இணைய இதழ் 119சிறுகதைகள்

மாறும் முடிவுகள் – இரவி ரத்தினசபாபதி

சிறுகதை | வாசகசாலை

எட்டு மணிக்கு அக்கரை சிக்னல் போய்ச் சேர்ந்துவிடும் என்று சொன்னார்கள். மணி எட்டேகால். இப்போதுதான் பஸ் கேளம்பாக்கம் தாண்டியிருக்கிறது. மாமல்லபுரம் செங்கல்பட்டு கூட்டு ரோடு வரையிலும் டிரைவர் நல்ல வேகத்தில்தான் வந்தார். நிதானமான வேகம். பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்பட்டது என்ற விளம்பரத்திற்கு ஏற்ப வேகம் இருந்தது.

ஆனால், இப்போது, இதோ கேளம்பாக்கத்திலிருந்து தேர் போலத்தான் பஸ் நகர்ந்து கொண்டிருந்தது. கேளம்பாக்கத்தில் பயணிகளுக்கு அறிவிப்பு செய்தபடி, இறக்கிவிட வந்த பணியாளரிடம், ’தம்பி, அக்கரை சிக்னல், வரும்போது மறந்துவிடாத’ என்று கெஞ்சாத குறையாகச் சொன்னார் கதிர்.

’அதெல்லாம் எறக்கிவிட்டிருவோம் சார்’

இன்றைக்கு என்ன முகூர்த்த நாளா? இல்லையே. இருந்தாலும் சென்னை நோக்கிப் போகையில் இவ்வளவு கூட்டம் இருக்காதே. ஓ… அலுவலக வேலை முடிந்து எல்லோரும் வீடு திரும்பும் நேரமா? இருக்காது. ஏழரை மணிக்குள் ஓரளவு குறைந்துவிடுமே!

எனினும், மாயா ஜால் போல் ரிசார்ட்களுக்குப் போய் வரும் கூட்டம். மகாபலிபுரம் போய் திரும்பிவரும் சுற்றுலாப் பயணிகள், காதல் ஜோடிகளின் கூட்டம், வாரத்திற்கு இரண்டு நாள் கட்டாயம் வெளியில்தான் இரவு டின்னர் என்று வழக்கமாக்கிக் கொண்டுள்ள ஒரு பட்டாளம், எப்போதும் சாலையை நிரப்பியபடி செல்லும் விதவிதமான கார்கள். அதிவேகத்தில் செல்லும் இரு சக்கர வாகனங்கள்… அந்த இளைஞர்கள் பத்திரமாகப் போய்ச் சேர வேண்டும் என்ற ஆதங்கம் மனத்தை நிரப்புவதைத் தவிர்க்க முடியாது.

ஏற்கனவே, இரண்டு மூன்று முறை அனுபவித்தாகிவிட்டது. எட்டரை ஒன்பது மணிக்கெல்லாம், ஆட்டோ பிடித்தால், சேலையூருக்கு 500-க்கு குறைய மாட்டார்கள். ஓலா போட்டாலும் ஏறத்தாழ அதே ரேட்தான். ஆனால், வண்டியே கிடைக்காது. சுற்றிக் கொண்டே இருக்கும். நீண்ட நேரம் கழித்து ஒருவர் கிடைத்தால், அந்த ஆட்டோக்காரர், ஒலா காட்டும் கட்டணத்திற்கும் மேலே பணம் கேட்பார்.

தாம்பரம் செல்லும் பஸ், நாம் எதிர்த் திசையில் செல்லும் போதெல்லாம் கூட்டம் குறைவாக அந்த நிறுத்தத்தில் நிற்பதைப் பார்க்கும் போது கோபமாக வரும். நாம் காத்திருக்கும் போது வரவே வராது. வெறுத்துப் போய் சோழிங்கநல்லூர் சிக்னலுக்கு ஷேர் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்த பின்னர், ஒரு பஸ் நிறுத்தத்தில் நின்று, நகர்ந்து செல்லும். அப்போது, கூட்டத்தில் ஆட்டோவிலிருந்து இறங்க முடியாது.

