நிலவு வரையிலும்
நீரைக்
கொத்திக் கொத்தித்
தின்னும்
ஒரு குருவி
சிறு சத்தம் கேட்டு
எங்கிருந்தோ வந்தது போல்
அங்கிருந்து பறந்தது
தொடக்கத்தை வந்த பாதைகள் மறைந்திருப்பது போல்
வானத்தை விளக்க முயலும் நீர் பள்ளத்தில்
சிறு சத்தம்
துளிகளென
விழுந்து முடிந்தது
பிறகு
நீரில் நிழல்
நிலவு வரையிலும்
அசையாமல்
இருந்தது.
*
சாத்தியங்கள்
திறந்த மலராய்
தீர்க்க ஆகாயமாய்
ஒரு துளி
புல் நுனியில் அமர்ந்திருக்க
இது இப்படித்தான் நிகழ்ந்திருக்குமென்று
காட்சிகள் மீது எத்தனையோ சாத்தியங்கள் அடுக்கி வைத்தாய்
கிளைகள் மலரின் வேர்களென்றாய்
கானகத்தை மௌனமென்றாய்
கூடுதலாகச் சாத்தியங்களின் விடயத்தைப் பற்றியே
பேசிக் கொண்டிருந்தாய்
ஒவ்வொன்றும்
நதியில் விழுந்த எறும்புகள் போல்
ஆயிரம் கதைகள் கடந்து
இலையைக் காணும்.
*
நிழலுருவம்
பின்தொடரும் பல்லிகளுக்கும்
வலையில் காத்திருக்கும் சிலந்திகளுக்கும்
இனி பயந்தாக வேண்டும்
மனசாட்சியின் நிழலுருவம் வீடென விரிந்துவிட்டது
நானொரு பூச்சிதான்
சில நேரங்களில்
எறும்பாகவும் மிதிப்படுகிறேன்.
*
ஆகுதல்
ஒரு மலரைக் கூட
தொடமுடியாத ஒளி இருந்தது
அதன் வெளிச்சம் குவிந்து குவிந்து
மலர் போலவே
மூடிக்கொண்டது
இரவு வந்ததும்
ஒவ்வொரு இதழாகத் திறக்க
நிலவானது.



