இணைய இதழ் 120சிறுகதைகள்

பிறழ் – மந்திரிகுமார்

சிறுகதை | வாசகசாலை

பொண்ணுமணிக்கு தூக்கம் வரவில்லை. புரண்டு படுத்துப் பார்த்தாள். எதுவும் வசப்படவில்லை. இரவு நடுநிசியாகியிருந்தது. அருகில் படுத்திருக்கும் அம்மாவைப் பார்த்தாள். நீண்ட அசதியில் தூங்கிக் கொண்டிருந்தாள். அம்மாவை எழுப்பவும் மனம் வரவில்லை. எங்கேனும் ஓடிப்போய்விடலாமா என்று தோன்றியது. சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தாள். இரவில் எதுவும் அகப்படவில்லை. மெல்ல மெல்ல கண்ணைக் கசக்கி பார்க்கையில் வெளிச்சம் கசியும் ஜன்னல் தட்டுப்பட்டது. திரைச்சீலை காற்றில் அசைய அசைய அறைக்குள் இருளும் அசைந்தது போலிருந்தது. அவள் திரைச்சீலையின் நடனத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அதிகாலை இரண்டு மணியாகியிருந்தது.

அதற்கு மேல் அவளால் பொறுக்க முடியவில்லை. உட்கார்ந்து கொண்டாள். முதுகைச் சுண்டிவிட்டது போல் சுள்ளென்று வலித்தது. தலை கனத்துக் கிடந்தது. அம்மாவை மறுபடியும் உற்றுப் பார்த்தாள். அவளது கைகளிரண்டும் காப்புக்கட்டி மரக்கட்டை போலிருந்தது. இந்தக் கையில் அகப்பட்டிருக்கக் கூடாது என்று முடியை மறுபடி கலைத்துப் போட்டு இறுக்கிக் கட்டிக் கொண்டாள். அவளுக்கு என்னமோ போல் வந்தது. தலை சுற்றுவது போல் இருந்தது. அதோடு அறைகளை சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தாள். அறையொன்றும் அப்படி விலாசமானதாக இல்லை. அதிலிருக்கும் மர்மம் அவளை நித்தம் தூங்க விடாமல் செய்வதை யாரிடம் சொல்வது? இடுப்பை வளைத்து நகர்ந்து நகர்ந்து போய் சுவற்றில் உடலை சாய்த்துக் கொண்டாள். இப்போது தேவலை போலிருந்தது. அம்மா அவளை இவ்வளவு அடித்திருக்க வேண்டியதில்லை என்று தோன்றியது. ஆனால், பொண்ணுமணிக்கு யார் மீது கோபத்தைக் காட்டுவது என்ற குழப்பம் இன்னும்கூட இருந்து கொண்டே இருந்தது.

அப்பா வாசலுக்கு வெளியே தெருவில் படுத்திருந்தார். உரத்த குரட்டை சத்தம் அவளது பால்யத்திலிருந்தே பழக்கம் ஆகியிருந்தது. சத்தமில்லாமல் வாசல் கதவை தாண்டினாலும் அப்பாவைத் தாண்ட முடியாது. அப்பாவின் மூர்க்கம் சாமியாடி போல உக்கிரமாயிருக்கும். ஊரார் அறிய தெருவில் தன் மகளென்றும் பாராமல் முடியைப் பிடித்திழுத்து வந்து வீட்டுக்குள் அடைத்து வைத்திருப்பது வரை அவளுக்கு எல்லாம் ஞாபகம் வந்தது. நினைவுகள் எழ எழ தலைவலி ஏற ஆரம்பித்தது. சுவற்றில் தலைசாய்த்துக் கொண்டாள். உதட்டைக் கடித்துக் கொண்டாள். உதட்டில் உறைந்து போயிருந்த ரத்தம் இப்போது இனிப்பது போலிருந்தது. தண்ணீர் அருந்தாமல் வலியில் தூங்கிப் போனதில் உதடுகளும் மரத்துப் போயிருந்தன. தண்ணீர் வேண்டும் போலிருந்தது. சமையலறைக்கு அம்மாவைத் தாண்டி போக வேண்டும். அப்படியே குடித்தாலும் சிறுநீர் கழிக்க வேண்டி வந்தால் வீட்டிற்கு வெளியே அப்பாவைத் தாண்டித்தான் போக வேண்டும். அப்பாவை பார்த்தவுடன் ஆடையிலேயே சிறுநீர் கழிக்கவும் நேரலாம். என்னால் அது முடியாது. இப்போதைக்கு தண்ணீரும் வேண்டாம், சிறுநீரும் கழிக்க வேண்டாம். உதட்டை எச்சிலால் தொட்டுத் தொட்டு ஈரப்படுத்த முயன்றேன். எச்சில் சுரக்கவில்லை. இரத்தம் வர உதட்டைச் சுவைத்துக் கொண்டேன்.

