
மாடித் தோட்டத்து மலர்ச் செடிகளுக்கு
நீர் ஊற்றச் சென்ற எனக்கு
திடீரென்று பெய்த சிறுமழை
சுகிர்தனாகி சுகமளித்தது
வீட்டு வாயிலருகே
தள்ளுவண்டியில் காய்கறி விற்றுக்கொண்டிருந்த
மூதாட்டி சபித்தாள்
‘சனியம் புடிச்ச மழை’.
*
காயங்களின் கதைகளில்
சயனைடைத் தெளித்து
போகிற உயிரிடம்
பேட்டியும் எடுத்துப்
போடுகிறார்கள் நாடகம்
நடிகர்களுக்கு தங்கத்திரை
ரசிகர்களுக்கு மூங்கில் யாத்திரை
உண்மை விளக்கெரிக்க
எத்தனை குடம் குருதி?
*
அன்பு இல் தோழா!
உனது கைகள் இட்ட விதையினால்
எனது வீடெங்கும் பூக்கள்
மலர்கள் கொய்து
விளையாட வந்திருக்கிறாயென
மனமுவந்து கதவு திறந்தேன்
நீயோ மலர்வளையங்கள் வேண்டி நிற்கிறாய்
உன் வறண்ட தொண்டைக்குள்
எப்படி பாய்ச்சுவேன்
தோட்டத்துத் தேனை?
*
எருக்கம் பூக்களின்
ஒற்றைக் கால்களை ஒடித்து
கழுத்தை நெறித்து
ஒரு மயானத்தை
மாலையக்கிக் கொண்டிருந்தாள் அம்மா
அவள் கைகளின் பிசுபிசுப்பும்
கசந்த வாடையும் கொமட்டச் செய்தது
சாமியாடித் தாத்தாவுக்கு
பூக்களின் மீது அப்படியென்ன வெறுப்போ!
எல்லாப் பிரச்சனைகளுக்கும்
மாலை போட்டால் சரியாகிவிடும்
என்கிறார்.
*
அந்த ஆறாத தழும்பின் மீது
அறுபதாவது முறையாக
நஞ்சு தடவிய கத்தி பாய்ச்சப்பட்டது
‘வலிக்கவில்லை’
கைப்பலகையுடன்
அறுநூறாவது முறையும்
எதிர்படுவேன்
வாழ்தல்
பிடித்திருக்கிறது.
*



