தொடர்கள்

சொந்தம் கொண்டாடும் சோஷியல் மீடியா;3 – காயத்ரி மஹதி

தொடர் | வாசகசாலை

டிஜிட்டல் அம்மா, மகள் உறவு…

கொரோனா நோய்த்தொற்று காலத்தில் வீட்டில் இருந்தபடியே  அனைத்து செயல்களும் டிஜிட்டல் வழியாக மாறிவிட்டது. பெரியவர்கள்  வேலை செய்வதாக இருக்கட்டும், மாணவர்கள் ஆன்லைன் வழியாக படிப்பதாக இருக்கட்டும், எல்லாமே டிஜிட்டல் உலகமாக மாறி விட்டது. ஆனால் வீட்டில் தொடர்ந்து இருக்கும்போது இந்த ஆன்லைனும், டிஜிட்டலும் என்ன மாதிரி அழுத்தங்களை பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் தருகின்றன என்பதைத்தான் இந்த அத்தியாயத்தில் பார்க்கப் போகிறோம்.

விளம்பரங்களில்  வீட்டைச் சுத்தப்படுத்துவதற்கு அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள்  மற்றும் அந்த வீட்டை சுத்தப்படுத்தும்போது அவர்கள் அணிந்த உடையில் இருந்து, அவர்கள் சுறுசுறுப்பாக இயங்குவது வரை காண்பிப்பது வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுப்பதற்காகத்தான்.  டிஜிட்டலில் உள்ள அம்மாவின் அழகு, உடை உடுத்தும் நேர்த்தி எல்லாமே ஃப்ரெஷாக இருக்க வேண்டும். குழந்தைகள் அழுக்காக வந்தாலும் அம்மா சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும் எனவும் ஒவ்வொரு விளம்பரங்கள் காண்பித்துக் கொண்டே இருக்கின்றன.

இப்படியாக இன்றைய விளம்பர உலகில் அம்மா, மகள் சார்ந்து சொல்லப்படும் விஷயங்கள் அதிகமாக இருக்கின்றன. ‘எப்பவும் அம்மா சந்தோசமா இருக்கணும், சுட்டித்தனமா இருக்கணும், ரொம்ப அழகாக இருக்கணும்’ என்பதைத்தான் இந்த விளம்பரங்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தருகின்றன. ஆனால் அந்த விளம்பரத்தில் வருபவர்கள் எல்லாரும் ஒரு ஐந்து நிமிடம் நடித்து விட்டு போய் விடுவார்கள். சிக்கல், நிஜமான அம்மாக்களுக்குத்தான்.

இந்த விளம்பரங்கள் எல்லாம் பார்த்து, தனக்குத் தானே நிரூபிக்க தற்போது உள்ள பெற்றோர்களில் எழுபது சதவீதம் வரை சோசியல் மீடியாக்கள் மூலம் தங்கள் குழந்தைக்கு உணவு ஊட்டுவதில் இருந்து, தூங்க வைப்பது வரை அனைத்தும் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். அதன் பின் குழந்தைகள் செய்யும் செயல்களை ஆயிரக்கணக்கில் போட்டோக்கள் எடுத்து பகிரவும் செய்கிறார்கள். இப்படி செய்யும்போது குழந்தைகளுக்கு முறையாக எல்லா விஷயங்களும் செய்கிறோம் என்பதை விசுவலாக பதிவு செய்வதில் ஒரு மன திருப்தி கிடைக்கிறது என்கிறார்கள்.

இப்படி இருந்த அம்மாக்கள் இந்த கொரோனா காலகட்டத்தில் மிகவும் கோபப்படுவதாக தெரிவிக்கிறார்கள். எல்லா நேரமும் அப்படி இருக்க முடியாது என்கிறார்கள். வீட்டில் இருக்கும் உண்மையான அம்மாவின் நாட்கள் இப்படி விளம்பரங்களில் சொல்வது போல் இருக்குமா என்றால் இல்லை என்பதுதான் நேர்மையான பதிலாக இருக்கும்.

பொதுவாக பெண் குழந்தைகள் தாங்களும், தங்கள் அம்மா போல் இருக்க வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருப்பார்கள். ஆனால் இப்போது உள்ள பிள்ளைகள் தங்களது டிவியில், மொபைலில் பார்க்கும் அம்மா போல் தங்களுடைய அம்மாவும் இருக்க வேண்டும் என ஆசைப்பட ஆரம்பித்து விட்டார்கள்.

லைட் மேக்கப் உடன், எப்பவும் மிக அழகாக, நம் அம்மா காலை முதல் இரவு வரை இருக்க வேண்டும் எனவும், எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும் எனவும், நல்ல புத்திசாலித்தனத்துடன், பல இடங்களில் புகழுடன் இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றனர். பல பேரை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் எனவும், விதவிதமான உடைகளுடன் ஒரே மாதிரி டிரஸ் போட்டு அம்மாவும், மகளும் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும் எனவும், அம்மா விதவிதமாக சமைத்து அதை நன்கு அலங்காரப்படுத்தி ஹோட்டலில் இருப்பதைப் போல் பிள்ளைகளுக்குத் தர வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றனர்.