அது மீண்டும் திரும்பி வந்துவிட்டது. ²பொண்ணு.. பொண்ணு..² யாரோ அழைக்கும் குரல். காதுக்குள் பனிக்காற்று நுழைவது போல் மெலிசாக, அதுவே அச்சுறுத்தும் படியாக. குரலின் அதிர்வை உணர்ந்தேன். இதுவரை இவ்வளவு நெருக்கமாக காதுக்கு அருகிலிருந்து பேசுவது போல் அவள் உணர்ந்ததில்லை. அந்தக் குரலின் வெப்பத்தைக் கூட அவளால் உணர முடிகிறது. காதுமயிர்கள் குத்திட்டு நிற்கிறது. அங்கிருந்து கழுத்து வரை நரம்புகளில் பாய்ந்து வியர்க்கிறது. உடலில் துளியிட்ட வியர்வை ஊர்ந்து யாரோ உடலைத் தழுவுவது போலிருந்தது. யாராக இருக்கும்? அந்த குரலின் சொந்தக்காரர் யாராக இருக்கும்? எங்கே மறைந்திருந்து இந்த சித்து வேலைகளை பார்க்கிறார்? அவளுக்கு அச்சமாக இருந்தது. கைகள் நடுங்கிக் கொண்டிருந்தது.

புருவங்கள் மேலேறி கண்கள் விரிய இருளுக்குள் ஏதோ உருவத்தை தேடிக் கொண்டிருந்தாள். தண்ணிக்குள் வெறுங்கைகளால் துழாவுவது போலிருந்தது. அம்மாவை காற்றில் தேடினாள். அம்மாவைத் தொட்டால் போதும் என்றிருந்தது. அம்மா.. அம்மா! சத்தம் வரவில்லை. தொண்டை வறண்டிருந்தது. குரல் உடைந்து உதட்டில் சிக்கிக் கொண்டது. ரத்தம் வழிந்து உறைந்து உதடுகள் ஒட்டிப் போயிருந்தது. வாயைத் திறக்கமுடியவில்லை. வெடிப்புற்ற உதடுகள் புண்ணாகி வலித்தது. அம்மா.. அம்மா! உள்ளுக்குள் அழைத்துக் கொண்டாள். அம்மா.. அம்மா! வெளியிலிருந்து அதே குரல் அவளை நோக்கி கேலியாய் சிரித்து அழைத்தது. ஏதோ நெஞ்சுக்குழிக்குள் முண்டிய அச்சம் குமிழ்ந்து, உடைந்து சட்டென்று உடலெல்லாம் பரவி, வியர்வை போல் உடலை நனைத்து அது ரத்தமாய் அவளைச் சாய்ப்பது போல உணர்கிற சமயத்தில் எப்போது மயங்கிச் சரிந்தாள் என்றே தெரியவில்லை.

