
1. விரும்பத்தக்க பொந்தொன்று
கடற்கரை கோயில்சுவர் பொந்தொன்றில்
ஓம் எனும் மந்திரம் கேட்பதால்
ஊர் மாந்தர் பரப்பினர்
அம்மருட்கையின் திருப்புகழை
எப்படியென மீசையை வருடி வருடி
மயிர்வேரின் வலியில்
ஒரு வேலின் கூர்மை.
விடுயென ஓம் மந்திரத்தைக் கேட்க
பொந்தில் காதைக் கொடுத்தேன்
கடலையே பிடிக்குமென்பதால்
எனக்கு அது அலையோசையாக உலாவியது.
காம்பு மறந்த கன்றொன்று வாய் கொடுப்பின்
பாலைச் சுறக்குமோ
விரும்பதக்க நுண்பொந்து.
***
2. சிலையாம் சிலை
நயமிக்க ஒரு பெண் சிற்பத்தை
வடித்திடும் பொறுப்பு என்
சிரக்கரங்களில் ஒப்படைக்கப்பட்டது
அது பேரழகு சிற்பமாய் உருப்பெற்றமைக்காக
அடித்துத் துரத்தினர் என்னை.
சிற்பி நானென்பதால் சிலைக்கு உடை
உடுத்தியதும் நானாகத்தான் இருப்பேனாம்
இவர்கள் காண விரும்பியதோ
அச்சிலையின் நிர்வாணமாம்.
உடையோடே எண்ணம் வளர்த்ததால்
சிலையின் நிர்வாணத்தை
நானே கண்டதில்லையே.
வாந்தியைத் தின்று தள்ளாடிய காக்கையைக்
காண நேரிட்டதிலிருந்து
குடிப்பதைக் கூட நிறுத்திவிட்டேன்
கொடியில் தொங்கியதாய் சில பெண்களின்
உள்ளாடைகளைக் கடந்திடும் பொழுதும்
தொடரும் அதன் வாசனையைக் கூட
புறக்கணித்தே பழகியிருக்கிறேன்
ஒரு பெண்ணோடு சேர்ந்து குளித்து
சோப்போடு வழுவழுத்து அணைத்துக்கொள்ள
ஆசைப்பட்டதைக் கூட அடைந்திடவில்லை
எங்கு கண்டு செல்வேன்
வடித்த சிலையின் நிர்வாணத்தை
நான் ஆண் என்பதால்
என்னைத் துணியோடு விட்டார்கள்.
***
3. அம்மாவுக்கு மன்னிப்பும் ஒரு அணைப்பும்
பிறந்த லட்சணம் மாறி பழுத்திருக்கும்
மஞ்சள் வாழைப்பழத் தோலினை
முழுவதுமாக உரித்தெறிந்து
வெறுங்கை அழுக்கோடு
தின்னும் என் பழக்கத்திற்காகச்
சுகாதாரமற்றவள் சுத்தஞானம்
சொல்லித் தராதவள் என
எனதம்மாவைத் திட்டியிருக்கிறார்கள்
தினக்கூலிக்குச் செல்பவள்
வார இறுதியில் பெறும் சம்பளத்தில்
என்னை மட்டும் அழைத்துப்போய்
எனக்கே எனக்கு மட்டும் வாங்கித்தரும்
ஐஸ்கிரீம் சிக்கனத்திற்காகக்
கூட்டுக் குடும்பம் நடத்தத் தகுதியற்றவள்
என ஏசியிருக்கிறார்கள்
தகடு போன்ற எனது ஒல்லியான
தேகத்திற்காகச் சோறாக்காதவளாகவும்
கைவிட்டு சைக்கிள் ஓட்டி
தெருவில் எச்சில் துப்பி
கெட்ட வார்த்தைகள் பேசித்
திரிந்ததற்காக ஒழுக்கங்கெட்டவளாகவும்
என் காதல் அபிலாசையால்
ஓடிப்போய் கல்யாணம் பண்ணியதற்காக
தறுதலையைப் பெத்தவளாகவும்
போன்ற எனது எல்லா சறுக்கல்களுக்கும்
இடறு கல் அவளேயென சோடிக்கப்பட்டிருக்கிறாள்
எனது இத்தனைக் காயங்களுக்கான
தழும்புகளை எனக்காகச் சுமக்கும்
என் அம்மாவிற்காக
அதிகபட்சம் நான் என்ன செய்திட முடியும்?
நானும் அம்மாவைக் காரணங்களின்றி
பலமுறை திட்டியதற்காகவும்
ஒருமுறை அடிக்க கை ஓங்கியதற்காகவும்
மன்னிப்போடு
இதுவரை நான் தந்திடாத
ஒரு அணைப்பையும் அளித்திட முடியும்.
வேதமன்றோ அது!
*****