
இன்னொரு காதல் பூண்டாளின் கதை
பிரிவின் துயரொன்றை
விருப்பே இல்லாமல் வெகுநாட்களாய்
அடைகாத்துக் கொண்டிருப்பதாய்
உரைத்தாள் அவள்
மனநோய் என்றில்லை – ஆனால்
மனதின் நள்ளிரவு
அமைதிகளையெல்லாம்
தீயிட்டுக் கொளுத்தியே
அடைகாக்கிறேன் என்றாள்
அதன் கதகதப்பில்
எப்போதும் அவளின்
பிரிவு சூடேற்றப்படுவதாய் உரைத்தாள்
ஏனெங்கேயும் இப்படி பிரிவை
சிலுவையில் சுமந்து கிடக்கறாய்
என்றெழுப்பினான் அவன்
பிரிவை தான் சுமப்பதில்லை
பிரிவை தான் வேண்டுவதுமில்லை
பிரிவுதான் அவளை விடுவதில்லை என்றாள்
அன்பின் கரமொன்றை அவள் கண்கள் தேடிக் கொண்டிருந்தன
அவள் உதடுகள்
அவளை அறியாமலே மன்றாடிக் கொண்டிருந்தன
இதுதான் சமயமென்றில்லை
இதை அறிய வைத்ததும்
அப்பிரிவின் கனல் காற்றென்றுணர்ந்தான்
அன்பின் தீக்குச்சி ஒன்றை
பற்றவைத்தே பரிசளித்தான்
அவள் பற்றி எரியும் காட்டுத்தீயானாள்
அனல் எங்கும் பரவியது
உன்மத்தம் உணர்வதாய் உரைத்தாள் அவள்
பிரிவை அடைகாக்கும் அவள்
இன்னொரு முறை காதல் பூண்டாள்
அன்பின் வேர் ஒன்று
அவர்களிடையே
புதிதாய் வேறொரு
காட்டைப் பல்கிப் பெருக்கியது
இனி இருவரில் யாரேனும் ஒருவர்
பிரிவென்ற கனியைத்
தேடித் திண்ணாதிருந்தால் நலம்.
*
அகதியாய் ஒரு பூனை
பார்த்ததும் பிடித்துப்போன
ஒரு சிறிய பூனை
ஒன்றை எடுத்து வளர்த்தாள்
அன்பைக் கொண்டு
அடிமை செய்தாள்
அதிக ஓசையே இல்லாமல்
எழுப்பிய ஒரு சமிக்கையால்
எங்கிருந்தாலும் மடி மீது
வந்தமரும் வித்தையை
கற்றுக்கொடுத்தாள்
மார்புச் சூட்டையும்
மயிர் கோதும் மயக்கத்தையும்
ஒரு போதை மருந்தாய்
தினம் கொடுத்தே வளர்த்தாள்
வேறு யாரிடமும் இந்த
அன்பின் போதையை
இளம் சூட்டினை
தான் வளர்க்கும் பூனை
தவறியேனும்
பெற்று விடாமல்
பார்த்துக்கொண்டாள்
பின்நாளில்
ஏதொரு காரணமும் சொல்லாது
வலியென்ற துயரப் பாதையில்
எங்கோ ஓடி மறைந்தாள்
அன்பின் மதில் மீது
அதன் வாழ்விடத்திலேயே
அகதியாய் வாழ்கிறது
அப்பூனை – இன்றும்
அவள் சமிக்கை
வரும் வழி நோக்கி.
*
இளைப்பாறுதல்
என்னிலிருந்து
எல்லோரும்
இளைப்பாறுதுல் பெற்றுத்
திரும்பிக் கொண்டிருக்க
நீ மட்டுமே
என் கிளைகளில்
கூடிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறாய்
தனித்த என் பொழுதுகளோ
உன் பெருமூச்சொன்றின்
தழல் வந்து மோதவே
இளைப்பாறுதல் அடைகின்றன எப்போதும்
நீ பிரிந்து செல்வாயின்
அன்றிலிருந்து
என் கிளைகளில்
என்றும் இலைகள் தங்காது.
*