சில மணித்துளிகள் கடந்திருக்கும். உடலெல்லாம் வியர்த்து நசநசத்துப் போயிருந்த உடலில் ஆடைகள் ஒட்டி கசகசத்தது. உடலில் அசதியாய், அசூசையாய் உணரத் துவங்கிய சமயத்தில் ஏதோ கனவிலிருந்து எழுவது போலிருந்தது. எப்போதும் இப்படியொரு உணர்வு அவளுக்குள் எழுகிறது. எல்லாம் கனவுதான் என்று யாரேனும் சொல்ல மாட்டார்களா என்று தோன்றுகிறது. அப்படி அவளே அவளை நம்ப வைத்து தன்னை மீட்கத் துவங்கும் அந்தக் கணத்தில் மீண்டும் அக்குரல் பேசத் துவங்கிவிடும். ²பொண்ணு, பயந்துட்டியா? எங்கூட வெளாட மாட்டியா? வாயேன் தெருவுக்கு போவோம். உன்னை சும்மா விட்ருவேனு பாத்தியா. உன்னை அம்மணமா ஓட வைக்கிறேன் பாரு.²

ஒவ்வொரு முறையும் இக்குரல் கேட்கையில் அந்தக் குரலுக்கான உருவத்தை தேடத் துவங்கிவிடுவாள். முதலில் இந்தக் குரல் மாயைதான் என்றும், கனவில் இருக்கிறேன் என்றும் எவ்வளவோ அவளை சமாதானம் செய்ய முயலுவாள். ஆனால், யாரிடம் பேசிக் கொண்டிருந்தாலும் சட்டென்று யாரோ நுழைவது போல இக்குரல் கேட்கத் துவங்கிவிடும். ஆளே இல்லாமல் கேட்டும் இந்தக் குரலுக்கு அவளால் எந்த விளக்கமும் தேடமுடியாமல் சலித்து விடுவாள். இப்போதெல்லாம் இந்தக் குரல் அவளை விட்டு போகாது என்பது தீர்மானமாகி விட்டது. அந்த சமயத்தில் இந்தக்குரல் வழியாக ஒரு உருவத்தை வரைய முற்படுவாள். அந்தக் குரல் ஆணா, பெண்ணா? யாராக இருக்கும், பழக்கப்பட்ட குரலா அல்லது இதுவரை பரிட்சயமற்ற குரலா? எங்கிருந்து பேசுகிறார்கள்? தனக்குள்ளிருந்தா அல்லது எங்கோ தொலைதூரத்திலிருந்து ஒளிந்திருந்தா? எதற்காக இப்படி அவளிடம் பேசவேண்டும்? என்ன காரணமாக இருக்கும்? நானறிந்து எந்த தவறும் செய்யவில்லையே. அப்படியென்றால் யாரேனும் நம்மீது இப்படியொரு ஏவலை செய்திருப்பார்களா என்று அறிவிற்கு எட்டியவரை யோசித்து இதுவரை தேடியும் பதிலில்லை அவளுக்கு.

‘பீரியட்ஸ் உனக்கு எப்போ வரும்! உன்னைப் பாத்தா அருவருப்பா இருக்கு. சீசீ.. உடம்புல அடிபட்டாக்கூட வர்ற ரத்தம் பீரியட்ஸ் தான. அய்யே.. உனக்கு பக்கத்துல யாருமே வரமாட்டாங்க பாரு. மது, உன்னைப் பாத்து பேசாம போனது எதுக்குன்னு தெரியுமா, நீயொரு அசிங்கம், அதனாலதான். உனக்கு ஆசை இருக்குதான? உனக்கும் தொடையில மச்சம் இருக்குறது தெரியும், சத்தியம் செய்யட்டுமா. எல்லாருக்கும் சொல்லப் போறேன்.. ஹா.. ஹா..’