அப்படி ஒரு முறை கதிர் இறங்கியும் பார்த்திருக்கிறார். ஆனால், படிக்கட்டுக்கு அருகில் செல்லும் போது டிரைவர் வண்டியை எடுத்துவிட்டார். திரும்பி, ஆட்டோவில் உட்காரும்போது, ஆட்டோ நிரம்பிவ்விட்டது.  ஓரமாக, வழுக்கி விழுந்துவிடுவது போலத்தான் உட்கார இடம் கிடைத்தது. இதையும் விட்டால், இன்னும் லேட்டாகி விடும் என்பதால், வேறு வழியின்றி அன்று அதிலேயே கதிர் செல்ல வேண்டியதாகிவிட்டது. ‘என்ன சார் பஸ் கிடைக்கலயா?’ என்ற கேலி கேள்வி வேறு.

வைத்தீஸ்வரன் கோவிலில் இந்த மீனா ட்ராவல்ஸ் பஸ்ஸை விட்டுவிடக் கூடாது என்பதற்காக, உறவினர் வீட்டிலிருந்து அவசர அவசரமாகப் புறப்பட்டு வந்தான். இன்னும் ஒரு மணி நேரம் இருந்திருந்தால், மைத்துனருக்கும் அவரது சம்பந்திக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஆனால், என்ன செய்வது? அந்த மீனா பஸ்ஸை விட்டால், ஒன்பது மணிக்குள் வீட்டுக்குப் போக வேறு வழி இல்லை. ஏழரைக்கு அக்கரை சிக்னல் என்றார்கள். அங்கிருந்து ஒன்றரை மணி நேரத்தில் வீடு.

அன்று அதிகாலையில்தான் மைத்துனர் வீட்டுக்குப்போய்ச் சேர்ந்தான். அங்கிருந்து காலை 7 மணிக்கு மேல் புறப்பட்டு, உறவினர் ஊருக்கு வரும்போது, மணி ஒன்பதை நெருங்கியிருந்தது. சடங்குகள் தொடங்கியிருந்தன. ஆனால், அது முடிவதற்குள் ஒரு மணி ஆகிவிட்டது. அதன்பின் ஊர்ப் பெரியவர்கள் கோவில் ஒன்றில் அமர்ந்து, சடங்கு காரியங்களைச் செய்தவர்களுக்குச் சம்பளம், உறவினர் மரியாதைகள் என்று ஒரு மணிநேரமாகிவிட்டது. ஆகா இவ்வளவு சீக்கிரம் முடிந்ததே என்று மனதிற்குள் நிம்மதி பெருமூச்சு விட்டார் அவர். எனினும் இன்றைக்கு பஸ்ஸைப் பிடிக்கப் போவதில்லை என்று தான் கதிர் நினைத்தார். வீட்டிற்குச் சென்று படையல் போட்டதும், வெட்கத்தை விட்டு முதல் பந்தியிலேயே உட்கார்ந்தார். பசிக்கு அமிர்தமாக இருந்தது உணவு.

சாப்பிட்டுக் கை கழுவி, மைத்துனரின் மருமகனிடம் சொல்லிக் கொண்டு, பந்தலை விட்டு வெளியில் வந்தபோது, மைத்துனரின் மகள், ’மாமா, இதை மாமி கிட்டக் கொடுங்க. இரண்டு முறையும் நீங்க வந்தது சந்தோஷம்’ என்றாள்.

’அத்தான், பத்திரமாக போய்ட்டு வாங்க. சரி எப்படி பஸ் ஸ்டாப்பிற்கு போறீங்க’ என்று கேட்டார் மைத்துனர்.

’வெங்கட்டாதான், கொண்டு வந்து விடுறேன்னு சொன்னான்’

அருகில் நிறுத்தியிருந்த டூவிலரை எடுத்துக் கொண்டு வந்த கதிரின் ‘மாப்பிள்ளை’ அவன் அப்பாவைப் பார்த்து, ’அப்பா மாமாவை விட்டுட்டு வந்துடுறேன்’ என்றான்.

பஸ் வரும் நேரத்திற்கு இருபது நிமிடம் முன்னதாகவே நிறுத்தத்திற்கு வந்துவிட்டார் கதிர். எல்லாம் நல்லபடியாக முடிந்தது. பேருந்தில் ஏறி உட்கார்ந்து, ஒரு தூக்கமும் போட்டுவிட்டார். பாண்டி தாண்டி, சாலையோரத் தேநீரகத்தில் பேருந்து நின்றபோது, ஒரு ‘நல்ல’ தேநீரும் அருந்தியாகிவிட்டது. அப்பாடி! ஆட்டோ சிரமம் இல்லாமல், ஒரு பஸ்ஸைப் பிடித்துச் சாப்பிடும் நேரத்திற்கு வீட்டிற்குப் போய்விடலாம். ஆகா. மனைவிக்கு நிம்மதியாக ஒரு போனும் செய்துவிட்டார், கதிர்

ஆனால், எல்லாம் மகாபலிபுரம் செங்கல்பட்டு கூட்டுச் சாலை தாண்டும் வரையிலும் தான். ஏழரைக்கு அக்கரை போவது சந்தேகம் என்று தோன்றியது.

