உள்ளுக்குள் வேறு பிரார்த்தனைகளில் இருந்தார்கள். திகம்பரத்தின் மேலே சாமி வந்ததாகச் சொல்வார்கள். சற்று நேரத்தில் உள்ளே சென்ற பெண்கள் வெளியே வந்தார்கள். அவர்களை விட அவர்களின் ஒப்பனைக்கு ஏதேனும் நிகழ்ந்திருகிறதா என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஏதும் குலையாமல் இருந்தது குறித்த நிம்மதி வெளியே கூடியிருந்த நடுவயது பெண்களுக்கு ஒரு பாதுகாப்புணர்வைக் கொடுத்தது. இத்தனைக்கும் உள்ளே சென்ற பெண்ணுக்கு வயது அறுபத்துக்கு மேலேதான் இருக்கும்.

அடுத்த ஐந்து நிமிடங்கள் பேரமைதி நிலவியது. மருத்துமனை போல டோக்கன் முறை கிடையாது. பெயர் கூப்பிடும் பொழுது போகவேண்டும். இரவு பதினோரு மணிவரை குறி சொல்லப்படும். பார்சா பெரியம்மாவுக்கு தனது பெயர் என்ன மாதிரியான உச்சரிப்பில் வெளிப்படும் என்பதை தனக்குதானே சொல்லி பார்த்து பதட்டமடைந்து கொண்டார். அதன் விளைவாக சிறுநீர் வருவதாக என்னிடமே புலம்பியது எனக்கு வேடிக்கையாக இருந்தது. ஒருகட்டத்தில் திகம்பரத்தின் மனைவியிடம் கேட்டார். வீட்டின் பக்கவாட்டில் இரண்டு வாழை மரங்களுக்கு மத்தியில் அப்பொழுது அப்பிய இருள் சூழ்ந்திருந்தது. திகம்பரம் மனைவி பார்சா பெரியம்மாவை அங்குதான் போகச் சொன்னாள். வந்த இடத்தில் இது என்ன சோதனை என்று பார்சா பெரியம்மா என்னை அழைத்து துணைக்கு வெகு தூரத்தில் நிற்கச் சொன்னார். பார்சா பெரியம்மா இருட்டுக்குள் மெதுவாக உள்ளே சென்றார். அந்த இருட்டு பார்சா பெரியம்மாவை உள்வாங்கிய விதம் எனக்கு பயத்தை கொடுத்தது. வீட்டுக்கு தனியாகச் செல்வதைப் பற்றிய யோசனைகள் வந்தது. சில நிமிடங்களில் பெரியம்மா சேலையை உதறிக்கொண்டு சாவகாசமாக வெளியே வந்தார். முகத்தில் மெல்லிய சிரிப்பு. பெரியம்மாவின் மூக்குத்தி எதிலோ பட்டு எதிரொலித்தது.

மீண்டும் உள்ளே சென்று அமர்ந்தோம். அருகில் இருப்பவர்களிடம் தன் பெயரைச் சொல்லி அழைத்தாரா எனக் கேட்டு உறுதிப்படுத்தி விட்டு உட்கார்ந்தார். பார்சா பெரியம்மா ஒரே இடத்தில் அமர்ந்தால் உறங்கி விடுவார். இங்கும் கண்களை சொருக நிகழ்த்திய பொழுது திகம்பரத்தின் குரல், “பார்சா” என ஒலித்தது. தன் பெயரை சரியாகச் சொல்லியதால் பார்சா பெரியம்மா இன்னும் பதட்டமானார். என் கைகளை இறுக்கமாக அழைத்து உள்ளே சென்றார்.

மெல்லிய இருட்டுக்குள் திகம்பரம் அமர்ந்திருந்தார். அந்த ஒளியில் திகம்பரத்தின் முகம் அரை மங்கலாய் தெரிந்தது. அவர் அமர்ந்திருந்த புலித்தோல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது சம்பந்தமாக இந்தியாவில் தேசிய விலங்கு புலியா என்ற பாட சந்தேகமும் எழுந்து அடங்கியது.  அறையில் எதிர்பார்த்த அமானுஷ்யம் நிறைந்திருந்தாலும் நான் அச்சப்பட அவசியமில்லாமல் இருந்தது. திகம்பரம் என்னைப் பார்த்துச் சிரித்தார். ஏற்கெனவே அறிமுகமான அந்த சிரிப்பு அந்த அறை சூழலில் புதிதாய் இருந்தது.