அவமானமாக இருந்தது பொண்ணுவுக்கு. இப்போது அவளே அவளுக்கு அவலட்சணமாகத் தெரிந்தாள். உடலெங்கும் பீரியட்ஸ் ரத்தம் ஊற்றெடுத்து வழிவது போலிருந்தது. உடலெங்கும் துர்நாற்றம் வீசுவது போல உணர்ந்தாள். கண்கள் பிசிபிசுத்தன. அவளே அறியாமல் உடல் அழுது கொண்டிருந்தது. முன்னைப் போல் அவள் அலறித் துடித்து கத்தாமலிருக்க முயன்றாள். அவள் தொண்டைக் குழிக்குள் அச்சம் கூனிக்குறுகிக் கிடந்தது. குரல்வளை இறுகி மூச்சுத் திணறியது. வாய் வறண்டு வெத்து இருமல் வந்தது. வாயைப் பொத்திக் கொண்டு நெஞ்சுக்குள் இருமினாள். அம்மா இவள் பக்கமாக புரண்டு படுக்கையில் இருமலையும் விழுங்கிவிட்டாள்.

²ஏண்டி, என்ன தெணாவட்டு இருக்கும். உன் அப்பன்கிட்டயே போய் பிராது கொடுக்குறியா. என்ன பண்ணுவேன்னு பாக்குறியா. எவன்கிட்ட போய் படுக்கனும்னு திரியுற. பவுசு எல்லாம் எனக்குத் தெரியாதா. ஊருக்கு முன்னாடி உன்னோட மானத்தை வாங்கலையா இல்லையானு பாருடி..²

இப்போது கண்கள் கலங்கத் துவங்கின பொண்ணுவுக்கு. அவள் எதுவும் செய்யவில்லை. அவளறிந்து எந்தக் குற்றமும் செய்ததில்லை. அவளுக்கு எதிரிகள் என்று இருப்பார்களா என்று அவளே குழம்பிப் போய் இருக்கிறாள். எதற்காக இவளை குறிவைத்து தாக்குகிறார்கள் என்று இன்றுவரை அவளுக்கு பிடிபடவில்லை.

திரைச்சீலை இப்போது வேகமாக அசைந்தது. நிழல் போல் திரை உருவம் காட்டி விலகியது. சட்டென்று ஓடிப்போய் அசைவை கவனித்தாள். திரையா, நிழலா, திரையின் நிழலா, நிழலின் பிரதி யார், அவளை அழைப்பவர்களின் தூதுவனா, உருவமே இல்லாத அசரீரியா என்று அவள் திரைச்சீலையையே சுற்றுச்சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள். சொத்தொன்று முதுகில் ஓர் அறை.. உசிரே போகுமளவுக்கு கண்களை இருட்டிக் கொண்டு வர அவள் தடுமாறி விழப் போவதற்குள் நிதானித்துக் கொண்டாள்.

²ஏண்டி, எத்தனை தடவை சொல்லுறது. ராவுக்கு இப்படி ராத்தலா நடந்துட்டு திரியாதன்னு. கண்ட எடத்துக்குப் போயி பேய் பிசாச வூட்டுக்குள்ள கூப்பிட்டு வந்து எங்களை நிம்மதியில்லாம ஆக்கிட்டியேடி பாவி..²

இதுவெல்லாம் தினசரி நடப்பவைதான் என்பது போல, ²என்னடி அங்க சத்தம். போய் ஒழுங்கா படுக்குறீங்களா இல்லியா! மனுசன் ஒழைச்ச அசதிக்கு தூங்கக்கூட வாய்க்கல. என்ன பெறவி எடுத்து வந்தோமோ தெரியல² என்று அப்பா சத்தம் போட அம்மாவும் மகளும் போய் படுத்துக் கொண்டனர்.

அம்மா, படுத்தவுடன் தூங்கிப் போனாள். பொண்ணுக்கு தூக்கம் வரவில்லை. விழித்தே கிடந்தாள். அவளைக் கண்காணித்துக் கொண்டிருப்பவர்கள் யாரென்று அவளுக்கு இன்னும் தெரியவில்லை. அது தெரிந்து கொள்கிறவரை அவளுக்குத் தூக்கமும் இல்லை. தலையணைக்குக் கீழே அம்மா வைத்த எலுபிச்சை பழத்தை கைகளில் உருட்டிக் கொண்டாள். அவளுக்கு ஆசுவாசமாயிருந்தது.

