பிரெஞ்சிந்திய பண்பாட்டு விழுமியங்களோடு சமகால அரசியலைப் பேசும் கதைகள் – அன்பாதவன்
கட்டுரை | வாசகசாலை

சிறுகதைகளின் பேசு பொருள் எதுவெனில் வானுக்குக் கீழுள்ள எதுவுமிருக்கலாம் என்பதே நிதர்சனம்… மனிதர்கள், மனித மன விகாசங்கள் பண்பாட்டு விழுமியங்கள், மனித உறவின் சிக்கல்கள், வரலாற்றுத் தகவல்கள், அரசியல் எனப் பலறையும் சரியான விகிதத்தில் அழகியலோடு கலந்து நெய்கையில் பூரணமானதொரு சிறுகதை கிடைத்து விடுகிறது. அப்படியொரு கலவைகளைத் தன்னுள் கொண்ட பூரணமான தொகுப்புதான், பாரதி வசந்தன், வாசகர்களுக்கு விழுங்கியிருக்கும், ‘பெரிய வாய்க்கா தெரு’ சிறுகதை தொகுப்பு.
பிரபஞ்சனோடு இணைந்து ‘புதுவைச் சிறுகதைகள்’ நூலைத் தொகுத்து தந்தவர் பாரதி வசந்தன். புதுச்சேரியின், பிரெஞ்சுத் தொடர்புகளின் மீதங்கள், பிரெஞ்சிந்தியப் பண்பாட்டு நாவல்களைகூடவே சமகால அரசியல் விமர்சனம் கலந்த பார்வையோடு, இந்தத் தொகுப்பினை உருவாக்கி, வெற்றியும் பெற்றுள்ளார்.
தமிழலக்கிய நீண்ட வராலற்றில் புனைவுகளால் நெய்த புதினஙகளின் இருப்பும், வளர்ச்சியும் மிக முக்கியமான இடத்தைக் கைக்கொள்வன. காரணம் இத்தகையப் புதினங்கள் காலத்தின் பதிவுகள் என்பதோடு அந்தந்த காலக்கட்டத்தில் மொழி, பண்பாடு, வெகுமக்கள் வாழ்வியல் மற்றம் இனவரைவியல் என்கிற விழுமியங்களைப் பதிவு செய்யும் முக்கியப் பங்காற்றுகின்றன.
“மானுடவியலின் முக்கியப் பிரிவுகளில் ஒன்றாக இனவரைவியல் அமைகின்றது. ஒரு குறிப்பிட்ட மக்கள் குழு அல்லது பண்பாட்டை விவரிக்கும் கலை அல்லது அறிவயலே இனவரையிலாகும். ஒரு தனிப்பட்ட சமூகத்தின் பண்பாட்டை முழுமையாகப் புரிந்து கொண்டு அவற்றை முறையாகத் தொகுத்து வழங்குதல் இனவரைவியலின் நோக்கமாதலால், இது அடிப்படையில் வருணனைத் தன்மை கொண்டதாகவே அமையும். ஒப்பீட்டு முறையிலான ஆய்வுகளுக்கும் கொள்கைசார் விளக்கங்களுக்கும் இதில் இடமில்லை. ஆனால், சமூக மானுடவியல், பண்பாட்டு மானுடவியல் மற்றும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வில் இனவரைவியல் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏனெனில் இம்மூன்று அறிவுத் துறைகளுக்கும் தேவையான முக்கியத் தரவுகளை இனவரைவியல் வழங்குகிறது.
இனவரைவியல் ஆய்வு தொடர்பாக ஒரு தனிப்பட்ட மக்கள் குழுவிடமிருந்து பின்வரும் செய்திகள் தரவுகளாகச் சேகரிக்கப்படுகின்றன.