தன்னையும், தன் வீட்டையும் மற்றவர்கள் கொண்டாட வேண்டும் என்பதே அடைப்படை நோக்கமாக குழந்தைகளுக்கு இருக்கிறது.

வீட்டில் உள்ள சின்னச் சின்ன செயல்பாடுகளில் இருந்து எப்போதும் மற்றவர்களிடமிருந்து பாராட்டும், புகழும் வந்துகொண்டே இருக்க வேண்டும் என்று குழந்தைகள் அதிகமாக எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

ஆனால் இவர்கள் கற்பனை செய்த அம்மாவின் குணங்கள் தங்களுடைய அம்மாவிடம் இல்லை என்றால் மனதளவில் ஒரு மிகப்பெரிய விலகலை அம்மாவுடன் ஏற்படுத்தி விடுகிறார்கள்.  மற்ற பிள்ளைகளின் அம்மாக்கள் டிவியில், சோசியல் மீடியாவில் ரொம்ப ஆக்டிவாக இருந்தால் அவர்களோடு தங்கள் அம்மாவை பொருத்திப் பார்த்து, தான் ஒரு சரியான அம்மாவிடம் வளரவில்லை என்கிற ஆதங்கம் அவர்களுக்கு வந்து விடுகிறது.

இதனால் அம்மா மீது அடிக்கடி கோபப்படுவது, அவர்களை மட்டம் தட்டிக்கொண்டே இருப்பது, உருவக் கேலி செய்வது, ஏன் இத்தனை குண்டாக இருக்கிறாய் என்றும், அதனால் குறைவாக சாப்பாடு சாப்பிடு எனவும் குழந்தைகள் அம்மா சாப்பிடும் சாப்பாட்டின் அளவைக் குறைக்க வைக்கின்றனர். அம்மாவோ வீட்டு வேலை செய்து வியர்வை வழிய ரெஸ்ட் எடுக்க வந்தால், குளித்து விட்டுத்தான் தங்கள் அருகில் உட்கார வேண்டும் என்று சொல்வது வழக்கமாகிவிட்டது. வியர்வையுடன் அம்மா அருகில் உட்காருவது பிள்ளைகளுக்கு ஒரு வித மனக்கசப்பை உண்டாக்கி விடுகிறது என்று கூறுகிறார்கள்.

அம்மா, மகள் உறவு என்பது மீறி மகள் சொல்கிற மாதிரி அம்மா தன்னை வடிவமைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற கட்டாயத்துக்குள் அவர்கள் திணிக்கப்படுகின்றனர்.

எல்லா பெண்களுக்கும் தங்களை மிக அழகாக வெளிப்படுத்ததான் பிடிக்கும். ஆனால் திருமணம் ஆன பின் குடும்பப் பொருளாதாரம், கணவன், மனைவி உறவில் உள்ள புரிதல், அவர்களுக்கான நேரமில்லாமல் ஓடி ஓடி வேலை செய்வது, குழந்தைகளைப் பார்ப்பது, சம்பாதிப்பது என அனைத்தும் மூளையில் ஒரு பக்கம் ஓடிக் கொண்டு இருக்கும்போது பல நேரங்களில் தங்களை கவனிக்க மறந்து விடுகின்றனர். ஆனால் இதை எல்லாம் பிள்ளைகளுக்கு புரிய வைக்க  முடியாமல் தவிக்கின்றனர். பிள்ளைகளுக்கு அவர்களைச் சுற்றி வீட்டில் நடக்கும் விஷயங்களை பற்றி அக்கறை இல்லை. தாங்கள் நினைத்த மாதிரி இல்லாத ஒரு குடும்ப அமைப்பில் இருக்கிறோம் என்கிற எண்ணம் மட்டுமே அவர்களுக்கு அதிகமாக இருக்கிறது.

இதனால் அம்மா – மகள் உறவு என்பது அத்தனை டிஜிட்டல் அப்டேட்டுகளுடன் மாற வேண்டும் என்பதான எதிர்பார்ப்புடன் இருக்கிறது. மில்லினியம் தலைமுறை நபர்களுடன் வாழ வேண்டிய நெருக்கடிக்குள் நாம் இருக்கிறோம். டிஜிட்டல் வேறு, நிஜ வாழ்க்கை வேறு என்று நாம் எளிதாக சொல்லலாம். ஆனால் இந்த டிஜிட்டலில்தான் குழந்தைகள் சொல்லும் அம்மாக்கள் எங்கோ ஒரு வீடியோ வழியாகவோ, புகைப்படங்கள் வழியாகவோ அவர்களின் கைகளுக்குள் இருக்கும் மொபைல் வழியாக வந்துகொண்டும்,  பார்த்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

இப்படியாக ஒரு புது வித பாரத்தை வீட்டில் இருந்து டிஜிட்டல் உலகம் அம்மாக்கள் மீது வைக்கிறது.

தொடரும்…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button