பார்சா பெரியம்மா அமைதியாக இருந்ததைப் பார்த்தால் திகம்பரத்திற்கு எல்லா விபரமும் ஏற்கனவே சொல்லப்பட்டது போல இருந்தது. இருந்தாலும் திகம்பரம் ஆரம்பித்தார், “இது ஆஞ்சநேயர் வீடு. பெண்கள் பேசக்கூடாது. நான் பேசுறதுக்கும் தலையை மட்டும் ஆட்டுனா போதும்!” என்றதைப் பார்சா பெரியம்மா அப்பொழுதே அதைப் பின்பற்றத் தொடங்கினார். திகம்பரத்தின் கேள்விகள் ஆம், இல்லைக்கு உட்பட்டதாகவே இருந்தது. பார்சா பெரியம்மா வரிசையாக தலையை ஆட்டிக் கொண்டிருந்தார். சில கேள்விகளுகு மறுத்தார். அதே கேள்வியை வேறு தொனியில் கேட்டதற்கு பார்சா பெரியம்மா ஆம் என தலையாட்டியது இப்போது வரை புரியாத ஒன்று.

எல்லாம் முடிந்து முக்கியமான கட்டத்திற்கு வந்ததை திகம்பரம் வெளிக்காட்டிக் கொள்ள விரும்பினார். உடல்மொழியில் முன்பு போல நிதானமில்லை. என்னை பார்த்துச் சிரித்தவர் பின் மெதுவாய் ஊடுருவிப் பார்த்தார். பின் அதே பார்வை முறைப்பது போல இருக்கவே லேசாய் பயம் கூடியது. எங்களுக்கும் திகம்பரத்திற்கும் இடையே இடைவெளி குறைந்திருந்தது. மிஞ்சிய சிறு இடைவெளியில் ஒரு பலகை கட்டை வைக்கப்பட்டது. வெளியே ஏதோ வாகனத்தின் ஒலி கேட்டதும் பயம் அழுகையாக மாறுமே என்ற அச்சம் நிலவியது.

“வசந்தி” என மனைவியை அழைத்தார். அதற்கு காரணம் நாங்கள்தான் என்பது போல எங்களை வெறித்தார். வெளியே இல்லாத பயம் இப்பொழுது மேலும் கூடியது. என் முதுகில் கை வைத்த பார்சா பெரியம்மா மெதுவாய் தடவிக்கொடுத்து அடுத்த கட்டத்திற்கு தயார்படுத்தினார். வலது திசையை நோக்கிச் சென்ற திகம்பரத்தின் கழுத்து மொழியை அறிந்த மனைவி அதே திசையில் சென்று ஒரு மரப்பெட்டியை கொண்டு எங்கள் மையத்தில் வைத்தார்.

அந்த பெட்டியை வேலையே இல்லாத ஒரு ஆசாரி இழைத்து உருவாகியிருக்க வேண்டும் என்பது போல அதில் அவ்வளவு அற்புதங்கள் இருந்தது. யானை, பறவை, கடல், மலை என இவ்வுலக வாழ்வின் உன்னதமான யாவும் ஒரே வேலைப்பாட்டில் இருந்தது. அதை திகம்பரம் திறக்க முடிவு செய்து விட்டாலும் திறக்கும் பொழுது நாங்கள் வியக்கப்போகும் தருணத்தை எதிர்பார்த்தவராக இருந்தார். உள்ளே ஒரு பட்டுத்துணியில் ஒன்றை மூடி வைத்திருந்தார். திறக்கும்பொழுது அதன் எதிரே ஆஞ்சநேயர் படம். முப்பது நோன்பு வைத்து ஹஜ் செல்வதற்கு பாஸ்போர்ட் எடுத்து வைத்திருக்கும் பார்சா பெரியம்மா தன்னியல்பாக, “அஞ்சிநேய சாமி” என கையெடுத்துக் கும்பிட்டார். பேசக்கூடாது எனும் விதியை மீறினாலும் திகம்பரம் அதை பெருமிதமாக நினைத்திருக்க வேண்டும். அவர் ஏதும் சொல்லவில்லை. பட்டுத் துணியில் ஒரு வெற்றிலையை எடுத்து பலகையில் வைத்தார். மீண்டும் பட்டுத்துணியை நீக்கி ஒரு சுண்ணாம்பு டப்பா அளவில் ஒன்றை எடுத்து வைத்தார். வெற்றிலை, சுண்ணாம்பு டப்பா இதன் மையத்துக்கு நடுவே ஒரு அகல் விளக்கை வைத்தார்.