1. பொருள்சார் பண்பாடு
2. வாழ்க்கைப் பொருளாதாரம்
3. நுகர்வு முறை
4. பரிமாற்ற முறை
5. சமூகக் கட்டுப்பாடு
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினை ஊடுருவிப் பார்க்க மேற்கூறிய தரவுகள் பெரிதும் துணை புரிகின்றன. அத்துடன் அதன் பண்பாட்டையும் நாகரீகத்தையும் இத்தரவுகள் தெற்றெனப் புலப்படுத்துகின்றன.
ஓர் இலக்கியப் படைப்பு சிறந்த விளங்க வேண்டுமானால் அதில் இடம்பெறும் மாந்தர்களும், அம்மாந்தர்களின் பின்புலத்திலுள்ள சகல இயக்கங்களும் உரிய பொருட்களும் மிக நுணுக்கமாகச் சித்தரிக்கப்பட வேண்டும். இலக்கியத்தில் இடம்பெறும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றிய இன வரைவியல் செய்திகள் அவ்விலக்கியத்தில் இடம் பெறும் பாத்திரங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் பொருத்தமான பின்புலத்தை உருவாக்க உதவுகின்றன.” (இனவரைவியிலும் தமிழ் நாவலும் – ஆ. சிவசுப்பிரமணியன்)
“ஒரு கதை என்பது நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து கொண்டு வெறும் கற்பனையில் புனையப்படும் எழுத்துக் கோவைதான் என்பதில் எனக்கு முழுமையான உடன்பாடு கிடையாது. நாவல் புனைகதைதான்; ஆனால், மனித வாழ்க்கையின் பல்வேறு பிரச்சனைகளிலும், நிலைகளிலும், ‘பிரத்தியட்சங்கள்’ எனப்படும் உண்மை வடிவங்களைத் தரிசித்த பின்னர் அந்த அனுபவங்கள் எனது இதயவீணையில் மீட்டிவிட்ட கரங்களைக் கொண்டு, நான் இசைக்கப்புகும் புதிய வடிவையே நாவல் என்று கருதுகிறேன்”
“ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பில் வாழும் மனிதர்களின் வாழ்வியல் பிரச்சினைகளையும், உளவியல் பிரச்சினைகளையும் மையமாகக் கொண்டெழுதும் நாவலானது அம்மனிதர்களினதும், சமூகத்தினதும் பண்பாடு, பழக்கவழக்கங்கள், சமய வாழ்வு மற்றும் வாழ்வியல் அம்சங்களை முழுமையாகப் பிரதிபலிப்பது அவசியமாகும்.
ஊர், கிராமம், நகரம், வீதி, வீடு என்பதெல்லாம் என்ன? மனிதர்கள் வாழும் பகுதிதானே! மனிதர்கள் இல்லையெனில், மனிதர்களின் மனமாச்சர்யங்கள், அபிலாஷைகள், உயர் குணங்கள், பிறழ்வுகள் இவற்றோடு மற்றவைகளும் எப்படி கதைகளாய், கவிதைகளாய், ஓவியங்களாய் உருவாகும். இருண்மை, உள்முகத் தேடல், ஆன்ம விசாரணை போன்ற கலைப் பொய்களுக்கும் அடிப்படை மனிதர்கள்தானே! அப்படி நம் கண் முன்னே பார்த்த/ பார்க்கும் மனிதர்களைப் பற்றிய கதைத் தொகுப்பு இதுவென உறுதிபடக்கூறலாம்.
புதுச்சேரியின் பன்முக தரிசனம், பாரதி வசந்தனால் வசப்படலாயிற்று….காட்சியொன்றின் வழியாக, ஒரு பெரிய வரலாற்று பின்னணியையும், சமகாலத்தையும் இணைத்திருப்பதே பாரதி வசந்தனின் வெற்றி :
இனி கதைளை,கதை மாந்தர்களைப் பின்தொடர்வோம்:
“சொல்தா தானய்ய நீ, எக்கச் சக்கமா பணம் வச்சுருக்கிற… பனாதிப் பய போல வந்து வீட்ட திருடிகிட்டாங்கன்னு ரிப்போர்ட் பன்றியே. ஒரு வீடு போனா உன் குடியா முமுகிப் போயிடும்’ (அலிபாபாவும் 30 திருடர்களும்). இந்த வரிகளில் சொல்தா, பனாதிப் பய எனும் இரண்டு சொற்களும், கதைப் பின்னனியும், உரையாடல் நிகழுமிடமும் மிக முக்கியமானவை.