‘என்ன செமத்தியா வாங்குனியா அம்மாகிட்ட. நான் சொல்லுறத கேளு பொண்ணுமணி. நாம எங்கேயாச்சும் ஓடிப்போலாம். ஒனக்கு பிடிச்சதை வாங்கித் தரேன். நாம கலியாணம் பண்ணிக்கலாமா? அச்சோ, பயப்படுறியா. நாம வேணுமினா கண்ணாமூச்சி ஆடலாமா. ஒண்ணு.. ரெண்டு.. மூணு..’

பொண்ணுவுக்கு வியர்த்துக் கொட்டியது. அதிலும் போர்வையை இறுக மூடிக் கொண்டாள். உடம்பெல்லாம் கசகசவென்றிருந்தது. கழுத்திலிருந்து வழியும் வேர்வை யாரோ உடலில் விரலால் கீறுவதைப் போல இருந்தது. திரும்பி படுத்துக் கொண்டாள். ஆடை நனைந்து போர்வை வரை வந்துவிட்டது. யாரோ அவளை பின்னிலிருந்து அணைப்பதைப் போலிருந்தது. திரும்பிப் பார்க்க அவளுக்குத் திராணியில்லை. அம்மாவை எழுப்பினாள்.

²அம்மா.. அம்மா.. யாரோ பின்னாடி படுத்துருக்காங்கம்மா.. அம்மா.. அம்மா.. எந்திச்சுப் பாரும்மா.²

²ஏட்டி, அடி இன்னும் வேணுமா ஒனக்கு. முதுகு பழுத்துப் போகும் பாத்துக்கோ, இப்படியே ராத்திருக்கு பண்ணிட்டு இருந்தேன்னா²

²அம்மா.. அம்மா.. பயம்ம்மா இருக்கும்ம்ம்மா..²

அதற்கு மேல் அவள் அம்மா பேசவில்லை. இனி பேசிப் பலனில்லை என்று தூங்கப் போய்விட்டாள். பொண்ணுவுக்கு திரும்பிப் பார்க்க பயமாயிருந்தது. ஆடை இறுக இறுக யாரை கட்டியணைப்பது போலிருந்தது. கழுத்தை யாரோ நுகர்வது போலிருந்தது. உடம்பெல்லாம் தூர்நாற்றம் போல் எங்கிருந்து வருவது என்றே தெரியாமல் தவித்தாள். ஒருபக்கம் பயம், இன்னொரு பக்கம் அவமானம். அவள் எந்தப் பக்கம் சாய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

அவள் வியர்த்து ஒட்டிப் போய நைட்டியை மெல்ல மெல்ல உடலிலிருந்து இழுத்து விடுவித்தாள். அவள் இழுக்க இழுக்க இன்னும் அதிகமாய் ஒட்டியது. போர்வையை விலக்கி எழத்துவங்கும் போது யாரோ அமுக்குவதைப் போல் உணர்ந்தாள்.

‘பொண்ணு, எந்திரிக்க வேண்டாம். செத்த நேரம் படு. என்ன அவசரம். எனக்கு ஒரு கொழந்தைய கொடுப்பியா? தலை பெருசா, ஒடம்பு சின்னதா, குட்டியா ஒரு கொழந்தை. வயித்துக்குள்ள நான் போகட்டுமா? உள்ள போயி வெளிய கொழந்தையா வரட்டுமா? மார்புல கெட்டி இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கட்டுமா?’