எல்லாம் தயாராக இருந்த பொழுது ஒரு அறிவியல் விஞ்ஞானி போல இனி நிகழ்ந்தபோகும் அற்புதத்தை செயல் விளக்கம் போலச் சொன்னார். “தம்பி, இப்ப மை தடவபோறேன். வெத்தலைல என்ன தெரியுதோ அதை அப்படியே சொல்லணும். எதுவும் தெரியலைன்னா இந்த அகல் விளக்கை பாத்துட்டு வெத்தலையை பாக்கணும். புரியுதா?” என நிதானமாக விளக்கம் கொடுத்தார். பயம் முழுவதும் விலகாதவனாக சரி என தலையாட்டினேன். பின் பார்சா பெரியம்மாவுக்கு திகம்பரம் ஒரு சலுகை ஒன்றை அறிவித்தார். அதாவது நான் வெற்றிலை காட்சியை பார்க்கும் பொழுது ஏதாவது சந்தேகம் என்றால் என்னிடம் கேட்கலாம் என சொன்னார். பின் இந்த விதியை மீறப் போவதற்காக ஆஞ்சநேயரிடம் தனியாக ஒரு மன்னிப்பை கோரி வைத்தார்.

அகல் விளக்கை உற்றுப் பார்த்தேன். திகம்பரம் அந்த சுண்ணாம்பு டப்பாவை திறந்து கருப்பு தைலம் போல ஒன்றை விரலில் எடுத்து வெற்றிலையில் வட்டமாகத் தடவினார். என் கண்கள் அகல் விளக்கை விட்டு அகலவில்லை. திகம்பரம் என்னைப் பார்த்து, “அஞ்சிநேயா, அஞ்சிநேயான்னு சொல்லிட்டே இரு!” என்றார். நானும் அந்த வார்த்தையை ஜெபித்துக்கொண்டே வணக்கத்துக்குரிய அல்லாஹ்விடம் இதற்கு என்ன தண்டனை என்பதை மதரஸா உஸ்தாபி விளக்கிய யோசனையைத் தவிர்க்க நினைத்தேன்.