நிகழுமிடம் : புதுவையின் ஏதோ ஒரு காவல் நிலையம்.
சொல்தா : புதுச்சேரியில் இருந்து பிரான்சு சென்று, பிரான்சின் புடைப்பிரிவில் பணிபுரிந்து / பணி புரியும், இராணுவ வீரரே சோல்ஜர் என்கிற ‘சொல்தா’ இவர்களின் ஈரோ வருமானத்தினாலேயே, புதுவையின் பொருளாதாரம் மின்னுகிறது.
‘சொல்தா’ – வின் வருமானம் பார்த்து வயிறெரியும் புதுவைப் போலீஸ்காரரின் பொச்சரிப்பு வார்த்தைதான் ‘பனாதிப் பய’. பிரான்சிலிருந்து பணிபுரிந்து அனுப்பிய பணத்தில் வாங்கிய வீடு ‘யாரோலா’ ஆக்கிரமிப்பு என்ற பெயரில் கபளீகரம் செய்யப்படுகிறது. அந்த வீட்டினை மீட்டும் ‘சொல்தா’ ஒருவரின் முயற்சியே ‘அலிபாபாவும் 30 திருடர்களம்’ அலிபாபா-யார் கூடவே 30 – திருடர்கள் யார் என்பதை ஊன்றிப் படிக்கும் வாசகன் ஊகித்து விட முடியும் எளிதாய்! இந்த தைர்யந்தான் பாரதி வசந்தன்!
‘டிசம்பர் காற்று – எளிய மனிதர்களின் கதை! புதுவையையும் மது கலாச்சாரத்தையும் பிரிக்க இயலாது. ஆனால் புதுச்சேரியில் மதுப் பிரியர்களை ‘குடிகாரர்கள்’ என குற்றஞ்சொல்ல ஏலாது ஏனெனில் மது எனும் அழகிய ராட்சசியை அணு அணுவாய் ரசித்து ருசிப்பவர் புதுவையர். ஒரு விபத்து! ஒரு அகுடிகாரன் அவன் நல்லவன் கண்டும் காணாமல் போய் விடுகிறான். மற்றொரு குடிகாரன் எனும் கெட்டவன், விபத்தில் சிக்கியவரை அதுவும் அவனோடு சண்டை சச்சரவில் ஈடுபட்டவரை, மருத்துவ மனையில் சேர்ப்பித்து உயிர் பிழைக்க உதவுகிறான். எவ்வளவு போதையிலும் மனிதரின் உயர் குணங்கள் ‘தெளிவாகவே’ வேலை செய்யமென்பதற்கு இக்கதையோர் எடுத்துக்காட்டு. ‘ழான்தார்க்’ – பிரெஞ்சுப் பெயரில் ஒரு கதை! விலை மாது ஒருத்தியின் பசி போக்கும் பரந்த மனதும் ‘சொல்தா’ ஒருவனின் கஞ்சத்தனமும் தராசுத்தட்டின் இரு பக்கங்களில்… இலவச இணைப்பாக புதுவையின் இதயப் பகுதியல் மிளிரும் ‘ஆயி மண்டப’ வரலாறு கதையின் ஊடாக வாசகர்கள் அறிந்திட பல பிரெஞ்சு சொற்கள். ம் ம்! இதுவும் புது சுவைதான்.