அவரைத் தாண்டி, ஒரு பெண், தன் மகனோடு அவர் இருக்கையைத் தாண்டிச் சென்று, மூடிய கதவுக்கு முன்னால் நின்றனர். ஆகா, அக்கரை, கடைசியில் வந்தே விட்டதா?

’என்னம்மா, அக்கரை சிக்னலா?’

‘இல்லை, அதற்கு முன்னாடி நிறுத்தச் சொல்லி கேட்கப்போறோம்’

பஸ் நின்று, அவர்கள் இறங்கிப் போனதும், அந்த உதவியாளர் பையன், உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தான். ’அக்கரை, இறங்கறவுங்க எழுந்து வாங்க’

தோள் பை மட்டும் தான். கையில் ஒரு துணிப்பை. மாமியிடம் கொடுக்கச் சொன்னவை அதில் தான் இருக்கின்றன. கதிர், படிக்கட்டு அருகில் போய் நின்று கொண்டார். இறங்கி பின்பக்கமாக வந்தால், தாம்பரம் போகும் பஸ் நிறுத்தம். ஆனால், பஸ் சிக்னலைத் தாண்டி நேராகப் போகாமல், தாம்பரம் பக்கம் திரும்பியது. ஆகா, பஸ் சோழிங்கநல்லூர் போகுதோ? அந்த உதவியாளனைப் பார்த்து, ’சோழிங்கநல்லூர் வழியா போகப் போவுதா?’

‘இல்ல சார். அங்க நிறுத்தக் கூடாதுன்னு போலிஸ் உத்தரவு. திருப்பி, யூ டர்னுக்கு முன்னாடி நிறுத்திடுவோம்.’

அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே, தாம்பரம் பஸ் ஒன்று இவர்களைக் கடந்து நிறுத்தத்தில் நின்றது. ரன்னிங்கில் இறங்க முயன்றார், கதிர். ஆனால், டிரைவர் திடீரென்று வேகமெடுத்தார். நிறுத்திய இடத்திலிருந்து, பஸ்ஸை நிறுத்த சொல்லி கையை காட்டியபடி வேகமாக நோக்கி ஓடினார், கதிர். ஆனால் என்றைக்கு மாநகர ஓட்டுநர்கள் பயணிகள் மீது அக்கறையுடன் இருந்திருக்கிறார்கள். பஸ் வேகமாக அவரைத் தாண்டிச் சென்றது.

பதினைந்து இருபது நிமிடங்கள் நின்று பார்த்தும் ஒரு பஸ்ஸும் வரவில்லை. சரி ஷேர் ஆட்டோதான் ஒரே வழி என்று ஓரு ஆட்டோவில் எறி உட்கார்ந்தார் அவர். சோழிங்கநல்லூர் சிக்னலில் மெட்ரோ வேலைகள் சாலையை அடைத்துக் கிடந்தன. அங்கேயாவது ஏதாவது பஸ் கிடைக்குமா? அந்த நிறுத்தத்தில் அடிக்கடி பஸ் வரும். சாலையைத் தாண்டினால், நிறுத்தத்தையே காணவில்லை. அவர் ஏற்கனவே நாலைந்து முறை பேருந்து ஏறியிருந்த இடத்தில் யாரும் நிற்கவில்லை. மெட்ரோ பாரிக்கேட் தடுப்புகள் தான் நின்றன. அதைத் தாண்டி பத்து, பதினைந்து பேர் நின்றிருந்தனர்.

முப்பத்தைந்து வயது பெண்ணொருத்தி. கையில் மொபைல் போன். சீரியலோ, சினிமாவோ ஓடிக் கொண்டிருந்தது. அருகில் நெருங்கி, இங்கே தாம்பரம் பஸ் வருமா என்று கேட்டார் கதிர். அந்தப் பெண் காதில் விழுந்ததா தெரியவில்லை. இல்லை, அவளுக்குப் பதில் சொல்ல விரும்பவில்லையா? மீண்டும் ஒரு முறை அந்தக் கேள்வியைத் திரும்பவும் அவளைப் பார்த்துக் கேட்டான். கேள்வி பந்துபோல் திரும்பி வருமா, பதிலும் வருமா, தெரியவில்லை.