²அம்ம்ம்ம்மா…” – அவள் கத்தி விட்டாள். “அம்மா பாரும்மா, பாரும்மா.. பெட்டுலதான் பேயி கெடக்கு, பாரும்மா. என்னை கொல்லப் பாக்குதும்மா. பாரும்மா, என்னைக் காப்பாத்தும்மா. பிளீஸ்ம்மா. நீ சொன்னதெல்லாம் கேக்குறேன்மா, காப்பாத்தும்மா, சாகப் போறேன்மா, பிளீஸ்மா..²

²என்னத்தாண்டி நீ தெனமும் சாவடிக்கிற முண்ட. நீ செத்தாதாண்டி எனக்கு நிம்மதி. சாவுடி.. சாவுடி..² என்று வெளக்குமாறை எடுத்து நாலு சாத்து சாத்து சாத்தினாள் அம்மா. அப்படியும் ஆத்திரம் அடங்கவில்லை அவளுக்கு. பகலெல்லாம் ஊரைக் கூட்டி அசிங்கப்படுத்துகிறாள், ராத்திரிக்கு கத்திக் கூப்பாடு போட்டு தூங்க விடாமல் பண்ணுகிறாள் என்ற ஆதங்கம் அவளுக்கு. அதற்கு மேல் அடிக்க அவளுக்கும் திராணியில்லை. ஒரு வாரகாலமாக அடித்து அடித்து அவளுக்கு கைகள் ஓய்ந்துவிட்டது. போதாக்குறைக்கு கோடாங்கியை அழைத்து வந்து குறிசொல்லி அடித்தும் பார்த்தாயிற்று. உடம்பெல்லாம் கீற்றுகீற்றாய் தடித்துப் போய்விட்டது. அப்படியும் பொண்ணுக்கு ஏதும் மாறியதாகத் தெரியவில்லை.

இப்போது பொண்ணுவுக்கு கோபம் தலைக்கேறியது. வலியும், வேதனையும், கோபமும் அவளை ஆங்காரம் செய்யத் தூண்டியது. ஓடிப்போய் அம்மாவின் தலைமுடியை பிடித்தவள் தலையை தரையில் ஓங்கி அடித்தாள். மண்டையோடு சிதறிவிடும் அளவிற்கு முட்டியதில் மயங்கிப் போனாள் அம்மா. அப்படியும் அவள் ஆத்திரம் அடங்கவில்லை. அம்மாவின் கன்னத்தில் விடாமல் அறைந்து கொண்டே இருந்தாள். இப்போது எந்த திமிறலும் அம்மாவிடமிருந்து எழவில்லை. முகத்தை சுளித்தவளிடமிருந்து பின் உடம்பெல்லாம் தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு வலிப்பு வந்தது. சட்டென்று அம்மாவின் மேலிருந்து துள்ளியவள் தள்ளிப்போய் விழுந்தாள்.

அம்மாவை என்ன செய்வதென்று தெரியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தாள். மறுபடியும் அந்தக்கு ரல் அவளிடம் பேசியது.

‘சொன்ன மாதிரியே பண்ணிட்டியே, அம்மாவையே கொன்னுட்ட, கொலைகாரி. எப்படித்தான் மனசு வந்துச்சோ? போச்சு, போலீஸ் சீக்கிரம் வரப்போகுது. உன்னை பிடிச்சு ஜெயில்ல போடப்போறாங்க.. வீய்ய்.. வீய்ய்… வீய்ய்.. போலீஸ் வண்டி வருது டோய்..’

சட்டென்று எழுந்து கதவை தள்ளிக்கொண்டு ஓடினாள். அப்பாவின் காலில் கதவு பட்டு விண்ணென்று தெரிக்க, எழுந்து அடிக்க ஓடுவதற்குள் வலிப்பு வந்து அணத்தும் அம்மாவின் சத்தம் கேட்டது. “பிடிங்க.. பிடிங்க..” என்று கத்தியவரின் குரலைக் கேட்க யாருமின்றி ஊரார் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில், ஆடையின்றி ஓடுகிற மகளுக்கும் வலிப்பு வந்து கிடக்கிற மனைவிக்கும் இடையில் அவர் நெஞ்சிலடித்து பதறிக் கொண்டிருந்தார்.

man3cmc@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button