வீடு பேறு :
வசதியான வீடு ஒன்றுக்காக ஏங்கும் மெலானி மனது மாறி பூமியின் பேட்டை, ஆதிதிராவிடர் குடியிருப்பிலேயே வீடு கட்ட சம்மதிக்கும் கதை. மெலானி மனது மாறக் காரணமிது:
”பூமியான் பேட்டையில் இருக்கிறவர்கள் ஏழைகள்; தாழ்த்தப்பட்டவர்கள் – ஒருவருக்கு ஓர் உபத்திரவம் என்றால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள். தனக்கே வந்தது போல் எண்ணி தாங்கிப் பிடிப்பார்கள்” – பாரதி வசந்தன் மனிதர்களைப் படிப்பவர் என்பது இந்த வரிகளால் மெய்ப்படுகிறது.
சங்கர மயக்கம் :
இந்தக் கதை, தினமலர் வாரமலர் இதழில் வெளிவந்திருப்பது ஆச்சர்யம்! அந்தணச் சமூகத்து கணேச குருக்களின் தீண்டாமையை நேரடியாக விமர்சிக்கும் கதை! துணைக்கு ஆதிசங்கரரின் துணைக்கதை வாசிக்க சுவாரஸ்யம்தான்! ஆனால் பல்லுக்கிடையில் சிக்கிக் கொண்ட பாக்கு துகள் போல சில ஏற்கவியலா சங்கதிகளுண்டு.
பக் : 58
“கோயிலுக்கு எதிரே வழிப் போக்கர்கள் இளைப்பாறுவதற்காக பிரெஞ்சுக் காரன் காலத்தில் கட்டப்பட்ட சுமைதாங்கி கல்” –
– சுமைதாங்கி கல், சுமைதாங்குவதற்காக, சுமைகள் இறக்கி வைப்பதற்காக சற்றே உயரத்தில் நிறுவப்படுவது. அந்த உயரத்தில் எப்படி அமர்ந்து ஓய்வெடுப்பது?
பக். 59
செம்பருத்தி, நந்தியாவட்டை, அரளி பூக்களுக்கெல்லாம் வாசம் உண்டா?
பக். 60
ஆதிசங்கரர் கதைகயில் புலையன் – என்பவன் காட்டிலே இருப்பானே வேடுவன் – என்பது போன்று குறிப்பிடப்படுகிறது. புலையர் என்போர் தீண்டத்தாதேர் – வேடுவர் – வேட்டைத்தொழில் மேற்கொள்பவர்.
பாரதி வசந்தன் மேற்சொன்னவற்றை அறியாதவரல்ல! அவசரகதியில் எழுதப்பட்டிருக்கக் கூடும்!
இன்ஷா அல்லாஹ் :
மதத்துவேஷத்தை மனதில் கொண்ட ஒருவருக்கு முருகர் கோயிலைக் கட்டி காத்து வரும் கௌஸ் என்கிற இஸ்லாமியச் சமூகப் பெரியவர் தான் என்கிற உண்மை உரைத்து மனத்துவேஷம் களையும் கதை. மாமாச்சர்யங்களைத் தாண்டிய மனிதர்களின் மனம் ஆச்சர்யந்தான்!
எலிவேட்டை :
அடூர் கோபாலகிருஷ்ணனின் எலிப் பத்தாயம், திரைப்படத்தை நினைவூட்டும் கதை மூன்று பாத்திரங்களுக்குள் மனமுரண்களைக் கொண்டு சுவையாக நெய்த கதையில் பாம்புக்கு விளையாட்டுச் சாமான்களைத் தரும் சிறுதி, தமிழ்ச் சிறுகதைக்கு புதுசு! உயிரிகளுக்கும் ‘தனிமை உண்டு’ என்றும் நுட்பம் சொல்லும் கதை.