இவரைப் பார்த்துத் திரும்பாமலேயே அவள் வாயிலிருந்து வெளிப்பட்ட ’ம், வரும்’ என்ற பதில் அவர் காதில் முழுமையாக விழவில்லை. சரி வரும் போல என்று முடிவு செய்து கொண்டு பஸ் வரும் பாதையைப் பார்த்தபடி நின்றார்.

கூட்டம் இன்னும் சேர்ந்துவிட்டது. பாதிக்கும் மேல் அலுவலகம் செல்லும் இளைஞர் கூட்டம். அரசு அலுவலகங்களோ, தனியார் அலுவலகமோ, அல்லது எக்ஸ்போர்ட் கம்பெனிகளோ. காலையில் எத்தனை மணிக்குப் போனார்களோ. பலபேர் இவரைப்போலவே சிக்னலுக்கு அந்தப் பக்கம் ஷேர் ஆட்டோவில் இறங்கி சாலையைக் கடந்து நின்றிருந்த கூட்டத்தில் சேர்ந்துகொண்டிருந்தனர்.

கதிருக்கு சோர்விலும் பயணக்களைப்பிலும், பசியிலும் காதுகள் அடைத்தன. தோளில் மாட்டியிருந்தாலும் பை முதுகை இழுத்தது. கையிலிருந்து பையும் விரல்களை வெட்டியது. காலை மாற்றி மாற்றி வைத்து நின்று கொண்டிருந்தார். பஸ் வந்ததுபோல் தெரியவில்லை. மணி எட்டரைக்கு மேலாகிவிட்டது. சேலையூரில் இறங்கினால், சாப்பிட என்ன கிடைக்கும் என்று தெரியவில்லை. சமயங்களில் அவர் டிபன் வாங்கச் செல்லும் லட்சுமி மெஸ் திறந்திருக்க வேண்டும். அங்குதான் டிபன் ஓரளவு தரமாக இருக்கும். விலையும் குறைவு. இந்த நேரத்தில் இருக்குமா?

பஸ் ஒன்று வேகமாக உள்ளே வந்தது. கூட்டம் இல்லை. ஆகா, இவ்வளவு நேரம் காத்திருந்ததற்குப் பலன். எப்படியும் ஒரு சீட் கிடைத்துவிடும்.

இந்த வயதில் அடித்து பிடித்து ஏற முடியுமா? பஸ்ஸில் இடம் இருக்கிறதே என்ற எண்ணத்தில் சற்றுப் பொறுமையாக இருந்தார். கையிலிருந்த பையும் சோர்வால் அதிகம் கனத்தது. இரண்டு மூன்று நிமிடங்கள் தாம். முன்பக்கப் படியில் ஏறி உள்ளே இடம் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தார். அனைத்து இருக்கைகளும் நிரம்பிவிட்டன. படிக்கட்டு அருகில் இருந்த இருக்கையில் ஒரு நடுத்தர வயது பெண்மணி உட்கார்ந்திருந்தார். பக்கத்து இருக்கையில் அவருடைய பயணப்பை. அதை எடுக்கச் சொல்லி உட்காரலாமா? தயக்கத்துடன் அருகில் சென்ற போது, பின் பக்கம் பார்த்து யாரோ ஒரு பெண்மணியை உட்காருவதற்கு அழைத்தார். எவரும் வந்தாற்போல் தெரியவில்லை.

பேருந்து நிறுத்தத்தில் மொபைல் பார்த்தபடி நின்றிருந்த பெண், இப்போது அந்த வயதான பெண்மணியின் அருகில் சென்று உட்கார வேண்டும் என்று கேட்டாள். பதில், வருகிறார்கள் என்பதாக இருந்தது. சற்றுப் பொறுத்த அந்தப் பெண் மீண்டும், யாரும் வரவில்லை. நானும் காசு கொடுத்துத்தான் வருகிறேன். இடம் விடுங்கள் என்றாள்.

