இணைய இதழ் 119கவிதைகள்

இளையவன் சிவா கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

இருக்கும் குரலுக்கென
எப்போதும் பாடுவதில்லை
இருப்பின் உயிர்த்தலுக்காகவே
பாடலாக்குகிறது பறவை.

*

எண்ணத்தறி
இழையோட இழையோட
ஏறிக்கொண்டேயிருக்கும்
காதலாடைக்கு
எடையின் அளவு குறைவாகிறது
இழுக்கும் மனமோ
இறுகி இறுகி கனமாகிறது.

*

நீளும் பனிப்போரில்
சிக்கித் தவிக்கின்றன
நமக்கிடையே தூதெனப்
புறப்பட்ட சமாதானச் சொற்கள்
கொஞ்சம்
இளைப்பாறிவிட்டு
காதலோடு தொடர்வோம்
நமக்குள்ளேயே
விரிசலுக்கான தேடலுக்குள்.

*

உதிர்ந்த ஒற்றைச் சிறகை
பற்றிக்கொண்டு
வானத்தைத் தேடுகிறேன் வனமே கிடைத்தது.

*

கிழக்கென்ன
மேற்கென்ன
உதிக்கும் சூரியனுக்கு?
நாள் எனன
நேரம் என்ன
நம்பிக்கை மனதுக்கு?
பிறப்பென்ன
இறப்பென்ன
பிரியாத மொழிக்கு?
இன்பமென்ன
துன்பமென்ன
துறவறத்தின் தோள்களுக்கு?
இல்லையென்ன இருப்பதென்ன
கடவுளின் எல்லைக்கு?
நிலையாமை
நிலைக்குமட்டும்
வாழ்தலே வரம்தானே…

*
வனமதிர பிளிரும் யானையின்
கோலிக்குண்டு கண்களுக்குள்
பளபளக்கிறது
ஆசி வாங்க வரிசையில் நிற்கும்
சிறுமியின் கையிலிருக்கும்
ஒற்றை நாணயம்.

*

பூவின் மலர்தலை
நின்று ரசித்துச் செல்கிறது காற்று
தாலாட்டியமைக்குப் பரிசாக நறுமணத்தை
விதைக்கிறது பூ.

*

அவளுக்கும் எனக்குமான தூரத்தில்
மலர்களின் தூது நறுமணத்தையும்
இதயத்தின் தூது அன்பையும்
எண்ணத்தின் தூது மன்னித்தலையும்
விதைக்கின்றன
யார் முதல் அறுவடை என்பதில்
அதிகரிக்கிறது இடைவெளி.

*

வானம் கவிழ்த்த வாளிக்குள்
வெந்து தணிந்தது சூரியச்சோறு
வெப்பத்தைச் சமைத்த மழை.

*

இல்லத்துள் ஒடுங்கி
பயங்களுக்குள் வாழ்ந்து
இடைவெளிகளைப் பேணி
முகமூடிகளில் சுவாசித்து
பெருந்தொற்றைக் கடந்த பின்
ஆலயம் சென்றால்
வெளிவந்த கடவுள்
தரிசனம் தருகிறார் முகமூடியுடன்.

*

ilayavansiva@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button