மன்னிப்பு :
பிரான்சு தேசத்திலிருந்து திரும்பிய தாவீது சொல்தாவுக்கு உடல் தினவுக்கு வேலைக்காரி லூர்து தேவைப்படுகிறாள்! லூர்துவோ தனது ஒற்றைக்கேள்வியால் பண்பாட்டு / நாகரீகக் கூறு மீது வினாக்களைத் தொடுக்கிறான். அந்தக் கேள்வியென்ன என்பதை அறிய வாசகர்கள் நூல் வாங்கி இக்கதையை வாசிக்கத்தான் வேண்டும்.
ரோபோ மரங்கள் :
‘விஞ்ஞானத்தில் எந்தக் கண்டு பிடிப்பும் மனுஷக் குலத்தை மேம்படுத்தனும் அதற்கு ஒத்தாசையா இருக்கணும்.. நாசப்படுத்திடக் வடாது. ‘எனும் பேருண்மையைச் சொல்லும் கதை.
ஒயிண்டேரி :
சமகால அரசியல் / ஆட்சி பீடங்களுக்கு நீண்ட காலத் திட்டங்கள் புரிவதில்லை. குறுகிய காலத்தில் ஒப்பந்தப் புள்ளி மூலம் பணமள்ளும் ஒப்பந்த புள்ளிகைள துணையாகக் கொண்டு திட்டங்கள் தீட்டப்படுவது வாடிக்கையாகி விட்டது. விழுப்புரத்தில் பிரம்மாண்ட ஏரி ஒன்று பச்சைமசி கையெழுத்தொன்றினால் கான்கிரீட் கட்டங்களாக மாறியது போலவே புதுச்சேரியில் ஒயிண்டேரி எனும் நீர்நிலை, பேருந்து நிலையமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்ட ஆனந்தன் எனும் இளைஞன் தன் இன்னுயிரைத் தந்து அம்முயற்சியைத் தடுக்க யத்தனிக்கும் கதை
ஆண்மை :
ஆண்களில் சிலர் எவ்வளவு சொத்து இருந்தாலும் பசிக்குதவாத இரும்பு இதயர்களாகவே இருக்க பெண்களில், பரந்தமையிலும் அறம் சார்ந்த நேர்மையுடன் வாழும் சித்ரா-வின் சித்திரம்.
“இங்க பாருய்யா நீ யாரு எப்படிப்பட்டவன், உன் பேரு என்னன்னு கூட தெரியாம நீ கூப்பிட்டதும் வந்தேன். படுக்க வந்தவள இன்னொருத்தளுக்கு தாரை வார்க்கிறியே, நீ கூப்பிட்டு கிட்டு வந்தவனா இல்ல கூட்டிக் கொடுக்கிறவனா…’ – சித்ராவின் கேள்வி கேடுகெட்ட சில ஆண்களின் முகத்தில் எச்சிலாய்த் தெறிக்கிறது.
விலக்கப்பட்டக் கனிகளான இரு முதுமைகளின் கோணத்தில், தனிமை பின் வலியே அந்தி சாயும் சூரியன்கள்.
காந்த்தா : அநோகமாய் ரத்தக் கண்ணீர் படத்தை பார்த்த தாக்கத்தில் எழுதப்பட்டிருக்க கூடும்! பெண்களுக்கும் தினவெடுக்கும்! காமத்தின் தேவை அதிகமாகவும் இருக்கும் என்பது ரோஸ்மேரி பாத்திரத்தின் மூலமாக புரியவரும்! சற்றேப் பிசகியிருந்தாலும் ‘சரோஜா தேவி’ வகை கதையாக தடம்புரளும் சாத்தியக்கூறுகள் கொண்ட கதா நிகழ்வுகளைக் தன் காமர்த்தியத்தால் தரமான கதையாக தந்திருக்கிறார் பாரதிவசந்தன்.
குறுநாவலொன்றினை சுருக்கித் தந்திருப்பதே ‘ஒருவன் எழுதும் சிறுகதை குறிப்புகள் ‘ பத்திரிகை ஆசிரியர் ஒருவருக்கும் படைப்பாளி ஒருவருக்கும் இடையேயான மனத் தொடர்புகளே கதையாக விரிகிறது.
