
முற்றுபெறாத கவிதையும், முடிந்துவிடுகிற பின்னிரவும்!
நிசப்தம் பரவுகின்ற
நீண்ட பின்னிரவு
அறையின் நுண் இடுக்கில்
எழுதி முடிக்காத கவிதையொன்று
காற்றை அழைத்துப் படபடக்கிறது
மௌனம் கலைக்கும்
அதன் பரிதவிப்பில்
உறக்கம் தொலைக்கிறது
ஆழ்மனம்
உரையாடல் தொடர்வதாய் எண்ணி
செவி மடித்து அமர்கிறது
என்னிடம் மீதமிருந்த காரிருள்
இப்படித்தான்
முற்றுபெறாத சில கவிதைகள்
எங்கேயும்
யாரும் பார்த்துவிடாத
நுண் இடுக்குகளில்
விழித்துக்கொள்கின்றன
பிறகென்ன
விடியும்வரை தொடர்கிறது
அப்பெருங்கதையாடல்!
பிரபஞ்சத்தின் வாசல்
கற்களோடு உளிகள்
உறவாடுகிற பொழுது
காற்றோடு
மௌன வெளிகள்
உடைபடுகின்றன
ஒவ்வொரு நிமிடமும்
திசைக் கூறுகளில்
சில்லுகளாய் சிதறுகிறது
நிசப்தம்
வடித்து வடித்து
செதுக்கப்படுகிறது
அரூபம்
இதுபோதும் என
முடித்துக்கொள்ளும்
உளிகளிடமிருந்து நழுவுகின்றன
கோவில் சிலைகள்
ஏனோ
கோவிலுக்கு வெளியே
மீண்டும் மீட்டப்படுகிறது
கடவுளின் இசை!
என் அப்பாவின் நிழல் பெரிது!
இன்று ஏனோ
வெயில் என்னை
வாஞ்சையின்றி வதைக்கிறது
இத்தனை வருடத்தில்
என் தேகத்தைச் சுடுகின்ற
முதல் உஷ்ணமிது
அதன் கூர் நகங்கள்
என்னைப் பலநூறு கூறுகளாய்
கொய்து எறிகின்றன
உடல் முழுக்க வலி
மனமெங்கிலும் பிணக்குழி
அதனுள் நாளொரு வீதம் விழுகிறது
என் சடலம்
தனிமையில்
மாரடித்து ஒப்பாரி வைக்கின்றன
விழிகள்
ஏன் இப்படியொரு தகனம்?
வெந்து வெந்து
தணிய மறுக்கிறது காலம்
எங்கும்
எங்கெங்கும் சமர் செய்கின்ற
பாழ் நிலம்தான்
இங்கே ஒவ்வொருமுறையும்
ஏதோவொரு உஷ்ணம்
சுடுகின்றபோதுதான்
அப்பாவின் நிழல் உரைக்கிறது
ஆம்
என் அப்பாவின் நிழல் பெரிது!