டிரைவர் இருக்கைக்குப் பின்புறம் இருந்த இருக்கைக்கு அருகில் இருந்த கம்பியைப் பிடித்து நின்றிருந்தார் கதிர். அவர் நின்றிருந்த இடத்திற்கு அருகில் இருந்த இருக்கையின் மேல் புறம் முதியோர், மாற்றுத் திறனாளிகள் என்று போட்டிருந்தது. அழகான இளம் பெண் காதுகளில் ஒலி வாங்கியைப் பொருத்தியபடி பாட்டுக் கேட்டபடி அமர்ந்திருந்தாள். இருபத்தைந்து வயதுதான் இருக்கும். களைப்பு தென்படா முகம். அருகில் அமர்ந்திருந்த அந்த ஐம்பது வயதுக்குக் கீழிருக்கும் நபர், அவளிடம் ஏதோ கேட்க, ஒலிவாங்கியைக் கழட்டியபடி தலை முடியை ஒதுக்கி, அவரைப் பார்த்துப் பதில் சொன்னாள்.

அவள் அருகில் தான் கதிர் நின்றிருந்தார். நேராக நிற்க முடியாமல், வளைந்தும் நெளிந்தும் நிற்கும் அவரை நிச்சயம் கவனிக்காமல் இருக்கமுடியாது. என்ன ஒரு அவலம். வயதானவனுக்கு என்று எழுதி வைத்திருக்கும் இருக்கையில் அமர்ந்தபடி, ஏதோ பேசிக்கொண்டு… அருகில் நிற்பவனை எப்படிக் கவனிக்காமல் இருக்க முடியும். உறுதியாக, ஏன் அவனுக்கு இந்த இடத்தைக் கொடுக்க வேண்டும் என்ற அலட்சியம் தான். அவளைக் கேட்கலாமா? கேட்டு என்ன ஆகும்? வாக்குவாதம் தான். கதிர், மனத்தில் கசப்பும் வேதனையுமாக இடது பக்கம் திரும்பினார்.

மொபைல் பெண், இன்னும் வாதிட்டுக் கொண்டுதான் இருந்தாள். அந்தப் பெண்மணியும் ஏதோ வெளியூர் போகிறோம். கூட வந்தவர்கள் பின்னால் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று பதில் சொல்லி பயணப்பையை எடுக்காமலே வந்தார். இந்தப் பெண்ணுக்குக் குரல் உயர்ந்தது. பேருந்து நிறுத்தத்தில், அந்தக்கூட்டத்திலும் இடைவிடாமல் அவள் மொபைலில் ஏதோ பார்த்துக் கொண்டு நின்றதும், இவருக்குச் சரியாகப் பதில் சொல்லாமல் நின்றதும் தான் அவருக்கு முன் மூளையில் பதிவாகியிருந்தது. ம்ம்..இந்தக் காலத்துப் பெண்கள்…

ஆகா, அந்தப் பெண் உட்கார்ந்து விட்டாள். வயதான பெண்மணியின் முகத்தில் ஈயாடவில்லை. ஏதோ முணுமுணுத்தபடி, மொபைலில் யாரிடமோ, பயணத்திட்டங்களைப் பேசிக்கொண்டே வந்தார். அவர்கள் இருவரையும் பார்த்தபடியே நின்றிருந்த கதிருக்கு, அந்தப் பெண் தன்னை அழைத்தது தெரியவில்லை. அடுத்தக் குரல்தான் காதில் விழுந்தது… ‘என்னையா..’

‘ஆமாம். சார் நீங்க உட்காருங்க’

சார் உட்காருகிறீர்களா என்ற கேள்வி அவளிடம் வரவில்லை. ’உட்காருங்க’ என்று மிக இயல்பான தொனியில் கூறியபடி எழுந்து நின்றாள்.

‘வேண்டாம்மா. நீங்க உட்காருங்க’

கால்கள் கெஞ்சினாலும், கௌரவம் இப்படிப் பதில் சொல்லிற்று.

’இல்லை சார். நான் டெய்லி இப்படித்தான் போறேன். உட்காருங்க’ என்றபடி ஒதுங்கிக் கொண்டாள்.

இருக்கையில் உட்கார்ந்த கதிரை, வியப்பிலாழ்த்தியது அவளுடைய அடுத்த நிகழ்வு. எஞ்சினுக்கும் இவருக்கு முன்னிருந்த சீட்டுக்கும் நடுவிலிருந்த இடைவெளியில் அந்தப் பெண் உட்கார்ந்து விட்டாள். வலது கால் மடக்கியபடி, இடது தொடையில் கைப்பை. வலது கையில், மொபைல் இன்னமும் ஏதோ படங்களைக் காட்டியபடி இயங்கிக் கொண்டிருந்தது.