‘வானத்துக்கு வேலி இல்லை’ – கதையும் கிறித்துவ இந்துத்துவம் என மத வேற்றுமை பேணுமொரு மாலதியினைப் பற்றியது’ “எந்த மதமோ, எந்த சாமியோ, எந்த மனுசனோ எதிலுமே நாம விருப்பு, வெறுப்பு காட்டக் கூடாது ‘எல்லாம் ஒண்ணுதான்’ – என்கிற வரிகள் மதம் பிடித்தவர்களுக்கு அங்குச அடி!
துணைக்கு எவருமில்லா ஆதரவற்ற ‘புட்லாய்’ (புற்றுள் ஆயி – வடமாவட்டங்களில் சரளமாய்ப் புழுங்கியப் பெயர்) கதையே ‘முடத்தெங்கு’ மனிதத்துக்கும், மனிதாபிமானத்துக்கும், மொழியோ அன்றி எந்த எல்லைக் கோடுகளும் இருந்ததில்லை என்பதை உணர்வு பொங்க உரைப்பதே ‘எங்ஙன யாகிலும் ஜீவிக்கனும்’.
மொழி : பிரெஞ்சு பெருமை பேசும் சொல்தா-வுக்கு தமிழின் சிறப்பை நிலைநாட்ட வந்த கதை, ‘மொழி’ என்பது உரிமை என்பதை அறுதியிட்ட குரலில் சொல்வது.
‘சொற்களின் மூடுதிரை’ – அரசியல் சீமான்களின் ‘அட்ராசிட்டியை’ பேசுவது.
தொகுப்பின் தலைப்பான ‘பெரிய வாய்க்கா தெரு’ – தகவல்கள் பலவால் பின்னப்பட்ட குறுநாவலென அல்லது நெடுங்கதையெனக் கூறலாம்.
“சமகாலப் படைப்பாளி என்பவன் ஊடாக வாழ்பவன், கடன் கத்திகளில் உழல்பவன், ஊஞ்சல், நாற்காலியில் குந்தி எழுதும் பொதுத்தன்மையிலிருந்து விலகி வட்டாரப் படைப்புகள் என்கிற நிலைக்கும் நகர்கிற போது இன்னார்., இனியார், இந்த இடம் எனக் குறிப்பிட்டே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் படைப்பாளிக்கு ஏற்பட்டு விடுகிறது” – (கண்மணி குணசேகரன் முன்னுரை சாமகால நாவல்களில் சாதிய அரசியல்)
பாரதி வசந்தனின் பலமென்பது கதைகளில் விரவிப்பரந்த தகவல்கள். ஆனால், அதுவே சிலநேரம் தொங்கு கதையாகி கூடுதல் சுமையாகி விடுகிறது.
‘பெரிய வாய்க்காத் தெரு’ – நூலில் பயன்படுத்தப்படும் பிரெஞ்சு மொழி சொற்களுக்கு, அடுத்தப் பதிப்பிலாவது ஒரு பின்னிணைப்பு தாருங்க மிசே! கதையின் போக்கில், சிறு தடைகளாக இந்தச் சொற்கள் உள்ளன.பரிசீலியுங்கள்.
‘பெரிய வாய்க்கா தெரு’ – சிறுகதை தொகுப்பெனினும் ஒரு புதினத்தின் பக்கங்களாகவே விரிந்து மலர்ந்து புதுச்சேரியின் வரலாற்றினை, பிரெஞ்சிந்தியப் பண்பாட்டினைப் படம் பிடிக்கிறது. இன்றைய புதவையின் பழைய வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்கிறது. இங்கே சில எடுத்துக்காட்டுகள்.
