
இயற்கையின் விதி
வட்டமடிக்கவில்லை
வானுயரப் பறக்கவில்லை
சிறகை விரிக்கவில்லை
சிறு அசைவு தன்னிலில்லை
சலனமற்ற நீர்ப்பரப்பின்
சிறு கல்லில் தவம் புரியும்
வெண்மை வெளுத்தார் போல்
மேனியெங்கும் வண்ணம் பூசி
நீண்ட அலகை நீருக்கு மேல் நிறுத்தி
நிசப்தமாய் நின்று கொண்டிருக்கும் ஒரு பறவை.
தங்க நிறத்தை தடவி எடுத்தார் போல்
அங்கமெல்லாம் தங்கம் பூசி
வெள்ளை வால் துடுப்பை
விளையாட்டுக்குக் கூட ஆட்டாமல்
இமைமயிர் விட்ட வாய் மொட்டை
இம்மியளவும் அசைக்காமல்
ஆடாமல், அசையாமல்
கற்குவியலினுள்ளே கவனமாய்
அங்கனம் தாவ இங்கனம் தவிக்கும் ஒரு மீன்.
உயிர் பிழைக்க ஒன்றுமாய்,
உயிர் வாழ ஒன்றுமாய்
காத்திருப்பை கவனத்துடன் நீட்டிக் கொண்டிருக்கின்றன.
எது நடந்தாலும்
இயற்கையின் விதியில்
இரண்டுமே இயல்பானதுதான்.
*
காற்றை போல வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
நீர், நிலமென மடிந்திருந்தேன்
பூமிப் பந்தின் மேல்
ஒரு திரட்சி, ஒரு மென்மை, ஒரு இலகுவென
காற்றைப் போல மடைமாற்றம் நுட்பம்
காதலுக்கே உரித்தானதுதான்
கடுங்குளிரில் மூடுபனியாகும் காற்றைப் போல,
ஆழ்நினைவுகளில் புதைந்து கொண்டிருக்கிறேன்.
எந்த விடியலும் என் உறைபனியை
உருக்குவதில்லை இப்போது
காற்றில் மிதந்து கொண்டிருக்கும் மூடுபனியென
கீழுக்கும், மேலுக்குமிடையே அலைக்கழிந்தபடி
மரணத்தை இடது கையிலும், வாழ்வை வலது கையிலும்
மடை மாற்றிக்கொண்டு நேர்த்தியாய்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன் வாழ்வை…
*
வறுமை
அரளிப் பூக்களால் நிரம்பி இருக்கிறது பாத்திரம்
வீட்டின் முற்றத்திலேயே மாமரம்
மாவிலை தோரணங்களுக்கு பஞ்சமேயில்லை
குலையற்ற வாழை மரத்தின் இலைகள்
பறிப்பதற்கும் படையல் இடுவதற்கும் தயாராய் இருக்கின்றன
மழைக்காலமென்பதால் பச்சைப் பசேலென
குப்பைமேனி படர்ந்து இருக்கிறது புழக்கடையில்
நனைந்திடாத விறகுகள் கூட தயாராக இருக்கின்றன,
அடுப்பு எரிப்பதற்கு
இருந்தும் எதையிடுவது உலையில்?
அரிசி திணை பானையெல்லாம் கவிழ்ந்தபடியிருக்க
எதை இடுவது உலையில்?
வறுமை பிடித்து இருக்கிறது.
மழைக்காலமென்பதால்
வெட்ட வெளிச்சமாக யார் கண்களுக்கும்
அவ்வளவு வறுமையும் புலனாகவில்லை
என்பது மட்டுமே ஒரே ஆறுதல்…



