ப.மதியழகன் கவிதைகள்

நீலம்
எனது விடியல்கள்
வேதனை அளிக்கக்கூடியவை
நிரந்தரமின்மையின் அவலம்
தெரிய வருகிறது
ஒவ்வொரு நொடியிலும்
உரையாடலை எங்கு ஆரம்பிப்பது
எங்கு முடிப்பது என்று
தெரியவில்லை எனக்கு
உங்கள் கருணையை
கண்ணீரோடு நிறுத்திக் கொள்ளுங்கள்
மறக்க வேண்டிய கடந்தகாலத்தை
ஒருநாளும் நினைவுபடுத்தாதீர்கள்
விடியும் வரை
இதமாகத்தான் இருந்தது
உனது மடியில்
தலை சாய்த்திருந்தது
ஒவ்வொரு இழப்பும்
நிரந்தரமின்மையின் அடையாளத்தை
எனக்கு உணர்த்திக்
கொண்டேயுள்ளது
இருண்ட வீட்டில்
மின்மினியின் வெளிச்சத்தைக்
கூட என்னால் காண முடியவில்லை
தோல்விகளுக்கும், பின்வாங்கல்களுக்கும்
இடையே நீதான்
என்னை ஆசிர்வதித்துக் கொண்டிருந்தாய்
உனது பெயரை
உச்சரிக்கும் போதெல்லாம்
இறைவனின் நாமங்களை
பக்தன் உச்சரிப்பது போல்
மெய்சிலிர்த்துவிடுகிறது எனக்கு
காதலை நான்
தெரியப்படுத்திய கணமும்
நீ ஏற்றுக்கொண்ட கணமும்
என் வாழ்க்கையில் நான்
சந்தித்திராத மகத்தான தருணங்கள்
பிரிவு ஒன்றுதான் காதலைப்
புனிதப்படுத்துகிறது
இத்தனை வருடங்களில்
எதேச்சையாக சந்தித்துக்கொள்ளும்
வாய்ப்பு கூட ஏனோ
நமக்கு அமைந்ததில்லை
ப்ரியத்தின் நிமித்தம்
நான் அவள்
கன்னத்தில் இட்ட
ஒவ்வொரு முத்தங்களும்
இப்பொழுது என்னைச் சுற்றிலும்
பட்டாம்பூச்சிகளாய்
பறந்து கொண்டிருக்கின்றன.
*
எனது ப்ரியத்தை தெரியப்படுத்தும்
தருணத்திற்காகக் காத்திருக்கிறேன்
சந்தையின் இரைச்சலில்
வைத்து அதைத்
தெரியப்படுத்த நான்
விரும்பவில்லை
மக்கள் நடமாட்டம் மிகுந்த
பூங்காவில் வைத்து
அதைத் தெரியப்படுத்த
எனக்கு விருப்பமில்லை
போக்குவரத்து நெரிசல்
மிகுந்த சாலையில்
இடது பக்கமுள்ள
நடைபாதையில் வைத்து
தெரியப்படுத்தினால்
உனக்கு புரியவைப்பதற்கு
நான் நடித்துதான்
காட்டவேண்டும்
தண்டவாளத்தின் மத்தியில்
நடந்துகொண்டே அதைத்
தெரியப்படுத்தினால்
ரயில் வருவதைப் போல்
பீதிதான் உண்டாகும்
வேலையில் மூழ்கியிருக்கும்
அலுவலகத்தில் வைத்து
அதைத் தெரியப்படுத்தினால்
நான்கு பேர் என்னவென்று
கேட்கத்தான் செய்வார்கள்
ஆகாயத்தில் வைத்து
அதைத் தெரியப்படுத்தினால்
கடவுள் அதைக் கேட்டுவிடக்கூடும்
கடற்கரையில் வைத்து
அதைத் தெரியப்படுத்தினால்
இது அலைகளின்
சிறுபிள்ளை விளையாட்டு
என நீ நினைத்துவிடக்கூடும்
துக்க வீட்டில் வைத்து
அதைத் தெரியப்படுத்தினால்
ஒப்பாரிகளுக்கு இடையே
அதை நீ மறந்துவிடக்கூடும்
கோவிலில் வைத்து
அதைச் சொன்னால்
சாமிக் குத்தமாகிவிடும்
எல்லாவிடத்திலும் இரு கண்கள்
என்னை கவனித்துக்
கொண்டிருந்தால் நாங்கள்
எங்களின் ப்ரியத்தை
வேறெப்படி வெளிப்படுத்துவது
இப்படியாகத்தான்
மரணத்தின் எல்லையற்ற
வானம் எனக்கு
காதலை போதிக்கின்றது.
**
அன்பு
பலவீனங்களைப் பொறுத்துக்கொள்ளும்
ஒவ்வொரு விடியலிலும்
நான் என்னைக் கேட்டுக்கொள்கிறேன்
இன்று யாரை நான்
சார்ந்து இருக்கப் போகிறேன்
என்று
எனது கண்ணீர்
கருணையின் வெளிப்பாடல்ல
இயலாமையின் வெளிப்பாடு
சாலையில் மனிதர்கள்
கடந்து செல்லும்போது
நினைத்துக் கொள்வேன்
எப்படி இவர்களால்
சிரிக்க முடிகிறதென்று
இதோ இந்த அலைகளைக்
கடந்துவிட்டால்
பேரமைதிதான்
கடற்கரை மணலில்
கிளிஞ்சல்கள் தட்டுப்படும்போதெல்லாம்
நினைவலைகள் பால்யத்துக்கு
சென்று திரும்புகின்றன
இந்த இரவில்
நட்சத்திரங்களும் நானும்
மட்டும்தான் இருக்கிறோம்
நிலவு எங்கோ
தொலைந்து போயிருந்தது
ஒரு அறையிலிருந்து
இருளை விரட்டவேண்டுமானால்
முதலில் தீக்குச்சியைப்
பற்ற வையுங்கள்
உனது நினைவுகளிருக்க
சிலுவை கூட எனக்கு
சுமையாய்த் தெரியவில்லை
அடிக்கடி என்னுள்
இந்தக் கேள்வி எழுகிறது
உலகம் நினைப்பது போல
றெக்கைகள் மட்டுமா
சுதந்திரத்தின் சின்னம்?
உலகத்தின் ஒவ்வொரு நிகழ்வும்
நிரந்தரமின்மையை உணர்த்தினாலும்
நாம் அதைத் திரை போட்டு
மறைத்துவிடுகிறோம்
ஆகாசம் நீலநிறமென்று
அண்ணாந்து பார்த்தால்
தெரியாதா?
*