-மிஷன் வீதி இருக்கிற கல்வே காலேஜ், அந்நாளில் பிரெஞ்சுக்காரர்கள் இறந்து விட்டால் புதைக்கிற கல்லறையாக இருந்தது. அந்த இடத்தை கலவை சுப்பராய செட்டியார் என்பவர் வாங்கி பிள்ளைகள் படிக்கிற பள்ளிக் கூடமாக மாற்றிவிட்டார். (கலவை திரிந்து கல்வே காஜோக மாற்றிற்று) (பக் 174)
– ஒழுகரை அந்நாளில் மிகவும் பிரசித்தி பெற்ற ஊராக இருந்தது. ஒழுகும் கரைகளை உடைய ஊர் என்பதனால் அதனை ஒழுகரை என்றார்கள் பின்னாளில் ஒழுகரை ‘உழவர்கரை’ என்றாக்கி விட்டிருக்க வேண்டும். (பக். 174)
– கருவடிக் குப்பத்தில் சித்தானந்தா சாமி கோயில ஒட்டி குயில்தோப்பு இருந்தது. இயற்கை, எழில் மிகுந்த இடம், பாரதியார் குயில்பாட்டு, எழுதறதுக்கு அந்த குயில் தோப்பு தான் காரணம் (பக் 334)
– ஆயி மண்டபத்தின் வரலாற்று பின்னனி, (பக் 53)
– இந்திய (புதுவை) வழக்குரைஞர்களுக்கு சப்பாத்து அணியும் உரிமையை போராடிப் பெற்றுத்தந்த பொன்னுசாமி பிள்ளை பெயரல் ‘ல போர்த் பொன்னு’த் தம்பி பிள்ளை வீதி (பக். 258)
– நெல்லி மரங்கள் அடர்ந்த பகுதியே நெல்லித் தோப்பு (பக். 235)
– பூமியன் என்கிற வஸ்தாது பெயரிலே பூமியான் பேட்டை.
-புதுச்சேரியை டச்சுக்காரர்கள் ஆண்ட காலத்தில், பிரெஞ்சியர், டச்சுக்காரர்களை ‘ஒலந்தீஸ்’ என அழைக்க ஒலந்தீஸ்- என்பது மருவி உழந்தை என்றாயிற்று (பக் 159)
– ஆடல் மகள் ஆயி- யின் தங்கை ஊசி இட்ட ஏரி ஊசுட்டோரி.
– மதகடிப்பட்டின் வரலாற்றுப் பெயர், திரிபுவனை மாதேவிச் சதுர்வேதி மங்கலம் (பக். 148)
பிரெஞ்சு கவர்னர் துப்ராய் பெயரால் அந்தப் பகுதிக்கு பெயரிட துப்ராயப்பேட்டை இன்றைய திப்ராயப் பேட்டை! (பக். 185)
– வில்வமரக் காடாக இருந்த பகுதியே வில்வவனம், வில்வ நல்லூர், வில்லிய நகர், வில்லிப்பாக்கம் என்றாகி இன்றைக்கு வில்லியனூர்-னு மாறிவிட்டது. (பக். 215).
தொகுப்பின் எல்லாக் கதைகளிலும் எளிய மனிதர்கள், பணம் படைத்தவர்கள் [HAVES AND HAVES NOT] என இரு பிரிவுக்ககு இடையேயான உரையாடல்கள், உரசல்கள், உணர்வுகளே கதைகளாய்! மேலும் ஒரு அருமையான புதினத்தை வேறுவேறு சிறுகதைகளாய்ப் பிரித்து தந்துவிட்டாரோ படைப்பாளி என்கிற அய்யமும் எழுகிறது. காரணம் நூலுக்குள் பொதிந்திருக்கும் புதினக் கூறுகள்.
பிரெஞ்சிந்தியப் பின்னணியில் பாரதி வசந்தனாய் ஒரு பெரும் புதினத்தையும் தர இயலும் என்பதற்கு கட்டியம் கூறும் கதைகளாய் ‘பெரிய வாய்க்கா தெரு’ தொகுப்பின் கதைகள் உள்ளன.