‘என்னம்மா, இது. தரையில் உட்கார்றீங்க. வேண்டாம், நீங்க இந்த சீட்ல உட்காருங்க நான் நின்னுக்கிட்டே வர்றேன்’

‘இல்லை சார். .இதுவும், தினசரி வேலைக்குப் போகும் எங்களுக்குப் பழக்கம் தான். உங்களைப் பாத்தா, ரொம்ப டயர்டா தெரிஞ்சுது. உட்காருங்க’

கதிருக்குள் ஏதோ ஒன்று உடைந்தது. முன் முடிவுகள், உடைவதற்குத் தானே. இத்தனை வயதாகியும் இவ்வளவு அனுபவத்திற்குப் பிறகும்… ஏன் இப்படி. எவ்வளவு அலட்சியமாக அந்தப் பெண்ணை எடைபோட்டோம்? மனம் கசந்து, சற்றுத் திரும்பி, டிரைவருக்குப் பின்பக்கச் சீட்டைப் பார்த்தார். அவர்கள் இருவரிடையே ஏதோ உரையாடல் ஓடிக்கொண்டு தான் இருந்தது.

மேடவாக்கம் கூட்டுச் சாலையில் சில பயணிகள் இறங்கினர். பின்னால் காலியான ஒரு இருக்கைக்கு மாறும் முன் அந்த மொபைல் பெண்ணிடம், ’தாங்க்ஸ் மா. நான் பின்னால் உட்கார்ந்துக்கிறேன்’ என்றார் கதிர். அவள் தரையிலிருந்து எழுந்து அந்த இருக்கையில் அமர்ந்தாள்.

அநேகமாக அவள் தாம்பரம் தான் இறங்குவாள். திருமணமானவள். தினமும் இந்தப் பயணம். வீட்டில் ஏதாவது அவளுக்குச் சாப்பிட இருக்குமா? கணவனா? மாமியாரா? அம்மாவா? யாராவது செய்து வைத்திருப்பார்களா? அல்லது இதற்குமேல் பிரிட்ஜில் இருக்கும் மாவை எடுத்து தோசை ஊற்றிக் கொள்வாளா? சரி, நமக்கு லெட்சுமி மெஸ் திறந்திருக்குமா?

அந்த மொபைல் இன்னும் ஓடிக்கொண்டுதான் இருந்தது. இதுவும் அவருக்கு ஆச்சரியமே. இதைப்போன்ற பெண்களை, சில இளைஞர்களை, பஸ்ஸிலும் ரயிலிலும் பார்த்திருக்கிறார். அவர்களுக்கு மொபைலில் எப்படி சார்ஜ் தங்குகிறது?

அவரது இறக்கம் வருவதற்கு முன்னால், எழுந்து கொண்டார் கதிர், அவரது இருக்கைக்கு வலதுபக்கம் தான் அந்த டிரைவர் இருக்கைக்குப் பின் இருக்கை. அமர்ந்திருந்த இளம் பெண்ணிடம், ’உங்க சீட்டுக்கு மேலே எழுதியிருக்கிறதைப் பாத்தீங்களா?’ என்று கேட்கலாமா?’ என நினைத்தார்.  என்ன, அவளும் அந்த மனிதரும் தலையுயர்த்திப் பார்ப்பார்கள். பதில் சொல்லாமல், பேசாமல் பயணிப்பார்கள். தேவையற்ற அவமானம்.

இல்லை, ‘சார், நீங்க முன்னமே கேட்டிருக்கலாமே’என்று அந்தப் பெண் பதில் சொல்லக்கூடும்.  அவர்கள் இருவரும் மிக இயல்பாக அமர்ந்திருந்தனர். எப்போதும் போல் தயக்கம் இவரை வாய் மூடச் செய்தது.

‘ஏம்மா, கேட்கணும். நீங்கதான் அதைச் செய்யணும். அடுத்தமுறை இதைச் செய்யாதீங்க’ என்று அவளிடம் சொல்ல நினைத்ததை மனதிற்குள் சொல்லிக் கொண்டே, படிக்கட்டுக்குப் பக்கத்து இருக்கையில் இன்னமும் மொபைல் பார்த்தபடி தலை குனிந்து அமர்ந்திருந்த பெண்ணை ஒருமுறை பார்த்துவிட்டு கதிர் பஸ்ஸை விட்டு இறங்கினார்.

-thendralaham@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button