
உச்சாணிக் கொம்பே
எனது நிறைவு
அதுவே
எனது செளகரியம்
அங்கிருந்து
மருண்டவாறே என் உலகைப் பார்க்கிறேன்
கீழே விழும் அபாயத்தோடும்
அங்குதான் நிம்மதியாக உணர்கிறேன்.
*
மறக்க நினைக்கும் நண்பன்
மறக்க நினைக்கும் நண்பனை
மறக்கவாவது
நினைக்க வேண்டியுள்ளது
என்ன செய்வது?
வெற்று நினைவாய் இருந்திருந்தால்
மறந்திருக்கலாம்
நிழலாய்த் தொடர்வதை
எங்கனம் மறக்க?
எல்லாப் போதும்
அந்தகாரங்களின் அரவணைப்பில்
மெல்லத் துயின்று
மறக்க நேரும்போது
ஒளியாய்ப் பட்டு
விழுந்தே தீர்வேன் என்கின்றன
நினைவாய் பிம்பங்கள்.
*
என் உணர்வலைகள்
கரை மோதி
கொண்டு செல்வதும்
கொண்டு சேர்ப்பதுமாய்
ஓயாமல் நிகழ்கின்றன
கவிதைகள்.
*
கடல் கறுத்துவிட்டது
கடல் தனக்கு விரித்த கூரை கறுத்துவிட்டது
நுரைநுரையாய் கரை புரளும்
அலை மட்டும்
ஓயாமல் வெளுக்கிறது கடலை.
*
வெறுமையை ஆய்ந்தறிந்த
இந்நாளில்
உங்கள் கதவையொட்டி மௌனித்திருக்கிறேன்
ஒரு புடைத்திறப்பினும்
ஓவென்று அழுதுவிடும்
ஆர்ப்புடன்.
*



