
மின்னுவதெல்லாம்…
கூரைக் கீற்றுகளின் இடுக்குகள்
வழியாய் நிலவு வந்து
தலைகாட்டிக் கொண்டிருக்கிறது
ஓரத்தில் அடுக்கி இருக்கும்
விதைநெல் மூட்டைகள்
பயமுறுத்துகின்றன
மழை பெய்துவிட்டது
ஏரோட்ட ஆளில்லை
நூறுநாள் வேலைகளே
கவர்ச்சியாய் இழுக்கின்றன
நாளை நான்கு பேர் வருவாரென
நம்புகிறான் அவனும்
வராவிட்டால் என்ன ஆகும்?
கவலைகள் கருமேகங்களாய்…
வித்துட்டு வாப்பான்னா
கேக்க மாட்டேங்கற
பிள்ளையின் புலம்பல் இது.
போன மகசூலுக்கு
வாங்கிய கடனில்
பத்தாயிரம் பாக்கி
இன்னும் நாலு நாளைக்கு
ஏரோட்ட விதை விதைக்க
ஒருக்களித்துப் படுத்திருக்கும்
மனைவியின் காதில் உள்ள
தோடும் மின்னிக் கொண்டிருக்கிறது.
*
சீக்கிரம் வா
உன்னில்தான் நான்
என்னைப் புதைத்து வைத்துள்ளேன்
நீ தந்த புன்னகைதான்
பனித்துளியாய் விழுந்து
என் மொட்டை மலரச் செய்கிறது
எப்பொழுதாவது வரும்
கோடைமழை போல
நீ வந்தாலும் உன் நினைவுகள்
வலை போட்டு என்னை
ஆக்கிரமித்துள்ளன
கனவுகளில் வந்தென்னைக்
கட்டியணைத்துச் செல்லும்
காதலனை நான்
யாரிடம் காட்டுவேன்?
உன்னிடத்தில் தீர்க்க வேண்டிய
கணக்குகள் பாக்கி உள்ளன
தேர் ஒலிக்கக் காத்திருக்கும்
காதலி போல் நான் உன்
காரொலிக்குக் காத்துள்ளேன்
சீக்கிரம் வா!