அந்த வயதில் சூரிய ஒளியைப் பார்த்துவிட்டு கண்ணை மூடிக்கொள்வேன். அப்பொழுது எழும் இருட்டு சித்திரங்கள் நிறைய தோன்றும். மனதிற்குள் என்ன தேவையோ அதை நிறுவிக்கொண்டால் அதுவே காரிருள் சித்திரமாக உருவெடுக்கும். அப்படித்தான் அகல் விளக்கைப் பார்த்துவிட்டு வெற்றிலையைப் பார்த்தேன். அதுவரை அமைதியாக இருந்த திகம்பரம் தலையை சிலுப்பிக் கொண்டார். பின் நாக்கை மடக்கி, “நாசர் தெரியிறானா?” என்றார். இல்லை என்றேன். “இப்ப பாரு!” என அகல் விளக்கின் திரியை இன்னும் பெரிதுபடுத்தி எரிய விட்டார். அருகில் பார்சா பெரியம்மா இருப்பது போலவே இல்லை. நானும் திகம்பரமும் மட்டும் இருப்பதாய் தோன்றிய உணர்வே உடல் ஆட போதுமானதாய் இருந்தது. “இப்ப ஆஞ்சநேயர் தெரியிறாரா?” என்றார். அகல் விளக்கில் இருந்து பார்வையை அகற்றி வெற்றிலையின் கருவட்டத்தைப் பார்த்தேன். ஆஞ்சநேயர் ஒரு மலையை பெயர்த்து எடுத்து பறந்து கொண்டிருப்பது தெரிந்தது. “ஆமா” என்றேன். இப்ப நாசர் தெரியிறானா?” என்றார். பெரிய கும்மிருட்டுல் ஒரு உருவம் அசைந்தது போல இருந்தது. நாசர் அண்ணன் முகத்தை மனதில் யோசித்துப் பார்த்தேன். நடிகர் நாசர் போலவே நீண்ட நாசி. அந்த உருவம் நாசர் அண்ணனைப் போலவே இருந்தது. அருகில் பார்சா பெரியம்மா குரல் கேட்டது, “ஊதா கலர் சட்ட போட்ருக்கானா?” என்றார். அதே கேள்வியை திகம்பரமும் அதட்டி கேட்டார். வெற்றிலை தென்படும் ரேகைகள் கருப்பாக இருந்த நேரத்தில் “கத்திரிப்பூ ஊதா சட்டை” என்றேன். திகம்பரம் பார்சா பெரியம்மாவை அதட்டினார். அதற்கு பார்சா பெரியம்மா, “ஆமா, அது கத்திரிப்பூ கலர்” என்றார். “நாசர், நகையை எடுக்குறானா பாரு!” என கிடுகு கொட்டகை அதிர கத்தினார் திகம்பரம். பின் மீண்டும், “நகையை எடுக்குறது ஒருத்தரா? ரெண்டு பேரா?” என திகம்பரம் கத்திக்கொண்டிருக்கும் போதே பார்சா பெரியம்மா, “ரெண்டாவது ஆள். அவன் பொண்டாட்டி!” என்றார். திகம்பரம் கோபம் கொள்வார் என நினைத்தேன். ஆனால், அதை ஏற்றுக்கொண்டது போல் அவர் தொனியில் அதே கேள்வியைக் கேட்டார். மீண்டும் அகல் விளக்கை பார்த்துவிட்டு கருப்பு வட்டத்தைப் பார்த்தேன். நகையை எடுத்து விட்டு இருவர் நின்று சிரிப்பதாய் தோன்றிய காட்சியை அப்படியே விளக்கினேன். பார்சா பெரியம்மா, “அந்த தேவிடியா முண்டதான் சிரிச்சிருப்பா!” என்று தன் மருமகளை சூழல் மறந்து பேசினாள். திகம்பரம் அவசரமாக விளக்கை அணைத்து என் கண்களை மூடிக்கொள்ளச் சொன்னார். “நீ இந்தம்மாவோட மகன் நாசரைதானே பாத்த?” என்றார். நான் ஆம் என தலையாட்டினேன். திகம்பரம் பார்சா பெரியம்மாவிடம் “பயல, கண்ணை திறக்காம வீட்டுக்கு கொண்டு போயிருங்க!” என்ற வார்த்தை தவிர்த்து ஏதும் கேட்கவில்லை. பின் கண் முழிக்கும் போது வீட்டில் இருந்தேன். அம்மா என் தலையை தடவிக்கொண்டு அருகில் அமர்ந்திருந்தார். பார்சா பெரியம்மாவை தேடினேன், இல்லை! அம்மாவிடம் கேட்டேன். ஊருக்குப் போய்விட்டதாகச் சொன்னார்.

பார்சா பெரியம்மாவின் மகள் கல்யாணத்திற்கு இங்கிருந்து யாரும் செல்லவில்லை. அதிலிருந்து பார்சா பெரியம்மாவும் இங்கு வருவதில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்புதான் பார்சா பெரியம்மா மவுத்தான தகவல் எங்களுக்கு கிடைத்தது. இப்போது நாசர் அண்ணன் மவுத் செய்தி. திகம்பரத்தின் வீட்டைக் கடந்துதான் செல்ல வேண்டும். பழைய கூரை வேயப்பட்ட இடம் தற்போது கான்கிரீட் கட்டிடம். அவர் வீட்டுக்கு முன் படர்ந்து கிடந்த வெற்றிலையைப் பார்த்தபடி அமைதியாக கடந்து சென்றேன். நாசர் அண்ணனின் உடல் கூராய்வு முடிந்து வீட்டுக்குச் செல்வதாக ஒரு அலைபேசி தகவலை தூரத்து உறவினர் பகிர்ந்து கொண்டார். திகம்பரத்திற்கு பிறகு அவர் மனைவிதான் இப்பொழுது குறி சொல்கிறார்…!

rabeek1986@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button